கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்? #DoubtOfCommonMan

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதே ஒரு சாமானிய மனிதனின் குற்றச்சாட்டாக இருக்கிறது. கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் அந்த அளவுக்கு பெட்ரோலின் விலை குறைவதில்லை என்ற சந்தேகம் இயல்பாகத் தோன்றக்கூடியது.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை உயரும்போதெல்லாம், இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கிறது. ஆனால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும்போது, பெட்ரோல் விலை ஏன் குறைவதில்லை என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் ப.சுகுமார். அவரது கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது!
இது குறித்து பொருளாதார நிபுணர் நாகப்பனிடம் தொடர்பு கொண்டு பேசினோம். "2011-ம் ஆண்டில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரலுக்கு $100 ஆக இருந்தது. அப்போது பெட்ரோலின் விலை 60 ரூபாயாகத்தான் இருந்தது. பிறகு, 2012-ம் ஆண்டிலும் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு $108 ஆக நீடித்தது. அப்போது பெட்ரோலின் விலை உயர்ந்து 75 ரூபாயாக இருந்தது. பிறகு, 2013-ம் ஆண்டில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகபட்சமாக $118 ஆக உயர்ந்தது. அப்போதும் பெட்ரோலின் விலை 75 ரூபாயாகத்தான் இருந்தது.


பிறகு 2014 மற்றும் 2015-ம் ஆண்டில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரலுக்கு முறையே $105 மற்றும் $84 ஆக இருந்தது. அப்போது பெட்ரோலின் விலை முறையே 85 ரூபாய் மற்றும் 70 ரூபாய் என நீடித்தது. கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்த போதெல்லாம் பெட்ரோலின் விலை அந்த அளவுக்கு உயராமலேயே இருந்திருக்கிறது. ஆனால், கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தபோதெல்லாம் பெட்ரோலின் விலை அந்த அளவுக்கு குறையவில்லை என்பது உண்மை.

இதற்குச் சான்றாக 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரலுக்கு முறையே $46 மற்றும் $ 47 எனக் குறைந்து காணப்பட்டது. ஆனால், அப்போதைய பெட்ரோலின் விலை 70 ரூபாய் மற்றும் 75 ரூபாய் என உயர்ந்தே இருந்தது. இதற்குக் காரணம் அரசாங்கம் வரி வருவாயை அதிகப்படுத்துவதற்காக பெட்ரோலின் மீது கூடுதல் வரி விதித்ததே ஆகும். உதாரணமாக, கச்சா எண்ணெய்யின் விலை இரண்டு ரூபாய் குறைந்தால் அரசாங்கம் இரண்டு ரூபாயைக் குறைத்துவிட்டு கூடுதலாக ஒரு ரூபாயை வரியாக நிர்ணயித்து விடுகிறது.
இந்தக் காரணத்தால்தான் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் பெட்ரோலின் விலை சரிசமமாகக் குறையாமல் இருக்கிறது. மேலும், கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்த போதெல்லாம் பெட்ரோல் விலை அந்த அளவுக்கு உயர்த்தப்படாத காரணத்தால் அதன் விலை குறையும்போதும் அந்த அளவுக்கு குறைக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். அரசாங்கம் இந்த வரி விதிப்பை மற்றுமொரு காரணத்துக்கும் பயன்படுத்துகிறது. மக்கள் பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களை அதிகமாக உபயோகப்படுத்துவதை தவிர்த்து பொதுப் போக்குவரத்தையும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார வாகனங்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இதைச் செயல்படுத்துகிறது.
இன்றைய காலகட்டத்தில் பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் வேறுபாட்டுடனே காணப்படுகிறது. இதில் பாதிக்கப்படுவது தினமும் வாகனங்களைப் பயன்படுத்தும் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. அரசாங்கம் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்குவதுபோல இவர்களுக்கும் பெட்ரோல் பயன்பாட்டுக்கு என மானியம் வழங்கினால் தினசரி பெட்ரோல் விலை பாதிப்பிலிருந்து மக்கள் தப்ப இயலும்" என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!