Published:Updated:

சூயஸ் கால்வாயில் சிக்கும் அளவுக்கு ராட்சசக் கப்பல்கள் தேவையா... கன்டெய்னர் கப்பல்களின் வரலாறு என்ன?

ஒரு காலத்தில் மிகவும் செலவு கூடியதும், சிக்கல் நிறைந்ததும், சிரமம் மிகுந்ததுமாக இருந்த சர்வதேச வர்த்தகத்தை ஒரு சிறிய பெட்டிக்குள் அடைத்த கதை நம்மை ஆச்சர்யத்தின் உச்சிக்கே அழைத்துச்செல்லும்.

சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர்கிவன் கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் கடல்வழிப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆனால், எவர்கிவன் உண்டாக்கிய சிக்கலால் நிறுவனங்கள் எதிர்கொள்ளப் போகும் நஷ்டம் சர்வதேச சந்தையில் அடுத்த சில மாதங்களுக்கு பல அதிர்வுகளை உண்டாக்கலாம் என்கிறார்கள்.

அன்றாட அடிப்படை நுகர்வுப் பொருட்களுக்குக்கூட நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிற சூழலில் இது ஒரு சங்கிலித் தொடர் போல பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. Domino effect தியரியில் சொல்லப்படுவது போல இந்தச் சரக்குக் கப்பல்களில் ஏற்படும் ஒரு சிறு பிசகு கூட ஒட்டுமொத்த உலகையும் ஸ்தம்பிக்க வைத்து விடுகிறது.

இன்று நினைத்த மறுகணமே உலகின் எந்த மூலையில் இருந்தும் விரும்பிய பொருட்களை நுகரக்கூடிய மாற்றத்தை மக்கள் வாழ்வில் உண்டாக்கியதற்கு முக்கிய காரணி சர்வதேச வணிகத்தில் சரக்குக் கப்பல்களின் வருகை. சரக்குக் கப்பலும் கன்டெய்னர் கொள்கலன்களின் கண்டுபிடிப்பும் உலக வர்த்தகத்தின் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை.

இலங்கையின் தேயிலை லண்டன் ஹோட்டல் அறைகளில் அருந்தப்படுகின்றது. டென்மார்க்கின் பால் பவுடர் சவுதி அரபியாவில் பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் தயாரிக்கப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு ஜெர்மனியில் விமானம் தயாராகிறது. வங்கதேசத்தில் தைக்கப்படும் ஆடைகள் கனடா ஹை ஸ்ட்ரீட்களில் விற்கப்படுகின்றன. இன்றைய உலகமயமாக்கப்பட்ட வாழ்க்கையில் நம் மனம் ஆசைப்படும் எதுவுமே கைக்கு எட்டும் தூரமே.

சரக்குக் கப்பல்
சரக்குக் கப்பல்
Amr Nabil | AP

ஒரு காலத்தில் மிகவும் செலவு கூடியதும், சிக்கல் நிறைந்ததும், சிரமம் மிகுந்ததுமாக இருந்த சர்வதேச வர்த்தகத்தை ஒரு சிறிய பெட்டிக்குள் அடைத்த கதை நம்மை ஆச்சர்யத்தின் உச்சிக்கே அழைத்துச்செல்லும்.

உலக உற்பத்தியில் 80 சதவிகித பொருட்களின் பரிமாற்றம் சரக்குக் கப்பல்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டாலர்களுக்கும் மேலான மதிப்புள்ள பொருட்கள் உலக சந்தைக்குக் கடல்வழியாகவே அனுப்பப்படுகின்றன. உலக பொருளாதாரத்தைத் தாங்கி, தூக்கி நிறுத்தும் ஒரு முக்கியத்துறை இந்தச் சரக்குக் கப்பல் வணிகம். வணிகர்கள் பொருட்களை வேறு இடங்களுக்கு அனுப்புவதற்கு தரைவழியை விட மலிவானதும் இலகுவானதுமானதும் கடல் வழியே என்று உணர்ந்ததால் கி.பி 3-ம் நூற்றாண்டிலேயே சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கிவிட்டது.

கடல்வழி வணிகம் எப்படி ஆரம்பித்தது?!

நாடுகளுக்கு இடையேயான கடல் வணிகம் பண்டைக்காலம் தொட்டே நடந்து வருகிறது. சிலப்பதிகரத்தில் வரும் பூம்புகார் நகரில் மிகப்பெரிய துறைமுகம் இருந்ததாகவும் தமிழர்கள் அக்காலத்திலேயே அண்டை நாடுகளுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. நாகரிகங்கள் பெரும்பாலும் ஆற்றுப்படுக்கையை மையம்கொண்டே தோன்றியதன் முக்கிய காரணமும் இதுவே. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு பொருள்களை இடம் மாற்ற மனிதனுக்கு நீர்வழிப் போக்குவரத்து மிகவும் இலகுவாக அமைந்தது. காலம் காலமாக இருந்து வரும் இந்தக் கடல்வழி வணிகப் போக்குவரத்து இப்போது இருப்பது போல பெரிய அளவிலோ, தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைந்தோ ஆரம்பத்தில் இருக்கவில்லை.

கிரேக்கர்கள் எண்ணெய் அல்லது மதுவை கொண்டு செல்ல சீல் செய்யப்பட்ட குவளைகளை அல்லது ஆம்போராக்களை அந்தக் காலத்தில் பயன்படுத்தினர். பிற்காலத்தில் மதிப்புமிக்க பொருள்களை தங்கள் படகில் ஏற்றிச் செல்ல பெரிய டிரங்க்களைப் பயன்படுத்தினர்.

எவர்கிரீன் சரக்குக் கப்பல்
எவர்கிரீன் சரக்குக் கப்பல்
AP

1956 வரை, சர்வதேச சரக்குகள் துறைமுகத் தொழிலாளர்களால் (stevedores) கைமுறையாக தொகுக்கப்பட்டு கப்பல்களில் ஏற்றப்பட்டன. அதேபோல், கப்பல் இலக்கு துறைமுகத்தை அடைந்ததும் இந்தச் செயல்முறை மீண்டும் கையாளப்பட்டது. ஒவ்வொரு தனிப்பட்ட பொருளும் சாக்குப் பைகளிலும், பேரல்களிலும், மூட்டைகளிலும் திணிக்கப்பட்டு, ஒவ்வொன்றாய் எடுத்து கப்பலில் ஏற்றி இறக்க அதிகளவான மனித வளம் தேவைப்பட்ட இந்தச் செயல்முறை அதிகளவு நேரத்தையும் எடுத்துக் கொண்டது. இது கடினமானது மட்டுமல்ல மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. கப்பல்கள் கடலில் மிதப்பதை விட துறைமுகங்களில் தங்கியிருந்த காலப்பகுதியே அதிகமாக இருந்தது. இதனாலேயே சாதாரண குண்டூசிக்குக் கூட யானை விலை குதிரை விலை நிர்ணயிக்கப்பட்டது.

இவ்வளவு சிக்கல் மிகுந்ததாக இருந்த கடல்வழி வணிகத்திற்கு தீர்வாக இரண்டு வரப்பிரசாதங்கள் கிடைத்தன. ஒன்று சரக்குக் கப்பல்கள், இரண்டு கன்டெய்னர்கள். இந்த இரண்டு தீர்வுகளையும் இரு கையில் ஏந்தி தமிழ் சினிமாவில் மக்களின் தலைவிதியை மாற்ற எங்கிருந்தோ புறப்பட்டு வரும் ஹீரோ போல வந்தார் மால்காம் மெக்லீன் (Malcolm Purcell McLean).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யார் இந்த மால்காம் மெக்லீன்?!

1913-ம் வருடம் அமெரிக்காவின் வட கரோலினாவில் பிறந்த மால்காம் மெக்லீன் ட்ரக் டிரைவராக தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி பின்னர் ட்ரக் கம்பெனிக்கே உரிமையாளரானார்.

ஒருமுறை இவர் கப்பலில் ஏற்ற சரக்குகளை ட்ரக்கில் கொண்டு சென்ற வேளையில், இந்த ஏற்றுதல் இறக்குதல் செயல்முறை எவ்வளவு நேர விரயத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தார். நெடுஞ்சாலைகளில் ஏற்படும் நெரிசலையும், வழக்கமான சரக்குக் கப்பல்களின் திறனற்ற ஏற்றுதல் மற்றும் வெளியேற்றல் நடைமுறைகளையும் சமாளிக்க முடிந்தால் பெரிய நன்மைகள் கிடைக்கும் என்று சிந்தித்தார். ஒரு ட்ரெய்லரின் சரக்குக் கட்டுப்பாட்டு பகுதியை அப்படியே வெளியே தூக்கி நேரடியாக கப்பலுக்குள் கொண்டு செல்ல முடிந்தால், நேரம், உழைப்பு மற்றும் செலவுகளில் பெரும் சேமிப்பை காணலாம் என அவர் நினைத்தார்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான அளவில் கப்பல்களில் ஏற்றக்கூடிய நிலையான அளவிலான ட்ரெய்லரை ஏன் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம் உதித்தது. உதித்த ஐடியாவை உடனடியாக மால்காம் மெக்லீன் செய்யலாற்றினார். அவரே தனது நிறுவனத்தில் கன்டெய்னர்களை உருவாக்கினார். ஜனவரி 1956-ல் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட டி-2 டேங்கர்களை வாங்கி கொள்கலன்களை கொண்டு செல்லும் விதமாக கப்பல்களை மீள் உருமாற்றினார்.

மால்காம் மெக்லீன் (Malcolm Purcell McLean)
மால்காம் மெக்லீன் (Malcolm Purcell McLean)
Maersk Line, CC BY-SA 2.0, via Wikimedia Commons
ஐடியல் எக்ஸ் (SS Ideal-X) என அழைக்கப்படும் ஒரு டேங்கரில் இருந்து முதல் கொள்கலன் கப்பலை அவரே உருவாக்கினார். அடுத்த ஆண்டு, ஒரு பெரிய கொள்கலன் கப்பலான கேட்வே சிட்டியைக் (Gateway City) கட்டினார். 1968-ல் முதலாவது நவீன சரக்குக் கப்பல் களத்தில் குதித்தது. அதைத் தொடர்ந்து அவரது நிறுவனம் சீ-லேண்ட் சர்வீஸ் (Sea-Land Service) என்று மறுபெயரிடப்பட்டது.

முதல் கன்டெய்னர் 1956-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் 58 கன்டெய்னர்கள் அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்திலிருந்து ஹட்சன் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது. 1956-களில் ஒரு கார்கோ ஏற்றுவதற்கு ஒரு டன்னிற்கு 5.8 அமெரிக்க டாலர்கள் செலவானது. இதுவே மால்காம் மெக்லீன் உருவாக்கிய கன்டெய்னர் கார்கோவை மொத்தமாக ஏற்றுவதற்கு ஒரு டன்னிற்கு 0.15 சென்ட்ஸ் மட்டுமே செலவானது. அது மட்டுமல்ல கன்டெய்னர்களின் வருகை கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்குவதை மிகவும் இலகுவாக்கியது. அதுவரை கப்பலில் ஏற்றி இறக்குவதற்காக மட்டுமே சுமார் ஒரு வாரம்வரை துறைமுகத்தில் தேங்கி நின்ற கப்பல்களில், ஒரு கன்டெய்னர் 7 நிமிடங்களில் ஏற்றப்பட்டது. மொத்த சரக்கையும் வெறும் 8 மணி நேரத்திலேயே கையாண்டு முடித்தனர். மால்காம் மெக்லீனின் புதிய கண்டுபிடிப்புகளின் வீரியம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

இதனை பார்த்த வேறு சில நிறுவனங்களும் கன்டெய்னர் மூலம் சரக்கு கையாள்வதை அறிமுகப்படுத்தினர். எப்போதுமே வழமைக்கு மாறாக ஒருவர் புதுமையை புகுத்தும்போது அதற்கு ஒரு கும்பல் எதிர்ப்பு தெரிவிக்கும். அதே கதையாக மால்காம் மெக்லீனின் இந்த நடவடிக்கைக்கு துறைமுக சரக்கு கையாளும் தொழிலாளர்கள் தொடங்கி பல தரப்பிலும் எதிர்ப்புகள் வந்தன.

ஆனால் இந்த சிக்கல்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து சரக்குக் கப்பலையும் அதில் கன்டெய்னர் பயன்பாட்டையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது வியட்நாம் யுத்தம்.

வியட்நாம் யுத்தமும் சரக்குக் கப்பல்களின் எழுச்சியும்!

ஆரம்பத்தில் பிரான்ஸூக்கும் வியட்நாமுக்கும் இடையில் நடந்த யுத்தம் பிரெஞ்சு படைகளின் பின்வாங்களுக்கு பின் அது வடக்கு, கிழக்கு வியட்நாமுக்கு இடையிலான யுத்தமாக மாறியது. இதனால் நாட்டில் சோஷியலிசத்தை பரப்ப வடக்கு வியட்நாமை சேர்ந்த ஹோ சின் மின் என்பவர் முயற்சி செய்தார். உடனே அமெரிக்காவுக்குக் கோபம் கொப்பளிக்க வியட்நாமிற்குத் தம் படையை அனுப்பி வைத்தது. கிட்டத்தட்ட 60,000 படை வீரர்களை அமெரிக்கா அனுப்பிய பிறகுதான் அப்போதைய கடல்வழி போக்குவரத்து முறையை வைத்து இது சாத்தியம் இல்லை என்பதை அமெரிக்கா உணர்ந்தது.

Evergiven by Evergreen | சூயஸ் கால்வாய்
Evergiven by Evergreen | சூயஸ் கால்வாய்
AP

தேவையான ஆயுதம் மற்றும் பொருள் விநியோகம் செய்ய வசதி இல்லாததால் அமெரிக்கா ராணுவம் தடுமாறத் தொடங்கியது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைத்த மால்காம் மெக்லீன் இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். 1960-களின் நடுப்பகுதியில் அமெரிக்கா ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்த மால்காம் மெக்லீன் தனது கன்டெய்னர்களை ப்ரமோட் செய்தார். இந்த ஐடியாவை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அரசால் வியட்நாமில் இருந்த தம் ராணுவத்துக்கு உணவு, மருந்து, ஆயுதம் என அனைத்தையும் முறையாகவும் விரைந்தும் வழங்க முடிந்தது.

வியட்நாம் யுத்தம் முடிவுற்ற பின்னர் கன்டெய்னர்களுக்கு எதிராக அதுவரை போராட்டம் நடத்தி வந்த துறைமுகத் தொழிலாளர்களின் குரல் வலுவிழந்தது. அதனால் மீண்டும் உலகெங்கிலும் கன்டெய்னருக்கான மவுசு கூடியது. தொடர்ச்சியாக கடல்வழி வணிகத்தில் பல புதுமைகளையும் புரட்சிகளையும் புகுத்தி வந்த மால்காம் மெக்லீன் அடுத்த கட்ட நடவடிக்கையாக வணிகக் கப்பல்களை மேலும் கணனிமயப்படுத்தினார். இதனால் பரிமாறப்படும் அனைத்து சரக்குகளையும் ட்ராக் செய்யும் வசதி உருவானது.

‘கொள்கலன்களின் தந்தை’ (father of containerization) என புகழப்பட்ட மால்காம் மெக்லீன் 2001-ம் ஆண்டில் 88 வயதில் இறந்தபோது, அவரை ‘நூற்றாண்டின் நாயகன்’ என்று International Maritime Hall of Fame கெளரவித்தது. அவர் அன்று ஆரம்பித்து வைத்த புரட்சியினால்தான் பன்னாட்டு வியாபாரம் தலை தூக்கியது. அதனால்தான், இன்று நாம் நுகரும் அத்தனை பொருள்களும் நம் கைகளுக்கு எட்டும் தூரத்திற்கு வந்துள்ளன.

கன்டெய்னர்களின் வருகைக்குப் பின்னர் சரக்குக் கப்பல் மாத்திரமல்ல, நாடுகளின் துறைமுகங்களும் ஏன் கடல் வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் கூட மிக பிரமாண்டமாக வளர்ந்தன. ஆரம்பத்தில் வெறும் 58 கன்டெய்னர்களையே கொண்டு சென்ற சரக்குக் கப்பல்கள் தற்போது கிட்டத்தட்ட 24,000 கன்டெய்னர்கள் வரை ஏற்றக்கூடிய அளவு மிகப் பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட ஒரு பொது அளவில், வடிவில், தயாரிக்கப்பட்ட கன்டெய்னர்களை தாங்கிச் செல்லும் சரக்குக் கப்பல்கள் உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. மில்லியன் கணக்கான பொருள்கள் மிகக் குறைந்த விலையில், அதிக பாதுகாப்போடு உலகின் ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

Evergiven by Evergreen | Suez Canal
Evergiven by Evergreen | Suez Canal
AP

புதிய நிறுவனங்களின் வருகையும் கடல்வழி வணிகத்தின் அடுத்த கட்ட நகர்வும்!

1960-களின் ஆரம்பத்தில் ஐரோப்பியக் கப்பல் நிறுவனங்களான ஜெர்மனியின் ஹபாக் லாயிட் (Hapag-Lloyd), டென்மார்க்கின் மெர்ஸ்க் லைன் (Maersk Line) போன்ற சில கம்பெனிகள் தமது கொள்கலன் சுமக்கும் சரக்குக் கப்பல்களை அறிமுகப்படுத்தின.

டென்மார்க்கின் மெர்ஸ்க் நிறுவனம் உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களைக் கொண்ட ஜாம்பவான் என்ற பெருமையை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு வருகிறது. மால்காம் மெக்லீன் (Malcom McLean) உருவாக்கிய Sea-Land Shipping நிறுவனத்தையும் மெர்ஸ்க் (Maersk Line) நிறுவனம் பின்னாளில் வாங்கிவிட்டது. மேலும் எம்.எஸ்.சி (Mediterranean Shipping Company), கோஸ்கோ (COSCO – China Ocean Shipping Company), மற்றும் சமீபத்தில் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட 'எவர்கிவன்' கப்பலைத் தயாரித்த எவர்கிரீன் போன்ற நிறுவனங்கள் சரக்குக் கப்பல் துறையில் கோலோச்சும் சில மிகப்பெரிய நிறுவனங்கள்.

அடுத்த தடவை நீங்கள் வீதியில் செல்லும்போது உங்கள் கண்ணெதிரே செல்லும் கன்டெய்னர் ட்ரக்குகளில் உலகின் இன்னொரு மூலையில் வசிக்கும் ஒரு மனிதன் பயன்படுத்தப் போகும் ஏதோ ஒரு பொருளோ, அல்லது அதைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருளோ சென்று கொண்டிருக்கும். அவற்றை காவிச்செல்ல துறைமுகங்களில் சரக்குக் கப்பல்கள் தயாராகிக்கொண்டிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு