Published:Updated:

சீன பங்குச் சந்தைகளின் சரிவு... ஏன்... எப்படி... என்ன..?

சீன பங்குச் சந்தைகளின் சரிவு... ஏன்... எப்படி... என்ன..?

லகச் சந்தைகள் அனைத்தும் கிரீஸ் நாட்டு நிதிச் சிக்கல்கள் காரணமாகச் சரிந்துகொண்டு இருக்கிற வேளையில், தற்போது சீனாவின் பங்குச் சந்தை சரிவுகள் புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

ஏனென்றால், உலகின் இரண் டாவது பெரிய பொருளாதார நாடு சீனா. 2007-ம் ஆண்டு 14 சத விகிதமாக இருந்த இதன் ஜிடிபி வளர்ச்சி, 2014-ல் 7.4 சதவிகிதமாகக் (பாதியாக) குறைந்துவிட்டது. அடுத்த சில நாட்களில் வெளியாகக்கூடிய ஜிடிபியானது இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் உள்நாட்டு தேவை குறைந்து காணப்பட்ட தால், இறக்குமதியும் குறைந்தது; ஏற்றுமதியும் சரிந்தது. இதற்காக அரசாங்கம் நிறைய முயற்சிகள் எடுத்தும் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் அடைய வில்லை.

சீன பங்குச் சந்தைகளின் சரிவு... ஏன்... எப்படி... என்ன..?

ஆனால், ஆச்சர்யமூட்டும் விதமாகக் கடந்த ஒரு வருடத்தில் பங்குச் சந்தைகள் மட்டும் 100 சத விகிதத்துக்கும் மேலாக ஏற்றம் அடைந்துள்ளன. பொதுவாக, பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது, அதன் பிரதிபலிப்பாக பங்குச் சந்தை களும் உயரும். ஆனால், சீனப் பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது, பங்குச் சந்தை கள் மட்டும் எப்படி அதிகரித்தது என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுவது இயற்கைதானே!

நடந்தது என்ன?

கடந்த சில ஆண்டுகளாக சீன பங்குச் சந்தையில் நடந்தது என்ன என்பதைப் புரிந்துகொண் டால்தான், இப்போதைய இறக்கத்துக்கு என்ன காரணம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். சீன பங்குச் சந்தை முதலீடுகளின் அளவு மிகப் பெரியது. சீனாவின் பங்குச் சந்தைகள் இந்த அளவுக்குச் சரிந்த பிறகும்கூட அமெரிக்கா வுக்கு அடுத்து உலகின் பெரிய பங்குச் சந்தையாகக் கருதப்படு கிறது. இதை வேறுவிதமாகச் சொல்வதானால், இந்தியா, ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை முதலீட்டைப்போல் இரு மடங்கு ஆகும்.

கடந்த ஜூன் 12-ம் தேதி சீனாவின் ஷாங்காய் காம்போசிட் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத அளவுக்கு மிகவும் உயர்ந்தது. அதன்பிறகு, கடந்த மூன்று வாரங்களில் சீன சந்தைகள் 37% இறக்கம் கண்டிருக் கின்றன. கடந்த புதனன்று (8-ம் தேதி) சீனாவின் பங்குச் சந்தைகள் 5.9% சரிந்தது.

சீனாவின் பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களை முதலீடு செய்ய அனுமதிப்ப தில்லை. ஹாங்காங் நாட்டின் ஹாங்செங் பங்குச் சந்தைகளின் வழியாக முதலீடுகள் செய்யப் படுகின்றன. அப்படியெனில், சமீபத்திய வீழ்ச்சியில் பாதிக்கப் பட்டது 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட சீனாவின் உள்நாட்டு சிறு முதலீட்டாளர்கள்.

பங்குச் சந்தைகள் உயரக் காரணங்கள்!

சீன பங்குச் சந்தைகளின் சரிவு... ஏன்... எப்படி... என்ன..?

சீனாவின் ரியல் எஸ்டேட் (Property sector) துறையானது கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகவே சுணக்கத்தில் இருந்த தால், முதலீடுகள், பங்குச் சந்தை கள் பக்கம் திரும்பின. பங்குச் சந்தைகள், ஒரே திசையில், அதாவது மேல்நோக்கியே பயணிக்க ஆரம்பித்ததால், மந்தை மனப்பான்மை (heard mentality) கொண்ட சிறு முதலீட் டாளர்களின் பங்கெடுப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது.

பங்குப் பரிவர்த்தனை தொடர்பான கட்டணங்கள் குறைக்கப்பட்டன. பென்ஷன் ஃபண்டுகளிலிருந்து 30% வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. சந்தையில் ஆதாயப் பதிவு ஏற்படுவதைத் தடுப்பதற்குப் புதிய ஐபிஓ-கள் அனுமதிக்கப் படவில்லை. ஒருகட்டத்தில், அடுக்குமாடி வீடுகளை அடகு வைத்து முதலீடு செய்வதற்கு, நிதி உதவிகள் அளிக்கப்பட்டன. பங்குகளில் முதலீடு செய்வதற்கு ஏறக்குறைய 350 பில்லியன் டாலர் பணம் கடனாகத் தரப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆக மொத்தத்தில், நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும், அதன் செயல்பாடுகளின் அடிப்படை யில் பங்கு விலை ஏறாமல், ஊகத்தின் அடிப்படையில் ஏறத் துவங்கின.

பங்குச் சந்தைகள் இறங்கக் காரணங்கள்!

சீனச் சந்தை சரிவதற்கு முக்கியக் காரணம், பங்குகளின் விலை தாறுமாறாக ஏறியதுதான். பங்கு விலை ஏகத்துக்கும் அதிகரித்ததால், சிறு முதலீட்டா ளர்கள் பலரும் ஒரே நேரத்தில் பங்குகளை விற்று ஆதாயம் அடைய நினைத்தனர். இப்படி எல்லோரும் விற்க முயற்சித்த போது, வாங்குவதற்கு ஆட்களே இல்லாமல் போனதால், பங்கு விலை குறையத் தொடங்கியது. இது முதலீட்டாளர்களிடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி, சந்தையையே திக்குமுக்காட வைத்தது.

பொருளாதாரம் சரிவில் இருக்கும்போது, அதற்கு எதிர்மாறாக, குறுகிய காலத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றமடைவது அதிக நாட்களுக்கு நீடிக்க முடி யாது. உண்மையான பொருளாதாரத்துக்கும் பங்குச் சந்தைகளின் போக்குக்கும் நேரடியான தொடர்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற வாதம் வைக்கப்பட்டாலும், சீனாவின் பங்குச் சந்தை வளர்ச் சியானது சற்று அதிர்ச்சி கலந்த ஏற்றமாகவே பார்க்கப்பட்டது.

சீனாவைப் பொறுத்தவரை, அதன் பொருளாதார வளர்ச்சி யானது அசுரத்தனமாக இருந்த தால், 2006-க்குப் பிறகு இரண்டே ஆண்டுகளில் பங்குச் சந்தைகள் பன்மடங்கு அதிகரித்தன. முக்கியமாக, சீனாவின் இறக்குமதி பெரிய அளவில் அதிகரித்தது. ஆனால், தற்போது படிப்படியாக இறக்குமதி குறைந்துவிட்டது. அரசாங்கம் பல  நடவடிக்கைகளை எடுத்தும், பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. சீனாவின் மத்திய வங்கி வட்டி விதங்களைக் குறைத்தும் மந்தநிலையே தொடர்கிறது.

மேலும், சந்தைப் பொருட் களை (காப்பர், வெள்ளி போன்றவை) அடமானம் வைத்து, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பயன்படுத்தப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுவும் மார்ஜின் தொகை செலுத்தி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.பங்குச் சந்தைகள் சரியும்போது, மார்ஜின் தொகை செலுத்தாத வர்களின் அடமான பொருட்கள் (காப்பர் உள்ளிட்டவை) சந்தை விலைக்கே விற்கப்படுவதால், அதன் விலைகளும் சரிகின்றன.

சீன பங்குச் சந்தைகளின் சரிவு... ஏன்... எப்படி... என்ன..?

எதிர்பாராத விளைவுகள்!

சீனா, சந்தைப் பொருட்கள் நுகர்தல் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, உலோகங் களைப் பொறுத்தவரையில், இறக்குமதி குறைந்ததால் இதன் விலைகள் பெருமளவு சரிந்துள் ளன. இதனால் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்படைந் துள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சீனாவுடன் வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளுக்குச் சிக்கல்கள் வரக்கூடும். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் சுரங்க நிறுவனங்களின் வளர்ச்சி தடைப்படும். ஆஸ்திரேலியாவின் டாலர் அமெரிக்க டாலருக்கு நிகராக ஆறு வருட குறைந்தபட்ச நிலையில் வர்த்தமாகி வருகிறது. அதே சமயத்தில், சந்தைப் பொருட்களை இறக்குமதி செய்யும் மற்றும் உபயோகிக்கும் நாடுகளுக்கு, சந்தைப் பொருட் களின் விலைச்சரிவுகள் பயனளிக்கும்.

சீனச் சந்தை மீண்டும் உயரத் தொடங்கினாலும், அந்த ஏற்றம் எத்தனை நாளைக்கு என்பதே முக்கியமான கேள்வி!

ஷியாம் சுந்தர்

அடுத்த கட்டுரைக்கு