நடப்பு
தொடர்கள்
Published:Updated:

உள்நாட்டுத் தேவை உயர்ந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்!

உள்நாட்டுத் தேவை உயர்ந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
உள்நாட்டுத் தேவை உயர்ந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்!

ஹலோ வாசகர்களே..!

மீண்டும் உலகைக் குலுங்க வைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவின் உற்பத்தித் துறையைப் பாதுகாக்கும் வகையில், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் முக்கியமான சில பொருள்களுக்கு 50 பில்லியன் டாலர்கள் வரை இறக்குமதி வரியை விதித்திருக்கிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி தருகிறமாதிரி, சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 30 பில்லியன் டாலர்கள் வரை இறக்குமதி வரி விதித்துப் பதிலடி தந்திருக்கிறது.

உலகின் இருபெரும் நாடுகள் இப்படி ‘வர்த்தக யுத்தம்’ நடத்திக்கொண்டிருக்க, இதனால் நம் நாட்டின் ஏற்றுமதியும் சிறிது பாதிப்படையும் நிலை உருவாகி யுள்ளது. இதேபோன்ற வரிகள், நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு விதிக்கப்பட்டால், நமது பொருளாதார வளர்ச்சியானது மேலும் குறையவே வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில், நமது ஏற்றுமதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நமது வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.  

உள்நாட்டுத் தேவை உயர்ந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்!


இந்தப் பின்னணியில், நம் நாட்டின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் யோசித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது குறித்து நமது ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சொன்ன கருத்து கவனிக்கத்தக்கது. ‘‘7.5% என்கிற அளவில் இந்தியப் பொருளாதாரம் வளரும்பட்சத்தில், ஆண்டுதோறும் வேலைச் சந்தைக்கு வரும் 1.2 கோடி பேருக்கு வேலை தரமுடியாது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமே இந்தியப் பொருளாதாரம் 10% வரை வளர்ச்சி அடைய வாய்ப்புண்டு’’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆக, புதிதாக பல லட்சம் வேலைகளை உருவாக்குவதினால் மட்டுமே நம்முடைய பொருளாதார வளர்ச்சியைச் சுணக்கமில்லாமல் மேலே கொண்டு செல்ல முடியும். நாடு முழுக்க வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் உருவாக்குவதன் மூலமும், உற்பத்தித் துறையை முடுக்கிவிடுவதன் மூலமும், விவசாயத்தில் புதிய புரட்சியைக் கொண்டுவருவதன் மூலமும்தான் பல லட்சம் வேலை வாய்ப்புகளை நம்மால் உருவாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. 

‘‘இப்படிப் புதிய வேலைவாய்ப்புகளைப் பெருகினால் மட்டுமே, வாங்கும் திறன் கொண்ட மக்கள் அதிக அளவில் உருவாவார்கள். உள்நாட்டில் தேவை அதிகரிப்பதன் மூலமே நமது பொருளாதாரம் 8-10 சதவிகிதத்துக்கு அடுத்த 30 - 40 ஆண்டுகளுக்கு வளரும்’’ என நமது முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் சொல்லியிருப்பதை நாம் கவனமாக ஆராய வேண்டும்.

இன்னும் ஓராண்டு காலமே இருக்கும் நிலையில், வேலைவாய்ப்பினைப் பெருக்கி, பொருளாதார வளர்ச்சியை உயர்த்திட மோடி அரசாங்கம் உடனடியாகக் களமிறங்க வேண்டும் என்பதே நமது ஒரே வேண்டுகோள்!

- ஆசிரியர்