Published:Updated:

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி குறைவு! - இந்தியாவுக்கு கூடுதல் வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்துமா?!

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி குறைவுக்கு சீனா-அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரும் ஒரு காரணம்.

ஏற்றுமதி-இறக்குமதி
ஏற்றுமதி-இறக்குமதி

சீனா - அமெரிக்கா இடையேயான  வர்த்தகப் போர் நாளுக்கு நாள் அதிகரித்துத்தான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால், சீனாவின் வர்த்தகம் சற்றே பின்தங்கியுள்ளது. அதன் வெளிப்பாடாக, சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, கடந்த செப்டம்பர் மாதத்தில் எதிர்பார்த்ததைவிடக் குறைந்துவிட்டது. உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தேவைகள் குறைந்ததால் இந்தச் சரிவை சீனா சந்தித்துள்ளது. சீனாவில், கடந்த செப்டம்பர் மாத ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 3.2 சதவிகிதம் குறைந்துவிட்டது. இதேபோல், இறக்குமதியும் 8.5 சதவிகிதம் சரிவடைந்துவிட்டதாக சீன சுங்கத்துறை நிர்வாகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

சீனாவின் செப்டம்பர் மாத ஏற்றுமதி 2.8 சதவிகிதமும், இறக்குமதி 6 சதவிகிதமும் குறையும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் நிறுவனம் ஏற்கெனவே கணித்திருந்தது. ஆனால், அதைவிட அதிகமான சரிவை சீனா சந்தித்துள்ளது.

உலகப் பொருளாதார வளர்ச்சியில் நிலவும் மந்தநிலை, அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளில் நீடிக்கும் பிரச்னைகள் காரணமாக சீனாவின் ஏற்றுமதி, அடுத்து வரும் மாதங்களிலும் சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே சில தினங்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அது தோல்வியில்தான் முடிவடைந்தது.  இருப்பினும் இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சீனப் பொருள்களுக்கு மேற்கொண்டு வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறுத்திவைத்தார்.

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி குறைவுக்கு, சீனா-அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரும் ஒரு காரணம்.
'மில்லியன் டு பில்லியன்... இந்தியா-சீனா வியாபாரங்களின் ஆச்சர்யங்கள்! - சோம வள்ளியப்பன்

மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவுடன், வர்த்தகத்தின் இணக்கமான சூழ்நிலை காணப்படாதபோது, சீனா தனது அண்டை நாடுகளுடன், குறிப்பாக இந்தியாவுடன் வர்த்தகத்தைப் பலப்படுத்தத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது, இந்தியாவுக்கு கூடுதல் வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தும்.