Published:Updated:

40%-க்குள் இ.எம்.ஐ to 20/4/10 ஃபார்முலா... - 10 ஃபைனான்ஷியல் விதிமுறைகள்!

ஃபைனான்ஷியல்
News
ஃபைனான்ஷியல்

சரியான முறையில் முதலீடு செய்து, அதை இரட்டிப்பாக்கும் விதிமுறைகள் இதோ...

1) இ.எம்.ஐ 40 சதவிகிதத்துக்குள்...

நம் வசதியைப் பெருக்கிக் கொள்வதற்காகச் சொந்தமாக வீடு, கார், ஏ.சி., ஃப்ரிட்ஜ் எனப் பலவற்றையும் இ.எம்.ஐ மூலம் வாங்குகிறோம். இவற்றுக்காக இ.எம்.ஐ செலுத்தும் தொகை 30-40 சதவிகிதத்துக்குள் இருப்பது நிம்மதியான வாழ்க்கைக்கு வழி. அதற்குமேல் செல்லும்போது, அன்றாடச் செலவுகளுக்குப் பணமில்லாமல் தவிக்க வேண்டியிருக்கும். இ.எம்.ஐ தொகையை திரும்பச் செலுத்தும்போது அதிக வட்டியுள்ள கடன்களை முதலில் செலுத்திவிட வேண்டும்.

2) 50:20:30

மாதச் சம்பளத்தில் எவ்வளவு செலவு செய்யலாம், எவ்வளவு சேமிக்கலாம் என்பது நமக்குத் தெரிவதில்லை. மனம்போன போக்கில் செலவு செய்யாமலிருக்க, 50:20:30 என்ற விதிமுறை நமக்கு உதவும். அதாவது, நாம் வாங்கும் சம்பளத்தில் 50% வீட்டுச் செலவுகளுக்கு என வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, வீட்டு வாடகை, மின் கட்டணம், மளிகைச் சாமான்கள் போன்றவை. 20% பணத்தை எதிர்காலச் சேமிப்புக்காக அல்லது முதலீட்டுக்காக ஒதுக்கிவைக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி., கோல்டு இ.டி.எஃப் போன்ற திட்டங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். இந்த 70% தொகை போக மீதமிருக்கும் 30 சதவிகிதத்தை அன்றாடப் போக்குவரத்துச் செலவு, உணவு, உடை மற்றும் பொழுதுபோக்குச் செலவுகளுக்காகப் பயன்படுத்தலாம்.

3) இன்ஷூரன்ஸ் என்ற ஆபத்பாந்தவன்!

குடும்பத்துக்காகச் சம்பாதிக்கும் நபர் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் வரை குடும்பத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏதோ ஒரு காரணத்தால் அவர் இல்லாமல் போகும்போது, அந்தக் குடும்பத்தின் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பது இன்ஷூரன்ஸ். வீடு, கார் எனப் பலவற்றையும் வாங்குபவர்கள் ஆபத்பாந்தவனாக இருக்கும் இன்ஷூரன்ஸை எடுக்காமல் போவதால், குடும்ப உறுப்பினர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார்கள். இதைத் தவிர்க்க, ஒருவர் சம்பாதிக்கும் ஆண்டு வருமானத்தைப்போல 35 மடங்கு தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம். அதாவது ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் என்றால், அவருக்குத் தேவைப்படும் காப்பீட்டுத் தொகை = 10,00,000 X 35 = ரூ.3,50,00,000.

4) 20/4/10 ஃபார்முலா

`சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும்’ என்பது இன்றைய நடுத்தர வர்க்கத்தினரின் ஆசை. வாங்குவதில் தவறில்லை. ஆனால், அதை வாங்குவதற்கு முன்னர் அதற்காக வாங்கும் கடனை அடைப்பதற்கு நம்மிடம் ஒரு திட்டம் இருக்க வேண்டும். அந்தத் திட்டத்துக்கான ஃபார்முலாதான் 20/4/10. இதில் 20 என்பது, கார் வாங்க நீங்கள் செலுத்த வேண்டிய முன்பணம். அதைக் கையில் வைத்துக்கொண்டுதான் கார் வாங்கும் வேலையில் இறங்க வேண்டும். 4 என்பது கடனுக்கான இ.எம்.ஐ. கடன் நான்கு வருடங்களுக்குள் செலுத்தி முடித்துவிடக் கூடியதாக இருக்க வேண்டும். நீங்கள் செலுத்தும் இ.எம்.ஐ, காருக்கான பெட்ரோல் செலவு எல்லாம் சேர்த்து உங்கள் மாத வருமானத்தில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த விதிமுறைக்குள் உங்கள் கார் கடன் அடங்கியிருக்க வேண்டியது அவசியம்.

ஃபைனான்ஷியல்
ஃபைனான்ஷியல்

5) வீட்டுக் கடனுக்கு 20/5

வீட்டுக் கடன் மூலம் எந்த அளவுக்குக் கடன் பெறலாம் என்பதற்கான தெளிவான விதிமுறைதான் 20/5. இதில் 20 என்பது, நீங்கள் வாங்க விரும்பும் வீட்டுக்குச் செலுத்த வேண்டிய தொகை. 5 என்பது, நீங்கள் செலுத்தும் மொத்த இ.எம்.ஐ தொகையானது உங்கள் ஆண்டு வருமானத்தில் 5 மடங்குக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது. உதாரணமாக, உங்கள் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம்; ஐந்து ஆண்டு வருமானம் ரூ.75 லட்சம்; வீட்டின் மதிப்பு ரூ.80 லட்சம்; நீங்கள் செலுத்த வேண்டிய முன்பணம் 20%. 80 லட்சத்தில் 20% என்பது ரூ.16 லட்சம். இதுதான் நீங்கள் செலுத்த வேண்டிய முன்பணம். உங்களுக்குத் தேவையான கடன் ரூ.80 லட்சத்தில் 80% என்கிறபோது உங்களுக்குத் தேவைப்படும் தொகை ரூ.64 லட்சம். நீங்கள் வாங்கும் வீட்டுக் கடன் உங்களின் ஐந்து வருட வருமானத்தைவிட குறைவாக இருக்க வேண்டும். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2tu3naI

6) மும்மடங்காக்க 114

நீங்கள் முதலீடு செய்த பணம் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள உங்களுக்குக் கிடைக்கும் வட்டியின் மதிப்பால் 114-ஐ வகுக்க வேண்டும். அப்படியானால் உங்கள் பணம் (114/8=14) 14 வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் மூன்று மடங்காகும்.

7) பணத்தின் மதிப்பறிய 70

இன்று நாம் வாங்கும் ஒரு பொருளின் மதிப்பு ஒரு வருடம் கழித்து அதே விலையில் இருப்பதில்லை. பொருள்களின் விலை உயர்வதால், பணத்தின் மதிப்பு குறைகிறது. 70-ஐ தற்போதைய பணவீக்க விகிதத்தால் வகுக்க உங்களுக்குக் கிடைக்கும் மதிப்பானது, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பணத்தின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பதைக் காட்டும். உதாரணமாக, தற்போதைய பணவீக்க மதிப்பு 5.5% என வைத்துக்கொண்டால், நம்மிடமிருக்கும் பணத்தின் மதிப்பு (70/5.5=12.7) 12.7 ஆண்டுகளில் பாதியாகக் குறையும். பணத்தின் மதிப்பு குறைவதை ஏன் கணக்கிட வேண்டும்? நம்மிடம் இப்போதிருக்கும் பணத்தின் மதிப்பு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவாக இருக்கும், அதற்கேற்ப நம் சொத்தின் மதிப்பை உயர்த்துவது எப்படி என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளலாம்.

ஃபைனான்ஷியல்
ஃபைனான்ஷியல்

8) போனஸ் 10:90

நம் போனஸில் 10 சதவிகிதத்தை மட்டுமே நமக்காகச் செலவழிக்கலாம். மீதமிருக்கும் 90 சதவிகிதத்தை, வட்டி அதிகமாக உள்ள கடன்களை அடைக்க அல்லது எதிர்காலத் தேவைக்கு முதலீடு செய்யலாம்.

9) கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கான விதி 30

கிரெடிட் கார்டு லிமிட் எவ்வளவு இருந்தாலும், அதில் 30 சதவிகிதத்தை மட்டும் பயன்படுத்துவது நல்லது. அது, உங்கள் கிரெடிட் ஸ்கோரை நல்லநிலையில் வைத்திருக்கும்.

10) கிரெடிட் கார்டுகள் இரண்டு

சிலர் நான்கைந்து கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பார்கள். அதனால் பல பாதிப்புகள் ஏற்படும். பல கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தினால் ஒவ்வொன்றுக்கும் பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் கிரெடிட் கார்டு சேவைக்காகத் தனியாகப் பணம் செலுத்த வேண்டும். இவை நம் தற்போதைய கடனை அதிகரிப்பதுடன், கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். எனவே, அதிகபட்சம் இரண்டு கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது நல்லது.

- சரியான முறையில் முதலீடு செய்து, அதை இரட்டிப்பாக்கும் விதிமுறைகள் இவை. இவற்றுடன், மேலும் 10 முக்கிய விதிமுறைகளையும் பகிர்கிறார் நிதி ஆலோசகர் க.ராமலிங்கம். அவரது முழுமையாக கைடன்ஸ் பெற > முதலீட்டை இரட்டிப்பாக்கும் சூட்சுமங்கள்! - 20 ஃபைனான்ஷியல் விதிமுறைகள்! https://www.vikatan.com/news/investment/20-financial-rules-to-double-the-investments

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9