பாகிஸ்தான் கடுமையான நிதிச் சிக்கலால் தற்போது அதிக வட்டிக்கு வெளிநாடுகளிடமிருந்து கடன் பெற்றுள்ளது. இந்தக் கடனைத் திரும்ப செலுத்துவதற்கான நெருக்கடியான சூழலால் தற்போது 7.95% வட்டிக்கு 100 கோடி டாலர் நிதியை (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,500 கோடி) திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதிக வட்டிக்கு வாங்கிய இந்தக் கடனை ஏழு ஆண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக கூறி, லாகூர் - இஸ்லாமபாத் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை பிணையாக வைத்து இந்தக் கடன் பெறப்பட்டுள்ளதாகல் கூறப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொரோனா நோய்த் தொற்றுக்குப்பிறகு பாகிஸ்தான் பொருளாதார நிலை தற்போது அதிக சிக்கல் இருப்பதால், இந்தக் கடனை வாங்கி நிலைமையை சமாளிக்க அந்த நாட்டின் அரசு முயற்சி செய்துவருகிறது.
இதற்குமுன், சவூதி அரேபியாவிடம் 300 கோடி டாலர்களை கடனாக பெற்றது, பாகிஸ்தான். அதில் 200 கோடி டாலர்கள் செலவாகிவிட்டதாகவும், நிதிச் சிக்கலைச் சமாளிப்பதற்குத் திரும்பக் கடனை பெற்றுள்ளதாக கூறியிருக்கிறது. பாகிஸ்தான் எதிர்கொள்ளும் முக்கிய பொருளாதார சவால்கள் ஏழ்மை மற்றும் வேலையின்மையே ஆகும்.
பாகிஸ்தானைப் போல இலங்கையும் பெரும் பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறது. சமீபத்தில் இந்திய அரசாங்கம் ரூ.7,500 கோடி கடன் தந்தது. ஆனால், மேலும் ரூ.15,000 கோடி கடன் வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டிருக்கிறது. அந்நியச் செலாவணி மிகவும் குறைவாக இருப்பதால், கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு பொருள்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கிறது இலங்கை அரசாங்கம்.

கடந்த காலத்தில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் சீன அரசாங்கம் நிதி உதவி செய்துவந்தது. ஆனால், சீனாவில் இப்போது பொருளாதாரச் சிக்கல் இருப்பதால், இந்த இரு நாடுகளுக்கும் அளித்துவந்த நிதி உதவியை நிறுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த இரு நாட்டு அரசாங்கங்களும் அன்றாட நிலைமையைச் சமாளிக்க முடியாத அளவுக்குப் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன!