Published:Updated:

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

விகடன் விமர்சனக்குழு

மஞ்சள் (TURMERIC)

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

தேவை அதிகரிப்பு, குறைவான மஞ்சள் உற்பத்திக் கணக்கீடு ஆகிய காரணங்களால் சென்ற வாரம் மஞ்சள் விலை அதிகரித்துக் காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மஞ்சள் அதிகம் விளையும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மழைப்பொலிவு குறைந்து காணப்படுவதால் மஞ்சள் விளைச்சலும் குறைந்துள்ளது. அதேபோல தெலங்கானாவிலும் மழைப்பொலிவு குறைவின் காரணமாக மஞ்சள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 9-ம் தேதி நிலவரப்படி தெலங்கானா மாநிலத்தின் மஞ்சள் விளைச்சல் ஏரியா 40,830 ஹெக்டேராக காணப்பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 44,623 ஹெக்டேராக அதிகரித்துக் காணப்பட்டது என அந்த மாநிலத்தின் வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சந்தை நிலவரப்படி ஆந்திர மாநிலத்தின் மஞ்சள் விளைச்சல் ஏரியா 10,300 ஹெக்டேரிலிருந்து 11,700 ஹெக்டேராக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் விளைச்சலுக்கான போதுமான மழை இல்லாததால் மஞ்சள் உற்பத்தி குறைந்து காணப்படுகிறது. இனிவரும் வாரங்களில் மஞ்சள் உற்பத்தி குறைந்து காணப்படும் என்பதால் விலை அதிகரித்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீரகம் (JEERA)

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

ஜீரகத்தின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் கடந்த வாரம் ஜீரகத்தின் விலை குறைந்து வர்த்தகமானது. முக்கிய ஸ்பாட் சந்தைகளில் இதே நிலவரம் நீடித்தது. செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் டெலிவரியானது நெருங்கிவிட்ட சமயத்தில் ஜீரகத்தின் விலை குறைந்திருப்பதால் வர்த்தகர்கள் டெலிவரி எடுப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். சமீபத்திய அறிக்கையின்படி கடந்த வாரத்தின் சந்தை இறுதிநாளில் என்சிடிஇஎக்ஸ் கிடங்கில் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் டெலிவரிக்கு 1143 டன் ஜீரகம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சீனாவில் ஜீரக விளைச்சல் சேதமடைந்திருப்பதாலும், ஜீரகத்தை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடான சிரியா மற்றும் துருக்கியில் அரசியல் பதற்றம் நிலவி வருவதாலும் இந்தியாவுக்கு ஜீரகத்தின் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகம் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், தற்போது உற்பத்தி ஏரியா அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும் விளைச்சல் நன்றாக இருப்பதால், வருகிற ராபி பருவத்தில் உற்பத்தி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஜீரகத்தின் விலை குறைந்து வர்த்தகமாக வாய்ப்புகள் அதிகம்.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

ஏலக்காய் (CARDAMOM)

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

வரத்து அதிகரிப்பின் காரணமாக ஏலக்காய் விலையானது குறைந்து வர்த்தகமானது. ஏலக்காய் வர்த்தகமாகும் முக்கிய சந்தைகளில் இந்த நிலை தொடர்ந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் செவ்வாய்க்கிழமையில் சந்தைக்கு சுமார் 103 டன் ஏலக்காய் வரத்து காணப்பட்டதாகவும், அன்றைய தினத்தில் ஒரு கிலோ ஏலக்காயின் குறைந்தபட்ச விலை 653 ரூபாய் மற்றும் அதிகபட்ச விலை 912 ரூபாய் எனவும் நறுமணப் பொருட்களின் வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில் சிறிய ரக ஏலக்காய்களுக்கு அதிக தேவை காணப்படுவதால், அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் ரூ. 50,000-70,000 வரை ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறிய ரக ஏலக்காய்களை விளைவிக்கும் விவசாயிகள் அதை அறுவடை செய்ய வாங்கும் கருவிகளுக்கு 50% மானியத்தையும் வழங்குகிறது. இதனால் ஏலக்காய் விவசாயிகள் சிறிய ரக ஏலக்காயை அதிகம் பயிரிட்டு வருகிறார்கள். இனி வரும் வாரங்களிலும் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால், விலையும் குறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொத்துமல்லி (CORIANDER)

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

உற்பத்தி அதிகரித்துக் காணப்படுவதால் கொத்துமல்லி விலையானது கடந்த வாரத்தில் அதிகரித்துக் காணப்பட்டது. கொத்துமல்லி அதிகம் விளையும் ராஜஸ்தானில் கடந்த ஆண்டைவிட நடப்பு பருவத்தில் 23% உற்பத்தி அதிகம். கடந்த ஆண்டில் 12,400 டன் உற்பத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசம் மாநிலத்திலும் சென்ற ஆண்டைவிட நடப்பு பருவத்தில் உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த செப்டம்பர் 9-ம் தேதி நிலவரப்படி என்சிடிஇஎக்ஸ் கிடங்கில் 42,369 டன் கொத்துமல்லி இருப்பு காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய வாரத்தில் 41,963 டன்னாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செ.கார்த்திகேயன்