Published:Updated:

கச்சா எண்ணெய் விலை உயர்வு... தாக்குப்பிடிக்குமா இந்தியா? - ஓர் அலசல்!

Drones attacked oil processing facility in Saudi Arabia
Drones attacked oil processing facility in Saudi Arabia

உலக அளவில் கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்துவதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய நாடு இந்தியா. கச்சா எண்ணெய் இறக்குமதியிலும் முன்னணியில் இருக்கிறோம். எனவே, இந்த விலையேற்றம் நமக்குப் பெரும் சுமையாக இருக்கும்.

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து 330 கி.மீ. தொலைவில் அப்கைக் எனும் இடத்திலுள்ள அரம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் மீது கடந்த செப்டம்பர் 14-ம் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடந்தது. அப்கைக் சுத்திகரிப்பு ஆலையில் நாளொன்றுக்கு 70 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தத் தாக்குதல் காரணமாக நாளொன்றுக்கு 57 லட்சம் பேரல் எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக, சவுதி எரிசக்தித்துறை அமைச்சர் பிரின்ஸ் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார். ஆலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட எண்ணெய் உற்பத்தி எப்போது தொடங்கும் என்று உறுதியாகத் தெரியவில்லை.

Saudi Arabia
Saudi Arabia

போர் பதற்றச் சூழல்

இந்தத் தாக்குதலை நடத்திய ஹவுதி கிளர்ச்சிப்படையினருக்கு இரான் ஆதரவளிப்பதாக அமெரிக்கா கருதுகிறது. தாக்குதல் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், `இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியும்' என்று மறைமுகமாக இரானைக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதுகுறித்து சவுதிதான் தெரிவிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இரான் இருப்பதில் சந்தேகமில்லையென்றும், ஏமன் கிளர்ச்சிப்படையினருக்கு இரான் உதவுவது குறித்த ஆதாரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் நேரடியாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இதை இரான் மறுத்துள்ளது. ஹவுதி கிளர்ச்சிப்படையினர் தரப்பிலோ முழு வேகத்தில் போரிடக் காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவையனைத்தையும் பார்க்கையில் இரான் - அமெரிக்கா இடையே போர் ஏற்படுமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய், பேரலுக்கு 60 டாலர் என்ற விலையில் விற்பனையானது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள இழப்பின் காரணமாகத் தற்போது, கச்சா எண்ணெய்யின் விலை 19 சதவிகிதம் அதிகரித்து 72 டாலராக உள்ளது. இது மேலும் அதிகரித்து 80 டாலர் அல்லது அதற்குமேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soma Valliyappan
Soma Valliyappan

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பனிடம் கேட்டபோது, ``உலக அளவில் கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்துவதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய நாடு இந்தியா. கச்சா எண்ணெய் இறக்குமதியிலும் முன்னணியில் இருக்கிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை, கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயர்ந்தால் ஓர் ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் இந்திய அரசுக்குக் கூடுதல் செலவாகும். எனவே, இந்த விலையேற்றம் நமக்குப் பெரும் சுமையாக இருக்கும். இந்தச் சுமையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் அரசுக்கு ஏற்கெனவே இருக்கும் கடன் அதிகமாகும். ஆக, எந்தவிதத்தில் பார்த்தாலும் இது பெரும் பாதிப்புதான். ஆனால், கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் தற்காலிகமானதாகத்தான் இருக்கும். தீவிரவாதத் தாக்குதல் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டால் விலையேற்றமும் சரியாகிவிடும்" என்றார்.

இந்தியா, தனது தேவையில் 7.40 சதவிகிதம் அளவுக்கு சவுதி அரேபியாவைச் சார்ந்தே உள்ளது. எனினும், இந்தியாவுக்கான எண்ணெய் விநியோகம் பாதிக்காது என்றும், விலை மட்டும் இன்னும் சிறிது காலத்துக்கு ஏற்ற இறக்கத்தோடு இருக்குமென்றும் சவுதி அரேபியா உறுதியளித்துள்ளது. ஏற்கெனவே பொருளாதார மந்தநிலை காரணமாகப் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விலை உயர்வால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை இந்தியா எப்படிச் சமாளிக்கப்போகிறது என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஷ்யாம் சேகரிடம் கேட்டோம்.

Shyam Sekar
Shyam Sekar

``இந்த விவகாரம் குறுகியகாலச் சிக்கல்தான். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் அரசியல்ரீதியாகத் தொடர்ச்சியாகப் பிரச்னைகள் இல்லாதபட்சத்தில் விலை இறங்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் ஓபெக் கூட்டமைப்பு மூலம், தங்களுக்குள் கச்சா எண்ணெய் உற்பத்திக்கான வரம்புகளை நிர்ணயித்துள்ளன. அதன்படிதான் ஒரு வரம்புக்குள் உற்பத்தி நடந்துவருகிறது. இந்த வரம்பின் காரணமாகத்தான் கச்சா எண்ணெய் விலை 60 டாலர்வரை சென்றுள்ளது. அப்படியில்லையென்றால் 40 டாலர் அளவுக்கூடக் குறைந்திருக்கக்கூடும்.

இந்தச் சூழலில், சவுதி அரேபியாவில் உற்பத்திக் குறையும்போது அதை நிவர்த்தி செய்வது யார் என்ற போட்டி அவர்களுக்குள் இருக்கும். இரண்டாவது, அமெரிக்காவும் கச்சா எண்ணெய் விநியோகஸ்தர்களில் ஒன்றாக உள்ளது. எனவே, அதுவும் இந்த இழப்பை ஈடுகட்டப்பார்க்கும். மூன்றாவது, சவுதி அரேபியாவின் மற்ற எண்ணெய்க் கிணறுகளின் மூலமாக இந்த இழப்பை ஈடுகட்ட முடியுமா என்றும் பார்க்க வேண்டும். இந்த மூன்றுவிதமான வாய்ப்புகள் இருப்பதால் கச்சா எண்ணெய் வரத்து குறைவதற்கான சாத்தியம் குறைவு.

Crude Oil
Crude Oil

இதற்கும் மேலாக பிரச்னை பெரிதானால்தான் நாம் கவலைப்பட வேண்டும். தற்போதுள்ள சூழலில் இந்தியாவுக்கும் கச்சா உற்பத்தி செய்யும் ஏனைய நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு இருக்கிறது. சவுதி அரேபியா தவிர்த்த மற்ற நாடுகளும் நம்மோடு வர்த்தகம் செய்ய ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரை, கச்சா எண்ணெய் விலை ஏறினால் அவர்களின் பொருளாதார நிலையும் சரிவடையும். சவுதி அரேபியாவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்கக்கூடும். அதன்மூலம் அமெரிக்காவின் வசமிருக்கும் கச்சா எண்ணெய்யை விற்பனைசெய்வது இரண்டாவது நோக்கமாக இருக்கும். மற்றபடி, வளைகுடாப் பகுதியில் போர் வருவதற்கான சூழல் தற்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. போருக்காகப் பெரிய இழப்பைச் சந்திக்கவும் எவரும் தயாராக இல்லை. எனவே, இந்தப் பிரச்னையால் இந்தியாவுக்குப் பெரிய சிக்கல் எழுமென்று கருத முடியாது" என்றார்.

Vikatan

மன்மோகன்சிங் ஆட்சியில் பெட்ரோல் விலை நிர்ணயம்

2008-ல் மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் சர்வதேச அளவில் பொருளாதாரப் பிரச்னை பெரிய அளவில் எழுந்தது. அமெரிக்காவின் வங்கித்துறையே ஆட்டம் கண்டது. அதன் பாதிப்பு கச்சா எண்ணெய் விலையிலும் எதிரொலித்தது. 2007-ல், ஒரு பேரல் 72.34 டாலராக இருந்த சராசரி கச்சா எண்ணெய் விலை, 2008-ல் சர்ரென உயர்ந்து 99.67 டாலரைத் தொட்டது. எனினும், இந்தியாவில் பெட்ரோல் விலை 42.85 ரூபாயிலிருந்து 45.56 ரூபாயாக மட்டுமே உயர்ந்தது. சர்வதேச அளவிலான பாதிப்பு இந்தியாவில் பெரிதும் எதிரொலிக்கவில்லை.

Petrol Price
Petrol Price

மோடி ஆட்சியில் பெட்ரோல் விலை நிர்ணயம்

2014-ல் மோடி தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 97.98 டாலரிலிருந்து 93.17 டாலராகக் குறைந்தபோதும், பெட்ரோல் விலை 63.09 ரூபாயிலிருந்து 71.51 ரூபாய் வரை அதிகரிக்கவே செய்தது. 2015-ல் சர்வதேச அளவில் சராசரி கச்சா எண்ணெய் விலையில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு 93.17 டாலரிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவாக 48.72 டாலரை எட்டியது. ஆனால், அதற்கேற்ப பெட்ரோல் விலையைப் பெரிய அளவில் குறைக்காமல் 71.51 ரூபாயிலிருந்து 66.29 ரூபாயாக மட்டுமே குறைக்கப்பட்டது. அப்போதிருந்து இப்போதுவரை கச்சா எண்ணெய் விலைக்குறைப்பால் கிடைக்கும் பலனில் பெரும்பகுதியை மத்திய அரசே அனுபவித்து வருகிறது.

Crude oil price
Crude oil price

இந்தியாவில் எல்லாத் தரப்பினரும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இருசக்கர வாகனங்களின் உதவியோடு உணவு வழங்கல், கொரியர் உள்ளிட்ட சேவை நிறுவனங்கள் இந்தியாவில் பெருகியுள்ளன. எனவே, பெட்ரோல் விலை உயர்வானது, அடித்தட்டு, நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிப்பதற்கு வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கேற்ப பெட்ரோல் விலையை உயர்த்தும்போது, மேலும் பல தொழில்கள் பாதிக்கப்படுவதோடு, விலைவாசி உயர்வதற்கும் வாய்ப்புள்ளது. இது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவே, சர்வதேசப் பதற்றம் விரைவில் தணிவது மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு