Published:Updated:

ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்!

ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்!

1.சேமிப்பதற்காகச் சம்பாதியுங்கள்!

இன்று வேலை பார்ப்பவர்களில் 80 சதவிகிதத்தினர் அவர்களின் மாத சம்பளத்தை நம்பியே இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் தேவைகளைத் தாங்களே நிர்ணயிப்பதை விட சுற்றியுள்ளவர்கள் முடிவு செய்யும் நிலையில் இருக்கிறார்கள். அதனால் செலவுகள் அதிகரித்து, சேமிப்பு என்ற ஒன்றையே மறந்துவிட்டனர். கிடைக்கும் வருமானத்தில் கொஞ்சமாவது சேமிக்க வேண்டும் என்று நினைக்காமல், சேமிக்கிற அளவுக்குச் சம்பாத்தியம் இல்லை என்று கவலைப்பட்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் 20% சம்பளத்தில் சேமிக்கக் கற்றுக் கொண்டால், இதைச் சமாளிப்பது மிகவும் எளிது. வேலைக்குச் சேர்ந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கத் தொடங்குவது நல்லது. நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமில்லை; அதில் எவ்வளவு சேமிக்கிறோம் என்பதே முக்கியம்!

ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்!

2.தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள்!

நாம் செய்துவரும்  வேலையை திடீரென்று இழந்தால் அல்லது நாம் வேலை செய்யும் நிறுவனம் மூடப்பட்டால், பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவோமே என்கிற கவலை இன்றைய நிலை யில் எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று ஊழியர்களுக்கிடையே, பெரிய நிறுவனங்களுக்கிடையே நாளுக்குநாள் போட்டி அதிகரித்து வருகிறது. நாம் நம்முடைய தகுதிகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நிறுவனங்களில் வேலையிழப்புச் சம்பவங்கள் நடந்தாலும் நமது தகுதி நம்மை முன்னிறுத்தும். வேலைக்கான முழுத் தகுதியும் நமக்கிருக்கும் பட்சத்தில், வேலை இழப்பு என்கிற அபாயம் நமக்கு வரவே வராது.

3.பகுதி நேரம் சாத்தியமா?

வருமானத்தைப் பெருக்கு வதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, வேலைக்கான தகுதியை உயர்த்திக்கொள்வதன் மூலம் அதிகச் சம்பளம் பெறுவது. மற்றொன்று, தற்போதுள்ள வேலையைச் செய்துகொண்டே பகுதி நேரமாக வேலை செய்து சம்பாத்தியத்தை உயர்த்திக் கொள்வது. இந்த இரண்டு வழி களில் உங்களுக்கு எந்த வழியை உடனடியாகப் பின்பற்ற முடியுமோ, அந்த வழியைப் பின்பற்றுங்கள். இதைவிடுத்து வருமானத்தைப் பெருக்க வழியில்லையே என்று புலம்புவது முட்டாள்தனம்.

ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்!

4.கடன் கட்டாயம் வேண்டாம்!

இன்று கடன் வாங்காதவர்கள் அபூர்வம். கடன் வாங்குபவருக்குப் பணம் வேண்டும் என்பதே குறி. அதற்கு எவ்வளவு வட்டி, நம்மால் திரும்பச் செலுத்த முடியுமா என்று ஒருபோதும் நினைப்ப தில்லை. இதனால்தான் பலரும் கிரெடிட் கார்டில் கடன் வாங்கி அதைத் திரும்பக் கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். கடன் வாங்குவதைத் தவறு என்று சொல்லிவிட முடியாது. வீட்டுக் கடன் இதற்கு நல்லதொரு உதாரணம். ஆனால், எந்தக் கடனை வாங்குவதாக இருந்தா லும் அது நமக்கு அவசியம் தேவையானதா என ஒன்றுக்கு பத்து முறை யோசிப்பது நல்லது. தவிர, ஒவ்வொரு கடனுக்கும் வட்டி விகிதம் எவ்வளவு என்பதைப் புரிந்துகொண்ட பிறகு வாங்கினால், கடனில் நாம் சிக்கித் தவிக்க மாட்டோம்.

5.சொந்த வீடு இல்லையே!

சொந்த வீடு என்பது அவசியம் என்று இன்றைக்கு எல்லோரும் நினைக் கிறார்கள். நம் முந்தைய தலைமுறையை எடுத்துக் கொண்டால், பெரும்பாலானோர் ஓய்வுபெறும்போதுதான் வீடு வாங்குவார்கள். பலர் வீடு வாங்காமலே காலத்தை முடித்த கதைகளும் நிறையவே உண்டு. ஆனால், இன்றைய சமூகத்தில் ஒருவருக்குச் சொந்த வீடு இல்லை என்றால் அவர்களைப் பார்க்கும் விதமே தனி. இதற்குப் பயந்தே பலரும் வீடு வாங்கத் துணிந்துவிடு கிறார்கள். ஆனால், வீடு வாங்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையான பணம் வேண்டும். வீட்டுக் கடன் கட்டுவதற்குத் தேவையான சம்பளமோ, வருமானமோ இல்லாத நிலையில், வீடு வாங்கவில்லையே என்று வருத்தப்படுவதினால் எந்த பிரயோஜனமும் இல்லை!

6.தவறான முதலீடு!

முதலீட்டு விஷயங்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் கோட்டைவிட்டுவிட்டு, பின்னர் அதை நினைத்துக் கவலைப்படுகிறார்கள். முதலீட்டை ஆரம்பிப் பதற்குமுன்பே அது சரியானது தானா, நமது எதிர்காலத் தேவைக்கு இருக்கும் கால அவகாசத்துக்குள் அதன்மூலம் நமக்கு வருமானம் கிடைக்குமா என்றெல்லாம் யோசிக்காமல் முதலீடு செய்கிறோம்.

முக்கியமாக, எதிர்காலத் தேவைகளுக்காக தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துவைப்பது தவறான எண்ணம். அத்தியாவசியம் என்று எண்ணும்போது ரியல் எஸ்டேட் முதலீட்டைப் பணமாக்குவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், தேவை என்கிறபோது அதை விற்று உடனே காசாக்க முடியுமே!

7.பங்குச் சந்தை என்றாலே நஷ்டமா?

பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்த்தவர்களை விட  நஷ்டத்தைச் சந்தித்தவர்களே அதிகம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் பங்குச் சந்தை என்பதைச் சூதாட்டம் என்றுகூட தவறாக நினைக்கிறார்கள். பங்குச் சந்தை யில் முதலீடு செய்தால் அதிக நஷ்டத்தைத்தான் சந்திக்க வேண்டுமோ என்கிற பயத்தாலும் அதில் முதலீடு செய்வதை தவிர்த்துவிடுகிறார்கள்.

விஷயம் தெரியாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததால் தான் சிலர் நஷ்டத்தைச் சந்திக்கிறார்களே தவிர, பங்குச் சந்தை முதலீட்டால் நஷ்டத்தைச் சந்திப்பதில்லை. நீண்டகால அடிப்படையில் பங்குச் சந்தையில்  முதலீடு செய்யும் போது நம்முடைய பணம் பெருகு வதோடு நாட்டின் பொருளாதாரத் துக்கும் அது பெருமளவு உபயோகமாக இருக்கும்.

ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்!

8.இன்ஷூரன்ஸ் இருந்தால் கவலையில்லை!

இன்றைய நிலையில் பலரது கவலை, திடீரென நமக்கு ஏதாவது ஆகிவிட்டால், நம் குடும்பத்தை யார் காப்பாற்றுவது என்பதே. இது நியாயமான கவலைதான் என்றாலும், இந்தக் கவலையைப் போக்க ஒரே வழி, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது தான். இன்ஷூரன்ஸ் பாலிசி என்றவுடன் வழக்கமான மரபுரீதி யான பாலிசிகளை எடுக்காமல், குறைந்த பிரீமியத்தில் அதிகம் கவரேஜ் தருகிற டேர்ம் இன்ஷூ ரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது சரி.

9.ஓய்வுக் காலத்துக்குச் சேமிப்பு!

இந்தியாவில் வசிப்பவர்களின் ஆயுள் காலம் 75 வயது வரை நீண்டுவிட்டது. இன்று பலரும் விரைவிலே ஓய்வுபெற வேண்டும் என்று நினைப்பதால், வேலை செய்யும் ஆண்டுகளைவிட ஓய்வு ஆண்டுகள் அதிகமாக இருக் கிறது. இந்த ஓய்வுக்காலத்தில் வேலை செய்யாமல் சம்பளம் பெற வேண்டுமென்றால், அதற்கான தொகையைச் சேமித்து வைப்பது அவசியம்.

10.சரியான திட்டம்தான் சந்தோஷம்!

திட்டமிட்டுச் செயல்படாத தாலேயே பெரும்பாலானவர்கள் கவலையுடன் வாழ்க்கையைக் கடத்துகிறார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்கான திட்ட மிடலை ஒருவர் கட்டாயம் செய்ய வேண்டும். நேரம் ஒதுக்க வேண்டும். உங்கள் எதிர்காலத் தேவைகளைச் சரியாக கணித்து, அதற்கான நிதியை எப்படிச் சேர்ப்பது, எந்த வகையில் சேர்ப்பது என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டால், வாழ்க்கையில் உங்களுக்கு எந்த  ஃபைனான்ஷியல் கவலையும் இருக்காது!

பி.பத்மநாபன்,

நிதி ஆலோசகர்.

அடுத்த கட்டுரைக்கு