Published:Updated:

திவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்!
திவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்!

சி.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. பொதுத் துறையைச் சேர்ந்த ஒரே லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனமும் கூட.  60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருவதால், எல்.ஐ.சி-யில் அதிகமானவர்கள் பாலிசி எடுத்திருக்கிறார்கள். ஏறக்குறைய 30 கோடி பேர் எல்.ஐ.சி-யில் பாலிசி எடுத்திருக்கிறார்கள். இதிலிருந்தே இந்த நிறுவனத்தின்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எவ்வளவு பெரிது என்பது புரியும்.

இந்த நிலையில், எல்.ஐ.சி நிறுவனம், பங்கு முதலீடு செய்துள்ள சில  நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகள் காரணமாகத் திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ளன. இதனால், எல்.ஐ.சி  நிறுவனத்துக்குப் பாதிப்பு ஏற்படுமோ என்கிற சந்தேகம் இந்த நிறுவனத்தின் பாலிசிதாரர்களுக்கு உருவாகியுள்ளது. இந்தச் சந்தேகமும், குழப்பமும் தேவைதானா, திவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி  செய்துள்ள முதலீட்டின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தில் அந்த நிறுவனத்துக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படுமா என்பதை அறிய களத்தில் இறங்கினோம். இது குறித்து நிபுணர்களின் கருத்தைக் கேட்க, வெல்த்லேடர் நிறுவனத்தின் இயக்குநர்  எஸ்.ஸ்ரீதரனை முதலில் சந்தித்தோம்.

திவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்!

‘‘பாலிசிதாரரிடமிருந்து வசூலிக்கும் பிரீமியம் தொகையைக் கொண்டு, கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் நீண்ட காலமாக எல். ஐ.சி முதலீடு செய்துவருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக எல்.ஐ.சி, அதிக பங்குச் சந்தை மதிப்புள்ள முன்னணி நிறுவனங்களின் பங்குகளில்தான் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. கடந்த டிசம்பர் 2017 நிலவரத்தின்படி, எல்.ஐ.சி நிறுவனம் 370-க்கும் அதிகமான பங்கு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. குறைந்தபட்சம் 1 சதவிகிதத்தி லிருந்து அதிகபட்சம் 15% வரை என நிறுவனத்துக்கேற்ற மாதிரி எல்.ஐ.சி-யின் முதலீடு விரிந்துள்ளது. இதில் 68 நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் மட்டுமே ரூ.100 கோடிக்கும் குறைவு.

இந்த நிலையில், திவால் சட்டத்தின்படி (Insolvancy and Bankruptcy Act) தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற அமைப்பானது (National Company Law Tribunal - NCLT), அலோக் இண்டஸ்ட்ரீஸ், ஜோதி ஸ்ட்ரக்சர், ஆம்டெக் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் மீது பாய்ந்தது. இந்த நிறுவனங்களின் பங்குகளில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.

தவிர, பங்கு விலை அதிகமாக இறங்கிக் காணப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜி.டி.எல் இன்ஃப்ரா, எலெக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங்ஸ், ஆப்டோ சர்க்யூட்ஸ் (இந்தியா), ஸைலாக் சிஸ்டம்ஸ், லோல்டா இந்தியா, ஆபான் ஆஃப்ஷோர், ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ், மொன்னத் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களிலும் எல்.ஐ.சி-யின் பங்கு முதலீடு உள்ளது.

மோசமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை இல்லாமை, அதிக கடன், மோசடிப் புகார் போன்ற காரணங்களால் கீதாஞ்சலி ஜெம்ஸ், வக்ராங்கி மற்றும் வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனப் பங்குகளின் விலை, கணிசமாக இறக்கம் கண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களிலும் எல்.ஐ.சி-யின் முதலீடு உள்ளது. ஆனால், தற்போது பெரும் சிக்கலில் மாட்டியிருக்கும் பஞ்சாப் நேஷனல் பேங்கில் எல்.ஐ.சி. நிறுவனம் 12% சதவிகித முதலீட்டை வைத்திருந்தது. நல்லவேளையாக, கடந்த நவம்பர் காலாண்டிலேயே அந்தப் பங்குகளை விற்றுவிட்டது.

திவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்!

எல்.ஐ.சி முதலீடு செய்து, திவாலாகும் நிலையில் உள்ள மற்றும் நிர்வாகச் சிக்கலில் உள்ள சுமார் பத்து நிறுவனங்களின் பங்குகளின் விலை அதன் உச்சவிலையிலிருந்து சுமார் 90% வரை குறைந்துள்ளது. இந்த நிறுவனப் பங்குகளைக்கூட எல்.ஐ.சி என்ன விலையில் வாங்கியுள்ளது என்கிற தகவல் பொதுவெளியில் இல்லை. என்றாலும், இந்த முதலீட்டின் மூலம் எல்.ஐ.சி-க்கு சிறு இழப்பு ஏற்படுமே தவிர, அந்த நிறுவனமே திவாலாகும் அளவுக்கு இழப்பு ஏற்படாது. 

பங்குச் சந்தை முதலீட்டில் ஏற்ற இறக்கங்கள் என்பது சகஜம். கடந்த 3 மற்றும் 5 ஆண்டுகளில், சிறிய மற்றும், நடுத்தர மூலதனமுள்ள நிறுவனப் பங்குகள் (ஸ்மால் அண்ட் மிட் கேப் ஷேர்ஸ்) அதிக லாபம் தந்தது. ஒரு போர்ட்ஃபோலியோவை தேர்ந்தெடுக்கும்போது, அந்த போர்ட்ஃபோலியோவின் மொத்த லாபத்தைப் பார்க்கவேண்டுமே தவிர, அந்த போர்ட்ஃபோலியோவின் மூலம் ஏற்படும் சிறு நஷ்டத்தையோ அல்லது அந்த நஷ்டத்தைத் தரும் பங்குகள் பற்றியோ அதிகம் கவலைபடக்கூடாது.

எல்.ஐ.சி, ரூ.23,15,899 கோடியை இந்தியாவின் பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. மேலும். ரூ.44,216 கோடியைப் பணச் சந்தையில் (மணி மார்க்கெட்ஸ்) முதலீடு செய்துள்ளது. இவ்வளவு அதிகமாக முதலீடு செய்திருக்கும் எல்.ஐ.சி போன்ற ஜாம்பவான்களுக்கு இந்தச் சரிவு பெரிய இழப்பை ஏற்படுத்தாது. எனவே, இந்த நிறுவனத்தின் பாலிசிதாரர்கள் இது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை” என்றார்.

எல்.ஐ.சி, பட்டியலிடப்படாத நிறுவனம் என்பதால், அதன் பங்கு முதலீடுகள் குறித்த தகவல்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் கிடைக்காது. ஒரு நிறுவனப் பங்கை எல்.ஐ.சி நிறுவனம் எந்த விலையில் வாங்கியிருக்கிறது, எந்த விலையில் விற்றது என்கிற விஷயம் எல்.ஐ.சி தவிர யாருக்கும் துல்லியமாகத் தெரிய வாய்ப்பில்லை.  

திவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்!

பாதிப்பு ஏற்படுத்தாது

இதுபற்றி பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனுடன் பேசினோம். ‘‘2016-17-ம் ஆண்டில் மட்டும்  எல்.ஐ.சி-யின் மொத்த முதலீடு ரூ.3,61,654 கோடி. இதில் பெரும்பகுதியான ரூ.2,60,000 கோடியை மத்திய, மாநில அரசுகளின் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்திருக்கிறது. எனவே, இதில் பிரச்னை ஏதும் இல்லை. இதுதவிர, நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் ரூ.27,350 கோடியும், பங்குச் சந்தையில் ரூ.41,751 கோடிகளும் முதலீடு செய்திருக்கிறது. இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.19,302.46 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது.

2016-17-ம் ஆண்டறிக்கையின்படி, எல்.ஐ.சி. இதுவரை செய்த முதலீடுகளின் மூலமாக மட்டுமே ரூ.1,64,015 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், பங்குச் சந்தை உள்ளிட்ட மொத்த முதலீடு ரூ.23,18,952.07 (வெளிநாட்டு முதலீடு உள்பட) கோடி என மிக வலுவான நிலையிலேயே எல்.ஐ.சி இருப்பதாகச் சொல்கிறது ஆண்டறிக்கை.

அவ்வப்போதைய சந்தை ஏற்ற இறக்கத்தின் காரணமாக, குறுகிய கால அடிப்படையில் இதில் ஒருபகுதி மதிப்புக் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். அதையும் மீறி, சென்ற ஆண்டு ரூ.19,302 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது எல்.ஐ.சி நிறுவனம். 

எல்.ஐ.சி., தொடர்ந்து பல ஆண்டுகளாக லாபம் ஈட்டி வருவதற்கும், அரசுக்கு டிவிடெண்ட் (ஈவுத்தொகை) தந்து வருவதற்கும், தவறாமல் பாலிசிதாரர்களுக்கு போனஸ் தந்து வருவதற்கும் இந்தப் பங்குச் சந்தை முதலீடுகளே முக்கியக் காரணம் என்பது நிச்சயம்.

திவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்!

பங்குச் சந்தை முதலீடுகள் மட்டும் இல்லையென்றால், நம் நாட்டின் பெரும்பான்மையான காப்பீடு நிறுவனங்கள் என்றைக்கோ இழுத்து மூடப்பட்டிருக்கும். கடந்த 1988, 1992, 1994, 2001, 2008 எனப் பல பங்குச் சந்தை வீழ்ச்சிகளையும், ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் உள்ளிட்டவர்களின் பல தில்லுமுல்லுகளையும் தாண்டித்தான் காப்பீடு நிறுவனங்கள் லாபம் ஈட்டிவருகின்றன என்றால், பங்குச் சந்தையில் செய்த முதலீடுகள் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

இதில் கொஞ்சம் கவலை அளிக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், ‘சால்வன்சி ரேஷியோ’தான். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், நிறுவனத்திற்கு ஏதாவது நிதிப் பிரச்னை ஏற்பட்டால், கொடுக்க வேண்டியவற்றிற்கு மேலாக எவ்வளவு சொத்துகள் இப்போது இருக்கின்றன எனக் கணக்கிடும் முறைதான் அது. ஐ.ஆர்.டி.ஏ.ஐ பரிந்துரைத்திருக்கும் 1.50 மடங்குக்கு மேல் 1.58 எனும் அளவில் சால்வன்சி ரேஷியோ சற்று அதிகமாக இருந்தாலும்கூட, பல தனியார் காப்பீடு நிறுவனங்களுடைய அளவு மூன்று அல்லது நான்கு மடங்காகக்கூட இருப்பதைப் பார்க்கலாம்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், இப்போது ஏற்பட்டிருக்கும் சங்கடமெல்லாம் தற்காலிகமானதே. இவையெல்லாவற்றையும் வெற்றிகரமாகத் தாண்டி, லாபம் ஈட்டும் அளவுக்கு நல்ல பல முதலீடுகள் நீண்ட காலமாக பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனங்களிடம் உள்ளன. அதனால், இப்போதைக்கு அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்பதே என் கணிப்பு’’ என்றார்.

இந்த விஷயம் குறித்து இறுதியாக, ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். 

திவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்!

‘‘எல்.ஐ.சி நீண்ட காலமாக பங்குச் சந்தையில் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தற்போது நல்ல நிலையில் செயல்படும் நிறுவனங்கள்கூட பிற்காலத்தில் திவாலாக வாய்ப்புண்டு. தவறான வணிகச் சுழற்சி, தொழில்நுட்ப மாற்றங்கள், மூலதனச் செலவுகள் அதிகரிப்பு போன்றவை இதற்குக் காரணங்களாக இருக்கலாம். கோடாக் ஃபிலிம், ஒரு காலத்தில் உலக அளவில் 85% சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருந்தது. இன்றைக்கு அந்த நிறுவனம் எங்கே என்று தேட வேண்டியிருக்கிறது. இப்படிப் பல நிறுவனங்கள், தங்களைக் காலத்துக்கேற்ப மாற்றிக்கொள்ளாததால் காணாமல் போயிருக்கின்றன. அந்த வகையில், எல்.ஐ.சி செய்த முதலீடுகளைத் தவறு என்று சொல்ல முடியாது. இது குறித்து எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் பயப்படத் தேவையில்லை. காரணம், எல்.ஐ.சி முதலீடு செய்துள்ள மொத்தப் பங்குகளில், திவாலாகும் பங்குகளின் மதிப்பு என்று பார்த்தால், மிகக் குறைவுதான். மேலும், எல்.ஐ.சி நிறுவனம், இந்தப் பங்குகளைக் குறைந்த விலையில்தான் வாங்கியிருக்கும்.

ஒரு பெரிய நிறுவனம், முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் 10-15% நிறுவனங்கள் சரியாகச் செயல்படாமல் போவது, பங்குச் சந்தை முதலீட்டுக்குப் புதிய விஷயமே அல்ல. எல்.ஐ.சி விஷயத்தில் மிகச் சில நிறுவனங்கள்தான் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் பேங்க் மோசடி போன்ற நிகழ்வு சார்ந்த ரிஸ்க் என்பது பங்கு முதலீட்டில்  சாதாரணமாக நிகழக்கூடியது. அதற்காக, பங்கு முதலீடு செய்வது தவறாகாது. எனவே, எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் கவலைப்படத் தேவையில்லை” என்றார்.

திவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி செய்துள்ள முதலீடு பற்றி கவலைப்படத் தேவையில்லை என நிபுணர்களே தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இனியென்ன கவலை..?

படங்கள் : தே.அசோக் குமார்

கோவை டை... போட்டி முடிவுகள் விரைவில்..!

கோவையில் உள்ள டை (TiE) அமைப்பின் சார்பில் ஸ்டார்ட் அப் போட்டிகளுக்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என கோவை டை அமைப்பின் தலைவர் ஜி.கார்த்திகேயன் அறிவித்திருக்கிறார்.

இந்தப் போட்டிக்கு வந்த விண்ணப்பங்களை சலித்தெடுத்து, மதுரை, சென்னை, கோவை என ஆறு மண்டலங்களில் தகுதி வாய்ந்த ஐடியாக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வருகிற 31-ம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும். இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு, 3 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரை தொழில் முதலீடு வழங்கப்படவுள்ளது.

திவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்!

பாலிசிதாரர்கள் பயப்படத் தேவையில்லை!

எல்.ஐ.சி-யின் உயரதிகாரி கருத்து


இந்த விஷயம் குறித்து எல்.ஐ.சி-யின் கருத்தை அறிய, அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டோம். எல்.ஐ.சி-யின் தெற்கு மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் நம்மிடம் இது குறித்துப் பேசினார்.

‘‘பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் எல்.ஐ.சி-க்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு ரூ.30,000 கோடி என்பது தவறான தகவல். இழப்பு என்பது சுமார் ரூ.2,500 கோடி மட்டுமே. எல்.ஐ.சி-யின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.30 லட்சம் கோடி. இத்தனை பெரிய தொகையுடன் ஒப்பிடும்போது, இந்த ரூ.2,500 கோடி இழப்பு என்பது மிக மிகச் சிறிதுதான். மேலும், இந்த ரூ.2,500 கோடியில் ரூ.2,000 கோடிக்கு ஏற்கெனவே நாங்கள் ஒதுக்கீடு செய்துவிட்டோம். இப்போது இழப்பாக இருப்பது வெறும் ரூ.500 கோடிதான்.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, பங்குச் சந்தை மூலமான இழப்பில் 70% தொகை ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள 30 சதவிகித தொகை வரும் என எதிர்பார்க்கிறோம். நிறுவனங்களின் சொத்துகள் விற்கப்பட்டு செட்டில் செய்யப்படும்போது எல்.ஐ.சி-யின் முதலீட்டுக்கு இந்தத் தொகை வரும் என எதிர்பார்க்கிறோம். எல்.ஐ.சி நிறுவனம், அதன் ஃபண்டில் 15 சதவிகிதத்தை மட்டும்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியும். மீதித் தொகையை முதலீட்டுக்குப் பாதகமில்லாத அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கிறோம்” என்றவர் சற்று நிறுத்தித் தொடர்ந்தார்.

‘‘சென்செக்ஸ் குறியீடு 2008-ம் ஆண்டில் 18500 புள்ளிகளிலிருந்து 8000 புள்ளிகளுக்கு இறங்கியது. அப்போது எல்.ஐ.சி-யின் முதலீட்டு மதிப்பு மிகவும் இறங்கியது. அதன்பிறகு சந்தை ஏற்றம் காணத் தொடங்கியபோது, முதலீட்டின் மதிப்பு ஏற்றம் காண ஆரம்பித்தது. இப்போது சென்செக்ஸ் 33000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டிருக்கிறது. எங்கள் நிறுவனத்தில் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகள் முதிர்வு மற்றும் இறப்பு க்ளெய்ம்-க்குத் தேவையான தொகையைப் புதிதாகக் கட்டும் பிரீமியத் தொகை மற்றும் பாண்ட் முதலீடுகளின் மூலம் வரும் வருமானத்தின் மூலம் ஈடுகட்டுகிறோம். அந்த வகையில், எல்.ஐ.சி-க்கு இப்போதைக்குப் பணத் தேவையில்லை. எனவே, இழப்பில் இருக்கும் பங்குகள் லாபத்துக்கு வரும் வரை காத்திருப்போம்.

அடுத்த 15-20 வருடங்கள் கழித்துதான் எல்.ஐ.சி-க்குப் பணம் தேவைப்படும். அதற்குள் இறக்கத்தில் இருக்கும் பங்குகளெல்லாம் லாபத்துக்கு வந்துவிடும். ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஐ.பி.ஓ வந்தபோது, எல்.ஐ.சி ரூ.6,000 கோடி முதலீடு செய்தது. அப்போது பலரும் எல்.ஐ.சி தவறாக முதலீடு செய்துவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால், எல்.ஐ.சி எப்போதும் நீண்ட கால முதலீட்டாளர் என்பதால், அதன் பங்கு விலை பின்னர் நன்கு அதிகரித்தபோது விற்று லாபம் பார்த்தோம். பங்குச் சந்தை இறங்கியுள்ள நிலையில், அடிப்படையில் வலுவான நிறுவனப் பங்குகள் மலிவான விலையில் கிடைக்கும்போது வாங்குவதை எல்.ஐ.சி வழக்கமாக வைத்திருக்கிறது. லாபத்துக்குத் திரும்பும்போது விற்று லாபம் பார்ப்போம். பொதுவாக, எல்.ஐ.சி நிறுவனம், சந்தை இறங்கும்போது மட்டுமே முதலீடு செய்யும்; சந்தை ஏறும்போது கொஞ்சம் கொஞ்சமாக விற்று லாபம் பார்க்கும்’’ என்றவரிடம், எல்.ஐ.சி-க்கு ஏற்பட்டிருக்கும் இழப்பினால், பாலிசிதாரர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?’’ என்று கேட்டோம்.

‘‘எல்.ஐ.சி நிறுவனத்தின் உரிமையாளர், மத்திய அரசு ஆகும். அந்த வகையில், எல்.ஐ.சி-யின் பாலிசிகளுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளது. இந்த உத்தரவாதம் வேறெந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் கிடையாது. எனவே, பாலிசிதாரர்கள் பயப்படத் தேவையில்லை” என்றார்.

திவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்!

பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது..!

விஜயானந்த வெங்கட்ராமன், செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட்.

‘‘எல்.ஐ.சி நிறுவனம் போன்ற இன்ஷூரன்ஸ் மற்றும் பென்ஷன் அமைப்புகள்,  தங்களின் பங்குச் சந்தை முதலீடு களை அஸெட் அலோ கேஷன் மற்றும் டைவர்சிஃபிகேஷன் செய்வதன் மூலமாகப் பிரித்து முதலீடு செய்து சமாளிக்கின்றன. திவாலாகும் நிறுவனங் களில் கணிசமான பங்கு களை எல்.ஐ.சி வைத்தி ருப்பினும், அவற்றை போர்ட் ஃபோலியோ அடிப் படையில் பார்க்கும்போது, மிகமிகக் குறைந்த அளவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். எனவே, இது எல்.ஐ.சி நிறுவனத்துக்கு எந்தவிதத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடாது.” 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு