விநியோக சங்கிலியை மாற்றி அமைக்கும் நாடுகள்! சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா? #DoubtOfCommonMan

கடந்த பல ஆண்டுகளாக உலகின் அதிவேகப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய நாடுகளில் சீனா முதன்மையான இடத்தைப் பிடித்து வந்தது. கொரோனாவுக்குப் பிறகு சீனப் பொருளாதாரம் சரியுமா..?
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியது என்பதால், அனைத்து நாடுகளும் அந்நாட்டின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றன. இதன் காரணமாக எல்லா நாடுகளும் சீனாவை ஓரங்கட்டிவிட்டால், சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளதா?" என்ற கேள்வியைக் கேட்டிருந்தார் வாசகர் ராமநாதன். அந்தக் கேள்வியை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் முடக்கப்பட்டுள்ளன. உலகப் பொருளாதாரமே நிலைகுலைந்துவிட்டது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். ஆனால், இந்தியாவுடன் சீனா தற்போதும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் அத்துமீறலை எதிர்க்கும் வகையில் இந்தியாவில் சிலர் சீனப் பொருள்களை உடைத்தும், புறக்கணித்தும் வருகின்றனர். ஆனால், உண்மையில் சீனாவின் பொருள்களை நம்மால் புறக்கணித்து விட முடியாதுதான். இங்கு நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், ஆப்ஸ் என அனைத்திலும் சீனாவே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியர்கள், சீனாவின் பொருள்களைப் புறக்கணிப்பதால் மட்டும் சீனாவின் பொருளாதாரம் சரிந்துவிடாது. ஆனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவைப் புறக்கணித்ததால்..?
பொருளாதார ஆலோகசர் வி.கோபாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமே அந்த நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள்தாம். சீனாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கூடுவதற்கு அதன் ஏற்றுமதி ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது.
"கடந்த பல ஆண்டுகளாக உலகின் அதிவேகப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய நாடாக சீனா இருந்தது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 90 களில்தான் தொடங்கியது. ஆனால் அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் மிகப்பெரிய பொருளாதாரமாக சீனப் பொருளாதாரம் வளர்ந்து நிற்கிறது. உலகின் உற்பத்தி கேந்திரமாக, சீனா மாறியதைத் தொடர்ந்து அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், அந்நியச் செலாவணியும் உச்சத்தை எட்டின. அந்த வளர்ச்சியையும் அந்நியச் செலாவணியையும் வைத்துக்கொண்டு உலகில் பல நாடுகளுக்குப் பணத்தை வாரி வழங்கி தனது ஆளுமையை நிலைநாட்ட முயன்றது. கடந்த சில ஆண்டுகளாக பி.ஆர்.ஐ (Belt and Road Initiative) என்ற திட்டத்தின் மூலம் தனது வர்த்தகத்தையும் ஆதிக்கத்தையும் உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்ல முற்பட்டது. பல நாடுகளும் சீனாவுடன் இந்தத் திட்டத்தில் கைகோத்தன.

ஆனால் சமீபத்தில் சீனாவிலிருந்து பரவிய வைரஸ் காரணமாக உலக நாடுகள் சீனாவின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன. சீனாவின் இந்த அலட்சியத்தால் உலகப் பொருளாதாரமே நிலை குலைந்து போயுள்ளது. இந்த வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்குப் பல ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் சீனாவையும் புரட்டிப் போடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமே அந்த நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள்தாம். சீனாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கூடுவதற்கு அதன் ஏற்றுமதி ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. மேலும் உலக நாடுகளின் பல நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை சீனாவில் தொடங்கியுள்ளன.
சீன அரசு வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க பல வசதிகளைச் செய்துகொடுத்து அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றது. முக்கியமாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அருமையான உள்கட்டமைப்பு வசதிகள், கணக்கிலடங்கா பணியாளர்கள் என அனைத்து விஷயங்களும் ஆதரவாக இருந்த காரணத்தால் பல நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை அங்கே நிறுவி வர்த்தகம் செய்துவந்தனர். மேலும் சீனாவின் உள்நாட்டு நுகர்வுச் சந்தையும் மிகப்பெரியது என்ற காரணத்தால் பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு சீனாவில் வர்த்தகத்தைத் தொடங்கின. சுருக்கமாகச் சொல்லப்போனால் உலகத்தின் விநியோகச் சங்கிலியாக சீனா திகழ்ந்தது.
ஆனால், அதே விஷயம்தான் உலக நாடுகளின் கோபத்தை தற்போது தூண்டியுள்ளது. வைரஸ் பிரச்னை உலகை உலுக்கியபோது உலக நாடுகள் பலவற்றிற்கும் போதிய மருத்துவ உபகரணங்களை சீனா அனுப்ப சம்மதிக்கவில்லை. அந்த உபகரணங்களைத் தங்கள் நாட்டிற்குள்ளேயே பதுக்கிக்கொண்டது பல நாடுகளை அதிர்ச்சி அடையச்செய்தது. அதன் காரணமாக உலக நாடுகள் ஒரே குரலில் இனி சீனாவின் விநியோகச் சங்கிலியை நம்பக்கூடாது என்று குரல் கொடுக்கத் தொடங்கினர். அதன் காரணமாக இனி வரும் காலங்களில் அந்த நாட்டிலிருந்து பல தொழிற்சாலைகள் வெளியேறி இந்தியா போன்ற இதர நாடுகளுக்குச் செல்லவே வாய்ப்புகள் அதிகம்.

மேலும், அமெரிக்க அரசு சீனாவின் மீது வர்த்தகப் போர் தொடுத்து வந்த வேளையில் இந்த வைரஸ் பிரச்னை எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல மாறிவிட்டது. இனி வரும் காலத்தில் அமெரிக்காவின் கோபப் பார்வை சீனாவைத் தாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டால் சீனாவின் பொருளாதாரம் கடந்த காலங்களைப் போலல்லாது கடும் வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அதன் தாக்கம் உலகப் பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும். சீனாவை மட்டுமே நம்பியிருக்கும் விநியோகச் சங்கிலியால் உலகத்திற்குப் பல ஆபத்துகள் வரும் என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன. சீனாவின் வீழ்ச்சியால் உலகப் பொருளாதாரம் தடுமாறினாலும், விநியோகச் சங்கிலியை மாற்றியமைப்பதில்தான் பல நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன. அப்படி சீனாவை விட்டு விநியோகச் சங்கிலி விலகினால் சீனப் பொருளாதாரத்திற்கும் அந்த நாட்டிற்கும் பெரும் சிக்கலை நிச்சயம் ஏற்படுத்தும்." என்றார்.
இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை இங்கே பதிவு செய்யவும்.
