பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க், பல்வேறு அதிரடிகளைப் புகுத்தி வருகிறார். ட்விட்டரை வாங்கிய சூட்டோடு அங்கு பணியாற்றி வந்த 3,700 பேரை டிஸ்மிஸ் செய்தார். அத்துடன், அதிக நேரம் பணியாற்ற வேண்டும் என்று ஊழியர்களைக் கேட்டுக்கொண்ட அவர், இதில் விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளலாம் என்றார். இதனால் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர், ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துவிட்டு வெளியேறினர்.

இதனிடையே, வெரிஃபைட் ப்ளூ டிக் பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்போவதாக மஸ்க் அதிரடியாக அறிவித்தார். அத்துடன், ட்விட்டரில் சிலரது கணக்குகளையும் முடக்கத் தொடங்கியதாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், தனது அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையை தற்போது மேற்கொண்டு வருகிறார் எலான் மஸ்க். அதன் ஒருபகுதியாக, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவன தலைமையகத்தில் இருக்கும் பொருள்களை ஏலம் விட அவர் தீர்மானித்துள்ளார். அதன்படி, தலைமை அலுவலகத்தில் உள்ள ட்விட்டர் பறவையின் மாதிரி, அங்குள்ள இருக்கைகள், காபி தயாரிப்பு இயந்திரம், பிரிட்ஜ், புராஜெக்டர் மற்றும் சமையல் இயந்திரங்கள் போன்றவற்றை ஏலம் விட முடிவு செய்துள்ளார்.
அதன்படி, வரும் ஜனவரி 17-ம் தேதி, இந்தப் பொருள்கள் ஏலம் விடப்படும் என்று கூறப்படுகிறது. மொத்தம் இரண்டு நாள்களுக்கு நடைபெறவுள்ள இந்த ஏலத்தை, முன்னணி ஏல விற்பனை நிறுவனம் ஒன்று நடத்தவுள்ளது. ஏலத்தில் விடப்படும் பொருள்களுக்கு 25 முதல் 50 டாலர்கள் விலையில் இருந்து ஏலம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.