இந்திய பங்குச் சந்தை 2017-ல் சுமார் 27% ஏற்றத்தைக் கொடுத்திருக்கும் நிலையில், கமாடிட்டி சந்தையில் பல்வேறு கமாடிட்டிகள் 2017-ல் எப்படி செயல்பட்டுள்ளன, 2018-ல் அவற்றின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

தங்கம்
2017-ல் உலக பங்குச் சந்தைகள் வலுவாக இருந்தன. அதனுடன் இந்திய பங்குச் சந்தையும் மிக வலுவாக இருந்தது. 2017உன் முடிவில், இந்திய பங்குச் சந்தை புதிய வரலாறு படைத்தது. இந்த நிலையில், தங்கம் 2017 ஜனவரியில் 10 கிராம் (24 காரட்) விலையானது ரூ.27,673-ஆகத் தொடங்கி, வலிமையான ஏற்றத்தில் முடிந்தது. அதன்பின் பிப்ரவரி மாதமும் அந்த வலிமையான ஏற்றம் தொடர்ந்தது. பிப்ரவரியில் அதிகபட்சமாக ரூ.29,785 என்ற புள்ளியைத் தொட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கம் வேகமாக விலை உயரத் தொடங்கி விட்டது என நினைத்தபோது, 2017 மார்ச்சில் அந்த ஏற்றம் முழுவதையும் இழந்தது. அதன்பின் தங்கம் மேலே சுமார் ரூ.29,800 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டது. கீழே சுமார் ரூ.27,800 என்ற எல்லைக்கு அருகே ஆதரவு எடுத்தது. அதன்பின் வருடம் முழுவதும் இந்த எல்லைகளுக்குள்ளாகவே சுழன்று வந்தது.

உலக சந்தையில் எப்போதெல்லாம் எதிர் மறை யான செய்திகள் வருகிறதோ, அப்போதெல்லாம் தங்கம் மேல்நோக்கி நகரும். குறிப்பாக, வட கொரியா அணுகுண்டு சோதனை நடத்தும் போதெல்லாம், தங்கம் விலை ஏறியது. அதன்பின் வலுவான பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் வரும்போது, பங்குச் சந்தை ஏறுவதும், தங்கம் விலை வீழ்ச்சி அடைவதும் தொடர்ந்து நடந்தது.
2017 டிசம்பர் மாத இறுதியில், கீழ் எல்லையான ரூ.27,800-க்கும், மேல் எல்லையான ரூ.29,800-க்கும் இடையே மையமாக முடிந்துள்ளது. சற்றே ஏறுமுகமாக மாறி ரூ.29,000 என்ற புள்ளியைத் தாண்டியுள்ளது. வருடத்தின் அடிப்படையில் தங்கம் 5.12% அளவுக்கு ஏறி முடிந்துள்ளது. நாம் பிக்ஸட் டெபாசிட்டில் போட்டால், அது 7% அளவுக்குக் கிடைத்திருக்கலாம். அதேசமயம், அதன் அதிகபட்ச புள்ளிக்கும், குறைந்தபட்ச புள்ளிக்கும் இடையே உள்ள நகர்வு 10.32% ஆக இருந்தது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.27,700 என்கிற அளவில் முடிந்துள்ளது. அதனுடன் ஒப்பிட்டால், 2017-ல் ரூ.29,000-யைத் தாண்டி, சற்று உயர்ந்தே முடிந்துள்ளது.
வெள்ளி
வெள்ளியின் விலைநகர்வு, தங்கத்தைப் போலவே இருக்கும் என்பது கடந்தகால அனுபவம். ஆனால், 2017 வேறு விதமாக அமைந்திருந்தது. வெள்ளியைத் தங்கத்துடன் ஒப்பிடும்போது, வெள்ளிக்குத் தொழிற்சாலைகளின் உபயோகம் இருப்பதால், அதன் தேவை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படும். மேலும், விலையும் தங்கத்தைப் போலவோ அல்லது தங்கத்தைவிட சற்றே வலிமையாக ஏறவோ வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டு வந்தது.

ஆனால், 2017-ல் வெள்ளியின் விலைநகர்வை தங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. 2017-ல் தங்கம், முதலீட்டாளர்களுக்கு 5.12% லாபத்தைக் கொடுத்தது. ஆனால், வெள்ளி 2017 ஜனவரியில் ஒரு கிலோ ரூ.39,174 என்ற விலையில் வியாபாரமாக ஆரம்பித்து டிசம்பரில் ஒரு கிலோ வெள்ளி சுமார் ரூ.38,300 என்ற விலைக்கு அருகே வியாபாரமானது. 2017 ஜனவரியில் வெள்ளியில் முதலீடு செய்தவருக்கு, டிசம்பரில் லாபக் கணக்கு பார்த்தால், அது எதிர்மறையாகவே முடிந்துள்ளது. அதாவது, சுமார் -0.23% அளவில் முடிந்துள்ளது.

2017-ல் வெள்ளிக்கும், தங்கத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசம், விலை நகர்வின் வீச்சு என்று சொல்லலாம். 2017-ல் தங்கத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலைக்கு உள்ள இடைவெளி 10.32 சதவிகிதமாக இருந்தது. ஆனால், வெள்ளியில் இதன் நகர்வு 24.34% அளவுக்கு இருந்தது. அதிகபட்ச விலை ரூ.43,605 என்ற அளவிலும், குறைந்தபட்ச விலை ரூ.35,460 என்பதாக இருந்தது. இந்த விலை நகர்வு தங்கத்தைவிட வேகமாக மேலே ஏறவும், இறங்கவும் செய்துள்ளது. 2016ம் ஆண்டு முடிவு விலையைவிட, சிறிதளவு இறங்கி முடிந்துள்ளது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய், 2014 வருட தொடக்கத்தில் பேரல் சுமார் ரூ.6,500 என்ற விலையில் வியாபாரமாகி வந்தது. அந்த வருடத்தின் முடிவில் அதன் விலை ரூ.3,300-க்கு வீழ்ச்சி அடைந்தது. 2015-ல் அதன் விலை இன்னும் வீழ்ச்சி அடைந்து ரூ.2,300 என்ற அளவை நோக்கி நகர்ந்தது.

2016-ம் ஆண்டு தொடக்கத்தில் விலை இன்னும் வீழ்ச்சி அடைந்து, பேரல் ரூ.1,805 என்ற அளவைத் தொட்டது. 2016-ம் ஆண்டின் முடிவில் ஓரளவிற்கு மீண்டு ரூ.3,650 என்ற விலையில் முடிந்தது. 2017-ம் ஆண்டு பேரல் ரூ.3,666 என்ற விலையில் சற்றே வலுவாக வியாபாரமாக ஆரம்பித்திருந்தாலும், படிப்படியாக விலை குறைந்து, 2017 ஜூன் மாதம் குறைந்தபட்ச புள்ளியாக ரூ.2,732 -ஐ தொட்டது.
கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியைத் தடுக்க, கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு களின் கூட்டமைப்பு, உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்தது. இதனால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஜூலை முதல் படிப்படியாக ஏற ஆரம்பித்தது. ஆனாலும், அவ்வப்போது, அமெரிக்கா வெளியிடும் புள்ளிவிவரத்தில், கச்சா எண்ணெய் கையிருப்பு கூடுதலாக இருக்கும்போதெல்லாம், விலை வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. கச்சா எண்ணெய் விலையை ஸ்திரத்தன்மைக்குக் கொண்டுவர, மீண்டும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு, உற்பத்திக் குறைப்பை 2018 டிசம்பர் வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.எனவே, இதன் விலை, உயரத் தொடங்கியுள்ளது.

இந்த வருடம், கச்சா எண்ணெய் 4.37% அளவுக்கு ஏற்றத்தைக் கொடுத்துள்ளது. ஆனால், குறைந்தபட்ச விலைக்கும், அதிகபட்ச விலைக்கும் இடையே உள்ள இடைவெளி 40.70% ஆகும். இது, வியாபாரத்திற்கு நல்ல வாயப்பைத் தந்துள்ளது. தற்போது ரூ.4,000 என்ற எல்லை முக்கியத் தடை நிலையாக உள்ளது. இது உடைக்கப்பட்டு ஏறினால், மிக வலுவான ஏற்றம் தொடரலாம்.
இயற்கை எரிவாயு
இயற்கை எரிவாயு மிக வேகமான விலை ஏற்றத்தையும், ஏறிய வேகத்திலேயே மிக வேகமாக இறக்கத்தையும் கொண்டதாகும். இதில் வியாபாரம் செய்பவர்கள் சற்றே தவறாக கணித்தாலும், பெரிய நஷ்டம் வர வாய்ப்புண்டு.

2016-ல் மிக வலுவான ஏற்றத்தைக் கொடுத்த இயற்கை எரிவாயு, 2017-ல் அப்படியே நேர்மாறாக பலத்த இறக்கத்தில் முடிந்துள்ளது. 2017, ஜனவரியில் ரூ.252-ஆக இருந்த ஒரு எம்.எம்.பி. டி.யு (Bristish Thermal Unit - MMBTU) 2017 டிசம்பரில் 175-ஆகக் குறைந்துள்ளது. 2017-ம் வருடத்தில் இதன் விலை 30.56% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இதன் குறைந்தபட்ச விலைக்கும், அதிகபட்ச விலைக்கும் உள்ள வித்தியாசம் 54.88% ஆகும். எனவே, இதன் விலை நகர்வின் வீச்சு அதிகம். தற்போது ரூ.165 என்ற விலைக்கும், ரூ.205 என்ற விலைக்கும் இடையே சுழல்கிறது. ஒருவேளை ரூ.165 என்ற ஆதரவு உடைக்கப்பட்டால் பெரும் வீழ்ச்சி வரலாம்.
அலுமினியம்
பங்குச் சந்தை ஏற்றம் எப்படி வலுவானதாக இருந்ததோ, அதைப் போன்றே அலுமினியம் 2017-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து முடிவு வரை வலுவான ஏற்றத்தைக் கொண்டிருந்தது.

2017 ஜனவரியில் கிலோ ரூ.115 என்ற விலையில் ஆரம்பித்து, டிசம்பர் முடிவில் அதுவே ரூ.144 என்ற விலையில் முடிந்துள்ளது. முதலீட்டாளர் களுக்கு 24.63% அளவிற்கு லாபம் ஈட்டியுள்ளது.

காப்பர்
அலுமினியத்திற்கு அடுத்தபடியாக 2017-ல் அதிக லாபத்தைக் கொடுத்த இன்னும் ஒரு உலோகம், காப்பர் ஆகும். 2017-ல் முதலீட்டாளர்களுக்கு 23.65% அளவுக்கு காப்பர் லாபத்தைத் தந்துள்ளது. காப்பர், 2017 ஜனவரி மாதம் கிலோ ரூ.377 என்ற விலையில் ஆரம்பித்து, மாத முடிவில் ரூ.409 என்ற விலையை எட்டியது. ஆனால், அடுத்து பிப்ரவரி முதல் ஜூன் வரை இறங்குமுகமாக சென்று ரூ.353 என்ற குறைந்தபட்ச விலையைத் தொட்டது. அதன்பின் ஏற்றம் ஒருபக்கம் மட்டுமே. 2017 டிசம்பரில் ரூ.467 வரை நன்றாக வியாபாரமானது. தற்போது ரூ.468 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.
ஜிங்க்
காப்பருக்கு அடுத்தபடியாக ஜிங்க், முதலீட்டாளர்களுக்கு 2017-ல் 20.41% அளவுக்கு லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. 2017 ஜனவரியில் ஒரு கிலோ ரூ.174.70 என்ற விலையில் ஆரம்பித்து, டிசம்பர் மாதம் ரூ.218 என்ற விலையை எட்டியுள்ளது.

2016 ஜனவரியில் கிலோ ரூ.106 என்ற விலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு தொடர் ஏற்றத்தில் உள்ளது.

லெட்
பொதுவாக, ஜிங்க்கைப் போலவே நகரக்கூடிய லெட், 2017-ல் முதலீட்டாளர் களுக்கு 16.94% லாபத்தை தந்துள்ளது. லெட் 2016-ல் கிலோ ரூ.106-க்கும் ரூ.127-க்கும் இடையே சுழன்றது. 2017-ல் கிலோ ரூ.138 என்ற விலையில் ஆரம்பித்து, டிசம்பர் மாதத்தில் ரூ.171 வரை உயர்ந்துள்ளது. இது மேலும் தொடர்வதற்கு வாய்ப்புள்ளது.

மென்தா ஆயில்
கமாடிட்டி வரிசையில், நாம் மென்தா ஆயிலை கடைசியாகப் பார்த்தாலும், 2017ல் முதலீட்டாளர்களுக்கு மிக அதிகமான லாபத்தைக் கொடுத்தது இதுதான். 2017ல் மென்தா ஆயில், முதலீட்டாளர்களுக்கு 56.85% அளவுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது. 2017-ல் ஜூன் மாதம் வரை கிலோ ரூ.985 என்ற விலையில் வலிமை குன்றி காணப்பட்டது. 2017 ஆகஸ்ட் மாதம் முதல் மேலே நகர்ந்து ரூ.1,100 என்ற விலையைத் தாண்டியது. பின், நவம்பர் மாதம் வலிமையாக ஏறி ரூ.1,861 என்ற விலையைத் தொட்டது. தற்போது ரூ.2,000 என்ற விலையில் வலிமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.

காட்டன்
காட்டன் பேல் விலை 2016 முடிவில் ரூ.19,060 என்று முடிந்தது. 2017-ல் பேல், ரூ.20,280 என்ற விலையில் ஏறி முடிந்துள்ளது. ஆனால், 2017 ஜனவரியில் சற்றே ஏறி அதிகபட்சமாக ரூ.21,650-யைத் தொட்டாலும் பின்பு வலிமையாக இறங்கி, ஆகஸ்ட் மாதம் குறைந்தபட்ச புள்ளியாக ரூ.18,040-யைத் தொட்டது. பின்பு டிசம்பர் மாதம் நன்கு ஏறி ரூ.20,280 என்ற புள்ளியைத் தொட்டுள்ளது.இந்த ஏற்றம், மேலே 21650ல் வலிமையாகத் தடுக்கப்படலாம்.
(கமாடிட்டிகளின் விலை நிலவரம் எம்.சி.எக்ஸ்-ல் வியாபாரமானது!)