Published:Updated:

நிதி...மதி... நிம்மதி!

ஒரு படி... ஒரு பிடி!பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

பணம்!

நிதி...மதி... நிம்மதி!

அநேகமாக எல்லாருக்குமே, இதுதான் வாழ்க்கையின் மையப்புள்ளி என்றாகிவிட்டது. பணத்தை ஈட்டுவதற்குத்தான் திட்டங்களோ, ஆலோசனைகளோ தேவை.

செலவு செய்யும்போது..? இஷ்டம்போல் செலவழிக்கலாம்... (என்னவொரு சொல்! செலவு - ‘அழிக்கலாம்’!)

‘செலவு மேலாண்மை’ என்பது அதிகம் அறியப்படாத அல்லது அதிகம் ‘கண்டுகொள்ளப்படாத’ துறையாகவே இருந்து வருகிறது. காரணம்..? நமக்கு வரவு வந்து சேரும் முன்பே செலவு வந்துவிடுகிறது.

ஆம், இன்றும்கூட நம் நாட்டில் ‘.......... செலவுக்கு என்ன செய்வது?’ என்கிற கேள்விதான் பல குடும்பங்களில் விஞ்சி நிற்கிறது. பணம் வந்த கையோடு செலவும் செய்துவிடுகிறோம். இதில், ‘மேலாண்மை’க்கு எங்கே இடம் இருக்கிறது..?

செலவை மிஞ்சும் வரவு, நம் அனைவரின் வாழ்க்கையிலும் சாத்தியமா..? ஆம் எனில், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்..? இதுகுறித்துப் பிறகு பார்ப்போம். அதற்கு முன்பாக...

‘அம்மா மகேஸ்வரி... இங்க வா.’

‘என்ன தாத்தா..?’

‘இந்தா.., இதுலருந்து கைநிறைய அள்ளிக்கோ..’ என்று, நெல்குவியலைக் காட்டிச் சொன்னார் தாத்தா.

தன் இரண்டு கைகளால், நெல்லை அள்ளி எடுத்தாள்.

‘ஊம்... அப்படித்தான்..! அப்படியே கொண்டு வா...’ - கூடவே நடத்திக்கொண்டு போனார்.

தன் உயரத்துக்கு இருந்த ‘தொம்பை’ அருகே சென்று, ‘மகி’யைத் தூக்கிக் கொண்டார்.

‘அதை உள்ளே போடும்மா...’

தான் கொண்டுவந்த நெல்லை தொம்பைக்குள் கொட்டினாள். கீழே இறக்கி, செல்லமாகக் கன்னத்தில் கிள்ளிவிட்டு,

‘நல்ல பாப்பா... போய். விளையாடிக்கோ...’

‘சரி...’ என்று சொல்லிவிட்டு ஓடினாள்.

‘ஒரு படி அரிசியில், ஒரு பிடியேனும் சேர்த்து வை.’

நிதி...மதி... நிம்மதி!

காலம் காலமாக, நமது கிராமங்களில் சொல்லப்பட்டு வரும், பின்பற்றப்பட்டு வரும் முக்கியமான ‘தத்துவம்’ இது.

உலகம் முழுவதும், செலவு மேலாண்மை குறித்து எத்தனை தத்துவங்கள், கருத்துக்கள், ‘கண்டுபிடிப்புகள்’ வந்தாலும், ‘சேமிக்க வேண்டும்’ என்கிற அறிவுரை மட்டும் சற்றும் மாறுவதே இல்லை.

இந்த விஷயத்தில், இந்தியா எப்போதுமே தனித்து நிற்கிறது. யாரும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நாம் இல்லை. நாமாகவே மனமுவந்து, ‘நம்ம சக்திக்கு ஏத்த அளவு’ சேர்த்து வைக்கிறோம். பல கோடி குடும்பங்கள் சேர்த்து வைப்பதால்தான், நமது பொருளாதாரம் எப்போதும் உயிர்ப்புடன் விளங்குகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உலக நாடுகள் அனைத்தும், பொருளாதாரத்தில் செங்குத்தான வீழ்ச்சியின் விளைவாகக் கடுமையான நெருக்கடியில் சிக்கித்தவித்தன. பல நாடுகள், இன்னமும்கூட அதன் பாதிப்பில் இருந்து முற்றிலுமாக விடுபட முடியாமல் திணறி வருகின்றன.

கிரீஸ், ஏறத்தாழ ‘திவால்’ (Bankruptcy) நிலையின் விளிம்பில், தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், மிக வலுவான நிலையில் இருந்து, இறங்கி இறங்கி வந்து, ‘தப்பித்தால் போதும்’ என்கிற அளவில், மந்தகதியில்தான் நாட்களை நகர்த்திக் கொண்டு இருக்கின்றன.

ஆப்பிரிக்க நாடுகளோ, என்றுமே ‘சௌகரியமாக’ இருந்தது இல்லை. உள்நாட்டுக் குழப்பங்களும், உள்கட்டமைப்புக் குறைபாடுகளும் சேர்ந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தை இன்றளவும், ‘இருள்பிரதேச மாக’வே வைத்து இருக்கின்றன.

நிதி...மதி... நிம்மதி!

பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் (இயற்கைப் பேரழிவுக்குப்பின்) உள்ளிட்ட ஆசிய நாடுகளில், எதிர்காலம் குறித்து ஒருவித அச்ச உணர்வு, வெளிப்படையாகத் தெரிகிறது.

அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளுடன் ‘பேசப்படுகிற’, ‘கவனிக்கப்படுகிற’ பொருளாதாரமாக நாம் வளர்ந்து இருக்கிறோம். இதற்கு வழிகோலி யது - நம்மிடம் அபரிமிதமாக உள்ள உள்நாட்டுச் சேமிப்பு (Domestic savings). இதுவே, இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடி.

‘கருகமணி அளவுக்கேணும், ஒடம்புல தங்கம் இருக்கணும்பா...’ என்று, ‘அந்தக் காலப் பெருசுகள்’ சொல்லும் வார்த்தையை, கேலி செய்ய, கிண்டல் அடிக்கத் தெரிந்து இருக்கிற பலருக்கு, அதில் ஒளிந்துகிடக்கும் ‘பொருளாதாரச் சூட்சுமம்’ புரிவதில்லை.
‘இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்... மொதல்ல, ஒண்டிக்கறதுக்குச் சொந்தமா ஒரு குடிசையாவது வாங்கிப் போடு...’

தற்காலிகத் தேவையையும் நிரந்தர நன்மை தருகிற நீண்ட காலத் தேவையையும் இனம் பிரித்துப் பார்க்கிற பொருளாதார மேதைமை, இந்தியர்களின் ரத்தத்தில் கலந்தது.

அன்றாடம் ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறுகிற சம்பவங்கள், சம்பாஷணைகளில் (உரையாடல்கள்) கொட்டிக் கிடக்கின்றன - செலவு மேலாண்மையின் அத்தனை விதிகளும், தத்துவங்களும்.

‘என் பொண்ணுக்கு, ‘பாக்கெட் மணி’ன்னு தனியே எதுவும் குடுக்கறதில்லை.  அப்பப்போ, வீட்டுக்கு வேண்டியது எதாவது வாங்கிட்டு வரச் சொல்லி, பணம் குடுப்பேன். அதுல மிச்சம் பிடித்து, அவ செலவையும் பார்த்துப்பா...’

பெருமைப்பட்டுக் கொள்கிறார் ஒரு அப்பா. மகள் புத்திசாலியாக இருக்கிறாளே!

இன்னொரு உதாரணம். ‘என் பையன், போன வாரம் ‘டூர்’ போயிட்டு வந்தான். கை செலவுக்கென்று ஆயிரம் ரூபாய் குடுத்து அனுப்பிச்சேன். ஒரு பைசாகூடச் செலவு பண்ணாம, அப்படியே திருப்பிக் கொண்டு வந்து குடுத்துட்டான்...’

மன்னிக்கவும். இவன் இன்னமும் ‘நிறையத் தூரம் போகவேண்டி இருக்கு.’ கையில் பணம் இருந்தாலும், அதைச் செலவு செய்ய ஒரு... ‘தைரியம்’ வேண்டும்.இது குறித்துத் தனியே, விரிவாக, பிறகு பார்ப்போம்.

இப்போதைக்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான் - செலவு செய்யாமலே இருப்பது, செலவு மேலாண்மைக்குள் வராது! அது புத்திசாலித்தனமும் அல்ல. சில சமயங்களில், நாம் எதிர்பாராமல் மிகுதியான பண வரவு ஏற்படலாம்.

இதற்கு மாறாக, சில நாட்களில் எதிர்பார்த்த ‘இடத்தில்’ இருந்து தேவையான அளவுக்குப் பணம் வராமலும் போகலாம். (‘இதுதான் நடக்கிறது எப்பவுமே...’)

இரண்டு தருணங்களிலும் நாம் எப்படி நடந்துகொள் கிறோம்..?

குறைந்த பணத்துக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது மட்டுமல்ல; மிகைப் பணத்தை எப்படிக் கையாள்கிறோம்... என்பதும் செலவு மேலாண்மை யில் மிக முக்கியம்.

‘கையில் நாலு காசு இருந்தா போதுமே... ‘தாம் தூம்’னு வாரி இறைச்சுடு... நாலு நாள் கழித்து, தம்பிடி இல்லாம, என்ன செய்யறது..ன்னு மோட்டு வளையைப் பார்த்துக்கிட்டு, வூட்டுலயே உட்கார்ந்துகிட்டு இரு...’

‘சாமானியர்களின்’ வீடுகளில் அவ்வப்போது கேட்கும் உரையாடல்தான் இது. ஆக, ‘செலவு மேலாண்மை’ - பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே என்று எண்ணுவது, அறியாமை. அன்றாடம் தினசரி வருமானம் ஈட்டி பிழைப்பவர்களில் இருந்து, அரசாங்கத்தை நிர்வகிப்பவர்கள் வரை அத்தனை பேருக்கும் இது அவசியமானது.

செலவு செய்யும் பணத்துக்கு, உச்சப்பட்ச பலன் (Maximum return) கிடைப்பதை உறுதி செய்வதே, செலவு மேலாண்மையின் நோக்கம். இதையொட்டி, சில விதிமுறைகளையும் வழிவகைகளையும் அது முன்வைக்கிறது. அவற்றில் ஒன்றுதான்... 60% தீர்வு
(60% Solution)!

இந்த ‘தியரி’ என்னதான் சொல்கிறது..?

(சேர்ப்போம்)

படம்: ஆ.முத்துக்குமார்.

மகிழ்ச்சியான நகரம் சென்னை!

தென் இந்தியர்களைவிட வட இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என எல்ஜி நிறுவனத்தின் சமீபத்திய சர்வே சொல்கிறது. இந்த சர்வேயில் 16 மாநிலங்களில் வசிக்கும் பலரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. மகிழ்ச்சியான நகரங்களில், முதலிடத்தை சண்டிகர் பெற்றிருக்கிறது. இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே லக்னோ மற்றும் புதுடெல்லிக்குக் கிடைத்துள்ளது. நான்காம் இடம் சென்னைக்கும், ஐந்தாம் இடம் பெங்களூருக்கும் கிடைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு