Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup
பிரீமியம் ஸ்டோரி
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup

புதிய தொடர் - சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! -2

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup

புதிய தொடர் - சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! -2

Published:Updated:
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup
பிரீமியம் ஸ்டோரி
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup

ஃபிளின்டோபாக்ஸ்

ரண்டு வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கி, அதில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது ஃப்ளின்டோபாக்ஸ் ஸ்டார்ட்அப். இந்த வெற்றிப்பயணத்தை நம்மிடம் உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர் இதன் நிறுவனர்களான விஜய், அருண், ஸ்ரீநிதி ஆகிய மூவரும்.     

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup

இன்ஸ்பிரேஷன்

முதலில் பேசத்தொடங்குகிறார் விஜய். “நாங்கள் மூவருமே ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள். என்னுடைய குழந்தைக்கு 3 வயது இருக்கும்போது, எல்லாப் பெற்றோருக்கும் இருப்பதுபோலவே எனக்கும் ஒரு பிரச்னை இருந்தது. எப்படி என் குழந்தையின் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட வைப்பது  என்பதுதான் அது.

காரணம், ஒரு குழந்தையின் முதல் 8 வயது என்பது அந்தக் குழந்தையின் கற்றல் திறனில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. எனவே, எப்படி குழந்தைக்குப் பாடங்களைக் கற்றுத் தருவது, என்னென்ன விளையாட்டு களைச் சொல்லித்தருவது என நிறைய குழப்பங்கள் இருந்தன. இந்தக் குழப்பம் எனக்கு மட்டுமன்றி, என் வயதையொட்டி இருந்த நிறைய பெற்றோர்களுக்கும் இருந்தன. இதற்கு விடை தேடுவதற்காக ஆசிரியர்கள், மனநல நிபுணர்கள், கல்வியாளர்கள் என நிறைய பேரைச் சந்தித்துப் பேசினேன். அப்போதுதான், வெளிநாடுகளில் இருக்கும் அளவிற்கு நம் நாட்டில் ப்ரீ-ஸ்கூலிங் கல்வி என்பது இன்னும்  வளரவில்லை என்பது எனக்குப் புரிந்தது. மேலும், பல குழந்தைகளுக்கு இந்த வயதில் சரியான கல்வி கிடைப்பதில்லை என்பதையும், இது மிக முக்கியமான சிக்கல் என்பதையும் உணர்ந்துகொண்டேன்.

பிரச்னையைக் கண்டறிந்து விட்டோம். அதற்கான தீர்வு என்ன என யோசித்தபோது உதித்த ஐடியாதான் இந்த ஃப்ளின்டோபாக்ஸ்” என நிறுத்த, மீதிக் கதையை அருண் தொடர்ந்தார்.

 அடித்தளம்

“குழந்தைகளுக்கான பிரச்னை இருக்கிறது, அதனைச் சுற்றி ஒரு சந்தையும் இருக்கிறது. பிரச்னைக்கான தீர்வைக் கண்டுபிடித்துவிட்டால் போதும், ஒரு செம பிசினஸ் ரெடி. இப்படித்தான் நாங்கள் மூவரும் இணைந்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். இரண்டு முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு எந்தமாதிரியான விஷயங்களைக் கற்றுத்தர வேண்டும், எந்த முறையில் கற்றுத்தர வேண்டும், குழந்தைகளின் ஒவ்வொரு திறனையும் மேம்படுத்துவது எப்படி எனப் பல கேள்விகளுடன் இந்த ஃப்ளின்டோபாக்ஸைத் தொடங்கினோம். மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களைத் தொடர்ந்து சந்தித்து இந்தப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டோம். அந்தத் தீர்வு ஒரு பெட்டி வடிவத்திலானது. அந்தப் பெட்டிக்குள் ஒரு குழந்தை கற்பதற்குத் தேவையான அத்தனை விஷயங்களும் இருக்கும். அந்தப் பெட்டி, குழந்தையின் அறிவை வளர்க்கும்; சிந்தனையைத் தூண்டும். மேலும் புதிதாகக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கும். ஃபிளின்ட் என்றால் சிக்கிமுக்கி கல் என அர்த்தம். எப்படி இரண்டு கற்களை உரசினால் தீப்பொறி வருமோ, அதைப்போல இந்தப் பெட்டியைப் பயன்படுத்தினால் புத்தம்புது சிந்தனைகள் பிறக்கும் என்பதைக் குறிக்கும் வகையில்தான் ஃப்ளின்டோபாக்ஸ் எனப் பெயரிட்டோம்.

 சவால்

2014-ம் ஆண்டு ப்ளின்டோ பாக்ஸைத் தொடங்கியபோது நிறைய சவால்கள் எங்கள் முன் இருந்தன. முதலாவது மொபைல் போன். இன்று மூன்று வயது குழந்தைகள்கூட மொபைல் போன் அல்லது கணினிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட் டன. இந்தச் சமயத்தில் அவற்றைத் தவிர்த்துவிட்டு ஒருவிஷயத்தைச் செய்தால், அது வெற்றியடையுமா என்ற கேள்வி எங்கள்முன் இருந்தது. ஃப்ளின்டோபாக்ஸ் என்பது ஒரு பொம்மையோ அல்லது கேட்ஜெட்டோ கிடையாது. கற்றலுக்கான ஒரு வழிகாட்டி. எனவே, மொபைல்களைக் கண்டு பயப்படவேண்டாம் என முடிவு செய்தோம்.

இரண்டாவது சவால், இதற்கான வழிகாட்டுதல். குழந்தைகளின் கல்வி என்பது மிகமுக்கியமான விஷயம். ஆனால், அதுகுறித்த ஆராய்ச்சி யாளர்கள் இங்கே மிகக்குறைவு. இதற்காக நிறைய கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களைச் சந்தித்து அவர்களின் ஆலோசனைகளை ஒருங்கிணைத்தோம்.   

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup

ஆலோசனைக் குழு ஒன்றை ஆரம்பித்து நிரந்தரமாக இவர்களை, எங்கள் பணிகளில் பங்குபெறச் செய்தோம்.

மூன்றாவது சவால் முதலீட்டை எப்படி திரட்டுவது?. எப்படி முதலீட்டாளர்களை ஈர்ப்பது? இப்படியொரு முக்கிய மான ஒரு துறையில் எந்தப் போட்டியாளர்களுமே இல்லை என்பதையும், ஃப்ளின்டோ பாக்ஸ் குழந்தைகளின் ஆரம்பக்கல்வி முறையையே மாற்றும் முயற்சி என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தினோம். இதன் பின்னர்தான் முதலீட்டா ளர்களுக்கு எங்கள்மீதும், எங்கள் பணியின்மீதும் நம்பிக்கை வந்தது. இப்படி ஒவ்வொரு சவால்களுக்குமான தீர்வுகளும், அதற்குள்ளேயே இருந்தன.

 வெற்றி

ஃப்ளின்டோபாக்ஸைத் தயாரிப்பது என முடிவு செய்ததுமே, எங்கள் அப்பார்ட்மென்ட்டில் முதலில் விநியோகம் செய்தோம். நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த பாக்ஸை வாங்கிக்கொடுத்தனர். குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போது நாங்களும் உடன் இருந்து, இதன் நிறைகுறைகளைத் தெரிந்து கொண்டோம். பின்னர்தான் முறையாகச் சந்தைக்குள் நுழைந்தோம்.

வயதின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் பிரித்து, நான்கு வகை பாக்ஸ்களை வழங்குகிறோம். இதில் அந்தந்த வயதுக்குரிய கற்றல் செயல்பாடுகள், ஆராய்ச்சிகள், சோதனைகள் போன்றவை அடங்கியிருக்கும். இது ஒரேயொரு பெட்டி கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு பெட்டி என்ற வீதத்தில் தொடர்ந்து, பெட்டிகள் வீட்டுக்கு வந்துகொண்டே இருக்கும். இதன்மூலம் குழந்தைகள் கற்றுக்கொண்டே இருக்கலாம். அந்தந்த வயதுக்கேற்ற செயல்பாடுகள், விளையாட்டுகள் மூலமாகத் தொடர்ந்து குழந்தைகளின் அறிவாற்றல் மேம்படும். தற்போது பல பள்ளிகளில் ஃப்ளின்டோபாக்ஸ்களைப் பயன்படுத்துகிறார்கள். இப்படி இதுவரைக்கும் 4.5 லட்சம் பாக்ஸ்களை குழந்தைகளிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம்.

 பலம் மற்றும் இலக்கு

“எங்கள் பாக்ஸ்களைப் பயன்படுத்தும் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, குழந்தைகளின் செயல்பாடுகளைக் கவனிப்போம். இதன்மூலம் கொஞ்சம்கொஞ்சமாக எங்கள் நிறைகுறைகளை அறிந்து மேம்படுத்திக்கொண்டே வருகிறோம். அறிவியல்ரீதியாக கல்வியை அணுகுவதால், குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றங்கள் தென்படுகின்றன. இவைதான் எங்கள் பலம்.

ஆரம்பக்கல்வி என்பது ஒரு குழந்தையின் வாழ்வில் மிகமுக்கியமானது. ஆனால், அது தரமானதாக, நம் நாட்டிற்கு ஏற்ற வகையில் இல்லை. இந்த ஏற்றத்தாழ்வுகளை நீக்கி தரமான, சமச்சீரான ஆரம்பக்கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு” என தம்ப்ஸ்அப் காட்டுகிறார் அருண்.

 அடுத்தகட்டம்


“ஃப்ளின்டோகிளாஸ் என்ற பெயரில் கல்வித்திட்டம் ஒன்றையே அறிமுகம் செய்திருக் கிறோம். முழுக்க முழுக்க ஃப்ளின்டோபாக்ஸை அடிப்படையாகக் கொண்டது. சென்னையில் மட்டுமே 40 பள்ளிகளில் இதனை அமல்படுத்தி யிருக்கிறோம். ஆரம்பக்கல்வியை முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமாக அணுகும் முயற்சி இது” என்கிறார்கள் இந்த வெற்றி வீரர்கள்.

ஞா.சுதாகர்

படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

கற்றுக்கொண்ட பாடம்!

நா
ம் செய்யும் தவறுகளும், அதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும்தான் பிசினஸில் மிகமுக்கியமான பாடம். அப்படி ஒரு சொதப்பல் சம்பவத்தையும், அதிலிருந்து கற்றுக்கொண்ட விஷயத்தையும் பகிர்ந்துகொள்கிறார் ஸ்ரீநிதி.

“ஃப்ளின்டோபாக்ஸ்களைக் கேட்டு பல ஊர்களிலிருந்தும் அழைப்புகள் வரும். அப்படி ஒருநாள் சிங்கப்பூரிலிருந்து நிறைய அழைப்புகள் வந்தன. அங்கே நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களே என நினைத்து நாங்களும் உடனே சிங்கப்பூரில் பெட்டிகளை விற்க ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டோம். ஆனால், அதற்கு நாங்கள் பட்டபாடு கொஞ்சம்நஞ்சமல்ல; ஏகப்பட்டத் தடைகள், செலவுகள் வந்துவிட்டன. அப்போதுதான் நாங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டோம். சிங்கப்பூரில் இருக்கும் வாடிக்கையாளர்களைவிடவும், இந்தியாவில் எங்கள்முன் இருக்கும் சந்தை மிகப்பெரியது; 2 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் இங்குதான் அதிகம். இப்படி இத்தனை சிறப்பம்சங்கள் உள்ள இந்தியச் சந்தையை விட்டுவிட்டு நாங்கள் ஏன் இப்போதே சிங்கப்பூரில் கவனம் செலுத்தவேண்டும் என யோசித்தோம். அந்த முயற்சியை அப்படியே நிறுத்திவிட்டோம். உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று இந்தியா. எனவே, இதில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் என முடிவு செய்தோம்” என்கிறார் ஸ்ரீநிதி