இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


வாழ்க்கையில் குறிப்பாக கேரியரில் சாதிச்சவர்கள் எல்லோருக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது. அதுதான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கைக்கு அடிப்படை தன்னைத் தானே புரிந்து கொள்வது. நாம் யார், நம் பலம், பலவீனம் என்ன என்று நமக்குத் தெரிந்தால்தான் நம்மால் எந்த அளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்பது நமக்கே சரியாகத் தெரியும்.

நம் கேரியரை வெற்றிகரமாக தேர்ந்தெடுத்துக் கொள்ள தன்னைத் தானே புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அப்போதுதான் சரியான கேரியரை தேர்வு செய்து அதில் முழு ஈடுபாட்டுடன் நம் திறமையைக் காட்டி சாதிக்க முடியும். தன்னைத் தானே புரிந்து கொள்வது என்றால் என்ன? என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். நான் இங்கே சொல்லப் போவது கார்ல் ரோஜர்ஸ் சொன்ன 'செல்ஃப்’ கான்செப்ட். அவர் ஒரு பிரபலமான சைக்காலஜிஸ்ட். அவர் சொன்னதன் சாரம் இதுதான்.

நாம் ஒவ்வொருவரும் நமக்குள் நம்மை பற்றிய ஒரு மனத்தோற்றத்தை, நம் சுயம் பற்றிய கருத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதைத்தான் சைக்காலஜிஸ்ட் 'சுயபுரிதல் அல்லது தன்னைத் தானே புரிந்து கொள்ளுதல்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
தன்னம்பிக்கை!
தன்னம்பிக்கை என்பது நம் திறமைகள், விருப்பங்கள் பற்றிய ஒரு சுயபார்வை. இந்த சுயம் பற்றிய கருத்து நம் அனுபவங்கள் மூலமாகவும், நம் வெற்றி-தோல்விகளில் ஏற்படுகிற சுயபிரதிபலிப்பு மூலமாகவும் கிடைக்கிறது. சிறு வயதில் நம்மை சுற்றியிருப்பவர்களில் முக்கியமானவர்கள், அதாவது பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், ஆசிரியர்கள் நம்மை பாராட்டியோ, மட்டம் தட்டியோ சொன்ன வார்த்தைகளும், நம் தன்னம்பிக்கை உருவாக காரணமாக இருக்கிறது. சில பேர் வாழ்க்கையில பாடகராக வேண்டும் என்று நினைக்கலாம். இது அவருடைய ஆசை (Ideal-Self). ஆனால், உண்மையில் நான் ஒரு மோசமான பாடகன் (Real Self) என்கிற எண்ணம் அவர் மனதில் இருக்கலாம்.

உங்கள் உள்சமூக வட்டம் அதாவது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதுவே உங்கள் ஆழ்மனதில் ஐடியல் செல்ஃப்-ஆக (Ideal-Self). ) உருவெடுக்கிறது என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும், நீங்கள் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்ட மனிதர்களின் பண்புகளும் உங்கள் ஐடியல் செல்ஃப் குறித்த எதிர்பார்ப்புகள் ஆகக்கூடும். உதாரணத்திற்கு உங்கள் சிறு வயதில், உங்களுக்குப் பிடித்த உறவினர் ஒருவர் துணிச்சலான போலீஸ் அதிகாரியாக இருந்திருந்தால் நீங்களும் உங்கள் ஐடியல் செல்ஃப்-ன் குணங்களாக துணிவு, உறுதி போன்ற குணங்களைக் கொண்டிருக்க வாய்ப்புண்டு.
நம் ஐடியல் செல்ஃப்-க்கும் செல்ஃப் கான்செப்ட்டுக்கும் இடையே நிறைய இடைவெளி இருந்தாலோ அல்லது சில காரணங்களால் அந்த ஆதர்ஷ நிலையை அடைய முடியாவிட்டாலோ ஏமாற்றமும், தாழ்வு மனப்பான்மையுமே மிஞ்சும். உங்கள் லட்சியங்கள் யதார்த் தத்தில் இருந்து தள்ளிப் போகும்போது அதை அடைவது கடினமாகிவிடும். அதை அடையும் முயற்சியில் நீங்கள் தோற்கும்போது, ஒவ்வொரு முறையும் மனஅழுத்தம் அதிகரிக்கும்.
சுய புரிதல்!

இதை தவிர்க்க என்ன வழி? முதல் ஆப்ஷன், உங்களால் அடைய முடியுமென நீங்கள் நினைப்பதை லட்சியமாக கொள்வது. ஆனால், சில சமயம் இது உங்களை உயரிய லட்சியங்களை அடைவதில் இருந்து தடுத்து விடும். உங்கள் உண்மையான திறன்கள் வெளிவராமலே போய் விடலாம். அதனால் சமரசம் இல்லாத லட்சியங்களை உருவாக்க நம் பலமும், பலவீனமும் என்ன என்ற சுயபுரிதல் தேவை.
இரண்டாவது ஆப்ஷன், தோல்விகளில் மனம் தளராமல், தாழ்வு மனப்பான்மை வராமல் பார்த்துக் கொள்வது. அதற்கு தேவை தன்னம்பிக்கை. அதாவது, நம் குறை, நிறைகளையும் ஏற்றுக் கொள்வது. இது எளிதான விஷயமில்லை. அதற்கு நிறைய பயிற்சி தேவை. எனவே, அடுத்த வாரத்தில் தன்னைத் தானே புரிந்து கொள்வது பற்றியும் (UNDERSTANDING), நம் சுயத்தை உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்வது எப்படி (SELF ACCEPTANCE) என்பது பற்றியும் பார்ப்போம்.

இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரி டிரஸ் செய்து கொள்ளலாம்? ''ஆள் பாதி ஆடை பாதி என்று ஒரு பழ மொழியே உண்டு. அலுவலகத்திற்கு வருகிறவர்கள் நன்கு உடை உடுத்திக் கொண்டு வரவேண்டும் என எல்லா நிறுவனங்களும் நினைக்கத் தொடங்கிவிட்ட காலம் இது என்பதால், இன்டர்வியூ நேரத்திலேயே டிரஸ் கோட் பற்றி கவனமாக இருக்க வேண்டும். இன்டர்வியூக்காக செல்லும்போது கண்ணைப் பறிக்கும் கலர் சட்டை அல்லது சேலை, சுடிதார், பத்து பாக்கெட்டுகள் கொண்ட சட்டை போன்றவற்றை அணியாமல், ஃபார்மல் ஷர்ட், பேன்ட் அணிந்து கொள்வது நல்லது. கண்டபடி கிராப் விட்டுக் கொள்ளாமல் ஒழுங்காக தலை சீவிக் கொள்வது அவசியம். பெண்கள் ஓவராக மேக்கப் செய்து கொள்ளத் தேவையில்லை. நிறைய லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளவும் வேண்டாம். தேவையில்லாமல் அதிகம் வாசனைத் திரவியங்களையும் போட்டுக் கொள்ள வேண்டாம். உங்கள் தோற்றமே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்லிவிடும் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள்!'' |
|

|

இன்றைய இளசுகளின் கனவு ஐ.டி. வேலைதான். பி.இ. மற்றும் எம்.சி.ஏ. படித்தவர்களைத் தாண்டி, இன்று பி.எஸ்.சி., பி.காம், பி.ஏ. படித்தவர்களுக்குகூட ஐ.டி. வேலை கிடைக்கத் தொடங்கிவிட்டது என்கிறார் காம்ஃபை சொல்யூஷன் நிர்வாக இயக்குநர் ஏ.கே.சுகுமாரன். ''பொதுவாக கணித பாடத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களே கம்ப்யூட்டர் புரோகிராமிங் செய்வதற்கு ஏற்றவர்களாக இருப்பார்கள். அந்த அடிப்படையில்தான் பி.எஸ்.சி. கணிதம் முடித்தவர்களைகூட நிறைய ஐ.டி. கம்பெனிகள் தற்போது வேலைக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டன. ஐ.டி. வேலைக்கான ஆட்களைத் தேர்வு செய்யும்போது சில நிறுவனங்கள் இரண்டு, மூன்று நிலையிலும், இன்னும் சில நிறுவனங்கள் பத்து நிலை வரையும் இன்டர்வியூ நடத்துகின்றன. பொதுவாக ஐ.டி. துறையில் நடத்தப்படும் இன்டர்வியூ இப்படித்தான் இருக்கும்.
இதில் ஜெனரல் ஆப்டிடியூட் டெஸ்ட் உங்களைப் பற்றிய பொதுவான அபிப்ராயங்கள், திறமைகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக வைப்பது. சில நிறுவனங்கள் குரூப் டிஸ்கஷன் சுற்றை முதலில் வைத்து மாணவர்களை வெளியேற்ற பயன்படுத்திக் கொள்கின்றன. சில நிறுவனங்கள் இறுதியாக வைத்திருக்கும். சைகோமெட்ரிக் அசெஸ்மென்ட் என்பது ஐ.க்யூ. திறமையை அறிந்து கொள்வதற்காக ஒரே கேள்வியை பல விதங்களில் கேட்பார்கள். எழுத்துத் தேர்வில் நீங்கள் படித்திருக்கும் பாடம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இதில் டெக்னிக்கல் ரவுண்ட் வரும்போது நேருக்கு நேர் இன்டர்வியூ நடக்கும். அப்போது ஹெச்.ஆர்., டெக்னிக்கல் ஹெட், டீம் லீடர் என யார் வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கலாம். டெலிபோனிக் சுற்று என்பது நீங்கள் கம்பெனிக்கு வந்து இன்டர்வியூவில் கலந்து கொண்டு சென்றபிறகு ஹெச்.ஆர். உங்கள் செல்போன் நம்பருக்கு போன் செய்து, வேலை சம்பந்தமாகப் பேசும்போது, அப்போது நீங்கள் அளிக்கும் பதில், உங்கள் குரலின் ஏற்ற, இறக்கங்கள் என அனைத்தும் தெரிந்து கொள்வார். பொதுவாகவே, செக்யூரிட்டி கேட்டிலிருந்தே உங்கள் இன்டர்வியூ தொடங்கிவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். சில நிறுவனங்கள் வரவேற்பு அறையிலிருந்து கேமரா மூலம் உங்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்கும். ஏன் உங்களுக்கு அருகிலிருப்பவர்கூட ஹெச்.ஆர்.-ராக இருக்க வாய்ப்புண்டு. இறுதியாக கம்பெனி சி.இ.ஓ., புராஜக்ட் மேனேஜர் ஆகியோர் உங்களை இன்டர்வியூ செய்வார்கள். எனவே, நெகட்டிவ்-ஆன எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் காட்டக் கூடாது. |

ஐ.டி. வேலைக்கு முதலில் கல்லூரி படிப்பு, பள்ளி படிப்பு என்ற ஆர்டரில்தான் ரெஸ்யூம் தயார் செய்ய வேண்டும். உங்கள் லட்சியம் மற்றும் நோக்கம் பற்றி சொல்லும்போது அது சாஃப்ட்வேர் சம்பந்தப்பட்டதாகவே இருக்க வேண்டும். முக்கியமாக, ஏதேதோ இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து ரெஸ்யூம் தயாரிக்காமல் இருப்பது நல்லது. பி.எஸ்.சி., பி.காம். படித்தவர்களுக்கு..! நீங்கள் கணிதத்தில் அதிக மார்க் எடுப்பவர் என்றால் மட்டுமே இத்துறையில் சாதிக்க முடியும். உங்கள் படிப்புடன் கூடுதலாக டெஸ்டிங் கான்செப்ட், கூடுதலான புரோகிராமிங் லாங்குவேஜ்கள் படித்துக் கொள்ளலாம். இதையெல்லாம் பின்பற்றினால் உங்களுக்கு ஐ.டி. வேலைக்கு நிச்சயம் வாய்ப்புண்டு!'' என்றார் சுகுமாரன். -பானுமதி அருணாசலம் |
