Published:Updated:

சம்பளம் போடமுடியாமல் தவிக்கும் ஐ.நா... பின்னணியில் அமெரிக்கா?

சமீபகாலமாக ஐ.நா அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதிப் பங்களிப்பை உறுப்பு நாடுகள் முறையாகச் செலுத்தவில்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிதி நெருக்கடியில் ஐ.நா சிக்கியிருக்கிறது.

United Nations Headquarters
United Nations Headquarters

உலக நாடுகளுக்கு ஒரு பிரச்னை என்றால், ஐ.நா-வை நாடுவார்கள். ஆனால், அந்த ஐ.நா-வுக்கே பிரச்னை என்றால் எங்கே போவது?

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளைத் தீர்க்க, மத்தியஸ்தம் செய்ய பொதுவான ஓர் அமைப்பு தேவை என்பதை சர்வதேச நாடுகள் உணர்ந்தன. அப்படித்தான் ஐக்கிய நாடுகள் சபை உருவானது. இரு நாடுகளுக்கிடையே சண்டை மூண்டால் சமாதானம் செய்வது, நட்புறவை ஏற்படுத்துவது, மனிதநேயப் பணிகளை மேற்கொள்வது என்று உலகில் பல்வேறு அறப்பணிகளை ஐ.நா மேற்கொள்கிறது. கடந்த 1945-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

United Nations
United Nations

இதன் தலைமையகம் நியூயார்க் நகரில் உள்ளது. ஐ.நா பல பிரிவுகளாக இயங்குகிறது. தலைமையகம் நியூயார்க் நகரில் இருந்தாலும், பெரும்பாலான அலுவலகங்கள் ஜெனிவாவில் உள்ளன. வியன்னா மற்றும் நைரோபி நகரங்களிலும் முக்கிய அலுவலகங்கள் செயல்படுகின்றன. சர்வதேச நீதிமன்றம் திஹேக் நகரில் உள்ளது. உலகம் முழுக்க ஐ.நா அமைப்பில் 37,000 பேர் பணிபுரிகிறார்கள். அராபிக், ஆங்கிலம், ஸ்பானீஷ், சைனீஷ், பிரெஞ்சு, ரஷ்யன் ஆகிய 6 மொழிகளும் அலுவல் மொழிகள். உறுப்பு நாடுகள் அளிக்கும் நிதிப் பங்களிப்பில்தான் ஐ.நா இயங்குகிறது; அறப்பணிகளை மேற்கொள்கிறது; தன் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குகிறது.

சமீபகாலமாக ஐ.நா அமைப்புக்குச் செலுத்தவேண்டிய பங்களிப்பை உறுப்பு நாடுகள் முறையாகச் செலுத்தவில்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிதி நெருக்கடியில் ஐ.நா. சிக்கியிருக்கிறது. விளைவாக, நடப்பு மாதச் சம்பளம்கூட அளிக்க முடியாத நிலையில் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் ஆன்டானியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால், பாக்கி வைத்துள்ள நாடுகள் பட்டியலை அறிவிக்கவில்லை.

ஐ.நா அமைப்பின் ஒரு வருட பட்ஜெட் சுமார் 40,000 கோடி ரூபாய்.
United Nations
United Nations

‘அமெரிக்கா, இரான், பிரேசில், அர்ஜென்டினா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் அதிகளவில் பாக்கி வைத்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. மொத்தம் 64 நாடுகள் அதிகளவில் பாக்கி வைத்துள்ளன. வெனிசுலா, வடகொரியா, காங்கோ போன்ற நாடுகள் நிதியே தருவதில்லையாம். பணக்கார நாடுகளான இஸ்ரேல், சவுதி அரேபியா, தென்கொரியா போன்ற நாடுகளும் ஐ.நா-வுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைத் தராமல் இழுத்தடித்து வருகின்றன. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா கூட ஐ.நா-வுக்கு சல்லி பைசா பாக்கிவைக்காமல் செட்டில் செய்துள்ளது. ஆனால், சவுதி, அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் பாக்கி வைத்திருப்பதுதான் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் ஐ.நா-வுக்கு 230 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பற்றாக்குறை உள்ளது. இது, அக்டோபர் மாத இறுதியில் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும். இதுகுறித்து ஐ.நா அமைப்பின் பொதுச் செயலர் ஆன்டானியோ கட்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா-வுக்கு முறையாக நிதியைச் செலுத்தும் 129 நாடுகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாக்கி வைத்துள்ள நாடுகள் நிலைமையைப் புரிந்துகொண்டு, உடனடியாகத் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

உறுப்பினர் நாடுகள் தங்கள் பங்களிப்பை உடனடியாகச் செலுத்த வேண்டும்
ஐ.நா பொதுச்செயலர்

ஐ.நா-வுக்குத் தேவையான ஒரு வருட பட்ஜெட்டில் 22 சதவிகிதத்தை அமெரிக்கா தருகிறது. அதாவது, கிட்டத்தட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக ஐ.நா-வுக்கு அளிக்கும் பங்களிப்பைக் குறைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. நடப்பாண்டில் இதுவரை 1.99 மில்லியன் டாலர்கள்தான் ஐ.நாவுக்குக் கிடைத்துள்ளது. பாக்கியாக 1.3 பில்லியன் டாலர்கள் உள்ளது.

ஐ.நா-வின் முக்கிய அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் தங்கள் பங்களிப்பைக் முறையாகச் செலுத்திவிடுகின்றன. அமெரிக்கா மட்டுமே எப்போதும் தனது பங்களிப்பைக் தாமதமாக வழங்குகிறது.

ஒவ்வோர் ஆண்டும் உறுப்பு நாடுகளின் ஜி.டி.பி அந்த நாட்டுக்குள்ள கடன், தனிநபர் வருமானம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, ஐ.நா-வுக்கு அளிக்க வேண்டிய பங்களிப்பு நிதி நிர்ணயிக்கப்படுகிறது.

`ஐ.நா சறுக்கல்; உதவிக்கு வராத உலக நாடுகள்!' - காஷ்மீர் விவகாரத்தில் இம்ரான் கான் போடும் புதுக்கணக்கு