Published:Updated:

''தொழிலில் வெற்றி பெற இப்படியொரு பார்வை அவசியம்!" - 'நேச்சுரல்ஸ்' சி.கே.குமாரவேல்

''தொழிலில் வெற்றி பெற இப்படியொரு பார்வை அவசியம்!" - 'நேச்சுரல்ஸ்' சி.கே.குமாரவேல்
''தொழிலில் வெற்றி பெற இப்படியொரு பார்வை அவசியம்!" - 'நேச்சுரல்ஸ்' சி.கே.குமாரவேல்

''தொழிலில் வெற்றி பெற இப்படியொரு பார்வை அவசியம்!" - 'நேச்சுரல்ஸ்' சி.கே.குமாரவேல்

தொழில் செய்யும் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட, நாணயம் விகடன் சார்பில் `பிசினஸ் A to Z' கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி.கே.குமாரவேல் சிறப்புரையாற்றினார்.

``ஔவையார் தற்போது இருந்தால் அறம் செய விரும்பு என்பதற்குப் பதிலாக `பொருள் செய விரும்பு' என்றே சொல்லியிருப்பார். அப்படியான சூழலில் நாம் இருக்கிறோம். எவ்வளவுக்கு எவ்வளவு சொந்தக்கால்களால் நாம் நிற்கிறோமோ, வேலைவாய்ப்பை உருவாக்குகிறோமோ, போட்டிமுனைப்புடன் செயலாற்றுகிறோமோ, அப்போதுதான் இந்தியா உலக அளவில் முன்னேற்றம் காணும்.

என் தந்தைதான் நான் முதன்முதலில் பார்த்த தொழில்முனைவோர். அவர் மருந்துப் பொருள்களை வாங்கி சின்னச் சின்ன பாக்கெட்டுகளாகச் செய்து மருந்துக் கடைகளில் விற்பனை செய்துவந்தார். அதேபோல அவர் நிறைய தொழில்களைச் செய்திருக்கிறார். அவர் ஒருமுறை சிங்கப்பூருக்குச் செல்லும்போது ஷாம்பு பாட்டில் எடுத்துப்போனார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஷாம்பு பாட்டில் உடைந்து அவரது சட்டையெல்லாம் பாழாகிவிட்டது. அந்தச் சிக்கலைக்கூட ஒரு தொழில்வாய்ப்பாக  எடுத்துக்கொண்டு, `இந்த ஷாம்பு பாட்டில் பலருக்கும் பிரச்னையாக இருக்கிறது. இதை சாஷேயில் அடைத்து விற்பனைக்குக் கொண்டுவந்தால் இப்படியான சிக்கல்கள் இருக்காது' என யோசித்தார். அப்படிக் கொண்டுவந்ததுதான் வெல்வெட் ஷாம்பு சாஷே. தொழில்முனைவுத்திறன் என்பது எம்.பி.ஏ படிப்பிலோ, பண மதிப்பிலோ கிடையாது. மாற்றி யோசிப்பதே தொழில்முனைவுத்திறன். அனைவரும் பிரச்னையாகப் பார்த்ததை எங்களது தந்தை தொழில்வாய்ப்பாகப் பார்த்தார். அதனால்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது. எங்களது தந்தையின் பெயரான சின்னிகிருஷ்ணன் என்பதைச் சுருக்கியே `சிக்' ஷாம்பு என என் அண்ணன் கொண்டுவந்தார்.

ரிச்சர்டு பிராட்சன், ஒருமுறை நியூயார்க்கிலிருந்து ஹவாய் தீவுக்குச் சுற்றுலா சென்றார். அங்கிருந்து நியூயார்க் நகருக்கு வருவதற்கான விமானம் எதிர்பாராதவிதமாக ரத்தானது. அவரோடு வந்த 149 சுற்றுலாப் பயணிகளும் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தபோது, இவர் மட்டும் வேறுவிதமாக யோசித்தார். தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, விமானத்தை வரவழைத்து அனைவரையும் கொண்டுசேர்த்தார். அதற்காக அவருக்கு இலவசப் பயண வாய்ப்பு கிடைத்தது. 149 பேரின் பிரச்னையைத் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். மற்றவர்களின் பிரச்னையைத் தொழில்வாய்ப்பாகப் பார்ப்பதே தொழில்முனைவோருக்கான மாற்றியோசிக்கும் சிந்தனை. அப்படி உதித்த சிந்தனையால் அவர் தொடங்கியதுதான் `வெர்ஜின் ஏர்லைன்ஸ்'. 

மூன்றாவதாக, எனக்கு மிகவும் பிடித்த தொழில்முனைவோர் திருபாய் அம்பானி. அவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பள்ளிப்  படிப்பை நிறுத்திக்கொண்டவர். அவர் ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும்போது அங்கே ஒருவருடைய கார் வந்தது. அனைவரும் அவரது காருக்கு பெட்ரோல் போட அங்கு உள்ள ஊழியர்கள் அனைவரும் போட்டிபோட்டுக்கொண்டு சூழ்ந்தனர்.

திருபாய் அம்பானி `ஏன் இப்படி?' எனக் கேட்கிறார்.

`அவர் பெரிய பணக்காரர், பெட்ரோல் ஆலையின் அதிபர். அவருடைய காருக்கு பெட்ரோல் போட்டால், நிறைய டிப்ஸ் தருவார். நீயும் போ!' என்று சொல்கிறார்கள்.

திருபாய் அம்பானியோ, `நோ, நோ. நான் ஒருநாள் ஆயில் நிறுவனத்தின் அதிபர் ஆவேன். இவருக்குப் போலியாக மரியாதையோ சல்யூட்டோ அடிக்க மாட்டேன்' என்றார். அனைவரும் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள். அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. பகல் முழுவதும் பெட்ரோல் நிரப்பும் வேலையைப் பார்த்துவிட்டு, இரவில் ஆடிட்டர் அலுவலகத்தில் கணக்குப் பார்க்கும் வேலைசெய்தார். அவருக்குச் சம்பளம் கொடுத்தபோது வாங்க மறுத்தார். `ஏன், அதிகம் வேண்டுமா?' எனக் கேட்டபோது, `இல்லையில்லை, நான் அக்கவுன்ட் கற்றுக்கொள்ளத்தான் இங்கு வந்தேன். சம்பளம் வேண்டாம்' என்றார். அவர் கனவுகண்டதுபோலவே பெரிய எண்ணெய் நிறுவன அதிபர் ஆனார்.

இதைப்போல்தான் நம் ஊர் சலூன் கடைகளில் இருக்கும் பிரச்னையை யோசித்தோம். பியூட்டி பார்லர் என்பது மேல்தட்டு மக்களுக்கானதாக இருக்கும். இன்னொருபுறம், அனைத்து மக்களுக்குமான சலூன் கடைகளின் உள்கட்டமைப்பு அத்தனை சிறப்பாக இருப்பதில்லை. அப்போது நாங்கள் யோசித்ததுதான் அனைவருக்கும் ஏதுவான தரமான பியூட்டி பார்லர். எங்களது `நேச்சுரல்ஸ்' பியூட்டி பார்லரைத் தொடங்கியபோது எனக்கோ, எனது மனைவிக்கோ எந்த முன்அனுபவமும் கிடையாது. உண்மையான உழைப்பை உரிய காலத்தில் போடுவதற்கு முன், அதில் உள்ள பிரச்னைகளை தொழில்ரீதியிலான வாய்ப்பாக மாற்றிக்கொள்வது எப்படி என்பதை யோசிக்க வேண்டும். இதுதான் எங்களது வெற்றி ரகசியம். தொழில் தெரியாதவர்களால்தான் அந்தத் தொழிலில் மிகச் சிறப்பாகப் பணியாற்ற முடியும்.

அமெரிக்கர்கள், எந்தத் தொழிலையும் சிஸ்டமேட்டிக்காக மாற்றிவிடுவார்கள். அதனாலேயே அவர்களால் உலகம் முழுவதும் தங்களது தொழிலை எளிதில் விரிவுப்படுத்த முடிகிறது. அதனால்தான் அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ், நம் நாட்டில் வந்து காபி வியாபாரம் செய்ய முடிகிறது. தொழிலை சிஸ்டமேட்டிக்காகப் பண்ணுவதே தொடர்ச்சியான வெற்றிக்கு உதவும். ரகசியம் காப்பதுபோல் செய்தால் நம்முடைய வெற்றியை விரிவுப்படுத்த முடியாது. உங்கள் வீடுகளில் இருக்கும் பெண்கள் அனைவரையும் தொழில்முனைவோராகவோ, பணிக்குச் செல்பவர்களாகவோ மாற்றி, அவர்களையும் வருமானம் ஈட்டுபவர்களாக மாற்றுங்கள். இந்தியாவில் உள்ள பெண்கள் அனைவரும் சுயச்சார்புடையவராக மாறும்போதுதான், இந்தியா உண்மையான சுதந்திர நாடாக மாறும்" என்று குறிப்பிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு