Published:Updated:

தேக்கத்தில் ரியல் எஸ்டேட்... வீழ்ச்சி ஆரம்பமா?

தேக்கத்தில் ரியல் எஸ்டேட்... வீழ்ச்சி ஆரம்பமா?

ரேந்திர மோடி பிரதமராக வந்துவிட்டால், ரியல் எஸ்டேட் பிரமாதமாக இருக்கும் என பொதுமக்கள் மத்தியிலும் ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் மத்தியிலும் ஓர் எதிர்பார்ப்பு ஓராண்டுக்கு முன்பு பரவலாக இருந்தது. ஆனால், ஓராண்டு முடிந்த நிலையில், இந்திய ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி எதையும் கண்டது போல் தெரியவில்லை. ரியல் எஸ்டேட் மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா எல்லாம் நிறைவேற்ற முடியாமல் கிடக்கிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி 0.25% மட்டுமே குறைந்து சுமார் 10% அளவில் இருக்கிறது. மேலும், எதிர்பார்த்த அளவுக்குத் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படாததால், ரியல் எஸ்டேட் தொழிலில் ஒரு தேக்கநிலையே காணப்படுகிறது. போதாத  குறைக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் அரசு வழிகாட்டி மதிப்பு அறிவிக்கப்படாமல் உயர்த்தப்பட்டிருப்பதால், சொத்து வாங்குபவர் செலவிடும் தொகை அதிகரித்திருக்கிறது.

தேக்கத்தில் ரியல் எஸ்டேட்... வீழ்ச்சி ஆரம்பமா?

கட்டி முடித்து பல மாதங்களாக விற்காமல் கிடக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை எப்படியாவது விற்பனை செய்துவிட வேண்டும் என பில்டர்கள், புரமோட்டர்கள் துடிக்கிறார்கள். எஸ்எம்எஸ், எஃப்எம் ரேடியோ, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலமாக மிகப் பெரிய அளவில் தள்ளுபடி என்கிற வார்த்தையோடு கூவிக் கூவி விற்பதை தமிழகம் முழுக்கப் பார்க்க முடிகிறது.

கடந்த நான்கு வருடங்களாக முக்கிய நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விற்பனை சரிந்துள்ளது. 2015-ன் முதல் மூன்று மாதங்களில் புதிய வீடு கட்டுமானப் பணிகள் 50% வரை குறைந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிபுணரும் சிவில் இன்ஜினீயருமான ஷியாம் சுந்தர், சென்னை நகரின் ரியல் எஸ்டேட் எப்படி வேகமாக வளர்ச்சி அடைந்தது, அதன்பிறகு எப்படித் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை விளக்கிச் சொன்னார்.

தேக்கத்தில் ரியல் எஸ்டேட்... வீழ்ச்சி ஆரம்பமா?

‘‘தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட வேலைவாய்ப்பின் காரணமாக 2004-ம் ஆண்டு வாக்கில் மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தது. புதிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கால்பதித்ததால் மனை விலை அதிகரித்தன.2008-ல் சீனாவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றதையொட்டி அங்கு மிகப் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள் 2002-ம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டன. இதனால் உலக அளவில் வர்த்தகம் சூடுபிடித்தது. அனைத்துத் தொழில்களிலும் வேலைவாய்ப்பு பெருகி பணப்புழக்கம் அதிகரித்தது. குடும்பங்களில் சேமிப்பு அதிகரித்ததால் நிலம், வீடு, தங்கம் என்று பல்வேறு வகையில் முதலீடுகள் செய்யப்பட்டன.

அந்தச் சமயத்தில் அடுக்குமாடி வாங்குவதோ அல்லது நிலம் வாங்கி வீடு கட்டுவதோ எளிதாக இருந்தது. வட்டியும் குறைந்து காணப்பட்டது.  2004-க்கு பிறகு வீட்டு மனைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு 5 முதல் 8 வருடங்களில் 10 மடங்கு விலை அதிகரித்தன. இந்த மனைகளின் விலை ஏற்றம் என்பது 2008-க்குப் பிறகு இன்று வரை நீடிக்கிறது. நிலத்தின் விலை ஒரே திசையில், அதாவது மேல்நோக்கியே பயணித்து வருகிறது. ஆனால், அப்போதிருந்த மற்ற சூழ்நிலைகள் இப்போதும் இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம்” என்றவர் சற்று நிறுத்திவிட்டு தொடர்ந்தார்.

தேக்கத்தில் ரியல் எஸ்டேட்... வீழ்ச்சி ஆரம்பமா?

‘‘சென்ற பத்து வருடங்களில் தொடர்ச்சியாக அபார்ட்மென்ட்டுகளின் விலை ஏற்றம் கண்டன. இதே நிலை நீடிக்கும் என்று கட்டுமான நிறுவனங்கள் எதிர்பார்த்தன. எதிர்பார்க்கவும் செய்கின்றன. 2009-க்குப் பிறகு அனைத்துக் கட்டுமானப் பொருட்களும் விலை அதிகரித்தன. சிமென்ட், ஸ்டீல், மணல் என்று அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களின் விலைகள் அனைத்தும் அதிகரித்துள்ளன. இதனால், வீடுகளின் விலையும் அதிகரித்தது. இன்னொரு பக்கம் வங்கிகளும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ரியல் எஸ்டேட் என்பது ஒரே திசையில் செல்லும் என்று நினைத்துக் கொண்டு தாராளமாக நிதி உதவி செய்தன.

தேக்கத்தில் ரியல் எஸ்டேட்... வீழ்ச்சி ஆரம்பமா?

ஆனால் என்ன நடந்தது? 2010-ம் ஆண்டுக்குப் பிறகு வட்டி விகிதங்கள் அதிகரிக்கத் துவங்கின. பணவீக்கமும் அதிகரித்தது. பெரும்பாலான நிறுவனங்களின் கடன் சுமைகள் தலைதூக்கின. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்புக் குறையத் துவங்கியது. இதனால் வெளிநாடுகளில் நிறுவனங்கள் பெற்ற கடன்களின் சுமை கூடியது.

மற்றொரு பக்கத்தில், நிறுவனங்கள் கடன்களைக் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்தாததால் வாராக் கடன் அதிகரித்தது. முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறத் துவங்கின. பங்குச் சந்தைகள் சரிந்தன. வேலைவாய்ப்புகள் குறையத் துவங்கின.

தேக்கத்தில் ரியல் எஸ்டேட்... வீழ்ச்சி ஆரம்பமா?

தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட்டில்  ஏற்கெனவே அதிகரித்த வட்டிகளில் பெரிய மாற்றம்  இல்லை. அதாவது, வட்டி குறைந்தபாடில்லை. பணவீக்கம் மட்டும் சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. நிறுவனங்களின் கடன் சுமைகள் இன்னும் குறையவில்லை. ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக இன்னும் முன்பிருந்த நிலைக்குத் திரும்பவில்லை. வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்கள் பெற்ற  கடன்களின் சுமை குறைய வில்லை. வங்கிகளின் வாராக் கடன் இன்னும் குறையவில்லை. புதிய முதலீடுகளை வரவழைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளன. ஆனால், வேலைவாய்ப்பு கள் பெருகவில்லை. இந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் உடனடியாக மேம்படுவதற்குச் சாத்தியக்கூறுகளே இல்லை என்றே தோன்றுகிறது.

தேக்கத்தில் ரியல் எஸ்டேட்... வீழ்ச்சி ஆரம்பமா?

இதனால் முன்பே துவங்கப்பட்ட கட்டட வேலைகள் இன்னும் முடிக்கப் படாமல், வாங்கியவர்களிடம் வீட்டை ஒப்படைக்க காலம் தாழ்த்தி வருவதைப் பார்க்க முடிகிறது. கடந்த நான்கு வருடமாக ரியல் எஸ்டேட்டில் என்ன நிலை நீடித்ததோ, அதே நிலை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எதிர் பார்க்கலாம். நுகர்வோரின் வாங்கும் சக்தியானது, நிலத்தின் மதிப்பு உயர்ந்த அளவுக்கு அதிகரிக்க வில்லை. மாறாக, குறைந்துள்ளது." என்றார்.

சென்னையைச் சேர்ந்த சொத்து ஆலோசகர் அரசு அழகப்பனிடம் ரியல் எஸ்டேட் தேக்க நிலைக்கு என்ன காரணம் என்று கேட்டோம். ‘‘முக்கிய காரணம், சில பில்டர்கள் மற்றும் புரமோட்டர்கள் வீடுகளை அநியாயத்துக்கு கால தாமதம் செய்து ஒப்படைப்பதுதான். முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று 2009-ம் ஆண்டில் கட்டி ஒப்படைக்க வேண்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை இப்போதுதான் வழங்கி இருக்கிறது. சில பில்டர்கள் இப்படிச் செய்வதால், பொது மக்கள் அனைத்து புரமோட்டர்களையும் நம்பாத நிலை காணப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் கட்டி முடிக்கப்பட்டு, உடனடியாகக் குடிபோகக்கூடிய நிலையில் இருக்கும் அடுக்குமாடி வீடுகளைதான் பெரும்பாலோர் விரும்புகிறார்கள். மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு விபத்துக்குப் பிறகு, ஃபிளாட் வாங்கும் ஆர்வம் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை” என்றார்.

தேக்கத்தில் ரியல் எஸ்டேட்... வீழ்ச்சி ஆரம்பமா?

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுக்க அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதேபோல், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான வாடகையும் குறைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டில் சென்னை புறநகர்களில் ரூ.10,000-க்கு வாடகைக்குப் போன ஃபிளாட்டுகள், இப்போது ரூ.8,000-க்குகூட யாரும் வருவதில்லை என்பது அதிர்ச்சித் தகவல்.

அபார்ட்மென்ட்டுகளின் உண்மை நிலையை அறிந்துகொள்ள சென்னையில் ஓஎம்ஆர், துரைப்பாக்கம், ஒக்கியம்பேட்டை, பெருங்குடி, ராடிக்கள் ரோடு, வேளச்சேரி, மடிப்பாக்கம், பழைய ஜிஎஸ்டி ரோடு, இரும்புலியூர், ஜிஎஸ்டி சாலை, தாம்பரம், பல்லாவரம் போன்ற இடங்களில் விசாரித்தோம். சென்னையின் மற்ற புறநகர்களைக் காட்டிலும் இந்தப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதிகளில்தான் அதிகம் வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமலும் இருக்கின்றன.

தேக்கத்தில் ரியல் எஸ்டேட்... வீழ்ச்சி ஆரம்பமா?

மேற்கூறிய பகுதிகளில் ஓஎம்ஆரில்தான் அதிக அபார்ட்மென்ட்டுகள் கட்டப்பட்டு  விற்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இருப்பினும் பல பெரிய நிறுவனங்கள் அதே பகுதிகளில் வீட்டை கட்டிக்கொண்டே இருக்கின்றன. மேற்கூறிய பகுதிகளில் வேளச்சேரியில் பெரிய நிறுவனங்களின் அபார்ட்மென்ட்டுகள் அதிகம் இல்லாமல் இருக்கிறது. வேளச்சேரியில் 6 வீடுகள் முதல் 20 வீடுகள் வரை கொண்ட சிறிய அபார்ட்மென்ட்டுகள்தான் அதிகம் இருக்கின்றன. இருப்பினும் இந்தப் பகுதிகளில் உள்ள பெரிய நிறுவனங்களின் அபார்ட்மென்ட்டுகளில் காலி ஃப்ளாட்டுகளின் எண்ணிக்கை ஓஎம்ஆர் ரோடு பகுதிக்கு இணையாக இருக்கத்தான் செய்கிறது.

சொந்த வீடு வேண்டும் என்கிற ஆசையிலும் அவசரத்திலும் ஒரு வீட்டை வாங்கிவிட்டு, பின் வேலை, குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி, பெற்றோர்களுக்கான மருத்துவ வசதி ஆகியவைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, பலரும் நகரத்தில் வாடகைக்குக் குடியேறுகிறார்கள்.

வீடு வாங்கியவர்களுக்கு இந்த நிலை என்றால் வீடு வாங்க விரும்புபவர்களும் இப்போது வாடகை செலுத்தும் தொகையைவிட சில மடங்கு தொகையைக் கூடுதலாக வங்கிக்கு இஎம்ஐ-ஆகக் கட்டினால்தான் வீட்டை கடனில் வாங்க முடியும் என்கிற நிலை காணப்படுகிறது. இந்த இரண்டு விதமான முரண்பாடுகளால் சென்னை புறநகரங்களில் உள்ள அபார்ட்மென்ட்டுகள் வாங்கப்படாமலோ அல்லது வாங்கி வீட்டை பயன்படுத்தாமலோ காலியாகவே இருக்கின்றன. வீடு வாங்கியவர் வாடகைக்குவிட ஆள் இல்லாமலும், வீடு வாங்க விரும்புபவர்கள் வீடுகளின் விலை இன்னும் குறையும் என்றும் நிலை குத்திய கண்களுடன் காத்திருக்கிறார்கள்.

ஓஎம்ஆர் உட்புறத்தில் உள்ள ஒக்கியம்பேட்டையில் ஒரு பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் திட்டத்தில் விசாரித்தபோது கட்டப்பட்டுள்ள பல நூறு வீடுகளில், இன்னும் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இதனால் அந்த நிறுவனம் தன் விரிவாக்கத் திட்டங்களை சில மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

சென்னை புறநகரில் சில பகுதிகளில், பலதரப்பட்ட அபார்ட்மென்ட்டுகள் இன்னும் காலியாகவே இருக்கின்றன. இருப்பினும் விலையில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்று இன்னும் ஒற்றைக் காலில் நிற்கின்றன பல பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். சாதாரண சிறிய பில்டர்கள் ஒருகட்டத்துக்குமேல் வீடு விற்காமல் போய்விடுமோ என்கிற பயத்தில் போட்ட பணத்தை எடுத்தால் போதும் என்று வீடு வாங்க வருபவர்கள் கேட்கும் தொகைக்கு விற்றுவிடுகிறார்கள்.

தேக்கத்தில் ரியல் எஸ்டேட்... வீழ்ச்சி ஆரம்பமா?

இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக, வேளச்சேரியில் ஒரு பிரபல நிறுவனம் கட்டிவரும் அபார்ட்மென்ட்டில் விசாரித்தபோது, “இப்போதுதான் வீட்டை நிறைவு செய்திருக்கிறோம். ஏறக்குறைய எல்லாமே விற்றுவிட்டது" என்றே பதில் வந்தன.  அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, 200-க்கும் அதிகமான வீடுகளைக் கொண்ட அந்த அபார்ட்மென்ட்டில் பத்துக்கும் குறைவான ஃப்ளாட்டுகள்தான் விற்கப் பட்டிருப்பதாகச் சொன்னது அதிர்ச்சியானது.

தன் பெயரை குறிப்பிட விரும்பாத கான்ட்ராக்டர் ஒருவர் நம்மிடம் இப்படிச் சொன்னார். “பெரும்பாலும் நாங்கள் நிர்ணயிக்கும் விலையைவிட வீடு வாங்குபவர்கள் அடித்துப் பேசி விலையைக் குறைத்து வீட்டை வாங்குகிறார்கள். சென்னையில் பல பகுதிகளில் 2010-க்குப் பின் கட்டிய அபார்ட்மென்ட்டுகள்தான் அதிகம் விற்கப்படாமல் இருக்கின்றன. பொதுவாக, 100 வீடு உள்ள அபார்ட்மென்ட்டைக் கட்டினால், அனைத்து வீடுகளையும் விற்க குறைந்தது 12 முதல் 60 மாத காலம் தேவைப்படுகிறது’’ என்று சொன்னார் அவர்.
துரைப்பாக்கம், ஒக்கியம்பேட்டை, பெருங்குடி, ராடிக்கள் ரோடு, வேளச்சேரி, மடிப்பாக்கம், பழைய ஜிஎஸ்டி ரோடு, இரும்புலியூர், ஜிஎஸ்டி சாலை, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் 2014-க்கு முன் கட்டப்பட்ட அபார்ட்மென்ட்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் விற்கப்படாமல் இருக்கின்றன. 2014 மற்றும் 2015-களில் கட்டிய வீடுகளில் வெறும் 10 சதவிகித வீடுகள் மட்டுமே விற்கப்பட்டிருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங் இந்தியாவின் (Knight Frank India) சென்னை கிளையின் இயக்குநர் காஞ்சனா கிருஷ்ணனிடம் சென்னையில் அபார்ட்மென்ட் விற்பனை நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டோம்.

‘‘சென்னை மற்றும் அதன் புறநகர்களைப் பொறுத்தவரையில் அடுக்குமாடி வீடுகள் விற்று தீர குறைந்தது 24 மாதங்கள் ஆகிறது. டிசம்பர் 2014 நிலவரப்படி மட்டும் சென்னையில் 38,400 ஃபிளாட்டுகள் விற்பனையாகமல் இருந்தன. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. சென்னையில் வர்த்தகக் கட்டடங்களைவிடக் குடியிருப்புக் கட்டடங்கள் அதிகம் கட்டப்பட்டதும், கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதுமே” என்றார்.

வாங்க ஆள் இல்லாமல் வீடுகள் தேங்கிக் கிடக்கும் இந்தச் சூழ்நிலையில் வீடு வாங்க களமிறங்கி தாராளமாகப் பேரம் பேசி விலையைக் குறைக்க முடியும். சின்ன புரமோட்டர்கள் சதுர அடிக்கு ரூ.150 முதல் ரூ.300 வரைக்கும் விலையைக் குறைத்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். பெரிய புரமோட்டர்கள், சதுர அடி விலையைக் குறைக்கவில்லை என்றாலும் மாடர்ன் கிச்சன் இலவசம், கார் பார்க்கிங் இலவசம் என சலுகைகள் அளிக்கிறார்கள்.

எனவே, கையில் நிறைய பணத்தை வைத்துக்கொண்டு, கட்டாயம் வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தைரியமாக குறைந்த விலைக்கு வீடு வாங்க பேச்சுவார்த்தை நடத்தலாம். மற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டிய நேரமிது!

இந்தியாவிலும் சப்-பிரைம் வரக்கூடும்!

ஆர்பிஐ அதிர்ச்சி தகவல்கள்

வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் அளித்துள்ள வீட்டுக் கடன்கள் மற்றும் அவற்றின் சொத்து அறிக்கையின் அடிப்படையில் விரிவான ரிப்போர்ட் ஒன்றை அண்மையில் ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ரியல் எஸ்டேட் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இந்தியாவில் 2012-13-ம் ஆண்டுக்குப் பிறகு அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலையில் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது. சொத்து விலை தேக்கம் மற்றும் இறக்கம் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் விஷயமாக இருக்கிறது. இது வங்கிகளின் செயல்பாட்டையும் பாதித்துள்ளது. கடன் மூலம் வீடு வாங்கப்பட்டிக்கும் நிலையில், வீட்டின் மதிப்புக் குறையும்பட்சத்தில் கடன் வாங்கியவருக்கு ஏதாவது சிக்கல் வந்தால், அந்த வீட்டை விற்றுக்கூட கடனை அடைக்க முடியாத நிலை ஏற்படலாம்.

பொதுவாக, ரூ.20 லட்சம் வரையில் வீட்டுக் கடன் என்கிற பட்சத்தில் வீட்டின் மதிப்பில் 80% வரைக்கும் கடன் வழங்கப்படும். இதற்கு மேல் என்றால் 90% வரைக்கும் கடன் வழங்கப்படும். ஜனவரி 2009 முதல் 2014 செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்திய அளவில் அதிக மதிப்பில் கடன் வழங்கப்பட்ட நகரங்களில் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதை அரசு புள்ளிவிவரமே சுட்டிக் காட்டுகிறது. கடந்த 14 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு வீட்டு விலை பணவீக்கம் (House price inflation) 3.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது 2014, டிசம்பர் நிலவரம். இப்போது இதைவிடக் குறைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நாட்டில் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் தனிநபர்களின் வருமானம் உயரும். அப்போதுதான் அவர்களால் சொந்த வீடு வாங்க முடியும். ரிசர்வ் வங்கியும் தன் பங்குக்கு வட்டியைக் குறைத்தால்தான் வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைக்கும். அப்படி நடக்கவில்லை என்றால் ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி தொடரக்கூடும். அப்போது அமெரிக்காவில் 2007-08-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சப்-பிரைம் பிரச்னை இந்தியாவிலும் வரக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் அனலிஸ்டுகள். அப்படியொரு நிலைமை உருவாகும் எனில், ரியல் எஸ்டேட் விலை இன்னும் கடுமையாக இறங்க வாய்ப்புண்டு. எனவே, ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரமிது என்பதில் சந்தேகமே இல்லை!

கோவை நிலவரம்!

சென்னைக்கு அடுத்தப் பெரிய நகரம் கோயம்புத்தூர். ஆனால், பொருளாதார நெருக்கடி காரணமாகக் கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனை கணிசமாகக் குறைந்திருக்கிறது. சென்னை மவுலிவாக்கம் விபத்து, தமிழகம் முழுக்க அடுக்குமாடிக் குடியிருப்புகள் குறித்த விழிப்பு உணர்வை பெருமளவில் ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறிய மற்றும் புதிய கட்டுமான நிறுவனங்களின் அடுக்குமாடிக் குடியிருப்பை நோக்கி செல்வதை மக்கள் பெருமளவில் குறைத்துக்கொண்டுள்ளனர். பெரிய நிறுவனங்கள், முன் அனுபவம் கொண்ட கட்டுமான நிறுவனங்களிலும் புக்கிங் குறைந்திருந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், புக்கிங் இல்லாததால் கோவையில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள், கட்டுமான பணிகள் முடியாமல் அப்படியே நிற்பதைக் காண முடிகிறது. கட்டுமான பணிகள் முடிந்த பல அபார்ட்மென்ட்டுகளும் விற்பனையாகமல் தேங்கி இருக்கின்றன.

கோவையைச் சேர்ந்த முன்னணி புரமோட்டர் ஒருவர், ‘‘விற்பனை குறைந்தாலும் பில்டர்களின் எண்ணிக்கை சென்னையைப்போல கோவையிலும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அபார்ட்மென்ட் வாங்குபவர்களுக்கு நிறையச் சலுகைகள் வழங்கப்படுகிறது. இருந்தாலும் கூட அபார்ட்மென்ட்டுகளை வாங்க மக்களிடம் ஆர்வம் அதிகம் இல்லை. ஆனால், இது நிரந்தரம் இல்லை. விரைவில் பிரச்னை தீரும். கோவை எப்போதும் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்ததில்லை. சந்திக்கவும் வாய்ப்பில்லை” என்றார்.

-ச.ஜெ.ரவி

குறிப்பு: அட்டையிலும் கட்டுரையிலும் பயன்படுத்தப்பட்ட பில்டிங் படங்கள் மாடல் படங்களே.

படங்கள்:    இரா.யோகேஷ்வரன்

சி.சரவணன், மு.சா.கௌதமன்

அடுத்த கட்டுரைக்கு