Published:Updated:

இனி உன் காலம் - 14 - ஒரு வழிப் பாதை!

இனி உன் காலம் - 14 - ஒரு வழிப் பாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி உன் காலம் - 14 - ஒரு வழிப் பாதை!

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

சேகர், ஒரு சராசரி குடும்பத்தின் முதல் பட்டதாரி.இன்ஜினீயரிங் முடித்துவிட்டு,  கடந்த ஆறுமாத காலமாக வேலை தேடி வருபவன். அவன் அப்பா பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து, அரசு உத்தியோகத்தில், சிறுபதவியில் சேர்ந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று ஒரு நல்ல நிலையில் பணிபுரிபவர். அவனின் அம்மா அன்பும், கண்டிப்பும் நிறைந்த குடும்பத் தலைவி.

அவர்கள் வீட்டில் அனைவரும் சேர்ந்தே சாப்பிடுவது வழக்கம். அன்றும் அப்படி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். வழக்கத்திற்கு மாறாக அன்று, சேகர் மிக அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந் தான். “தம்பி என்னாச்சு... ரொம்ப அமைதியா இருக்க? வேலைக்கு ஏதாவது பணம் கட்டணுமா?” என்றார் அப்பா.

‘‘அப்பா, நான் ஆறு மாசமா வேலை தேடினேன். ஒண்ணும் அமையல. நான் பிசினஸ் பண்ணலாமுன்னு இருக்கேன்” என்றான்.

இனி உன் காலம் - 14 - ஒரு வழிப் பாதை!

“நீ ஒரு வேலைக்குப் போய் சம்பாதிச்சா,  உன்னோட எதிர்காலத்துக்கு ஏதாவது சேர்த்துவைப்பேன்னு பார்த்தா, பிசினஸ் பண்ணப் போறேன்னு சொல்ற... பிசினஸ் செய்றதுக்குப் பணம் வேணும். ஏற்கெனவே வாங்கின கடன் வேற இருக்கு.  நீ பிசினஸ் பண்றதுக்கா, நான் உன்னைய இன்ஜினீயரிங் படிக்க வெச்சேன். நல்ல வேலையைத் தேடுற வழியைப் பாரு” என்றார்.

“அப்பா, என்னை இன்ஜினீயரிங் படிக்க வச்சது அவரோட கடனை அடைக்கத்தாங்கறது இப்பதான் புரிஞ்சிக்கிட்டேன்.நான் அதுக்கான வழியைப் பார்க்கிறேன்” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினான் சேகர். 

வெளியில் சென்ற சேகரின் அப்பா, அவரது பால்ய நண்பர் ஒருவரைச் சந்தித்தார். அவரிடம் பொதுவான விஷயங்களைப் பேசும்போது தன் மகனின் பிசினஸ் ஆர்வத்தைச் சொல்லவே, அதனைக் கேட்ட அவரது நண்பர், ‘‘நல்ல விஷயம்தானே. உன் பையன் சொந்தக் கால்ல நிக்க யோசிக்கறது வரவேற்கத்தகுந்த விஷயம்தான். என்ன பிசினஸ் பண்ணப் போறான்?” என்று கேட்டார் நண்பர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இனி உன் காலம் - 14 - ஒரு வழிப் பாதை!


“ஐயயோ, நான் கேட்கலையே” என்றார் சேகரின் அப்பா. நண்பர் அவரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, “முதல்ல அவன் என்ன சொல்றான்னு கேளு. ஒண்ணுமே கேக்காம நீ பிசினஸ் வேணாங்கறது எந்தவிதத்துல நியாயம்? உன் மகனிடம் புது ஐடியா ஏதாவது  கண்டிப்பா இருக்கும். முதல்ல அவனோட பேசிப் பாரு. அதுக்குப் பிறகு முடிவு பண்ணு’’ என்றார்.

 “நீ சொல்றது சரிதான்.  அவனோட எதிர்காலம் நல்லா இருக்கணுமுன்னுதான் நான் அவனை வேலைக்குப் போகச் சொன்னேன்’’ என்றார்.

“எதிர்காலம் நல்லா இருக்கணும்னா, வெறும் வேலைக்குப் போனா மட்டும் போதாது; அது அவனுக்குப் பிடிச்சதாவும்  இருக்கணும், இல்லையா? உதாரணமா, திருபாய் அம்பானி வேலைக்குத்தான் போகணும்னு நினைச்சிருந்தா, பெரிய பிசினஸ்மேன் ஆகி யிருப்பாரா?’’ என்று நண்பர் கேட்க, சேகரின் அப்பா சிந்திக்கத் தொடங்கினார்.

அதேசமயம், தனது வீட்டில் ஏற்பட்ட சம்பவத்தை அவனது நண்பனிடம் பகிர்ந்துகொண்டான் சேகர். அப்போது அந்த நண்பனின் அண்ணன் பிசினஸில் இறங்கி,  அதனை எப்படிச் செய்வது எனத் தெரியாமல் நஷ்டப்பட்டு,  இன்று வேலை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். படிப்பு முடிந்து இரண்டு வருடமாகிவிட்டதால் தொழில் சார்ந்த அனுபவம் இல்லாததால், வேலை கிடைக்காமல் சிரமப்படுவதாகச் சொன்னான். ‘‘அதனால நீ பிசினஸ் பண்ண வேணாமுன்னு சொல்லலை. உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர்பார்க்குறார்னு கேளு. நீயும் முதல்ல என்ன பிசினஸ் பண்ணப்போறேன்னு சொல்லி, அதைப்பத்தின விவரத்தை நல்லாத் தெரிஞ்சுகிட்டு அதைப்பத்திச் சொல்லு. பிறகு அதுதொடர்பான ஒரு வேலையில சேர்ந்து அதைப் பத்தின அனுபவத்தை நல்லாக் கத்துக்க. பிறகு உன் அப்பாகிட்ட சொல்லி, அவரோட உதவியோட  தொழில் தொடங்கு’’ என்று சொன்னான்.

இனி உன் காலம் - 14 - ஒரு வழிப் பாதை!

அன்று இரவு சேகரின் அப்பா வீட்டிற்குத் திரும்பினார். வீடு அமைதியாக இருந்தது. கம்ப்யூட்டர்முன் உட்கார்ந்து ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தான் சேகர். இரவு உணவிற்கு மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். ஒரே நேரத்தில் சேகரும், அப்பாவும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். அப்பா தன் மகனிடம், “தம்பி, நீ என்ன மாதிரி யான பிசினஸ் செய்ய ஆசைப்படுற..?  நானும் என்னாலான உதவிகளைச் செய்றேன்” என்கிறார்.

உடனே சேகர், “அப்பா, நீங்க கவலையேபடாதீங்க. உங்களுக்கு எப்பவுமே கஷ்டம் கொடுக்கவே மாட்டேன். வேலைக்குப் போய் மாசம் 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிச்சா, தொழில் தொடங்கி 20 ஆயிரமாவது மாசம் வருகிறமாதிரி பிஸினஸ் பண்றேன்பா. ஒரு வருஷம் எனக்கு டைம் கொடுங்க. கண்டிப்பா நான் சாதிச்சுக் காட்டுறேன். உங்க துணை இருந்தா, கண்டிப்பா நான் சாதிப்பேன் அப்பா” என்றான்.

மனமாற்றம் அடைந்த இருவரின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது. அது அன்பின் அடையாளமா அல்லது அறிவுக்கண் திறந்ததின் அடையாளமா?

ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் ஒருவருக்கொருவர் அவர்களுக்குள் உள்ள விஷயங்களைப் பகிராமல் இருப்பதற்குக் காரணம், அளவுக் கதிகமான அன்பு மட்டுமே. அதிலிருந்து விடுபட்டு எல்லா விஷயங்களையும் மனம்விட்டுப் பேசி பகிர்ந்துகொள்ள வேண்டும். பொதுவான விஷயங்கள் பேசும்போது சந்தோஷமாக இருக்கும் இந்தக் காலத்து இளைஞர்கள், வாழ்வின் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அதைப் பெற்றோர்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லத் தவறிவிடுகிறார்கள். சொன்னால் தவறாகிவிடுமோ அல்லது ஒப்புக்கொள்ளமாட்டார்களோ என்று நினைத்து, சொல்லாமலே விட்டுவிடுகிறார்கள்.

நாம் ஒரு தொழில் தொடங்க எண்ணுகிறோம் என்றால், அதற்குத் தேவையான தொழில் சார்ந்த அறிவு, அந்தத் தொழில் செய்வதற்கான திட்டவரைவு, தொழிலைப் புதிய முறையில் செய்வது, அதற்குத் தேவை யான மூலதனம், அதிலிருந்து கிடைக்கக்கூடிய லாபம், இவை அனைத்தையும் தெளிவாக எழுதிக்கொண்டு, குடும்பத்துடன் ஆலோசித்து முறையாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

சேகரின் குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளாததால், தனித்தனி தீவுகளாக இருந்தனர். இன்று அவர்கள் மனம் விட்டுப் பேசத் தொடங்கியபின், அவர்களுக்குக் கருத்து மாறுபாடு என்பது ஏது? 

(காலம் வெல்லும்)

படங்கள் : ப.சரவணக்குமார்

ஃப்ளிப்கார்ட் நிறுவனம்... அதிகரிக்கும் நஷ்டம்!

இனி உன் காலம் - 14 - ஒரு வழிப் பாதை!

ப்ளிப்கார்ட்டின் நஷ்டம் ஏறக்குறைய ரூ.24 ஆயிரம் கோடியை எட்டி யுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனம் சந்தித்த நஷ்டம் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.

எனினும், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தினசரி வர்த்தகம், கடந்த ஆண்டைக்காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது.

கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனம் நாளொன் றுக்கு ரூ.42.20 கோடி அளவுக்கு விற்பனை செய்துவந்தது. இந்த மார்ச்சுடன் முடியும் இந்த நிதியாண்டில் நாளொன் றுக்கு ரூ.54.40 கோடி அளவுக்கு விற்பனை செய் தது. விற்பனை அதிகரிப்பது சரி, நஷ்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறதே, அதை ஃப்ளிப்கார்ட் எப்படிச் சரிசெய்யப் போகிறதாம்?