Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3

பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3

ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி. பிரதமரின் அலுவலகம் பரபரப்புடன் இயங்கிவந்தது. பிரதமர் அவரின் அலுவலகத்தில் கடைசி நிமிடமாகக் கோப்புகளையெல்லாம் க்ளீயர் செய்துகொண்டிருந்தார். முதல் நிலை ப்ரோஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர், அன்றிரவு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கிறார். இந்தச் செய்தி மீடியாவுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது. அவர் இல்லாதபோது வேலை எதுவும் தடைபடக் கூடாது என்பதை உறுதி செய்துகொள்ள விரும்பினார் அவர்.

அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் மிகப் பெரிதாக எந்தப் பலனும் இல்லை. ஆனால், அவர் டெல்லியில் இருக்கும் ஆல் இந்தியா இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸில் சிகிச்சைக்காகச் சேர்ந்தால்,  ஒவ்வொரு நிமிடமும் மீடியாவின் பரபரப்புக்கு உட்படவேண்டியிருக்கும்.

மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட் அந்தஸ்த்தில் இருக்கும் பிரதம மந்திரியின் முதன்மைச் செயலாளர் அவருக்கருகில் இருந்தார்.

‘`இன்னும் எத்தனை இருக்கிறது?” என்று அவரிடம் பிரதமர் கேட்டார். அவர் சக்தி முழுவதையும் இழந்துவிட்டிருந்தார்.

பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3

‘`கடைசியாக சில பேப்பர்கள்தான், சார். மேடம்கூட இங்கே வந்துவிட்டார்கள். உங்களோடு விமான நிலையத்துக்கு வரக் கறுப்புப்பூனைகளும் தயாராக இருக்கிறார்கள்” என்று அவரிடம் தகவல் சொல்லிவிட்டு, நிதி அமைச்சகத்தின் கோப்பு ஒன்றை அவர் பிரதமரிடம் அளித்தார்.
அதிலிருந்த கடிதத்தில் இப்போது இருக்கும் ரிசர்வ் வங்கி கவர்னருக்குப்பிறகு அடுத்து யாரை அந்தப் பதவிக்கு நியமிக்கலாம் என்பதற்காக ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட சில பெயர்கள் இருந்தன.

‘`கவர்னரின் பதவிக்காலம் எப்போது முடிகிறது?” எனப் பிரதமர் கேட்டார்.

‘`இன்னும் ஆறு மாதத்தில், சார்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3



‘`அப்படியென்றால் இன்னும் அவகாசம் இருக்கிறது. இந்த ஷார்ட் லிஸ்ட் கொஞ்சம் `ஹோல்டு’ பண்ணுங்கள். நான் அமெரிக்காவிலிருந்து வந்தபிறகு இதுபற்றி முடிவு செய்துகொள்ள லாம் என்று மாண்புமிகு நிதி மந்திரியிடம் சொல்லிவிடுங்கள். நான் தேவையான குறிப்பை இதில் எழுதி அனுப்பிவிடுகிறேன்’’ என்று பிரதமர் சொல்ல, ‘‘சார்’’ என்று அதற்குத் தலையாட்டினார்.

‘`தாங்க்ஸ்’’ என்று சொல்லி விட்டுச் செயலாளரைப் பார்த்துச் சிரித்தார். ``கவர்னர் நாற்காலியில் அவருடைய ஆளை உட்கார வைப்பதற்கு நான் உடந்தையாக இருக்கப் போவதில்லை. அதனால் எனக்கு ஒரு புதுப் பட்டியல் வேண்டுமென்று அவரிடம் கொஞ்சம் மெதுவாகச் சொல்லி வையுங்கள்” என்றபடி  நாற்காலியிலிருந்து எழுந்து கதவை நோக்கிச் சென்ற பிரதமர், திரும்பிப் பார்த்துச் செயலாளரிடம், ‘`இதை எழுத்து மூலம் சொல்லாமல், வாய்மொழியாகவே  சொல்லுங்கள்’’ என்றார்.

மும்பை

அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்தளத்தில் காரை நிறுத்திவிட்டு, 16-வது மாடிக்குச் செல்ல லிஃப்டை நோக்கி சுவாமி செல்லும்போது நேரமாகிவிட்டிருந்தது. `நியூயார்க் இன்டர்நேஷனல் பேங்கி’ன் (NYIB) ரீடெயில் பிரிவின் தலைவராக இருக்கும் சுவாமி, வேலைப்பளு காரணமாகத் தனது குடும்பத் தினருடன் – இரண்டு அழகான மகள்கள், போற்றுதலுக்குரிய மனைவி கல்பனா, அவருடைய அம்மா, அவர்களுடைய லாப்ரடோர்கூட அதிகமாக நேரம் செலவழிக்க முடிவதில்லை.

இவர்கள்தான் அவருடைய உலகம். அவர் தனது 45 வருட வாழ்க்கையைச் சற்றே பின்னோக்கிப் பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் அவர் காத்து வந்த பண்புகளை அவரது குடும்பத் தினர் ஏற்றுக்கொண்டிருப்பது அவருக்குத் திருப்தியளித்தது. சுவாமி, கடின உழைப்பாளி, நேர்மையானவர், மிகவும் அர்ப் பணிப்புத் தன்மை கொண்டவர். வேலை பார்க்கும் இடத்தில் இவருடைய குழுவிலிருப்பவர்கள் இவர்மீது மிகவும் பிரியம் வைத்திருந்தார்கள்; குடும்பத் தினரோ, இவரைப் போற்றுபவர்கள்.

பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3

சுவாமி, 1980-களின் பிற்பகுதியில் ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் எம்.பி.ஏ முடித்துவிட்டு, உடனடியாக என்.ஒய்.ஐ.பி-ல் மேனேஜ்மென்ட் ட்ரெய்னியாகச் சேர்ந்தார். மிகவும் கடினமான சூழ்நிலைகள் கொண்ட என்.ஒய்.ஐ.பி–யின் அதிகார வளாகத்தில் அவர் தனது கடின உழைப்பின் மூலம் இப்போதிருக்கும் நிலையை அடைந்திருக்கிறார். அதிர்ஷ்டமும் தன் பங்குக்கு அவருக்கு உதவி செய்தது.

சுவாமி வங்கியில் சேர்ந்த முதல் வாரத்தில், அப்போது இந்த வங்கியின் இந்தியச் செயல் பாட்டுக்குத் தலைமைப் பொறுப்பி லிருந்தவர் ஆதித்ய ராவ். அவர் இவரையும், இன்னும் இருவரையும் – சந்தீப், கல்பனா – தேர்வு செய்து ரீடெயில் பேங்கிங் திட்டத்தை முன்னெடுத்தார். ஆரம்பக் காலத் தடுமாற்றத்திற்குப்பின் காதல் என்கிற சுழல்காற்றில் சிக்கி, குஜராத்தி பெற்றோரின் ஒரே மகளான கல்பனாவைத் திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கல்பனாவின் தொழில் வாழ்க்கை சுணக்கம் கண்டு, திருமண வாழ்க்கை, குடும்பம் என்கிற கனவுலகில் ஐக்கியமானார்.

ஆதித்ய ராவ், ஸ்வாமி, சந்தீப் ஆகிய மூவரும் சக பணியாளர்கள் பொறாமைபடக்கூடிய அளவுக்கு அதிக புத்திசாலித்தனமும், ஆற்றல் மிக்கவர்களாகவும், அனைவ ரோடும் இணக்கமாக இருக்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். அனைத்தும் சிறப்பாக இருந்தன.

ஆனால், சில வருடங்களுக்குப் பிறகு அதிகாரத்துக்கும், பேரார்வத்துக்கும் ஆசைப்பட்ட சந்தீப், மிகவும் மோசமான நிலையை அடைந்தான். பெண் களின் மீதான நாட்டமும், அப்பட்டமான அதிகார துஷ்பிர யோகமும், பணத்தின் மீதான பேராசையும் சந்தீப்பின் சரிவுக்குக் காரணங்களாக இருந்தன. அதுவும் அவன் பணி வாழ்க்கையில் நன்கு முன்னேறி, வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நடந்தது.

சந்தீப்பை அந்த நிலையிலும் வேலையில் வைத்திருந்தது குளோபல் சி.இ.ஓ-வின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த ஆதித்ய ராவின் நற்பெயரையும் கெடுத்திருந்தது.

சுவாமிக்கும், சந்தீப்புக்கும் ஆதித்ய  ராவ் `அப்பா’ ஸ்தானத்தில் இருந்தார். அவர் விவாகரத்து ஆனவர். அவருடைய குடும்பத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. அவர்தான் சார்ந்த விஷயங்களை மிகவும் பாதுகாப் பாக, யாருக்கும் தெரியாமல் வைத்திருந்ததால் யாரும் அவரைக் கேட்பதுமில்லை.

பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3

சுவாமி, கல்பனாவுடன் சேர்ந்து இரவுச் சாப்பாடு சாப்பிடும் வேளையில் அவருடைய அம்மா அவரை நோக்கி வந்தார். ‘`கொஞ்ச நேரத்துக்கு முன்பு மங்களா வந்திருந்தாள்’’ எனப் பேச்சை ஆரம்பித்தார்.

‘`ஹ்ம்ம்ம்….’’ சுவாமி வெறுமனே தலையை ஆட்டிவிட்டு, தனது இடது கையை மேல்நோக்கிக் காண்பித்தார்.

‘`ஆமா, 17-வது மாடியில் இருக்காளே, அவளேதான்.’’

‘`என்ன ஆச்சு?”

‘`அவளுக்கு உங்க பேங்ல ஏதோ பிரச்னையாம்; உதவி வேணும்னு கேட்டு வந்தா. அவளுக்குத் தெரியாம அவ கணக்கில இருந்து 27 ஆயிரம் ரூபாயை யாரோ எடுத்துட்டாங்களாம்.’’

‘`அது எப்படித்  திடீர்னு  பணம் காணாமல் போகும்? அவங்க எடுத்துட்டு மறந்திருப்பாங்க. அவங்க பேங்க்ல கஸ்டமர் கேர் பிரிவுல யாரையாவது பார்த்தாங்களா, அம்மா?”

‘`ஹ்ம்ம்ம்… சுவாமியின் அம்மா தலையாட்டினார். ‘‘ஆமா, பார்த்தாங்களாம். இ-மெயில்தான் இந்தப் பிரச்னைக்குக் காரணம்னு சொன்னாங்களாம்!’’

‘`இ-மெயில்...? என்ன இ-மெயில்?’’ அவருடைய நெற்றியில் கவலை ரேகை தெரியத் தொடங்கியது.

‘`சில நாள்களுக்குமுன்பு அவளுக்கு வோடோஃபோனிலிருந்து ஒரு இ-மெயில் வந்துச்சாம். அதுல, ‘நாங்க உங்ககிட்டேயிருந்து ரூ.2000 அதிகமா சார்ஜ் பண்ணிட்டோம். அதைத் திரும்பத் தர்றோம். உங்க  பேங்க் அக்கவுன்ட்டை லாக் இன் (log-in) பண்ணி, போன் நம்பரப் பதிவு செஞ்சா, பணத்தை உங்கக் கணக்கில நேரடியாக கிரெடிட் செஞ்சிட்றோம்’ன்னு இருந்ததாம்.

‘`அப்புறம், முட்டாளைப்போல, அவங்க அக்கவுன்ட் நம்பரையும், பாஸ்வேர்டையும் தந்திருப்பாங்க, இல்லையா?’’

சுவாமியின் அம்மா தலையாட்டினார். ‘‘அவங்க வேற என்ன செய்ய  முடியும்? பாவம், அவளோ பேங்க்ல இருந்து வர்ற வட்டியை வச்சு வாழ்க்கை நடத்திட்டு இருக்கிறா. அவளுக்கு ரூ.2000-ங்றது பெரிய தொகை. அந்த இ-மெயில் உண்மையானது போலவே இருந்துச்சு. அதை என்கிட்டகூட அவ காமிச்சா’’ என்றார்.

பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3

‘`ஆனா, அவங்க இன்டர்நெட் பேங்கிங் செய்யமாட்டாங்கன்னு நீங்களே ஒருமுறை என்கிட்ட சொன்னீங்களே?”

‘`அவ செய்தறதில்லைதான். ஆனா, அவ பாஸ்வேர்டை டயரில குறிச்சு வைச்சிருந்திருக்கா. அதைப் பார்த்து எண்டர் பண்ணியிருக்கா’’

‘`அம்மா... அவங்க காமன்சென்ஸை யூஸே பண்ணமாட்டாங்களா? யாரோ ஒருத்தர் இவங்களோட கணக்கிலப் பணம் போடுறதுக்கு ஏன் இவங்க பாஸ்வேர்டு கேக்கணும்? அவங்களுக்குத் தேவையானதெல்லாம் வங்கிக் கணக்கோட நம்பர்தானே! அது ஃப்ராட் மெயிலுன்னு அவங் களுக்குத் தெரிய வேணாமா?’’ எனக் கோபமாகக் கேட்டார்  சுவாமி.

சுவாமி பேசிக்கொண்டிருந்தாலும், அவர் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். இந்த மாதிரி மெயில் ஏதாவது வந்திருந்தால், அவரது கவனத்துக்கு அது உடனே வந்திருக்கும். அதுதான் பேங்கின் நடைமுறை. ஆனால், இதுவரைக்கும் பேங்கில் இவரிடம் யாரும் அதுபற்றி பேசவில்லை. ‘இது நம்ம பேங்க்ல  யாருக்கெல்லாம் இது தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கும்’ என யோசிக்க ஆரம்பித்தார்.

‘`எனக்குத் தெரியல்லை. சில மோசடிப் பேர்வழிங்க அவளோட பணத்தை எடுத்துக்கிட்டாங்க. அவளுக்கு உதவி பண்ணுப்பா, சுவாமி!’’ என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு எழுந்தார் சுவாமியின் அம்மா.

‘`அவங்களுக்குப் பேராசை’’, என்று ஆத்திரத்தோட சொல்லிக்கொண்டே கை கழுவுவதற்காக சுவாமி எழுந்தார். ‘`என்னால என்ன செய்ய முடியுமுன்னு பார்க்கிறேன். ஆனா, அதுக்கு இன்னும் சில விவரங்கள் எனக்கு வேணும். அவங்க பணம் திரும்பக் கிடைக்கிறதுக்கு கொஞ்ச நாளாகும்’’ என்றார் சுவாமி.

(பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3

கோடிகளைக் குவித்த பிரசாந்த் ஜெயின்!

ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஐ.பி.ஓ வர உள்ளது. எதிர்வரும் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்த ஐ.பி.ஓ வெளியாகலாம் என்கிறார்கள். இந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான மிலிந்த் பார்வே, முதன்மை முதலீட்டு அதிகாரியான பிரசாந்த் ஜெயின் ஆகியோருக்கு ஸ்டாக் ஆப்ஷன் என்கிற வகையில் பல பங்குகள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளன.  ஹெச்.டி.எஃப்.சி மியூச்சு வல் ஃபண்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ.1,500 என்று மதிப்பிட்டால், மிலித் பார்வே-வின் சொத்து மதிப்பு ரூ.175 கோடியாகவும் பிரசாந்த் ஜெயினின் சொத்து மதிப்பு ரூ.139 கோடியாகவும் இருக்கும் என்கிறார்கள். கலக்குங்குப்பா!