மென்தா ஆயில்
மென்தா ஆயில் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு முரட்டு ஏற்றத்தில் இருந்து வந்ததைப் பார்த்தோம். அக்டோபர் மற்றும் நவம்பர் என்று இரண்டு மாதமும் வலிமையாக ஏறியது. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலும் அது தொடர்ந்தது. ஆனால், ஓர் ஏற்றம் என்று இருந்தால், இறக்கம் என்பது இருக்கும் என்பதை நிரூபிப்பது போல், கடந்த வாரம் மென்தா ஆயில் வலிமையான இறக்கத்தைக் காட்டி உள்ளது. எப்போது வலிமையான ஏற்றங்கள் வரும்போது, அது தொடர்ந்து ஏறும் என்ற உறுதி எதுவும் இல்லை. இது எல்லா வகை பொருட்களுக்கும்தான். அதை மென்தா ஆயில் நிரூபித்துக் காட்டி உள்ளது.

சென்ற இதழில் சொன்னது... “நமக்கு ஏற்கெனவே பழக்கமான 1790 என்ற எல்லைதான் இப்போதைய ஆதரவு எல்லை, இது உடைக்கப்பட்டு இறங்காதவரை, ஒன்று மேலே முந்தைய உச்சமான 1990ஐ தொட முயற்சிகலாம். கீழே 1790 என்ற ஆதரவை உடைத்தால், ஏற்றம் முடிந்து, மென்தா ஆயில் இறங்குமுகமாக மாறலாம்.”
கடந்த வாரம் மென்தா ஆயிலை பொறுத்த வரைக்கும், காளைகள், கரடிகளிடம் முழுவதும் சரண் அடைந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். முந்தைய வாரம் வெள்ளி அன்று 1904 என்ற புள்ளியில் முடிந்த மென்தா ஆயில், சென்ற வாரம் திங்கள் அன்று ஒரு கேப் டவுனில் துவங்கியது. முதல் நாளிலேயே கரடிகள் தங்கள் பலத்தைக் காட்டி மென்தா ஆயில் விலையை இறக்கினார்கள். திங்கள் அன்று 1881 என்ற கேப் டவுனில் துவங்கி, முடிவில் 1828 என்ற எல்லையில் முடிந்தது. அதன் பிறகு தொடர்ந்து தினமும் ஒரு கேப் டவுனில் துவங்கி, இறங்கியே முடிந்தது. ஒவ்வொரு நாளும் இப்படி ஒரு கேப் டவுனில் துவங்கி, இறங்கு முடிந்துக்கொண்டு இருந்ததால், வாரத்தின் அடிப்படையில் மிக வலிமையான இறக்கத்தில் மென்தா ஆயில் முடிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி என்ன செய்யலாம்? எப்படி வலிமையான ஏற்றம் வரும்போது இறக்கம் வரலாம் என்று சொல்கிறோமோ, அதுபோல், வலிமையான இறக்கம் வரும்போதும், ஓர் ஆதரவை எடுத்து புல்பேக் ரேலி வரலாம். தற்போது 1580 என்ற எல்லை மிக முக்கிய ஆதரவு ஆகும். இந்த எல்லைக்கு அருகில் ஆதரவு எடுத்து, ஒரு புல்பேக் ரேலி வரலாம்.

காட்டன்
காட்டன் என்பது ஒரு பொருள். அதன் விலை தன்னிச்சையாக டிமாண்ட்டுக்கு ஏற்ப ஏறலாம் அல்லது இறங்கலாம். ஆனால், நாம் மென்தா ஆயிலை ஆராய்ந்து வரும்போது, இரண்டும் இடையே ஏற்படும் உறவுமுறைகளையும் அவ்வப்போது பார்க்கலாம்.
மென்தா ஆயில் விலை நகர்வை பார்க்கும்போது, காளைகள் கரடிகளிடம் சரண் அடைந்துவிட்டார்கள் என்று பார்த்தோம். ஆனால், காட்டன் விலையானது அதே காலகட்டத்தில், இதற்கு நேர்மாறாக, காளைகளின் ஆதிக்கத்தைப் பார்க்கமுடிகிறது. விலையும் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
சென்ற வாரம் சொன்னது.... “தற்போது பலமான ஏற்றத்தில் இருக்கும் காட்டன், மேலே முந்தைய உச்சமான 19190ல் வலிமையாகத் தடுக்கப் படலாம். மேலே 19190 முதல் 19240 வரை வலிமையான தடைநிலை ஆகும். இந்தத் தடைநிலை உடைக்கப்பட்டால், அடுத்து மிகப்பெரிய விலை ஏற்றத்திற்குத் தயாராகலாம்.”
சென்ற வாரம் திங்கள் அன்று காட்டன் 19160ல் வியாபாரத்தைத் துவக்கி அதிகபட்சமாக 19340 என்ற எல்லையைத் தொட்டபிறகு, அதை தக்கவைக்க முடியாமல் இறங்கி ஆரம்ப எல்லைக்கு அருகிலேயே, அதாவது 19180 என்ற எல்லையில் முடிந்தது. ஆனாலும், காளைகள் அடுத்தநாள் 19160 என்ற எல்லையில் துவங்கினாலும், கரடிகளுடன் கடும் போராட்டத்தை நடத்தி, முடியும்போது 19320 என்ற எல்லையில் முடிந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில், தொடர்ந்து படிப்படியாக ஏற ஆரம்பித்தது.
இனி என்ன செய்யலாம்?
காட்டன், தற்போது வலிமையான ஏற்றத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்த ஏற்றம் என்பது, அடுத்த முக்கியமான தடைநிலைக்கு அருகாமையில் உள்ளது. தொடர்ந்து ஏறும் காட்டன் விலை 19600 என்ற எல்லையில் மிக வலிமையாகத் தடுக்கப்படலாம். ஆகஸ்ட் 2017ல் ஒரு கேப்டவுனுடன் இறங்கிய காட்டன், அடுத்தடுத்து ஏறும்போதெல்லாம் 19600 என்ற எல்லையில் ஏற்கெனவே இரண்டு முறை வலுவாகத் தடுக்கப் பட்டுள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டால், மிக வலிமையான ஏற்றம் நிகழலாம். கீழே 18800 என்ற எல்லை தற்போது முக்கிய ஆதரவாக மாறியுள்ளது.