Published:Updated:

`வாரத்துக்கு மூன்று நாள்கள் லீவ்..!’ - மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட்

ஜப்பானிலுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளிக்கிழமையும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம், பணியாளர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட்டது.

மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட் ( vikatan )

வாரத்துக்கு 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக வைத்தால் பணிகள் எவ்வாறு நடக்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காக ஒரு சோதனை முயற்சியை, ஜப்பானிலுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயல்படுத்தியது. இதன் முடிவில், வழக்கத்தைவிட 40 சதவிகிதம் அதிக உற்பத்தி நடந்துள்ளதும் பணியாளர்கள் கூடுதல் திறனுடன் பணியாற்றியதும் தெரியவந்துள்ளது. இந்தச் சோதனை முடிவுகளைக் கடந்த வாரம் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது.

வேலை, வீடு பேலன்ஸ்
வேலை, வீடு பேலன்ஸ்
vikatan

`வொர்க் லைஃப் சாய்ஸ் சேலஞ்ச் 2019 சம்மர்' என்றழைக்கப்படும் சோதனையின்மூலம், ஒரு பணியாளர் தனது பணியையும், வீட்டையும் எப்படி பேலன்ஸ் செய்கிறார் என்பது குறித்தும் அதனால் நிறுவனத்தின் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அறிய முற்பட்டனர். இதன்படி, ஜப்பானிலுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளிக்கிழமையும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம், பணியாளர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட்டது. மேலும், ப்ராஜெக்ட் மீட்டிங்குகளின் நேரத்தையும் அதிகபட்சம் 30 நிமிடம் என்று கட்டுப்படுத்தினார்கள். அதற்கும்மேல் ஆலோசிக்க வேண்டியிருந்தால், ஆன்லைன் உள்ளிட்டதொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்திக்கொண்டனர்.

ஆகஸ்ட் மாதம் முழுக்க இந்தச் சோதனையைச் செயல்படுத்திப் பார்த்ததில், கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில், 39.9 சதவிகிதம் அதிக உற்பத்தி நடந்திருந்தது. பணியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், துடிப்புடனும் வாரத்தின் 4 நாள்களில் பணியாற்றியிருப்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி, நிறுவனத்துக்கு மின்சாரச் செலவு 23.1% குறைந்தது. பொருள்களின் பயன்பாட்டிலும் நிறையவே மிச்சம்பிடிக்க முடிந்தது.

வேலை நேரம்
வேலை நேரம்
vikatan

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் நடத்தப்பட்ட இதே 4 நாள்கள் வேலைநாள் சோதனை ஏற்கெனவே நியூசிலாந்திலுள்ள `பெர்பெக்சுவல் கார்டியன் '(Perpetual Guardian) நிறுவனத்திலும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டு, லாபகரமாக இருந்ததால் நிரந்தரமாகவே அந்த நிறுவனத்தில் வாரத்துக்கு 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக உள்ளது.

இந்தத் திட்டத்தைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க....? கமென்ட் பண்ணுங்க மக்களே...!