Published:Updated:

பொருளாதாரத்தில் பின்னிப் பிணைந்து கிடக்கும் இந்தியா - சீனா! பாதிக்கப்பட்டால் இழப்பு யாருக்கு?

இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது சீனா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீண்ட நாள்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், இந்திய எல்லையில் ஆரம்பித்திருக்கும் யுத்தப் பதற்றம் என சீனாவுக்கு உலக நாடுகளுடனான பிணக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது.

கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவியதால், அனைத்து நாடுகளுமே இன்று சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில், சீனா பொருள்கள் பயன்படுத்துவதை, சீனாவிலிருந்து பொருள்கள் இறக்குமதி செய்வதை தடை செய்யலாம் என்கிற கருத்து மீண்டும் மேலோங்கியிருக்கிறது. சமீபத்தில் அன்னிய நேரடி முதலீட்டு விவகாரத்தில், சீனாவை மட்டும் இந்தியா டார்கெட் செய்தது கவனிக்கத்தக்கது.

இறக்குமதி ஆர்டர்கள் நிறுத்தம்!

மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவுடன், வர்த்தகத்தின் இணக்கமான சூழ்நிலை காணப்படாதபோது, சீனா தனது அண்டை நாடுகளுடன், குறிப்பாக இந்தியாவுடன் வர்த்தகத்தைப் பலப்படுத்தத் திட்டமிட்டிருந்தது. இது, இந்தியாவுக்குப் கூடுதல் வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தும் என எண்ணிக்கொண்டிருந்த நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையே தற்போது போர் பதற்றம் உருவாகியிருக்கிறது.

Vikatan

கொரோனா பாதிப்பு காரணமாக, ஏற்கனவே, 30 - 40 சதவிகிதம் அளவுக்கு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் அளவு குறைந்துவிட்ட நிலையில், இப்போது ஏற்பட்டிருக்கும் மோதலை அடுத்து, இந்திய இறக்குமதியாளர்கள், சீன இறக்குமதி, ஆர்டர்களை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, கொல்கத்தாவைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள், சீன இறக்குமதி பொருள்களுக்கான புதிய ஆர்டர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாவதில், 20 சதவிகிதம், கொல்கத்தா துறைமுகத்திலிருந்துதான் ஏற்றுமதி ஆகிறது. நாடு முடக்கப்பட்ட காரணத்தால், தற்போது, சுமார் 4,000 கன்டெய்னர்கள் அங்கு தேங்கியுள்ளன. நாடு முடக்கப்பட்ட சமயத்தில், ஏற்றுமதி குறைவாகவும், இறக்குமதி அதிகமாகவும் இருந்தது. தற்போது, ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்துள்ளது.

இந்தியா - சீனா வர்த்தகம்!

இந்திய - சீன வர்த்தகம் தொடங்கி பல ஆண்டுகளாகிவிட்டன. 1984-ம் ஆண்டு 'மோஸ்ட் ஃபாவர்ட் நேஷன்' (Most Favoured Nation) என்கிற தகுதியை இந்தியாவும் சீனாவும் பரிமாறிக்கொண்டு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டன. 1992-ல் இருநாடுகளுக்கும் இடையே விரிவான இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தம், `பை லாட்டரல் டிரேட் அக்ரிமென்ட் (Bilateral trade)' போடப்பட்டது.

1994-ல் இரு நாடுகளுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இப்படியாக மெல்ல மெல்ல வளர்ந்தது இந்திய - சீன வர்த்தகம். ஆனால், இந்தியா சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யும் சீனப் பொருள்களின் மதிப்பு அதிகம். இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பு குறைவு. எனவே டிரேட் டெஃபிசிட் (வர்த்தக பற்றாக்குறை), 2019-ல் கிட்டத்தட்ட 60 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இது மிக அதிகம்.

 Xi Jinping  and Narendra modi
Xi Jinping and Narendra modi
AP

இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது சீனா. ஆனால், இந்தியா ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில்தான் சீனா இருக்கிறது. அதாவது, அதிகம் பெற்றுக்கொண்டு, குறைவாக அனுப்பும் நாடாகச் சீனா இருக்கிறது. இது வளர்ச்சிக்கான வழி இல்லை என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவுக்கு எதிராக சூழ்ச்சி நடக்கிறது!

நீண்ட நாள்களாகவே, இந்தியா தொடர்பான அனைத்து விஷயங்களையும் மிகவும் தந்திரமாகக் கையாண்டு வருகிறது சீனா. தன்னுடைய முதலீடுகளை மற்ற நாடுகள் வாயிலாக இந்தியாவுக்குள் கொண்டுவந்திருப்பதிலிருந்தே சீனாவின் ராஜ தந்திரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அண்மையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உருவாகியிருக்கும் போர் பதற்றமும் சீனாவின் தந்திரச் செயல்களில் ஒன்றாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. இது குறித்து பொருளாதார நிபுணரான சோம வள்ளியப்பனிடம் பேசினோம்.   

"2006-ம் ஆண்டு இந்தியா மிக வேகமாக, அசோசியேஷன் ஆஃப் சவுத் ஏசியன் நேஷன் (ஏசியான்) என்ற அமைப்பின் கீழ் உள்ள புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்  ஆகிய நாடுகளுடன் ப்ரீ டிரேட் அக்ரிமென்ட் (FTA) கையொப்பமிட்டது. ஆனால், இவற்றால் இந்தியாவுக்கு கிடைக்கும் பலன் என்று பெரிதாகச் சொல்ல முடியாது.

`அமைதியைத்தான் விரும்புகிறோம்; சீண்டினால்...! - சீனாவை நேரடியாக எச்சரித்த பிரதமர் மோடி

காரணம், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 25 சதவிகிதம் மட்டுமே இந்த எஃப்.டி.ஏ கையொப்பமிட்ட நாடுகளுக்குப் போகிறது. ஆனால், இதே நாடுகள் இந்தியாவுக்குள் தள்ளும் பொருள்களின் மதிப்பு மிக அதிகம். எஃப்.டி.ஏ -வில் இறக்குமதியும் அனுமதிக்க வேண்டும் என்பதால், அந்த நாடுகளிலிருந்து உலோகங்கள், பால் பொருள்கள், மிளகு, ஏலக்காய், தேங்காய் எண்ணெய் போன்றவை குறைந்த விலைகளில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.

இந்த ஏசியான் நாடுகள் தவிர, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் சேர்த்து ஓர் அமைப்பாக்கி, இந்த நாடுகளுக்குள் எஃப்.டி.ஏ போல, வரிகள் மற்றும் தடைகள் இல்லா வர்த்தகம் ஏற்றுமதி, இறக்குமதி செய்துகொள்ள முயற்சி நடக்கின்றது. அதன் பெயர், 'Regional Comprehensive Economic Partnership (RCEP)'. இந்த ஏற்பாட்டை முனைந்து செய்வது சீனா. 

ஏற்றுமதி
ஏற்றுமதி

இந்த நாடுகளுக்கு நாம் செய்யும் ஏற்றுமதி என்பது நமது மொத்த ஏற்றுமதியில் 20 சதவிகிதம்தான். ஆனால், இந்த நாடுகளிலிருந்து நாம் செய்துகொள்ளும் இறக்குமதி என்பது நமது மொத்த இறக்குமதியில் 35 சதவிகிதம். இதனால் தற்போது நமக்கு டிரேடு டெஃபிசிட் அதிகமாக இருக்கிறது. இந்தியாவை இந்த அமைப்புக்குள் இழுக்கத் தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன. இருப்பினும், இந்தியப் பிரதமர் அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுக்கக் கூடியவராகத் தெரியவில்லை. இந்தியா இதுவரை இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்தப் பிடிவாதத்தை இந்தியா இப்படியே கடைப்பிடிப்பதுதான் நல்லது" என்றார் அவர்.

சீனாவுக்கு ஆபத்து; இந்தியாவுக்கு பேராபத்து!

கடந்த சில வருடங்களாகவே இந்தியாவும் சீனாவும் பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பின்னிப் பிணைந்துள்ள நாடுகளாக இருக்கின்றன. அதனால் சீனா - இந்தியா இடையே சுமூக நிலை ஏற்படாவிட்டால், அது வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும். அதிலும் கொரோனாவினால் இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டிருந்தாலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இந்தியாதான். இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும்.  

அதே சமயம் உலகின் இரண்டாவது நாடு என்று பெருமைப்படக் கூறிக்கொண்டிருக்கும் சீனாவுக்கு, இந்தியா வர்த்தக ரீதியில் நட்பு நாடாக இல்லை எனில் நிச்சயம் பெருத்த அடி வாங்கும் சீனா. ஆக இந்தியாவுடனான உறவை சுமுகமாக பேணுவது சீனாவுக்கும் மிக மிக அவசியமான ஒன்றாகும். 

பொருளாதாரம்
பொருளாதாரம்

இந்தியாவில் ஏற்கெனவே கொரோனாவால் பொருளாதாரம் பின்னோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்த நேரத்தில் இது போன்ற பதற்றங்கள் இன்னும் பின்னடைவையே கொடுக்கும். நடப்பு நிதியாண்டில் சீனா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தது 5.3 சதவிகிதம்தான். ஆனால், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது 14 சதவிகிதம் என சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. 

ஆர்கானிக் கெமிக்கல்ஸ், காட்டன் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள், தாது மற்றும் சாம்பல், கனிம எரிபொருட்கள், எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்கள், மீன் மற்றும் கடல் உணவுகள், எலக்ட்ரிகல் மெஷினரி மற்றும் உபகரணங்கள், பொறியியல் சாதனங்கள் போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சீனா இந்தியாவில் வெறும் 2.4 பில்லியன் டாலர்கள் மட்டுமே நேரடியாக முதலீடு செய்துள்ளது. ஆனால், சில முதலீடுகள் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் மூலம் சீனாவின் முதலீடுகள் இந்தியாவில் செய்யப்படுகின்றன.

சீனாவில் இந்திய பருத்தி!

அமெரிக்க நாடு உலகின் அதிக அளவு பருத்தி ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. ஒருகாலத்தில் சீனாவின் மிகப்பெரிய பருத்தி ஏற்றுமதியாளராக அமெரிக்கா இருந்தது. ஆனால், அமெரிக்கா - சீனாவுக்கு இடையே வர்த்தக யுத்தம் ஆரம்பமானதிலிருந்து, சீன இறக்குமதியாளர்கள் அமெரிக்காவுக்குப் பதிலாக இந்தியாவிலிருந்து அதிக அளவில் பருத்தி இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர். கடந்த ஜனவரி மாதத்தில்தான், இந்திய வர்த்தகர்களும் சீன வர்த்தகர்களும் 7,00,000 - 8,00,000 பேல் (177.8 கிலோ) பருத்தி வர்த்தகத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இது வழக்கத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாகும். இந்த ஒப்பந்தத்தின்படி 4,00,000 பேல்கள் ஏற்கெனவே ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டன. மீதி இருக்கும் பேல்கள் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

cotton
cotton

உலகெங்கும் சீன ஆடைகளுக்கு வரவேற்பு உள்ளதால் மூலப் பொருளான பருத்தியின் தேவை அந்நாட்டு உற்பத்தியைவிடப் பல மடங்கு உள்ளது. அமெரிக்க பருத்தியைவிட இந்தியப் பருத்தி நல்ல தரத்துடன் இருப்பதாலும், சமீப காலமாக இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து விலை மிகவும் மலிவாகக் கிடைப்பதாலும் சீன இறக்குமதியாளர்கள் இந்திய பருத்திகளை அதிகம் விரும்புகிறார்கள்.  

'4,00,000 பேல்கள்'
சீனவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்தியின் அளவு!

அதே நேரத்தில் உபரியாக உள்ள பருத்தியை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்கிறது.போர்ச்சூழல் வர்த்தகத்தைப் பாதிக்காமல் இருக்கும்பட்சத்தில், விளைச்சல் அதிகமாகி உபரி பருத்தி அதிகமானால், சீனாவில் இந்தியப் பருத்தி பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஈர்த்திருக்கும் அன்னிய நேரடி முதலீடு!

ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2020 வரையிலான இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடுகளில், மொரிஷியஷ் 141.9 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளைச் செய்து முதலிடத்தில் இருக்கிறது. சிங்கப்பூர் 97.7 பில்லியன் டாலரும், ஜப்பான் 33.9 பில்லியன் டாலரும், நெதர்லாந்து 33.5 பில்லியன் டாலரும், அமெரிக்கா 29.8 பில்லியன் டாலர்களும் முதலீடு செய்துள்ளன. இதுவே லண்டன் 28.2 பில்லியன் டாலர்களும், ஜெர்மனி 12.2 பில்லியன் டாலர்களும், சைப்ரஸ் 10.7 பில்லியன் டாலர்களும், பிரான்ஸ் 8.5 பில்லியன் டாலர்களும், ஐக்கிய அரேபிய நாடுகள் 7 பில்லியன் டாலர்களும் முதலீடு செய்துள்ளன.

டெலிகாம் துறை... குவியும் அந்நிய முதலீடு..! - என்ன காரணம்?

இதில் சீனா வெறும் 2.4 பில்லியன் டாலர்கள் மட்டுமே நேரடியாக முதலீடு செய்துள்ளது. ஆனால், சில முதலீடுகள் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் மூலம் சீனாவின் முதலீடுகள் இந்தியாவில் செய்யப்படுகின்றன. ஆக மொத்தத்தில் சீனா மூலம் இந்தியாவில் இதுவரை செய்த, தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் என 26 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

ஆக இப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் சீனாவும் இந்தியாவும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருக்கையில், சீனா-அமெரிக்கா வர்த்தக போர் போல,  இவ்விரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் ஏற்பட்டால், அதிக பாதிப்பு இந்தியாவுக்குத்தான். ஏனெனில் பெரும்பாலான விஷயங்களில் இந்தியாதான் சீனாவைச் சார்ந்திருக்கிறதே தவிர, சீனா அல்ல என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு