Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்

கமாடிட்டி டிரேடிங்

கமாடிட்டி டிரேடிங்

மெட்டல் & ஆயில்

இந்த வாரம் தங்கத்தின் விலைப்போக்கு குறித்து கூறுகிறார் சென்னை அலைஸ் புளூ கமாடிட்டி நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ்.

தங்கம்!

‘‘சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை சென்ற வாரம் இறக்கத்துடன் வர்த்தகமானது. சென்ற வாரம் அமெரிக்காவில் வெளிவந்த வேலை குறித்தான செய்திகள் அமெரிக்கப் பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக இருந்ததால், தங்கத்தின் விலை இறக்கத்துடன் வர்த்தகமானது. தங்கம் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 1,209 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகிறது. இந்த வாரம் வெளிவரும் பொருளாதார செய்திகளைப் பொறுத்து ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகும் வாய்ப்பு உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்

இந்திய சந்தையில், தங்கம் ஜூன் மாத கான்ட்ராக்ட் 27,050 - 27,200 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமாகிறது. 27,500 ரூபாய் என்ற நிலையை உடைத்து,  ஏற்றத்தில் வர்த்தகமாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 27,000 ரூபாய் என்ற நிலையை உடைக்கும் பட்சத்தில் 26,200 ரூபாய்க்கு விலை இறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.’’

வெள்ளி!

கமாடிட்டி டிரேடிங்

வெள்ளி விலை சர்வதேச சந்தையில் 0.3% அதிகரித்து வர்த்தகமானது. தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டாலும், டாலரின் மதிப்பில் காணப்பட்ட இறக்கத்தால் வெள்ளியின் விலையில் சிறிய ஏற்றம் காணப்பட்டது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 17.1 டாலராக வர்த்தகமாகிறது. ஆனால், இந்திய சந்தைகளில் வெள்ளியின் விலை குறைந்தே காணப்பட்டது. தங்கத்தின் விலையில் காணப்பட்ட இறக்கமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வரும் வாரங்களில் வெள்ளியின் விலை சர்வதேச சந்தைகளில் குறைந்தே காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையிலும் சர்வதேச நிலவரங் களைப் பொறுத்து வெள்ளியின் விலை அமையலாம்.

காப்பர்!

கமாடிட்டி டிரேடிங்

காப்பரின் விலை சர்வதேச சந்தைகளில் அதிகரித்து வர்த்தகமானது. சீனாவில் வெளியாகியுள்ள உற்பத்தி தகவல்களால் அதன் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் காப்பரின் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, டாலரின் மதிப்பு குறைந்து வருவதும் காப்பரின் விலை அதிகரிக்க காரணமாகியுள்ளது.

இந்திய சந்தைகளிலும் காப்பரின் விலை அதிகரித்தே காணப்பட்டது. ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும் காப்பரின் விலை அதிகரிக்க காரணமாகியுள்ளது. அமெரிக்க உற்பத்தி தகவல்களும் இறக்கத்தில் உள்ளதால், காப்பரின் விலை வரும் வாரங்களில் இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் அதிகரித்தே வர்த்தகமாகும் என்று கூறப்படுகிறது.

கமாடிட்டி டிரேடிங்

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து அதிகரித்தே வர்த்தகமாகிறது. ப்ரென்ட் கச்சா எண்ணெய் மற்றும் டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் ஆகியவை முறையே 3 மற்றும் 1.9% அதிகரித்து வர்த்தகமானது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக அமெரிக்க இருப்புகள் குறைந்து வருவதும், மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் பிரச்னை காரணமாகவும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வர்த்தகமாகிறது.

கமாடிட்டி டிரேடிங்

வரும் வாரங்களில் சர்வதேச சந்தைகளில் அமெரிக்காவில் குறைந்துவரும் கச்சா எண்ணெய் இருப்பு காரணமாக விலை மேலும் அதிகரிக்கும் என்பதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தே வர்த்தகமாகும் என்று கூறப்படுகிறது.

இந்திய சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச விலை நிலவரங்களைப் பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.

ச.ஸ்ரீராம்

அக்ரி கமாடிட்டி

மஞ்சள் (TURMERIC)

தேவைகள் குறைந்ததன் காரணமாகவும், தரமற்ற மஞ்சள் வரத்துக்கள் சந்தைக்கு வந்ததாலும் கடந்த வாரத்தில் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. தரமற்ற மஞ்சள் வரத்து அதிகம் காணப் பட்டதால், மஞ்சளுக்கான முக்கிய சந்தைகளிலும் வர்த்தகர்கள்  ஆர்வம் காட்டவில்லை.

கமாடிட்டி டிரேடிங்

இருப்பினும் நடப்பு ஆண்டில் மஞ்சள் விளைச்சல் குறைந்து காணப்படுகிறது என்கிற தகவலால் விலை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. ஆந்திர மாநிலத்தின் வேளாண்மை பல்கலைக்கழகம் ஏற்கெனவே 40 லட்சம் பைகள் (ஒரு பை என்பது 75 கிலோ) கையிருப்பு இருப்பதாகவும், நடப்பு ஆண்டில் மஞ்சள் உற்பத்தி 37-38 லட்சம் பைகளாகக் குறைந்து காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

சந்தை தகவலின்படி, நடப்பு ஆண்டின் மஞ்சள் விளைச்சல் ஏரியா நிஜாமாபாத்தில் 40% குறைந்தும், கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் சுமார் 20% குறைந்தும் காணப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. நடப்பு ஆண்டில் மொத்த மஞ்சள் உற்பத்தி நான்கு முதல் ஐந்து மில்லியன் பைகளாக இருக்கும் என்றும், இது இதற்கு முந்தைய ஆண்டைவிட இரண்டு மில்லியன் பைகள் குறைவு என்றும் தெரியவந்துள்ளது.

உற்பத்தி குறையும் என்கிற எதிர்பார்ப்பினால் மஞ்சள் விலை உயரலாம்.

ஜீரகம் (JEERA)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவை அதிகரித்து காணப்பட்டதால், கடந்த வாரத்தில் ஜீரகத்தின் விலையும் அதிகரித்து வர்த்தகமானது. சந்தைக்கு வரத்துக் குறைவாக காணப்பட்டதும் ஜீரகத்தின் விலை உயர்வுக்கு சாதகமாக அமைந்தது. அதேசமயம், ஜீரகத்தின் தேவை தொடர்ந்து இருக்கும் வரை மட்டுமே விலை அதிகரித்துக் காணப்படும்.

கமாடிட்டி டிரேடிங்

காலம் தாழ்ந்து பெய்த மழையின் காரணமாக ராஜஸ்தானில் ஜீரகம் விளையும் ஏரியாக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இதனால் பயிர்சேதம் ஏற்பட்டு உற்பத்தி குறையும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.   2014-15-ம் ஆண்டின் அக்டோபர்-செப்டம்பர் மாதங்களில் இந்தியாவின் மொத்த ஜீரக உற்பத்தி 2.50 லட்சம் டன் முதல் 2.70 லட்சம் டன் வரை இருக்கும் என்றும், இது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் 3.50 லட்சம் டன் முதல் 3.85 லட்சம் டன்னாக இருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, ஜீரகம் விளைச்சல் ஏரியா 40-45% குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீரகம் அதிகமாக விளையும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தினம் தினம் பருவச் சூழ்நிலை மாற்றத்துக்கு உள்ளாகி வருவதும் விலை உயர்வுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. தேவை அதிகரிப்பானது தொடர்ந்திருக்கும் என்கிற எதிர்பார்ப்பின் காரணமாக இனிவரும் வாரத்திலும் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

கமாடிட்டி டிரேடிங்

ஏலக்காய் (CARDAMOM)

ஏலக்காய் அதிகம் விளையும் கேரளா மாநிலத்தில், ஏலக்காய் விளைச்சலுக்கான பருவச் சூழ்நிலை மிகவும் சாதகமாக இருப்பதால் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமானது. இதற்கு முந்தைய வாரங்களிலெல்லாம், பருவநிலை மோசமாக இருந்ததால் உற்பத்தி பாதிக்கப்படும் என்கிற சூழ்நிலை காணப்பட்டது. ஆனால், வெயில் காலத்தில் பெய்துவரும் மழையால் எப்போதும்போல உற்பத்தி அதிகரித்துக் காணப்படும் என்று ஏலக்காய் விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

கமாடிட்டி டிரேடிங்

கடந்த 2014-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சிறிய ரக ஏலக்காய் ஏற்றுமதி 14% அதிகரித்து 2,795 டன்னாக காணப்பட்டது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,458 டன்னாக இருந்தது என ஸ்பைஸஸ் போர்டு தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் சிறிய ரக ஏலக்காய் விலை சராசரியாக ஒரு கிலோவுக்கு 628 ரூபாய் என்கிற விலையில் வர்த்தகமானது. உற்பத்தி அதிகரிப்பு, அதனால் வரத்து அதிகரிப்பு ஆகிய காரணங்களால் வரும் வாரத்தில் விலை குறையலாம்.

படம்:  அ.பார்த்திபன்

செ.கார்த்திகேயன்

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

அடுத்த கட்டுரைக்கு