Published:Updated:

`ஊரடங்கை மீறி டெஸ்லா நிறுவனத்தைத் திறந்த எலான் மஸ்க்!’- ஆதரவளித்த ட்ரம்ப்

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

வாகன உற்பத்தியை அனுமதிக்க அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள நிலையில், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா நகரில் அமைந்துள்ள டெஸ்லாவின் ஆலையைத் திறக்க, அலமேடா கவுண்டி அனுமதிக்கவில்லை.

அமெரிக்க அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி, கலிஃபோர்னியா மாகாணக்த்தில் உள்ள டெஸ்லாவின் ஆலையைத் திறந்துள்ளார், எலான் மஸ்க். அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனம், டெஸ்லா மோட்டார்ஸ். இது, மின் சேமிப்புக் கலன்களையும் விற்பனைசெய்கிறது. 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், மாடல் S, மாடல் X போன்ற வாகனங்களை உற்பத்திசெய்துள்ளது. டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக எலான் மஸ்க் உள்ளார்.

கொரோனாவால், மார்ச் மாத இறுதியில் எல்லா தொழிற்சாலைகளும் மூட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கலிஃபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள டெஸ்லாவின் தொழிற்சாலையும் மூடப்பட்டது. ஆனால், தொடக்கம் முதலே ஊரடங்கு உத்தரவுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளை எலான் மஸ்க் தெரிவித்துவந்தார். இந்த நிலையில், கலிபோர்னியா மாகாணத்தின் உள்ளூர் ஊரடங்கு விதிகளை மீறி, டெஸ்ஸாவை திறக்கப்போவதாக அறிவித்திருந்தார் மஸ்க். அதன்படி, கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா ஆலையைத் திறந்துள்ளார்.

ஐன்ஸ்டீன் முதல் ஸ்டார்ட்அப் வரை... எலான் மஸ்க் வாழ்க்கையை மாற்றிய 8 புத்தகங்கள்!
ஐன்ஸ்டீன் முதல் ஸ்டார்ட்அப் வரை... எலான் மஸ்க் வாழ்க்கையை மாற்றிய 8 புத்தகங்கள்!

`கலிஃபோர்னியா ஆலையில் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறியதற்கு கைது செய்யவேண்டுமானால், என்னைக் கைதுசெய்யுங்கள்’ என்று கடந்த திங்கள்கிழமை அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்கா மாகாணங்களும் உள்ளூர் நிர்வாகங்களும், லாக்டௌனுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பவதற்கான சிறந்த வழியைத் தீர்மானிக்க முயன்று வருகின்றன. இந்நிலையில், ஆலையைத் திறக்க அனுமதிக்கப்படாவிட்டால் நிறுவனத்தின் தலைமையகத்தை கலிஃபோர்னியாவிலிருந்து வேறு மாகாணத்திற்கு மாற்ற இருப்பதாக எலான் மஸ்க் கூறியிருந்தார்.

வாகன உற்பத்தியை அனுமதிக்க அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள நிலையில், ஃப்ரீமாண்ட், ஆலையைத் திறக்க அப்பகுதி நிர்வாகமான அலமேடா கவுன்டி அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அலமேடா கவுன்டியை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்தாக மஸ்க் குறிப்பிட்டார். அதேநேரம், வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருக்காமல், ஆலை மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அலமேடா கவுன்டியின் பொது சுகாதாரத் துறை டெஸ்லாவுடன் மீண்டும் ஆலையைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் லாக்டௌன் உத்தரவுகளை மீறிய பிற நிறுவனங்களுக்கு எடுத்த அதே அணுகுமுறைதான் டெஸ்லாவுக்கும் பொருந்தும் என்று கூறியது. இந்நிலையில், `டெஸ்லாவை தனிமைப்படுத்தியுள்ளனர் என ட்விட்டரில் மஸ்க் பதிவிட்டிருந்தார். மற்ற அமெரிக்க கார் தயாரிப்பாளர்கள் உற்பத்தியை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

டெஸ்லா
டெஸ்லா

கலிஃபோர்னியாவுக்கு வெளியே, டெஸ்லா கடந்த ஆண்டு ஷாங்காயில் ஒரு ஆலையைத் திறந்தது. அதேபோல், பெர்லினில் மற்றொரு ஆலையை அமைத்துவருகிறது. ஆனால், ஃப்ரீமாண்ட் டெஸ்லாவின் தலைமையகம் அதன் முதன்மை உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளது.

அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்டீவன் முனுச்சின், திங்களன்று கலிஃபோர்னியாவில் உள்ள டெஸ்லாவை மீண்டும் திறக்க உதவுவதற்கு ' முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார். கலிஃபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசோம், கடந்த வாரம் மஸ்க்குடன் பேசியதாகவும், கலிஃபோர்னியாவில் மெதுவாக லாக்டௌன் நடவடிக்கைகளை நீக்குவது குறித்தும் பேசியுள்ளார்.

இந்த நிலையில், டெஸ்லாவின் ஃப்ரீமாண்ட் ஆலை திறக்க கலிபோர்னியா மாகாண அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்திருக்கிறார். மேலும், விரைவாகவும் பாதுகாப்பு வசதிகளோடும் அந்த ஆலை திறக்கப்பட்டிருப்பதாகவும் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு