Published:Updated:

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

சென்னா (CHANA)

பண்டிகைகளையொட்டி சென்னாவின் தேவை அதிகரித்து இருப்பதால், அக்டோபர் மாத ஃப்யூச்சர்ஸ் 0.46% உயர்ந்து, கடந்த புதன் அன்று ஒரு குவிண்டால் ரூ.4,804 என்ற அளவில் வர்த்தகம் ஆனது.

கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நிலவரப்படி, என்சிடிஇஎக்ஸ் சந்தை கிடங்குகளில் 45,874 டன் சென்னா இருப்பு உள்ளது. இந்தியா தற்போது இரண்டு பகுதிகளாக, 888 டன் மற்றும் 984 டன் சென்னாவை இறக்குமதி செய்துள்ளது. விரைவில் அவை சந்தைக்கு வரும் என்பதால், சென்னா விலையில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. அதுமட்டும் இல்லாமல், எம்எம்டிசி எக்ஸ்சேஞ்சில் 1000 டன் சென்னா இறக்குமதிக்கு டெண்டர் தந்துள்ளது ஆஸ்திரேலியா. மேலும், வரும் மாதங்களில் நவராத்திரி, கார்த்திகை தீபம், தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகைகள் வருவதால், சென்னா வுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் சென்னா விலை உயர்ந்து வர்த்தகமாக அதிக வாய்ப்புள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

மஞ்சள் (TURMERIC)

மஞ்சள் அதிகம் விளையும் பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருந்ததால், மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. ஆனாலும் வெளிநாடுகளில் மஞ்சளுக்கான தேவை அதிகரித்து வருவது, வர்த்தகர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மஞ்சளுக்கான அக்டோபர் மாத ஃப்யூச்சர்ஸ் 0.5% உயர்ந்து, கடந்த புதனன்று ஒரு குவிண்டால், ரூ.7,512 என்ற நிலையில் வர்த்தக மானது. ஈரோடு சந்தையில் மஞ்சள் ரூ.7,400 - 7,600 என்ற நிலையில் வர்த்தகமானது. என்சிடிஇஎக்ஸின் சந்தை கிடங்குகளில் மஞ்சள் இருப்பு செப்டம்பர் 29-ம் தேதி நிலவரப்படி, 11,995 டன்னாக உள்ளது.

தெலங்கானாவில் மஞ்சள் அதிகம் விளையும் பகுதியில் விளைச்சல் ஏரியா கடந்த வருடத்தைக் காட்டிலும் குறைந்து உள்ளது. கடந்த வருடம் 44,623 ஹெக்டேராக இருந்த மஞ்சள் விளைச்சல் ஏரியா கடந்த 9-ம் தேதி நிலவரப்படி, 40,830 ஹெக்டேராக குறைந்துள்ளது.

அதிகம் மஞ்சள் விளையும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் மொத்த மழைப் பொழிவு குறைந்துள்ளதால், மஞ்சள் விளைச்சல் குறையும் என்கிற கவலை உருவாகியுள்ளது. ஆந்திராவில் மஞ்சள் விளைச்சல் ஏரியா 10,300 ஹெக்டேரிலிருந்து 11,700 ஹெக்டேராக அதிகரித் திருந்தாலும், தேவையைவிட மஞ்சள் உற்பத்தி குறைந்தே காணப்படும் என்பதால், மஞ்சள் விலை உயர்ந்து வர்த்தகமாகும் வாய்ப்புகளே அதிகம் என்று சொல்லப்படுகிறது.

ஏலக்காய் (CARDAMOM)

முக்கியச் சந்தைகளில் ஏலக்காய்க்கான தேவை அதிகரித்து காணப்பட்டதாலும், தினசரி வரத்து அதிகரித்ததாலும் ஏலக்காய் விலை வரம்புக்குள் வர்த்தகமானது. கடந்த புதன்கிழமை அன்று ஏலத்தில் ஒரு கிலோ ஏலக்காய் குறைந்தபட்சம் ரூ.652-க்கும் அதிகபட்சமாக  ரூ.876-க்கும் வர்த்தகமானது.    

நறுமணப் பொருட்கள் வாரியத்தின் சமீபத்திய அறிக்கைப் படி, சிறிய ரக ஏலக்காய் வர்த்தகம் நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் 128% அதிகரித்து, 975 டன்னாக உள்ளது. அதேபோல், பெரிய ரக ஏலக்காயின் ஏற்றுமதி கடந்த வருடத்தைக் காட்டிலும் 24% அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஏலக்காய் உற்பத்தி இந்தப் பருவத்தில் 12,000 டன்னிலிருந்து 13,000 டன் வரையிலும் இருக்கும் என்று வர்த்தக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஏலக்காய் அதிகம் விளையும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மழைப் பொழிவு கணிசமாக இருப்பதால், உற்பத்தி அதிகரித்துக் காணப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் வரும் வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமாகும் வாய்ப்புள்ளது. அதேசமயம் தேவை அதிகரித்துக் காணப்பட்டால், ஏலக்காய் விலை சிறிது உயரலாம்.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

கொத்துமல்லி (CORIANDER)

கொத்துமல்லிக்கான தேவை குறைந்ததால், முக்கியச் சந்தைகளில் விலை குறைந்து வர்த்தகமானது. மேலும், சந்தைகளில் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால், விலை உயர்வும் கட்டுக்குள் இருந்தது.

சந்தை நிலவரப்படி,  கொத்துமல்லி அதிகம் விளையும் ராஜஸ்தானில் கடந்த ஆண்டில் விளைச்சல் 1,24,000 டன்னாக இருந்தது. அதேபோல், குஜராத்தில் கடந்த வருடத்தில் 40,000 டன்னாக இருந்த கொத்துமல்லி விளைச்சல் நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்திலும் கடந்த ஆண்டைவிட 2014-15 ஆண்டில் கொத்துமல்லி விளைச்சல் 10% அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நறுமணப் பொருட்கள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதங்களில் கொத்துமல்லி ஏற்றுமதி 16,028 டன்னாக இருந்தது நடப்பு ஆண்டில் 2% அதிகரித்து 16,400 டன்னாக உள்ளது.  

கொத்துமல்லி அதிகம் விளையும் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து காணப்பட்டாலும், பிற கொத்துமல்லி விளைச்சல் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டது. இதனால் வரத்து குறையும் என்ற கவலை இல்லை என்றாலும்,  கொத்துமல்லிக்கான தேவை அதிகரித்தால் மட்டுமே வரும் வாரத்தில் கொத்துமல்லி விலை உயர்ந்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

ஜெ.சரவணன்