Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup
பிரீமியம் ஸ்டோரி
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup

புதிய தொடர் 1 - சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்!

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup

புதிய தொடர் 1 - சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்!

Published:Updated:
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup
பிரீமியம் ஸ்டோரி
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup

வக்கீல்சர்ச் (Vakilsearch)

ஸ்டார்ட்அப் - கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் புழங்கும் வார்த்தை; கல்லூரியிலிருந்து வெளியேறும் பல இளைஞர் களுக்கு கனவு வார்த்தை. தேசிய சட்டக் கல்லூரியில் சட்டம் படித்துமுடித்த ஹ்ருஷிகேஷுக்கும் அந்த மாதிரி ஒரு கனவு இருந்தது. வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருந்த வழக்கறிஞர் பணியை விட்டுவிட்டு, வக்கீல்சர்ச் (Vakilsearch) என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனராக மாறிய கதையை சுவாரஸ்யமாக நம்மிடம் எடுத்துச் சொன்னார் ஹ்ருஷிகேஷ்.    

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup

ஸ்டார்ட்அப்

“தேசிய சட்டப்பள்ளியில் படித்துவிட்டு, வழக்கறிஞராகப் பல இடங்களில் பணி புரிந்தேன். பணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால்,  வழக்கறிஞராக மட்டுமே கடைசி வரை இருக்க வேண்டுமா என்பதே அந்தக் கேள்வி. நன்கு யோசித்துப் பார்த்த பின், பிசினஸ்மேனாக மாற முடிவெடுத்தேன்.

இன்ஸ்பிரேஷன்

நம் நாட்டில் மிக முக்கியமான பிரச்னை, சட்டஉதவிகள் அனைவருக்கும் கிடைக்காமல்போவது. சட்டரீதியாக ஏதேனும் ஒரு பிரச்னை என்றால், எந்த வக்கீலைத் தொடர்புகொள்ள வேண்டும், யார் சிறந்த வக்கீல், எவ்வளவு செலவாகும் எனப் பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். அதுமாதிரி தேடுகிறவர்களுக்கு உதவுவதற் காக உருவானதுதான் வக்கீல்சர்ச்.

அடித்தளம்

நிறுவனத்தை உருவாக்குவதற்கான பணிகளை வீட்டிலிருந்தே துவங்கிவிட்டோம். ஒரு லேப்டாப் மற்றும் ஒரு இன்டர்நெட் இணைப்பு; இந்த இரண்டும்தான் எங்களின் முதல் முதலீடு. மின்னஞ்சல் மட்டும்தான் நாங்கள் பயன்படுத்திய ஒரே வசதி. அதன் மூலம்தான் வாடிக்கையாளர்களின் வழக்கு விவரங்களைப் பெறுவோம். இப்படி எங்கள் நிறுவனத்தைப் பற்றி பிற வழக்கறிஞர் களிடம் கூறி, அவர்களை எங்களோடு இணைத்தோம். நானும் ஒரு வழக்கறிஞர் என்பதால், வழக்கறிஞர்களைத் தேடுவது மிக எளிதான ஒன்றாகவே இருந்தது.

இப்படி நாடு முழுவதும் மொத்தம்     5,000-க்கும் மேலான வழக்கறிஞர்களை எங்கள் நெட்வொர்க்கில் இணைத்தோம். வாடிக்கையாளர்களைக் கையாள்வதற்காக ஊழியர்களைப் பணிக்கு எடுத்தோம். மின்னஞ்சலில் மட்டுமே இயங்கிவந்த அலுவலகத்தை, புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஒருங்கிணைத்து, முழுமையான நிறுவனமாக மாற்றினோம்.

சவால்

நிறுவனத்தைத் தொடங்கியபோது, எங்கள்முன் இரண்டு சவால்கள் இருந்தன. முதலாவது, இணைய இணைப்பு. எங்கள் சேவை அனைவருக்கும் சென்றடைய வேண்டுமெனில், இணைய இணைப்பும், இணைய வேகமும் மிக முக்கியம். ஆனால், இணைய வேகம் இன்னும்கூடக் குறைவாகவே உள்ளது.

இரண்டாவது, அரசுத் தரப்பில் ஏற்படும் தாமதங்கள். சட்டம் தொடர்பான விஷயங்களைக் கையாள்கிறோம் என்பதால், அரசு சார்பில் ஏற்படும் தாமதங்களைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இதை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆனால், வாடிக்கையாளர் களிடம் சொல்லிப் புரிய வைத்தோம்.     

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup

மூன்றாவது, ஆன்லைன் பணப் பரிமாற்றம். இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் எங்களைத் தொடர்பு கொண்டு சட்டரீதியான பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். எனவே, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் எங்களைத் தொடர்பு கொள்வார்கள். அவர்களுக்கு ஆன்லைனில் பணம் அனுப்புவதில் நிறைய தயக்கங்கள் இருந்தன. இந்த நிலைமையும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாறியது.

வெற்றி

முதலில் மூன்றுபேர் கொண்டு தொடங்கிய நிறுவனம், இன்று 180 பணியாளர்களைக் கொண்டு இயங்குகிறது. சென்னையில் தொடங்கிய எங்கள் நிறுவனம் டெல்லி, மும்பை, பெங்களூரு எனப் பல இடங்களுக்கு விரிவடைந்தது. இன்று நம் நாட்டில் நடக்கும் 5 சதவிகித டிரேட்மார்க் பதிவுகள் வக்கீல்சர்ச் மூலம்தான் நடக்கிறது. 1.5 லட்சம் வாடிக்கை யாளர்கள் எங்கள் சேவையைப் பயன்படுத்து கின்றனர். வக்கீல்களுக்காகத் தேடியலைந்த காலம்போய், இன்று வாட்ஸ்அப் மூலமாகவே சட்டஉதவியைப்பெற முடிகிறது. இதுதான் எங்கள் வெற்றி.

பலம்


புதிதாக ஒருவர் ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்குகிறார் என்றால், அவருக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் ஏற்படும். எப்படி நிறுவனத்தைப் பதிவு செய்வது, எப்படி தொழில்நுட்பங்களுக்குக் காப்புரிமை பெறுவது, எப்படி வரி கட்டுவது, புதிதாக ஒருவரைப் பங்குதாரராகச் சேர்க்கவேண்டு மென்றால் என்ன செய்வது என ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு வழக்கறிஞரைத் தேடவேண்டியிருக்கும். தேவையற்ற நேரவிரயம் ஏற்படும்.

ஆனால், எங்களிடம் வந்தால், முதலிலேயே முழு ஆலோசனையையும் கொடுத்துவிடுவோம். எப்போது வரி செலுத்த வேண்டும், எங்கே பதிவு செய்ய வேண்டும், ஏன் அறிவுசார் சொத்துரிமை என்பது முக்கியம் என்பது உள்பட அனைத்து விஷயங்களையும் நாங்கள் பார்த்துக்கொள்வோம். எனவே, சட்டம் தொடர்பான கவலைகளே அவருக்கு வேண்டாம். இதேபோல, தனிநபர்களுக்கும் சட்ட சிக்கல்களைத் தீர்த்து வைப்போம்.

சின்னச்சின்ன நிறுவனங்கள் மட்டுமல்ல, பெரிய நிறுவனங்கள்கூட எங்களிடம் வந்துள்ளன. இங்கிருக்கும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமையகங்கள் வெளிநாடுகளில்தான் இருக்கும். அவர்கள் இங்கேயிருக்கும் வழக்கறிஞர்களைத் தொடர்புகொள்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, எங்களைத் தொடர்புகொள்வார்கள்.

அதேபோல, புதிதாக ஏதேனும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் தனது கிளையைத் திறக்கவேண்டுமென்றாலும் எங்களைத் தொடர்புகொண்டு சட்ட ஆலோசனையைப் பெறுவார்கள். பிரத்யேகமாக வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ளாமல், நிறுவனங்கள் எங்களைத் தொடர்புகொள்ள காரணம், குறைவான செலவு என்பதால்தான். வழக்கறிஞர்கள், கணக்காளர்களைப் பிரத்யேகமாகப் பணியமர்த்தி வைத்திருந்தால், அவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம்கொடுக்க வேண்டும். ஆனால், எங்களிடம் தனியாக இந்தப் பணிக்கு இவ்வளவு என சர்வீஸுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும்.

மேலும், எல்லாமே இன்டர்நெட் மூலம்தான் என்பதால், செல்போன் மூலமாகவே வழக்கு விவரங்கள், நிறுவனம் சார்ந்த செய்திகள், முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளமுடியும். வழக்கமான முறையைவிடவும், வக்கீல்சர்ச் மூலமாகச் செயல்பட்டால் அவர்களுக்குக் குறைந்ததும் 30 சதவிகிதமாவது பணத்தில் மிச்சமாகும்.

இலக்கு


சட்டம் தொடர்பான விஷயங்கள் என்றாலே அதிகப் பணம் செலவாகும், சட்ட உதவிகள் கிடைப்பதெல்லாம் கடினம் என நினைக்கும் மக்களின் எண்ணத்தை மாற்ற வேண்டும். அவர்கள் அனைவரிடமும் எங்கள் நிறுவனத்தைக்கொண்டு செல்வதும், அவர்களுக்கு இன்னும் அதிகமாக உதவுவதும்தான் எங்கள் இலக்கு” என்றார்.

நவீனத் தொழில் நுட்பத்தின் உதவியுடன் எல்லோருக்கும் தேவையான சேவையை அளிப்பதன் மூலம் வெற்றி பெறமுடியும் என்பதை இளம்வயதிலேயே நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஹ்ருஷிகேஷ். அவருடைய இந்த முயற்சியின்மூலம் எல்லோருக்கும் சட்ட உதவி கிடைக்கும்!

- ஞா.சுதாகர்


படங்கள்: வேங்கடராஜ்

வக்கீல்சர்ச் டைம்லைன்!

*
2011- சென்னையில் நிறுவனம் துவங்கப்படுகிறது. வாரத்துக்கு ஐந்து வாடிக்கை யாளர்கள் புதிதாக வருகிறார்கள்.

*
2012 - மிகக் குறைவான ஊழியர்களுடன் இயங்குகிறது. வாரத்துக்கு 20-25 வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.

* 2013 - நிறுவனம் பெரிதாகிறது. கொஞ்சம் கொஞ்சமாக சேவைகளின் எண்ணிக்கை, வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. வாரத்துக்கு 150 வாடிக்கை யாளர்கள் வரை வருகிறார்கள்.

* 2014- தொழில்நுட்பத்தை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி, சேவையை இன்னும் எளிதாக்கு கிறார்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கிறது.

* 2015-ல் சென்னை மட்டுமன்றி, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற இடங்களில் கிளைகள் துவங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது.

* 2016 - 2017-ம் ஆண்டுகளில்  வருடத்துக்கு சுமார் 1.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். இந்தியாவில் நடக்கும் 5% டிரேட் மார்க் பதிவுகள் இந்த நிறுவனத்தின் மூலமாகவே நடக்கிறது.

இந்த நிறுவனத்தின் இன்னும் இரண்டு சேவைகள்!

ழக்கறிஞர் அலுவலகம் என்றாலே, அறை முழுவதும் காகிதங்களால் நிரம்பிக் கிடக்கும். வழக்கு விவரங்கள், தினசரி செய்திகள், வழக்குக் குறிப்புகள், தீர்ப்புகள் என ஒவ்வொன்றும் காகித ஆவணங்களாக இருக்கும். இவையனைத்தையும் ஒரே ஆப்பில் நிர்வகிப்பதற்காக லிப்ரா (LIBRA) என்ற ஆப் ஒன்றைத் தயார் செய்து, அதனை வழக்கறிஞர்களிடம் கொடுத்திருக்கிறது வக்கீல்சர்ச் நிறுவனம். தற்போது சுமார் 12,000 பேர் இந்த ஆப்பைப் பணம் செலுத்திப் பயன்படுத்தி வருகின்றனர். செல்போனிலேயே மொத்த அலுவலகத்தையும் கொண்டுவரும் முயற்சிதான் இது.

உயில் என்றாலே வாழ்வின் இறுதிக் காலத்தில்தான் எழுதவேண்டும் என்ற எண்ணம் பலபேரிடம்  இருக்கிறது. அது தவறு. யார் வேண்டுமானாலும் உயில் எழுதலாம். இதுகுறித்த சந்தேகங்களைத் தீர்க்கவும், உயில் எழுதுவதற்கு வழிகாட்டவும் ‘RightWill’ என்னும் சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது இந்த நிறுவனம்.