Published:Updated:

MNC, சீனா செய்த சதி; ஆனால் பழி இயற்கை விவசாயத்தின் மீதா? இலங்கையில் என்ன நடக்கிறது?

Sri Lankans wait in queue
News
Sri Lankans wait in queue ( AP Photo/Eranga Jayawardena )

இலங்கையின் மோசமான பொருளாதார நிலைக்கு தனியார்மயக் கொள்கைகள்தான் என்கிறார்கள். ஒரு தரப்பு இயற்கை விவசாயம்தான் காரணம் என்கிறார்கள். இன்னும் சிலர் சீனாதான் காரணம் என்கிறார்கள். உண்மையில் இலங்கையில் என்ன நடக்கிறது, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?

நான்குபக்கமும் கடல்கள், மலைகள் என செழிப்பானதாக அறியப்படும் இலங்கையில் இன்று உணவுப் பொருட்களை வாங்க நெடும் வரிசைகளில் காத்திருக்கிறார்கள் மக்கள். ஆனாலும் விண்ணை முட்டும் விலை உயர்வால் பெரும்பாலானோரால் வரிசையில் நின்றுகூட வாங்க முடியாத சூழல். உளுந்தம் பருப்பு ஒரு கிலோ ரூ.2,000, மஞ்சள் கிலோ, அரிசி கிலோ ரூ.500 என அனைத்துமே விலை உயர்ந்திருக்கின்ற வறுமை, உணவுப் பற்றாக்குறையை நோக்கி மெள்ள இலங்கைப் பொருளாதாரம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

இத்தகைய நிலைக்கு என்ன காரணம்? சிலர், தனியார்மயக் கொள்கைகள்தான் என்கிறார்கள். ஒரு தரப்பு இயற்கை விவசாயம்தான் காரணம் என்கிறார்கள். இன்னும் சிலர் சீனாதான் காரணம் என்கிறார்கள். உண்மையில் இலங்கையில் என்ன நடக்கிறது, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?

இலங்கை
இலங்கை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதற்கு இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில், இன்றைய உலக இயக்கத்தை தீர்மானிக்கும் சந்தைப் பொருளாதார சூழலில் எந்தவொரு நாடாக இருந்தாலும் அதன் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமானது சமநிலையில் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், இலங்கையின் பொருளாதாரம் பிரதானமாக மூன்று துறைகளை மையப்படுத்தி இருக்கிறது. அவை ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, சுற்றுலாத் துறை மற்றும் தேயிலை.

இலங்கையின் மொத்த ஜி.டி.பி.யில் 10% ஜி.டி.பி சுற்றுலாத் துறையின் மூலம் கிடைக்கிறது. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகளின் பங்கு 52%. தேயிலையின் ஏற்றுமதி 17%. இவை தவிர, எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று சமயத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இலங்கையின் இந்த மூன்று முக்கிய தொழில்களுமே பெரும் பாதிப்புக்குள்ளாயின. இதனால் அதன் பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவு உண்டானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பு இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டது. 2020-ல் இலங்கையின் ஜி.டி.பி மைனஸ் 16 சதவிகிதத்துக்கும் கீழ் போனது. அந்நியச் செலாவணி இருப்பு இல்லாததால் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் போனது. உணவுப் பொருட்களிலும் பெரும்பான்மையாக அது இறக்குமதியையே நம்பியிருந்தது.

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாததால், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டன. மேலும், இலங்கையின் பொருளாதாரம் தாராளவாதக் கொள்கைகளால் பெரும்பாலான துறைகளில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்திருந்தது. கொரோனா காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் பன்னாட்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறின. இதுவும் கணிசமான பாதிப்பை இலங்கையின் மீது உண்டாக்கியது.

Sri Lanka
Sri Lanka
AP Photo/Eranga Jayawardena

அதுமட்டுமல்லாமல் சீனாவுடன் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் கூட்டு வைத்திருந்ததால், இலங்கையின் மீது உலக நாடுகள் எதிர்ப்பு மனநிலையில் இருந்தன. இதனாலும் பெரிய அளவில் இலங்கைக்கு உதவ எந்த நாடும் முன்வரவில்லை. சீனாவிடமிருந்து பெரிய அளவில் உட்கட்டமைப்புக்குக் கடன் வாங்கியது இலங்கை. அதில் மிகப்பெரிய துறைமுகம் அமைக்கும் திட்டமும் ஒன்று. கடல் வாணிபத்தில் இலங்கை முக்கியமானது. அதைக் கைப்பற்றும் பொருட்டு இலங்கையைக் குறிவைத்தது சீனா.

ஏற்கெனவே, இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளிலும் தன்னுடைய ஆதிக்கத்தை நிறுவியிருந்த சீனா, இலங்கையில் துறைமுகத்தைக் கட்டமைப்பதன் மூலம் தனது பலத்தை மேலும் வலுப்படுத்த தயாரானது. இது மட்டுமின்றி, ஹம்பன்தோட்டா விமான நிலையம், தெற்கு விரைவுச் சாலை, அனல்மின் நிலையம், கொழும்பு துறைமுக நகரம் என பல்வேறு திட்டங்களின் மூலமும் இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ.செளந்தர்ராஜனிடம் பேசினோம்.

``இலங்கையில் தற்போது உருவாகியுள்ள நெருக்கடி அனைத்துக்கும் காரணம் அந்நாட்டு அரசு கடைபிடித்துவரும் தாராளவாத கொள்கைதான். தாராளவாதத்தின் காரணமாக உள்நாட்டு சந்தையை முற்றிலுமாக அந்நிய நிறுவனங்களிடம் இழக்கும்போது, அவை வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிடுகிறது. இதனால் பொருட்கள், சேவைகளின் மீதான விலை உயர்வு அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் போய்விடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் நெருக்கடி என்று வரும்போது பன்னாட்டு நிறுவனங்கள் அப்படியே வெளியேறிவிடுகின்றன. லாபத்தை மட்டுமே பார்க்கிற நிறுவனங்கள் மக்களின் நலன் பற்றி ஒருபோதும் சிந்திக்காது. கிடைத்தவரை லாபம் என்று சுருட்டிக்கொண்டு போகத்தான் பார்க்கும்.

மூலப்பொருட்கள், சந்தை, கடன் சந்தை என அனைத்திலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதால் ஏற்படும் விளைவுதான் இலங்கையின் பிரதான பிரச்னை. இதனால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பொருளாதாரம், கொரோனா காலத்தில் மிகவும் மோசமடைந்துள்ளது. இலங்கையின் பிரச்னை அதன் சந்தையும், வர்த்தகப் பற்றாக்குறையும்தான். இதனால் ஏற்பட்ட அந்நியச் செலாவணி தட்டுப்பாடும், டாலருக்கு ஈடான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும்தான் காரணம். இயற்கை விவசாயம்தான் உணவுப் பஞ்சத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுவதெல்லாம் உண்மையில்லை.

தாராளவாத கொள்கையின் வீழ்ச்சிக்குத் தொடர்ந்து நாடுகள் பலியாகின்றன. தற்போது இலங்கையில் அது கண்கூடாகத் தெரிகிறது. இந்தியாவில், பிரதமர் மோடியும் அதை நோக்கித்தான் போய்க்கொன்டிருக்கிறார். அவருடைய கொள்கைகள், மசோதாக்கள் அனைத்துமே தனியார்மயத்தையே தூக்கிப் பிடிக்கிறது. இதன் விளைவை உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால், ரயில் மேம்பாட்டு கட்டணமாக பயணிகளிடம் கூடுதலாக பணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை சொல்லலாம். இன்னொரு உதாரணம், ஜியோ. குறைந்த விலையில் சேவை என ஆரம்பத்தில் ஜியோவை ஊக்குவித்தது. ஆனால் இன்று அதன் சேவைகளுக்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நல்ல வேளை, தேர்தல் காரணமாக இருந்தாலும் வேளாண் மசோதா திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும் மின்சார மசோதா எனப் பல மசோதாக்களில் கார்ப்பரேட்டுகளை ஊக்குவிப்பதற்கான வேலைகளையே மேற்கொண்டுவருகிறது. இப்படியே போனால் இலங்கையின் நிலை இந்தியாவுக்கு வரும்.

ஏற்கெனவே பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்துக்கொண்டே போகிறது. லாபம் கொழிக்கும் நிறுவனங்களுக்குச் சாதகமாக அரசுகள் செயல்படும்போது, மக்களிடம் புழங்க வேண்டிய பணம் வெகு சிலரிடம் மட்டுமே முடங்கிவிடுகிறது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணம்தான் இலங்கை" என்றார்.

தற்போது இலங்கையிடம் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறைந்துள்ள நிலையில், வெளிநாட்டுக் கடன், உள்நாட்டுக் கடன் என இலங்கைக்கு மொத்த 730 கோடி டாலர் கடன் உள்ளது. இதில் சர்வதேசக் கடன் பத்திரங்களாக வாங்கிய 500 கோடி டாலர் கடனை இந்த ஜனவரிக்குள் செலுத்த வேண்டும். ஆனால், அவ்வளவு அந்நியச் செலாவணிக் கையிருப்பு இல்லாததால், அந்த கடனை செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. உள்நாட்டுப் பொருளாதாரமும் பாதித்த நிலையில், இறக்குமதி செய்து சந்தையைக் காப்பாற்ற அந்நியச் செலாவணி இருப்பும் கையில் இல்லாமல் இருக்கும் இலங்கை, தற்போது சீனாவின் பிடிக்குள் சிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது. ஏனெனில் இலங்கையின் பெரும்பான்மை கடன் சீனா கொடுத்ததுதான்.

இந்த நிலையில், கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை 100% இயற்கை விவசாய நாடாக மாற்றும் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், கெமிக்கல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக் கொல்லிகள் போன்றவற்றின் இறக்குமதிக்கும் தடை விதித்தார். அதைத் தொடர்ந்த சில மாதங்களிலேயே உணவுப் பற்றாக்குறை பிரச்னை தலைதூக்கியதாகக் கிளப்பப்பட்டது. உடனே எல்லா பிரச்னைக்கும் இயற்கை விவசாயம்தான் காரணமென முடிச்சு போடப்பட்டது. அதிபர் அறிவித்த உடனே அனைத்து விளைச்சலும் இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டது போலவும் அதனால்தான் உணவுப்பஞ்சம் ஏற்பட்டது போலவும் ஒரு பார்வை உருவாக்கப்பட்டது.

ராஜபக்சே குடும்பம்
ராஜபக்சே குடும்பம்

ஏற்கெனவே மோசமான நிர்வாகத்தால், பல பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட இலங்கையில் உணவுப் பஞ்சம் என்பது நீண்டகாலமாக இருந்துவரும் தலைவலி. இயற்கை விவசாயம் என அறிவித்த மூன்றே மாதத்தில் எப்படி உணவுப் பஞ்சம் வரமுடியும்? அதுமட்டுமல்லாமல், அங்கே உணவுப் பயிரிடுதல் குறைவே. இறக்குமதியைத்தான் அதிகம் நம்பியுள்ளனர். உடனே புள்ளிவிவரங்களும் அதற்கேற்ப வெளியிடப்படுகின்றன. இதன்பின்னால் ரசாயன உர நிறுவனங்களின் லாபி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து உடனே நவம்பர் மாதத்தில் கெமிக்கல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக் கொல்லிகள் போன்றவற்றின் இறக்குமதிக்கு விதித்த தடையை இலங்கை அரசு நீக்குகிறது.

காலங்காலமாக நடந்துவந்த போர், சமீப காலமாக, ராஜபக்சே குடும்பத்தினர் அடிக்கும் கொள்ளை, தனியார்மயம் மற்றும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் மூலமாக வரும் அன்னியச் செலாவணி குறைந்தது, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மிகவும் வீழ்ந்திருப்பது போன்றவையே இலங்கையின் மொத்த வீழ்ச்சிக்கும் முக்கிய காரணங்களாக உள்ளன என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.