நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்!

அரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்!

அ.முகைதீன் சேக்தாவூது

மீண்டும் ஏறுமுகமாகிவிட்டன வீட்டுக் கடனுக்கான, வங்கிகளின் வட்டி விகிதங்கள். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தரப்படும் இருபது வருட காலத்தில் ஏறுமுகமாகவும் இறங்கு முகமாகவும் நூறுமுகம் காட்டுகின்றன வட்டி விகிதங்கள். ஆனால், ஏறுமுகம் இறங்குமுகம் என்று இல்லாமல், கடன் வாங்கிய தேதியன்று விதிக்கப்பட்ட அதே வட்டி விகிதத்திலேயே கடனைக் கட்டி முடிக்கும் வரை மாறாமல் இருப்பது அரசு வழங்கும் வீட்டுக் கடன் மட்டுமே.  

அரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்!

   கடன் தொகை எவ்வளவு?

அரசு வழங்கும் இந்த வீட்டுக் கடனைக்கொண்டு  ஆயத்த வீடு (Ready Built House) வாங்கலாம்;  சொந்தமனையில் வீடு கட்டிக்கொள்ளலாம்; புதிதாக மனை வாங்கி, வீட்டைக் கட்டலாம். 

ஏ, பி, சி, டி ஆகிய நான்கு பிரிவுகளில் அடங்கிய தனது ஊழியர்களுக்குத் தமிழக அரசு தரும் அதிகபட்சக் கடன் ரூ.25 லட்சம் ஆகும். ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணியினருக்கு ரூ.40 லட்சம்  வரை கடன் தரப்படும்.

   என்ன நிபந்தனை?

அரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்!முன்பணம் கோரி விண்ணப்பிக்கும் ஊழியரின் பெயரிலோ, அவரது மனைவி/கணவர், பிள்ளைகள் பெயரிலோ, சொந்த வீடு இருக்கக் கூடாது என்கிற நிபந்தனை இந்தக் கடன் பெறுவதற்கு இருந்தாலும், அத்தகைய சொந்த வீடானது கிராமப்பகுதியில் இருக்குமானால், தாம் வசிக்க விரும்பும் நகர்ப்பகுதியில் வீடு ஒன்றைக் கட்டிக்கொள்ள முன்பணம் பெறலாம்.

இதேபோல், தற்போது குடியிருக்கும் சொந்த வீடானது, ஊழியருக்கும், அவரது உடன்பிறந் தோர் உள்ளிட்ட உறவுகளுக்கும் பாத்தியதை யுள்ள பூர்வீக வீடாக இருக்கும்பட்சத்தில்,  தனக்கே தனக்கென ஒரு தனி வீடு கட்ட, கட்டிய வீட்டை வாங்க, மனை வாங்கி வீடு கட்ட முன்பணம் பெற நிபந்தனையானது தளர்த்தப்படலாம்.

   கடனுக்கான வட்டி 

இதைவிட முக்கியமானது, கடனுக்கான வட்டிக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைதான். வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனங்களில் வாங்கிய கடனை, மாத சம தவணை (Equal Monthly Instalment) முறையில் திருப்பிச் செலுத்தும்போது, செலுத்தப்பட்ட தவணைத் தொகையில் அடங்கிய அசல் எவ்வளவு, வட்டி எவ்வளவு என்ற விவரம் தரப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் அசலுக்கும், வட்டிக்கும் உரிய வரிச் சலுகையைப் பெறலாம்.

ஆனால், அரசு வழங்கும் வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 180 தவணைகளில்  (15 ஆண்டுகளில்) அசல் தொகை முதலில் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். அதன் பிறகுதான் வட்டியானது பிடிக்கப்படும்.

‘அப்படியானால், வட்டிக்குத் தரப்படும் வரிச் சலுகையைப் பெற அசல் தொகைப் பிடித்தம் முடிவுக்கு வரும் 15 வருடங்கள்  வரை காத்திருக்க வேண்டுமா? வங்கிக் கடனில் கிடைக்கும் சலுகையைப் போல் அசலுக்கும், வட்டிக்கும் ஒரே சமயத்தில் வரிச் சலுகை பெற முடியாதா?’ என்பது தான் இப்போதைய முக்கியமான கேள்வி!

   வட்டிக்கான வரிச் சலுகை

வங்கி வீட்டுக் கடன் மூலம் பெறும் வட்டிக்கான வரிச் சலுகையைவிட, மேம்பட்ட வரிச் சலுகை அரசு வீட்டுக் கடன் மீதான வட்டிக்கு உண்டு. எப்படி என்று கேட்கிறீர்களா?

எப்படியெனில், வங்கிக் கடனைப் பொறுத்தவரை, செலுத்தப்பட்ட வட்டிக்குத்தான் வரிச் சலுகை பெறப்படுகிறது. தமிழக அரசு வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, வட்டியைச் செலுத்திய பிறகுதான் வட்டிக்கு வரிச் சலுகை என்பது கிடையாது. அசல் தொகை பிடித்தம் முடிந்த பிறகு செலுத்தப்படப்போகும் திரண்ட வட்டிக்கே (Accrued Interest) வரிச் சலுகை கிடைக்கும்.

ஆனால், அரசு வீட்டுக் கடன் மீது கூட்டுவட்டி கிடையாது. தனிவட்டி கணக்கீடுதான். அதன்படி, ஒவ்வொரு மாத முடிவி லும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட அசல் தொகை போக நிலுவையில் உள்ள அசல் தொகைமீது தனிவட்டியாகக் கணக்கிடப்படும். கடன் தொகை தரப்பட்ட மாதம் தொடங்கி, கடன் தொகை முழுமையாகப் பிடித்தம் செய்து முடிக்கும்வரை மாதாந்திர வட்டி கணக்கீடு தொடர்ந்து நடைபெறும். இந்தக் கணக்கீடு, திரள் வட்டி கணக்கீடு (Accrued Interest Calculation) எனப்படும். இப்படிக் கணக்கிடப் பட்ட வட்டியின் ஒட்டுமொத்தத் தொகைதான் கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டியாகும். இந்த வட்டியானது, அசல் முழுவதும் பிடித்தம் செய்து முடிந்தபிறகே பிடிக்கப்படும்.

ஆனால், வட்டியைப் பிடித்தம் செய்யும்முன்பே வட்டிக்கு உரிய வரிச் சலுகை கிடைத்துவிடும். எப்படி? மாதந்தோறும் திரண்ட வட்டி கணக்கிடப்படுகிறது அல்லவா? அவ்வாறு திரளும் வட்டியின் கூட்டுத்தொகை ஒரு நிதியாண்டுக்கு எவ்வளவோ, அந்தத் தொகை அந்தந்த நிதி யாண்டில் வட்டிக்கான வரிச் சலுகையாக கிடைக்கும். உதாரணமாக, ஓர் ஊழியர் சென்ற நிதியாண்டில் பெற்ற வீட்டுக் கடன் முன்பணம் ரூ.25 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். தவணை செலுத்தும் மாதங்கள் 100. மாதத் தவணைத்தொகை ரூ. 25,000. சென்ற நிதியாண்டிலேயே ரூ.2  லட்சம் அசல் தொகை பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது.

அரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்!

   வட்டி எவ்வளவு?

இந்த நிதியாண்டின் துவக்கத்தில் அசல் தொகை ரூ.23 லட்சமாக இருக்கும். முதல் மாதம் பிடித்தம் செய்தபின் ரூ.22,75,000-ஆகவும், இரண்டாவது மாதம் பிடித்தம் செய்ததும் ரூ.22,50,000- ஆகவும் அசல் தொகை குறைய ஆரம்பிக்கும். இதற்கான வட்டியைக் கணக்கிட்டால், நடப்பு நிதியாண்டுக்குத் திரண்ட வட்டி ரூ.2,04,500-ஆக இருக்கும். இதில் ரூ.2 லட்சம் வரிச்சலுகை பெறும் கடந்த நிதியாண்டின் வட்டி விகிதம் பின்வருமாறு:

ரூ.50,000 வரை - 5.5%
ரூ.50,000 முதல் 1,50,000 - 7.0%
ரூ.1,50,000 முதல் 5,00,000 - 9.0%
ரூ.5,00,000-க்குமேல் - 10.0%

அசல் தொகை முழுவதும் பிடித்து முடிக்கும் வரை மேற்கண்ட வட்டி விகிதம் மாறவே மாறாது. இதன்படி, ஒருவரின் கடன் நிலுவைமீது அடுத்த (2018-2019) நிதியாண்டுக்குத் திரளும் வட்டி ரூ.1,74,500-ஆக இருக்கும். இந்தத் தொகையும் வரிச் சலுகை பெறும். ஆக, அரசு வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, வட்டியைக் கட்டும் வரை காத்திராமல், திரண்ட வட்டியைக் கணக்கிட்டு, அதற்குரிய வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம்.

   எப்போது விண்ணப்பிக்கலாம்?

இந்தக் கடனுக்கு இப்போதே விண்ணப்பிப்பது நல்லது. அப்படி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள்   முன்னுரிமை பெறும். மூன்று, நான்கு மாதங்களுக்குள் கடன் தொகையைப் பெற்றுவிட வாய்ப்புண்டு.

   தேவையான ஆவணங்கள்

* தற்போதைய சம்பளச் சான்று, * வீட்டுமனை பத்திரம், * தற்போதைய வில்லங்கச் சான்று, * நில வரைபடம் (Site plan), * வீட்டு வரைபடம், * மதிப்பீடு (Estimate), * வீட்டுமனையில் விண்ணப்ப தாரரின் பாத்தியதை குறித்து அரசு வழக்குரைஞரின் கருத்து (opinion of govt. pleader), * வீடு கட்ட உள்ளாட்சியின் அனுமதி, * மனையானது, ஊழியரின் பெயரில் இல்லாமல் அவரது மனைவி / கணவர் பெயரில் இருந்தால், அவரது எழுத்துபூர்வமான இசைவு ஆகிய அனைத்தும்  இரட்டைப் பிரதிகளில், வீட்டுமனை எங்கு உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் குறைபாடுகள், விடுபாடுகள் இருந்தாலும் விண்ணப்பமானது முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். விடுபாடுகள் 15 தினங்களுக்குள் சரி செய்யப்படவேண்டும்.

   முன்பணம் விடுவித்தல்

* ஆயத்த வீடு வாங்கினால் ஒரே தவணையில் ஒட்டு மொத்த முன்பணமும் (கடன்) தரப்பட்டுவிடும். * சொந்தமான மனையில் வீடு கட்ட இரண்டு தவணைகளில் தரப்படும். * மனை வாங்கி அதில் வீடு கட்டவும், தனியார் கட்டித் தரும் வீடு / அடுக்குமாடி வீட்டை வாங்குவதற்கும் மூன்று தவணைகளில் முன் பணம் தரப்படும்.

   கடன் பணத்தைத் திரும்பக் கட்டுவது

* ஆயத்த வீடு வாங்க தரப்பட்ட முன்பணத்துக்கு, பணம் வழங்கப்பட்ட அடுத்த மாதமே அசல் தவணைப் பிடித்தம் தொடங்கிவிடும். * வீடு கட்ட முன்பணம் பெறுவோர்க்கு முதல் தவணை பெற்ற நாளிலிருந்து 18-வது மாதம் அல்லது கட்டிய புது வீட்டில் குடியேறிய மாதத்துக்கு அடுத்த மாதம் முதல். இதில் எது முன்போ, அப்போதிருந்து தவணைப் பிடித்தம் தொடங்கும்.

புதிதாக வீட்டுக் கடன் வாங்க நினைக்கும் அரசு ஊழியர்கள் இந்தக் கடனைப் பரிசீலிக்கலாமே!

படம்: வீ.சிவக்குமார்

வட்டி விகிதக் கணக்கு!

அரசு வழங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் ஏறும், இறங்கும். ஆனால், கடன் பெற்ற நிதியாண்டில் அரசு நிர்ணயித்த வட்டி விகிதமே கடைசிவரை நீடிக்கும்.  கட்டுரையில் நாம் உதாரணமாகத் தந்த திரள் வட்டி கணக்கீடு, சென்ற நிதியாண்டில் கடன் பெற்ற ஊழியருக் கானது. நடப்பு நிதியாண்டில் வட்டி விகிதம் மேலும் 0.5%  குறைக்கப்பட்டுள்ளது. அரை சதவிகிதம் வட்டி குறைந்ததால் பெரிதாக என்ன மாற்றம் இருக்கப்போகிறது என்று நினைக்கத் தோன்றுகிறதா? நடப்பு நிதியாண்டில் கடன் பெற்ற ஓர் ஊழியருக்குக் குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வட்டி கணக்கிட்டால், நடப்பு நிதியாண்டுக்கு மட்டுமே ரூ.10,812 வட்டி குறையும். இது ஒன்றும் சாதாரண தொகை இல்லையே!