Published:Updated:

டைகான் சென்னை... வெற்றியாளர்களின் 10 குணாதிசயங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டைகான் சென்னை... வெற்றியாளர்களின் 10 குணாதிசயங்கள்!
டைகான் சென்னை... வெற்றியாளர்களின் 10 குணாதிசயங்கள்!

பிசினஸ்

பிரீமியம் ஸ்டோரி

‘டைகான் சென்னை’ அமைப்பின் சார்பில், ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் 11-வது தொழில் துறை மாநாடு கடந்த வாரம் சென்னையில் நடக்க, இந்தியா முழுக்க உள்ள தொழில் துறை நிபுணர்கள் இதில் பங்கேற்றுப் பேசியது சிறப்பான விஷயம்.

முதல் நாள் மாலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது (பார்க்க, பெட்டிச் செய்தி) இரண்டாம் நாள் நடந்த கருத்தரங்கில் முன்னணித் தொழிலதிபர்களும், தொழில் துறை நிபுணர்களும் பேசிய பேச்சு இளம் தொழில்முனைவர்களின் அறிவுக்கு விருந்தாக அமைந்திருந்தது. இந்தக் கருத்தரங்கு நிகழ்ச்சியின் சில ஹைலைட்ஸ் இனி...  

டைகான் சென்னை... வெற்றியாளர்களின் 10 குணாதிசயங்கள்!

வெற்றியாளர்களின் குணாதிசயங்கள்

‘மேனேஜிங் எவ்ரிதிங்’ (Managing Everything) என்ற தலைப்பில் பேசினார் ஆதித்ய பிர்லா குழுமத்தின் எக்ஸிகியூட்டிவ் பிரசிடென்ட் டி.ஷிவக்குமார். “வெற்றியாளர்கள் தங்கள் துறையில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதுடன், பல துறை களிலும் சிறப்பாகச் செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். கிரிக்கெட் வீரர்களான கபில்தேவ், சுனில் கவாஸ்கர், இம்ரான் கான், ரவி சாஸ்திரி போன்ற பலர் விளையாட்டில் ஆல் ரவுண்டராக ஜொலித்ததால்தான், அவர்களால் அணியின் கேப்டனாக முடிந்தது. விளையாட்டையும் தாண்டி பல துறைகளில் அவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் கேப்டனாக ஜொலித்ததுடன், ஐ.பி.எல் அமைப்பின் தலைவ ராகவும் இருந்தார். புத்தகம் எழுதியதுடன்,  விளம்பரப் படங்களிலும், மராத்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தோனியும் அதேபோன்று பலவிதமான திறமைகள்  கொண்டவர்தான். ஆனால், இம்ரான் கான் விளையாட்டில் மட்டுமின்றி, அரசியலில் புகுந்து, இப்போது பாகிஸ்தான் பிரதமராகவே ஆகிவிட்டார்.

இதுபோன்ற வெற்றியாளர்களுக்கே உண்டான பொதுவான 10 குணாதிசயங்களைப் பட்டியலிட லாம். 1) வெற்றியாளர்களது எண்ணமும், செயலும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்கும். 2) அவர்கள் தங்கள் திறமைமீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பார்கள். 3) தாங்கள் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருப்பார்கள். ஒருபோதும் முயற்சியைக் கைவிட மாட்டார்கள். 4) வெற்றியாளர்களுக்குத் தெளிவான உள்ளார்ந்த பார்வையும், அடுத்து என்ன நடக்கும் என்ற தொலைநோக்கு பார்வை யும் இருக்கும். 5) அறிவைத் தேடுவார்கள். புதிதாகக் கற்பதில் ஆர்வமாக இருப்பார்கள்.     6) வெற்றி கிடைக்கும் வரை போராட விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள். 7) கவனம் பெறுபவர்களாக இருப்பார்கள். 8) எல்லா வற்றையும் வழங்குபவர்களாக இருப்பார்கள்.   9) ஆர்வத்துடன், திறந்த மனதுடன் இருப்பார்கள். 10) நம்பத்தகுந்தவர்களாக இருப்பார்கள்.

டைகான் சென்னை... வெற்றியாளர்களின் 10 குணாதிசயங்கள்!

பொருளாதார சீர்திருத்தங்களின் தாக்கம்

மேன்பவரிங் இண்டியாஸ் எக்னாமிக் குரோத் ((Man)powering India’s Economic Growth) என்கிற தலைப்பில் பேசினார் க்விஸ் கார்ப் (Quess Corp) நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்கு நருமான அஜித் ஐசக். ‘‘1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தபின்புதான் இந்தியாவில் மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு, தகவல் தொடர்பு, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைக்கு உலக நாடுகளிடம் இல்லாத பல பாசிட்டிவ் விஷயங்கள் நம்மிடம் உள்ளன.  

* இந்தியாவின் மக்கள் தொகை 2026-ல் சீனாவை முந்திவிடும். * உலக மக்கள் தொகையில் 18 சதவிகித, அதாவது 52 கோடி பணியாளர்கள் சக்தியைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது. * உலகில் இளைஞர்கள் சக்தியை அதிகம் கொண்ட நாடாகவும், ஆங்கிலம் பேசும் அதிக இன்ஜினீயர்கள், டாக்டர்கள் மற்றும் இதர முக்கியத் துறை பணியாளர்களைக்கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது.  * மக்களில் 80 சதவிகிதத்துக்கு அதிகமானோர் முறைசாரா துறைகளிலேயே பணிபுரிகின்றனர். * ஏறக்குறைய 21.6 கோடி பேர் விவசாயத் துறையில் பணியாற்று கின்றனர். * திறன் மேம்பாடு மற்றும் ஜி.எஸ்.டி வரி அறிமுகத்தினால் அனைத்துத் துறைகளிலும்  முறைப்படுத்தப்படாத பொருளாதாரம், முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்துக்கு மாறுகிறது’’ என்றவர், நம் நாடு சந்தித்தாக வேண்டிய சவால்களையும் பட்டியலிட்டார்.

பணியிடத்தில் நல்ல கலாசாரம் தேவை

அடுத்ததாக ‘ Win the culture - Win the war’ என்ற தலைப்பில் பேசிய அப்ரஜிதா கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பரத் கிருஷ்ணா சங்கர், “ஒரு நிறுவனத்தை வழி நடத்திச் செல்லக்கூடிய நிர்வாகி அல்லது முதலாளி, காலையில் குறித்த நேரத்தில் வருதல், குறித்த நேரத்தில் பணிகளை முடித்தல், பணி யிடத்தில் சுமுகமான நிலையை ஏற்படுத்துதல் போன்ற நல்ல கலாசாரத்தை உருவாக்கி, அதற்குத்தாமே முன்மாதிரியாக நடந்து கொண்டால்தான் , அவருக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்களும் அவரைப் பின்பற்றி நடப்பார் கள். அப்படி நடந்தால், அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மாறாக, சொல்வது ஒன்று செய்வது வேறு என்று இருந்தால், ஊழியர்கள் மத்தியில் அந்த நிறுவனத்தின் தலைவருக்கு மதிப்பில்லாமல் போய், நிறுவனத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்’’ என்றவர், ஒரு சிறந்த நிறுவனத் தலைவருக்குத் தேவையான ஏழு பண்புகளைப் பட்டியலிட்டார்.

1) Trust - நம்பகத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிறுவனம் அல்லது அதன் தலைவர் மீதான நம்பகத் தன்மைதான் லாபத்தை ஈட்டித் தரும்.

2) Openness -  ெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். நாம் சொல்லும் யோசனைக்கு மாறாக, இன்னொரு கருத்தை ஒருவர் சொன்னால் அதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதாவது, மாற்றுக் கருத்துக்கு இடமளிக்க வேண்டும். வெற்றி பெற எதைச் செய்தாலும் சரி என்ற மன நிலைக்கு வந்துவிடக் கூடாது. அது ஆபத்தானது.

3) Patience - பொறுமை மிக அவசியம் தேவை.

4) poise - துக்கமோ, மகிழ்ச்சியோ எதிலும் சமநிலையுடன் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பதற்றம் கூடாது. எதிலும் சோர்ந்து போகாமல், இதுவும் கடந்துபோகும் என்ற மனநிலையுடன் இருக்க வேண்டும்.

5) genuine - எதையும் நேரடியாக எதிர்கொண்டு, நிறுவனத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும். வீட்டில் பின்பற்றும் அணுகுமுறை நிறுவனத்தில் கூடாது. மொத்தத்தில் நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டுக்கு அதாவது, லாபம் ஈட்டும் வகையில் உண்மையாக இருக்க வேண்டும்.  

6) Empathy - புரிந்துகொள்ளும் தன்மை தேவை. எதையும், யார் பக்கமும் சாராமல் விலகி நின்று பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் தலைவர், தனது ஊழியர்களின் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவராக இருந்தபோதிலும், தன்னைக் கடவுள் போன்று பாவித்துக்கொண்டு, பணியாளர்கள் பாதிக்கப்படக்கூடிய வகையில் செயல்பட்டால், அந்த நிறுவனம் சபிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்படும்.

7) Maturity - பக்குவமான அணுகுமுறை தேவை. சூழ்நிலைக்கேற்ப எதிரில் உள்ளவர்களிடம் எதிர் வினையாற்றத் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக, பக்குவம் அல்லாத நபர் களிடம் பேசும்போது அதிகமான பக்குவத்துடன் நடந்துகொள்வது அவசியம். 

எதிலும் தனித்தன்மை தேவை

பிக்பாஸ்கெட் (Bigbasket) நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான வி.எஸ்.சுதாகர் பேசும்போது, ‘‘நாங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் தனித்தன்மை இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.  உதாரணமாக, ஏதேனும் பிரச்னைக்காக வாடிக்கையாளர் சேவைப்பிரிவை அழைத்தால், மறுமுனையில் 10 நொடிகளில் யாரேனும் இருப்பதை உறுதி செய்கிறோம் அல்லது எங்களில் ஒருவர் பதில் அளிக்கிறோம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் பிசினஸின் பலவிதமான பரிமாணங்களைத் தெளிவாக எடுத்துக்காட்டியது சிறப்பான விஷயம்!.

- பா.முகிலன்

படம்: எஸ்.ரவிக்குமார்

டைகான் சென்னை... வெற்றியாளர்களின் 10 குணாதிசயங்கள்!

ஐ.ஐ.டி பேராசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு டைகான் சென்னை 2018 நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டன. கடந்த முப்பது வருடங்களாகப் பல புதிய தொழில்முனைவோருக்கு ஆதரவாக இருந்து அவர்களைச் சிறப்பாக வழிநடத்தி வரும், சென்னை ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை டி.வி.எஸ் கேபிட்டலின் நிர்வாக இயக்குனரும் தலைவருமான கோபால் சீனிவாசன் வழங்கினார்.

மேலும், பிக்யுவர்டெயில், கிரெடிட் மந்திரி, சென்னையைச் சேர்ந்த ஆஸ்பைர் சிஸ்டம், சசக்ஸ் மென்ஸ்வியர், தி பான்யன் போன்ற நிறுவனங்களும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், டை சென்னையின் தலைவர் வி.சங்கர், டை சென்னையின் முன்னாள் தலைவர் லக்‌ஷ்மி நாராயணன், கலைடா ஸ்கோப் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பாபி பேடி, சிஃபியின் நிறுவனர் ராம்ராஜ் உள்ளிட்டோரும் பங்குபெற்றனர்.

2014-ம் ஆண்டிலிருந்து நடந்துவரும் டைகான் கருத்தரங்கு நிகழ்ச்சியில், தொழில்முனைவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள், வகுப்புகள் மற்றும் கண்காட்சிகளும் நடந்து வருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு