Published:Updated:

உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!
உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

சோ.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி

டப்பு நிதியாண்டின் ஆரம்பத்திலேயே பங்குச் சந்தை உச்சத்துக்குச் சென்றிருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் அதிகப் புள்ளிகளை எட்டியிருக்கிறது. நிஃப்டி முதன்முறையாக 9200 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமானது. கடந்த வாரம் அதிகபட்சமாக 9273.90 புள்ளிகளைத் தொட்டது. சென்செக்ஸ் மீண்டும் 30000 புள்ளிகளை நெருங்கியது.

உச்சத்தைத் தொட்ட சந்தை, இனி சந்தை தொடர்ந்து மேல்நோக்கி நகருமா அல்லது இறக்கத்தைச் சந்திக்குமா என்பது குறித்து சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பமே நிலவுகிறது.

ஏனெனில் ஒவ்வொரு முறை சந்தை உச்சத்தை எட்டும்போதும், மீண்டும் இறக்கத்தைச் சந்திக்குமோ என்று அஞ்சுகின்றனர். இந்நிலையில் அடுத்த ஓராண்டு காலத்தில் சந்தையின் போக்கு எப்படியிருக்கும் என்று பங்குச் சந்தை ஆலோசகர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

“பங்குச் சந்தை உச்சத்தில் வர்த்தகமாகி வரும் இந்த சமயத்தில், முதலீட்டாளர்கள் சர்வதேச நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். அமெரிக்கா, வட்டி விகிதத்தை எவ்வளவுக்கு உயர்த்தப்போகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. எங்கு போர் நடந்தாலும், முதலில் விலை உயரக்கூடியது கச்சா எண்ணெய் தான். இதன் விலை உயர்ந்தால், இந்தியப் பங்குச் சந்தைகளில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கும்.

இந்தியப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, கறுப்புப் பணத்துக்கெதிரான நடவடிக்கை, உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் முடிவு, ஜிஎஸ்டி மற்றும் உலக அளவிலான பொருளாதார நிலைமைகள் சாதகமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் நாட்டை நோக்கி அதிகமான வெளிநாட்டு முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது உள்நாட்டு முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக முதலீடுகளை மேற்கொள்வது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுசெய்வது அதிகரித்திருக்கிறது.

  நிஃப்டி 10000 புள்ளிகள்


தற்போதைய நிலையில், பங்குச் சந்தை ஏன் நன்றாக செயல்படுகிறது என்றால், பெரும்பாலான முதலீடுகள் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் மூலமாகத்தான் நடைபெற்று வருகின்றன. பொதுவாக, ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் செய்யப்படும் முதலீடு, உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதில்லை. அவர்கள் செய்த முதலீடு அப்படியே இருக்கும். மேலும், தொடர்ச்சியாகவும் முதலீடுசெய்து வருவார்கள். இ்ப்படி உள்நாட்டு முதலீட்டாளர் களின் முதலீடு தொடர்ச்சியாகக் கிடைக்கும்போது பங்குச் சந்தை `பாசிட்டிவ்’வான நிலையிலேயே இருக்கும்.

எதிர்காலத்தில் ஒட்டுமொத்தமாக சந்தை எப்படியிருக்கும் என்று துல்லியமாகக் கணிக்க முடியாது என்றாலும்,  தற்போதைய நிலைமையை வைத்து பார்க்கும்போது, அரசியல், பொருளாதாரம், சர்வதேச காரணிகள் போன்றவற்றினால் சந்தை நன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கெனவே புதிய உச்சத்தைத் தொட்ட சந்தை இன்னும் உயர வாய்ப்பிருக்கிறது.

நிஃப்டியைப் பொறுத்தவரை, நடப்பு நிதி யாண்டுக்குள் 10025 புள்ளிகள் வரை உயர வாய்ப்புள்ளது. சென்செக்ஸ், 32800 முதல் 33140 புள்ளிகள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில், நிஃப்டி சப்போர்ட் 7890 புள்ளிகளில் இருந்து ரெசிஸ்டன்ஸ் 10025 புள்ளிகள் வரை வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில், சிறிய ஏற்ற இறக்கம் என்பது இருக்கும். நிஃப்டி சப்போர்ட் 7890 புள்ளிகளை உடைத்தெறியும் பட்சத்தில், அடுத்த சப்போர்ட் நிலையான 6825 புள்ளிகள் வரை குறையலாம்.

உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!



  வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள்

முதலீட்டுக்கேற்ற துறைகளைப் பொறுத்தவரை, பொழுதுபோக்கு சார்ந்த துறை நன்றாக பிரகாசிக்கும். சில்லறை விற்பனைத் துறை மற்றும் மெட்டல் துறை சிறப்பாகச் செயல்படும். பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தக்கூடிய நுகர்வோர் சாதனங்கள், மொபைல் மற்றும் டேட்டா சார்ந்த துறைகள் பெரியளவில் வளர்ச்சியடையும்.

இப்போது மழையின்மை காரணமாக விவசாயம் சார்ந்த சில துறைகளின் வளர்ச்சி கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கும். இப்போது உற்பத்தித் துறை நன்றாக செயல்பட்டு வருகிறது. எனினும், இந்த துறையின் வளர்ச்சியைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விமானப் போக்குவரத்துத் துறை மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது.

ஆட்டோமொபைல் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள் சார்ந்த துறையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பதில்  சந்தேகமில்லை. இந்தத் துறை நிச்சயம் சிறப்பாக வளரும் என்று எதிர்பார்க்கலாம்.

பார்மாத் துறையும் நீண்ட கால நோக்கில் சிறப்பாகவே செயல்படும். இது தவிர, மின் உற்பத்தித் துறை நன்றாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது. இதற்குமுன் மின்சாரத் தட்டுப்பாட்டால் சிக்கித் தவித்தோம். இப்போது உபரி மின்சாரத்தை ஆண்டுக்கு 5,000 மெகாவாட் அளவுக்கு ஏற்றுமதி செய்துவருகிறோம். இதனால் மின் உற்பத்தித் துறை வளர்ச்சியடைய வாய்ப்பிருக்கிறது.

பொழுதுபோக்குத் துறையில் பிவிஆர்,  ஐநாக்ஸ் போன்ற நிறுவனப் பங்குகளிலும், விமானப் போக்குவரத்து துறையில் ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ போன்ற நிறுவனப் பங்குகளிலும் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

சில்லறை விற்பனைத் துறைகளில் ஃப்யூச்சர் ரீடெய்ல் மற்றும் வெஸ்ட் லைஃப் போன்ற நிறுவனங்களைத் தேர்வு செய்யலாம். மற்ற துறைகளில் அப்போலோ டயர்ஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி வங்கி, யெஸ் வங்கி போன்ற குறிப்பிட்ட நிறுவனப் பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்” என்றார் அவர்.

சந்தை  தற்போதுள்ள நிலையில், முதலீட்டுக்கேற்ற  பங்குகள் குறித்து ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவர் ஏ.கே.பிரபாகரிடம் பேசினோம்.

“பங்குச் சந்தைக்கு இந்த நிதியாண்டு நன்றாகவே ஆரம்பித்துள்ளது. சந்தையைப் பொறுத்தவரை, சற்று ஏற்ற இறக்கம் இருக்கவே செய்யும். எனினும்  பெரிய இறக்கம் இருக்க வாய்ப்பில்லை. நிஃப்டியைப் பொறுத்தவரை, நடப்பு நிதி ஆண்டுக்குள் 12000 புள்ளிகளைத் தொடும். சென்செக்ஸ் 38000 புள்ளிகள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கெல்லாம்  முறைப்படுத்தப்படாத துறைகளில் மார்க்கெட் பங்களிப்பு அதிகமாக இருக்கிறதோ, அந்தத் துறைகள் எல்லாம் இனி நன்றாக செயல்படத் துவங்கும். ஏனெனில் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் முறைப்படுத்தப்படாத துறைகளிலிருந்து முறைப்படுத்தப்பட்ட துறைகளுக்கு மாறுவது  அதிகமாக  இருக்கும். இந்த மாற்றமானது முதலீட்டாளர்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!



 கவனிக்க வேண்டிய விஷயங்கள்

சந்தை மிக உச்சத்தில் இருப்பதால், பயப்படத் தேவையில்லை. நல்ல பங்குகளில் முதலீட்டை மேற்கொண்டால், நிச்சயம் வருமானம் ஈட்டலாம். முதலீடு செய்யும்முன், அந்த நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் லாபம் அடைந்திருக்கிறதா என்று பார்ப்பது அவசியம்.

மேலும், ஒரு பங்கின் சந்தை மதிப்பு (Market Capitalization) அதிகரித்திருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். நிறுவனத்தின் ஆர்ஓஇ (ROE), 15 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறதா, மார்ஜின் எந்த நிலையில் இருக்கிறது, தொடர்ந்து அதிகமாக டிவிடெண்ட் வழங்குகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒட்டுமொத்தத்தில், எதற்காக ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்து, அதன்பின்பே பங்குகளை வாங்க வேண்டும். ‘அவர்  சொன்னார்’, `இவர் சொன்னார்’ என்பதற்காக எந்தப் பங்கையும் வாங்கக் கூடாது. மாதந்தோறும் எஸ்ஐபி மூலம்,  நிதானமாக நல்ல பங்குகளில் தொடர்ந்து முதலீடு மேற்கொண்டால், அது நிச்சயம் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்கும்.

  முதலீட்டுக்கேற்றப் பங்குகள்


நடப்பு நிதியாண்டில் ஐ.டி துறை சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக ஐ.டி துறையில், லார்ஜ் கேப்-ஐவிட, மிட் கேப் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஐ.டி மிட் கேப்-ல் மைண்ட் ட்ரீ (Mindtree), பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் (Persistent Systems), சயின்ட் (Cyient), டாடா எல்க்ஸ்சி (Tata Elxsi) போன்ற பங்குகள் சிறப்பாகச் செயல்படும்.

இவைத் தவிர, ஜீ மீடியா (Zee Media), ஜீ லிமிடெட் (Zee Ltd), இந்தோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ் (Indo Count Industries), ட்ரைடென்ட் (Trident), அர்விந்த் லிமிடெட் (Arvind Ltd), செஞ்சுரி ப்ளை (Century ply), பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் (Pidilite Industries), நீல்கமல் (Nilkamal), சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் (Supreme Industries), ஃபினோலெக்ஸ் பைப் (Finolex pipe), சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபின் கோ லிமிடெட் (Cholamandalam Investment and Fin Co Ltd), கோரமண்டல் இன்டர்நேஷனல் (Coromandel International) மற்றும் சில்லறை விற்பனைத் துறையில் ஷாப்பர் ஸ்டாப் (shopper stop) போன்ற நிறுவனத்தின் பங்குகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது. இந்த நிறுவனப் பங்குகளில் தாராளமாக முதலீடுசெய்து, வருமானம் ஈட்டலாம்.

என்னதான் சந்தை இறங்கினாலும், மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டேயிருக்கும். 2020-ம் ஆண்டுக்குள் நிஃப்டி 16800 புள்ளிகளுக்கு உயர வாய்ப்பிருக்கிறது” என்றார் அவர். 

இந்தியாவில் கடனுக்கான வட்டி, வருங்காலங்களில் தொடர்ந்து குறையும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. வரும் ஜூலை முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ் டி) நடைமுறைக்கு வர உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த வட மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் பாஜக, மாநிலங்களவையிலும் பலம் பெற்றிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் நீண்ட காலத்தில் சந்தை உயரும் என்று நிச்சயமாகத் தெரிகிறது. எனவே, இப்போதே நல்ல பங்குகளில் முதலீடு செய்யலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு