Published:Updated:

பேடிஎம் - வாரன் பஃபெட் கைகோப்பு... ஸ்டார்ட் அப்களுக்கு நல்வாய்ப்பு!

`பேடிஎம்-மில் வாரன் பஃபெட்டின் பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்திருப்பது, இந்தியத் தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை நேர்மறையான செய்தி.’’

பேடிஎம் - வாரன் பஃபெட் கைகோப்பு... ஸ்டார்ட் அப்களுக்கு நல்வாய்ப்பு!
பேடிஎம் - வாரன் பஃபெட் கைகோப்பு... ஸ்டார்ட் அப்களுக்கு நல்வாய்ப்பு!

டிஜிட்டல் பேமென்ட் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனமான பேடிஎம், 2000-ம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைத் தலைமையிடமாகக்கொண்டு விஜய்சேகர் சர்மா என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைமை நிறுவனம் `ஒன்97'. கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது, மொபைல் வழி பணப்பரிமாற்றத்தில் பேடிஎம் நிறுவனம் முக்கியப் பங்கு வகித்தது. இதன் காரணமாக பேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சி, மிகப்பெரியதாக உருவெடுத்தது. பயனீட்டாளர்களின் எண்ணிக்கையும் வெகுவேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சி, உலகின் பெரும்பணக்காரர்களின் ஒருவரான வாரன் பஃபெட்டின் பார்வையில் பட்டது. தற்போது அவரது நிறுவனம், சுமார் 2,500 கோடி ரூபாய்க்கு பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான `ஒன்97' நிறுவனத்தின் பங்குகளை வாங்க முன்வந்துள்ளதாகத் தெரியவருகிறது. 

Image Courtesy: twitter.com/vijayshekhar

இதுகுறித்த பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்றுவந்த சூழலில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பேடிஎம் நிறுவனத்தில் ஏற்கெனவே சீன நிறுவனங்களான அலிபாபா மற்றும் எஸ்.ஏ.ஐ.எஃப் போன்றவை முதலீடு செய்துள்ளன. ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் நிறுவனமும் பேடிஎம்-மில் முதலீடு செய்துள்ளது. தற்போது முதன்முறையாக வாரன் பஃபெட்டின் பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனம், பேடிஎம்-மில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் வாரன் பஃபெட்டின் நிறுவனம் முதலீடுசெய்வது இதுவே முதன்முறை. இதற்கு முன் 2011-ம் ஆண்டில் வாரன் பஃபெட்டின் பெர்க்‌ஷயர் நிறுவனம், பஜாஜ் அலை­யன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது. அந்த முதலீட்டு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர் சர்மா, அந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மார்க் ஸ்வார்ட்ஸை கனடாவில் சந்தித்தார். அப்போது விஜய்சேகர் சர்மாவை வாரன் பஃபெட்டின் பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்த விரும்பினார். அதை ஏற்றுக்கொண்ட சர்மா, பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் முதலீட்டு மேலாளர் டாட் கோம்ப் உடனான சந்திப்புக்காக ஒமஹா நகரில் உள்ள அந்த நிறுவன அலுவலகத்துக்கு ஸ்வார்ட்ஸ் உடன் சென்றார். அந்தச் சந்திப்பு, காதலர் தினத்தன்று நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்த அந்தச் சந்திப்பு, மூன்றரை மணி நேரம் தொடந்தது. அதில், பேடிஎம் நிறுவனத்தின் தொடக்கம், வளர்ச்சி, செயல்பாடுகள் பற்றி விரிவாக அலசப்பட்டிருக்கின்றன. அந்தக் கூட்டத்தைத் தொடந்து, இரண்டு தொலைபேசி உரையாடல்களுக்குப் பிறகு, பேடிஎம்-மில் முதலீடு செய்வது குறித்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. 

``வாரன் பஃபெட்டின் நிறுவனம், உலகளாவிய அளவில் நிதிச்சேவை நிறுவனமாகச் செயல்பட்டுவருகிறது. எனவே, பேடிஎம் நிறுவனமும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பாக இதைப் பார்க்க முடிகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவிலேயே எங்களுக்கான தேவை அதிகம் உள்ளது. எனவே, இதை வெற்றிகரமாகச் செயல்படுத்திய பிறகே உலகளவில் இந்தத் துறையில் களமிறங்குவோம். வருமானம் ஈட்டுவதில் பேடிஎம் நிறுவனத்தின் மீதான அனைத்து சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது" என்று இந்த ஒப்பந்தம் குறித்து விஜய்சேகர் சர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்துப் பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, ``பேடிஎம்-மில் வாரன் பஃபெட்டின் பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்திருப்பது, இந்தியத் தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை நேர்மறையான செய்தி. இதன்மூலம் பேடிஎம் நிறுவனம் மட்டுமல்லாது, இந்திய நிறுவனங்கள் அனைத்தும் உலக நாடுகளின் கவனத்தையும் பெறும். தங்களது பணத்தை எங்கே முதலீடு செய்வது என யோசித்துக்கொண்டிருக்கும் பெருநிறுவனங்களுக்கு, இந்தியா நம்பிக்கைக்குரிய நாடாகத் தெரியும். 

இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம், பேடிஎம் நிறுவனத்தை ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாக மட்டுமே பார்க்க முடியாது. நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்பட்டு நல்லதொரு வருமானத்தை, வளர்ச்சியைத் தொடர்ச்சியாகக் காட்டிய பிறகே சீனாவின் ஜாம்பவான் அலிபாபா, ஜப்பானின் சாஃப்ட் பேங்க் உள்ளிட்டவை இதில் முதலீடு செய்ய முன்வந்தன. அதன் பிறகுதான் தற்போது வாரன் பஃபெட்டின் நிறுவனமும் பேடிஎம்-மில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. அவர்கள் வெறுமனே புதிதாகத் தொடங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்குபவர்கள், உடனடியாகத் தங்களுக்கு முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள் என எதிர்பார்க்கக் கூடாது. தாங்கள் தொடங்கிய நிறுவனத்தை ஓரிரு ஆண்டுகளாவது திறம்பட நடத்த வேண்டும். அந்த நிறுவனம் எத்தனை வாடிக்கையாளர்களை, பயனீட்டாளர்களைப் பெற்றுள்ளது, எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளது, அதன் எதிர்காலத் தேவை எந்த அளவுக்கு நம்பிக்கைக்குரியதாக இருக்கும் என்பதையெல்லாம் பொறுத்துத்தான் முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள். எனவே, ஸ்டார்ட் அப் தொடங்குபவர்கள் இதையும் மனதில்கொண்டே திட்டமிட வேண்டும்" என்றார்.