Published:Updated:

ஆடிட்டர் உதவியின்றி வரி கணக்கு தாக்கல் செய்ய முடியுமா?

ஆடிட்டர் உதவியின்றி வரி கணக்கு தாக்கல் செய்ய முடியுமா?

{?}நான் கான்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறேன். வருடத்துக்கு சுமார் ரூ.10 லட்சம் வரை டேர்னோவர் ஆகிறது. இதில் வருமான வரி, வணிக வரி, சேவை வரி கணக்கை தாக்கல் செய்ய ஆடிட்டர் செலவு மட்டும் ரூ.28,000 ஆகிறது. என்னால் ஆடிட்டர் உதவியின்றி தனியாக வரி கணக்கு தாக்கல் செய்ய முடியுமா?

பாலசுப்ரமணியம், பெங்களூரு.

எஸ்.ஸ்ரீகாந்த், ஆடிட்டர். பார்ட்டனர், கற்பகம் அண்ட் கோ.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆடிட்டர் உதவியின்றி வரி கணக்கு தாக்கல் செய்ய முடியுமா?

‘‘உங்களின் டேர்னோவர் ரூ.1 கோடிக்கும் குறைவாக இருப்பதால், நீங்கள் வருமான வரி கணக்குக்காக ஆடிட்டிங் செய்துகொள்ள வேண்டி யதில்லை. டேர்னோவரில் 8 சத விகிதத்துக்கும் குறையாமல் லாபம் இருந்தால், உங்களின் கணக்கைப் பராமரிக்கக்கூட வேண்டியதில்லை. அதனால் உங்களுக்கு அக்கவுன்டன்ட் தேவையில்லை.

ஆன்லைன் வழியாகவே வரி கணக்கு தாக்கலை மேற்கொள்ள வருமான வரித் துறையே வசதி செய்து தந்துள்ளது. அதனால் நீங்கள் ஆடிட்டரின் உதவியின்றியே ஆன்லைனில் வரி தாக்கல் செய்ய முடியும். வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப் பட்டத் துறையின் பிஆர்ஓ அலுவலகத்தில் இலவசமாக ஆலோசனை பெற முடியும்.’’

{?}நான் ஆன் லைனில் பங்கு வர்த்தகம் செய்து வருகிறேன். தேசிய பங்குச் சந்தை மூலம் வாங்கிய பங்குகளை மும்பை பங்குச் சந்தை மூலமாக விற்க முடியுமா?

ஜான் பால்.

எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்.

‘‘தேசிய பங்குச் சந்தையில் வாங்கிய பங்குகளை மும்பை பங்குச் சந்தையில் விற்பதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால், இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன.

1. நீங்கள் வாங்கிய பங்குகள் உங்க ளுடைய டீமேட் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. உங்களின் பங்கு தரகர் மும்பை பங்குச் சந்தையிலும் உறுப்பினராக இருக்க வேண்டும். அவரிடம் உங்களுக்கு ஒரு வர்த்தகக் கணக்கும் இருக்க வேண்டும்.’’

ஆடிட்டர் உதவியின்றி வரி கணக்கு தாக்கல் செய்ய முடியுமா?

{?}என் வயது 40. நான் கடந்த மே மாதம் முதல் ஐசிஐசிஐ புரூ. ஃபோகஸ்டு ப்ளூசிப் ஈக்விட்டி ரெகுலர் ஃபண்டில் எஸ்ஐபி முறையில் ரூ.5,000-மும், ஐசிஐசிஐ புரூ. வெல்த் பில்டர் சிஸ்டமேட்டிக் ரிட்டையர் மென்ட் சொல்யூஷன்ஸில் ஐந்து வருடத்துக்கு ரூ.50,000 வீதம் (பாலிசிக் காலம் 10 வருடங்கள்) முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீடுகளைத் தொடரலாமா?

சக்தி சிவா.

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர், வைஸ் வெல்த் அட்வைசர்ஸ்

‘‘முதலீட்டையும் இன்ஷூரன்ஸையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். நீங்கள் எடுத்திருக்கும் ஐசிஐசிஐ புரூ. வெல்த் பில்டர் சிஸ்டமேட்டிக் ரிட்டையர்மென்ட் சொல்யூஷன்ஸ் பாலிசிக்கு பிரீமியம் கட்ட ஆரம்பித்துவிட்டீர்கள் எனில், தொடர்ந்து கட்டுங்கள். வேறு புதிய பாலிசி எடுக்க வேண்டாம்.

 புதிதாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பினால், ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் மற்றும் எல் அண்ட் டி ஈக்விட்டி ஃபண்ட் போன்ற டைவைர்ஸிஃபைடு ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. இப்போது எஸ்ஐபி முறையில் முதலீடு செய்துகொண்டிருக்கும் ஐசிஐசிஐ புரூ. ஃபோகஸ்டு ப்ளூசிப் ஈக்விட்டி ரெகுலர் (குரோத்) ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். இந்த ஃபண்ட் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடியது.’’

{?}என் மகள் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம். அவர் பெயரில் வீட்டுமனை உள்ளது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.12 லட்சம். அவர் பெயரில் உள்ள மனையை விற்றால், அதற்கு ஏதாவது வரி கட்ட வேண்டுமா? அதில் வரும் பணத்தை முதலீடு செய்தால், வரிவிலக்கு கிடைக்குமா?

சுப்ரமணியன், திருச்சி.

ஜி.என். ஜெயராம், ஆடிட்டர், கார்த்திகேயன் & ஜெயராம் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ்.

‘‘வீட்டு மனை விற்றுவரும் லாபத்துக்கு மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) கட்ட வேண்டும். விற்பனை செய்யப்பட்ட விலை அல்லது அந்தச் சொத்துக்கான அரசு வழிகாட்டு மதிப்பு (Guideline Value), இதில் எது அதிகமோ அது விற்பனை விலையாக எடுத்துக் கொள்ளப்படும். இந்தச் சொத்து 1981-க்கு முன்னர் வாங்கப்பட்டிருந்தால், இதனுடைய கொள்முதல் விலையை 1981-ல் இருந்த அரசு வழிகாட்டு மதிப்பாக எடுத்துக் கொள்ளலாம். 1981க்குப் பிறகு வாங்கியிருந்தால், அது வாங்கப்பட்ட விலையே அதன் கொள்முதல் விலையாகும். அந்தச் சொத்து வாங்கி மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகியிருந்தால், அதன் மூலம் கிடைக்கும் மூலதன லாபத்துக்கு 20% வரி விதிக்கப்படும்.மற்றும் அதனுடைய கொள்முதல் விலையைச் செலவு பணவீக்கக் குறியீடு (Cost Inflation Index) மூலம் அதிகரித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு இல்லாமல் அந்தச் சொத்தை தங்கள் மகள் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவாகவே வைத்திருப்பின், அவரின் அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். இவ்வாறு கணக்கிடப்பட்ட வரியில் இருந்து தள்ளுபடி (Deduction) உண்டு. மனை விற்று கிடைத்த தொகையைப் பயன்படுத்தி ஒரு வீடு வாங்கப்பட்டால், மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியதில்லை.

மனை விற்ற தேதிக்கு 1 வருடம் முன்னரோ அல்லது 2 வருடம் பின்னரோ புது வீடு வாங்கியிருந்தாலும் புதிய வீடு கட்டப்படுவதாக இருந்தாலும் விற்ற தேதியிலிருந்து 3 வருடங்களுக்குள் கட்டினாலும் இந்த வரி தள்ளுபடி உங்கள் மகளுக்குப் பொருந்தும். அப்படி வீட்டுச் சொத்தில் முதலீடு செய்யாவிட்டால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதிக்குள் ஏதேனும் ஒரு தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கியில் உள்ள சிறப்புக் கணக்கில் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். மாறாக, 54 இசி விதியின் கீழ் ஆர்இசி மற்றும் என்ஹெச்ஏஐ பாண்டுகளில் இந்த மூலதன ஆதாயத் தொகையை முதலீடு செய்தாலும் வரிச் சலுகை தங்கள் மகளுக்குக் கிடைக்கும்.’’

ஆடிட்டர் உதவியின்றி வரி கணக்கு தாக்கல் செய்ய முடியுமா?

{?}எனக்கு இப்போது 30 வயது. நெதர்லாந்தில் வசித்து வருகிறேன். மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.50,000 வரை என்னால் முதலீடு செய்ய முடியும். எந்த ஃபண்டில் முதலீடு செய்தால் 15 வருடங்களுக்குப் பிறகு ரூ.2 கோடி ரூபாய் கிடைக்கும் ?

சரவணன்.

விஜய்பாபு , மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், பிளான் டு வெல்த் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்.

‘‘நீங்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து, இந்திய மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டுமானால் இந்தியாவைச் சேர்ந்த வங்கியில் என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ கணக்கு மற்றும் பான் நம்பர் கட்டாயம் தேவை. பிர்லா ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் கோட்டக் செலக்ட் ஃபோகஸ், ஃப்ராங்க்ளின் பிரைமா பிளஸ் ஃபண்ட் போன்ற லார்ஜ் கேப் டைவைர்ஸிஃபைடு ஃபண்டு களில் எஸ்ஐபி முறையில் 15 வருடங்களுக்கு மாதம் 50,000 முதலீடு செய்து ஆண்டு சராசரி கூட்டு வருமானம் 12% கிடைத்தால்கூட உங்களின் இலக்கான ரூ.2 கோடி கிடைக்கும். அதிகபட்சமாக மூன்று ஃபண்டுகளுக்கு மேல் முதலீடு செய்ய வேண்டாம்.’’

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

ஆடிட்டர் உதவியின்றி வரி கணக்கு தாக்கல் செய்ய முடியுமா?