Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வேலை ரெடி... நீங்க ரெடியா..?

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வேலை ரெடி... நீங்க ரெடியா..?
பிரீமியம் ஸ்டோரி
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வேலை ரெடி... நீங்க ரெடியா..?

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 13

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வேலை ரெடி... நீங்க ரெடியா..?

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 13

Published:Updated:
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வேலை ரெடி... நீங்க ரெடியா..?
பிரீமியம் ஸ்டோரி
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வேலை ரெடி... நீங்க ரெடியா..?

ற்பத்தித் துறையில் ஆண்டுதோறும் பல லட்சம் பணியாளர்கள்  உருவாகிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் முழுத் திறன்பெற்றவர்களா என்றால் சந்தேகம்தான். அவர்களைத் திறன்மிக்கவர்களாக மாற்றும் வேலையைச் செய்வதில் பெரிய அளவில் வெற்றி கண்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த ஸ்கில்வெரி (Skillveri). இதன் வெற்றிக்கதையை எடுத்துச் சொன்னார்கள் சபரிநாத் மற்றும் கண்ணன்.

   இன்ஸ்பிரேஷன்

“இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 60% பேர் இளைஞர்கள்தான். வருடந்தோறும் பல லட்சம் இளைஞர்கள் புதிதாகப் பணியில் சேர்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும் போதிய அளவுக்குத் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றிருக்கிறார்களா என்றால், இல்லை. அதனால்தான் டெல்லி மெட்ரோ பணிகளுக்காக பெருவிலிருந்தும், டெல்லி விமான நிலையப் பணிகளுக்காக சீனாவிலிருந்தும் ஆட்களை அழைத்து வரவேண்டியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்குமுன்பு, ஒரு மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவரைச் சந்தித்தோம். அவர் பணிபுரியும் நிறுவனத்தில் வெல்டிங் செய்யும் ஊழியர்களில் பலர் வெல்டிங் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இல்லை. இதனால், அந்த நிறுவனத்தின் உற்பத்தியில் சிலபல சிக்கல்கள். ‘இந்தப் பிரச்னையைச் சரிசெய்து தரமுடியுமா?’ என்று கேட்டார். உடனே சரி என்று சொன்னோம். அந்தப் பிரச்னையைத் தொழில்நுட்பத்தின் உதவி யுடன் எப்படி சரிசெய்யலாம் என்று யோசித்தபோது உருவானதுதான்  ஸ்கில்வெரி.

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வேலை ரெடி... நீங்க ரெடியா..?

   அடித்தளம்

அடுத்த ஐந்தாண்டுகளில் நம் நாட்டில் 20 லட்சம் வெல்டர்கள் தேவை என்கிறார்கள். ஆனால், திறமை வாய்ந்த வெல்டர்களை உருவாக்கும் அளவுக்கு நம் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. கல்வி நிறுவனங்களில் செய்முறை பயிற்சிகள் குறைவாக அளிக்கப்படுகின்றன. தவிர, அனைத்து மாணவர்களுக்கும் செய்முறை பயிற்சிகள் அளிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் செலவு அதிகம். இந்த இரண்டையும் எப்படிச் சரிசெய்யலாம் என்று சிந்தித்தபோதுதான் வெல்டிங் சிமுலேட்டர் (welding simulator) பற்றிய ஐடியா பிறந்தது. இதன் மூலமாக மிகக் குறைந்த செலவில் வெல்டிங் பயிற்சியளிக்க முடியும்; மாணவர்களும் எளிதாக, விரைவாக கற்றுக்கொள்ள முடியும்.

ஒரு நிஜ வெல்டிங் கருவியும், VR ஹெட்செட்டும் இணைந்ததுதான் எங்கள் வெல்டிங் சிமுலேட்டர். இரண்டு ஆண்டுகள் செலவழித்து முழுமையான வெல்டிங் சிமுலேட்டரை உருவாக்கினோம். இந்த சிமுலேட்டரை வடிவமைப்பதற்குமுன்பு, இதற்குச் சந்தையில் வரவேற்பு இருக்குமா, யாருக்கெல்லாம் இதன் தேவை இருக்கும் என்பது குறித்து முழுமையாக ஆராய்ந்தோம். அப்போதே இதனைத் தொழில் நிறுவனங்களிடமும் கல்வி நிறுவனங்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்துவிட்டோம்” என்கிறார் சபரிநாத். ஸ்கில்வெரி சந்தித்த சவால்கள் குறித்து கண்ணன் பகிர்ந்துகொண்டார்.

   சவால்கள்

“இதன்மூலம் பயிற்சி அளிக்கும்போது மாணவர்கள் இன்னும் விரைவாக கற்றுக்கொள்ள முடியும். நிறுவனங்களின் ஊழியர்கள் பயிற்சி பெற்றால், அவர்களின் திறன் இன்னும் மெருகேறும். எனவே,  கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தோம்.  ஆனால், முதல் சில ஆர்டர்களைப் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. பலரும் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஏன் கூடுதலாகப் பயிற்சியளிக்க வேண்டும் என யோசித்தனர். அவர்களுக்குப் பயிற்சி அளித்தால், அவர்கள் வேறு நிறுவனத்திற்குச் சென்றுவிடுவார்கள் என்றும் நினைத்தனர். ஆனால், போதுமான பயிற்சியில்லாத ஊழியர்கள் பணி செய்யும் போது அவர்களால் தரமான பொருள்களைத் தயாரிக்க முடியாது, உற்பத்திக் கான நேரம் அதிகரிக்கும், மூலப் பொருள்கள் அதிகளவில் வீணாகும். இதுபோன்ற பிரச்னைகளையெல்லாம் எடுத்துச்சொன்னோம். அவர் களும் சட்டெனப் புரிந்து கொண்டார்கள்.

அடுத்த சவால், தொழில் நுட்ப ரீதியிலானது. வெல்டிங் என்பது பொதுவான ஒரு பெயராக இருந்தாலும், அதில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான வெல்டிங் முறைகளைப் பின்பற்றுவார்கள். அதற்கேற்ப எங்களின் சிமுலேட்டரை மாற்ற வேண்டி யிருந்தது. அதையும் செய்தோம். இதன்மூலம் தற்போது எல்லா வெல்டிங் பயிற்சிகளையும் சிமுலேட்டர் மூலமாகவே கற்றுக்கொள்ளும்படி செய்து வருகிறோம். 

   வெற்றி


ஒரு சிமுலேட்டரை நிறுவுவதற்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை செலவாகும். பயன்பாட்டைப் பொறுத்துச் செலவு மாறுபடும். இதுவரைக்கும் 53 சிமுலேட்டர் களை வெற்றிகரமாக நிறுவியிருக்கிறோம். அசோக் லேலாண்ட், ஹீரோ மோட்டார்ஸ், டி.வி.எஸ், முருகப்பா போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் திறனை உயர்த்துவதற்காக எங்கள் சிமுலேட்டரைப் பயன்படுத்துகின்றன. நிறைய ஐ.டி.ஐ கல்வி நிலையங்கள், தங்கள் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கவும் மதிப்பீடு செய்யவும் சிமுலேட்டரைப் பயன்படுத்துகின்றன. இதுவரைக்கும் 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்கள் கருவியின் மூலம் பயிற்சி பெற்றிருக்கின்றனர். எங்கள் சிமுலேட்டர் மூலம் பயிற்சி பெறும் ஊழியர்கள் விரைவிலேயே தேறிவிடுவார்கள் என்பதால், அவர்களுக்கான பயிற்சிக் காலம் மிகவும் குறைவு. இதனால், இருவருமே பலன் பெறுவார்கள். முதலில் வெல்டிங்கிற்கு மட்டும் பயிற்சியளித்துக் கொண்டிருந்த நாங்கள், தற்போது பெயின்டிங்கிற்கும் பயிற்சி அளிக்கிறோம்.

   இலக்கு

இன்றைக்கு இந்தியாவில் சராசரியாக 6 லட்சம் வெல்டர்கள்  உற்பத்தித் துறையில் நுழைகிறார்கள். இவர்களில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேராவது ஸ்கில்வெரி மூலம் பயிற்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் லட்சியம்” என உறுதியாக முடித்தார் கண்ணன்.
லட்சியம் நிச்சயம் நிறைவேற வாழ்த்துகள்!

- ஞா.சுதாகர்,  படம் : சொ.பாலசுப்ரமணியன்

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வேலை ரெடி... நீங்க ரெடியா..?

பி.எஃப் வட்டி விகிதம் குறைப்பு!

2017-18-ம் ஆண்டுக் கான தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி வட்டி 8.55 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏற் கெனவே 8.65 சதவிகிதமாக இருந்த இந்த வட்டி விகி தம் தற்போது 0.10% குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்கள் இருந் தால் பி.எஃப். பிடித்தம் செய்யப்பட வேண்டு மென்ற விதியை மாற்றி 10 தொழிலாளர்களாகக் குறைக்கவும் முடிவெடுக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.எஃப்ஃ திட்டத் தின் மூலம் பயனடை பவர்களின் எண்ணிக்கை ஒன்பது கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் தருமென்று எதிர்பார்ப் பதாகக் கூறியுள்ளார்கள்.

வெற்றியின் சூட்சுமம்!

ஸ்கில்வெரி நிறுவனத்தின் வெற்றிக்கான காரணத்தைச் சொன்னார் கண்ணன். “எங்களுடைய வெல்டிங் சிமுலேட்டர் கருவியை முதலில் பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு கருவியாக மட்டுமே நாங்கள் கருதினோம். எனவே, இதனை நிறுவனங்களிடம் கொண்டு செல்லும்போது அந்த நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரியைத்தான் முதலில் சந்திப்போம். இதுகுறித்து எவ்வளவுதான் விளக்கினாலும்கூட, அவர்களால் இதன் முக்கியத்துவத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை. இது சரிவரவில்லை என்றதும், எங்களின் அணுகுமுறையை மாற்றினோம்.

இந்த சிமுலேட்டர் கருவியானது ‘Quality Improvement Tool’ என்று அறிமுகம் செய்தோம். இதன்மூலம் ஊழியர்களின் திறன் எப்படி மேம்படும், உற்பத்தியின் தரமும், அளவும் எப்படி அதிகரிக்கும் என்பதை எடுத்துச் சொன்னோம். இதனால், எல்லா நிறுவனங்களிலும் உற்பத்தி மேலாளரைப் பார்த்துப் பேச முடிந்தது. சூப்பர்வைசர்கள், பொறியாளர்கள், நிறுவனத்தின் தலைவர்கள் போன்றவர்களிடமும் பேசினோம். அவர்கள் இதன் தேவையைப் புரிந்துகொண்டதால், எங்களுக்கு ஆர்டர்களும் கிடைத்தன. ஒரே பொருள்; ஒரே பணி. ஆனால், அதை எப்படி வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கிறோம் என்பதில்தான் வெற்றிக்கான சூட்சுமம் இருக்கிறது’’ என்றார் கண்ணன்.