Published:Updated:

அங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறு!

அங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறு!
பிரீமியம் ஸ்டோரி
News
அங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறு!

அங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறு!

ரிசி முதல் மசாலா வரையிலான சமையல் பொருள்கள், சிறிய குங்குமச்  சிமிழ் தொடங்கிப் பெரிய அண்டா வரையிலான சீர்வரிசைப் பொருள்கள், சுடலைமாட சுவாமிக்கான கச்சை முதல் பச்சைக் கற்பூரம் வரை அனைத்தும் மொத்தமாகக் கொட்டிக்கிடக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின் வணிக கேந்திரம்தான் கோட்டாறு.

“கோட்டாறு ஊர் பெயருக்கும் குமரியின் பிரசித்திபெற்ற சுசீந்திரம் கோயில் வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சாப விமோசனம் பெறுவதற்காக சுசீந்திரம் தலத்துக்குத் தேவர்களின் தலைவன் இந்திரன் வந்தபோது, அவரின் ஐராவதம் தனது தந்தத்தால் தரையில் கோடு போட்டிருக்கிறது. அந்தக் கோட்டால் ஏற்பட்டதே தண்ணீர் ததும்பிச்செல்லும் பழையாறு. ஐராவதம் யானை கோடுபோட்டதன் காரணமாக ஆறு ஏற்பட்டதால் இந்தப் பகுதிக்கு கோட்டாறு எனப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

அங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறு!

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம்  திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையின்கீழ் இருந்தது. அப்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் புகையிலை கன்னியாகுமரி மாவட்டம் லீபுரம் கடற்கரைக்குக் கப்பல் மூலம் வந்திருக்கிறது. அந்தப் புகை யிலையை கோட்டாறில் பெரிய பண்டகசாலையில் சேர்த்து வைப்பார்கள்.

கோட்டாறு புகையிலை குடோன் அருகே மீன் சந்தை, காய்கறிச் சந்தைகள் உருவாகின.  தொடர்ந்து மளிகை பொருள்கள், பாத்திரங்களுக்கென விற்பனையகங்கள் முளைத்தன. பின்னர் மொத்த வியாபாரக் கடைகளாக உருவெடுத்தன.   இப்போது புகையிலை வரத்து  இல்லை. மளிகைப் பொருள்கள், பூஜைப் பொருள்கள், பாத்திரங்கள் என வரிசையாகக் கடைகள் வளர்ந்து நிற்கின்றன. மீன் சந்தையும், காய்கறிக் கடைகளும் இப்போதும் செயல்படுகின்றன” எனக் கோட்டாறு அங்காடித் தெரு உருவான சரித்திரத்தைச்  சொல்கிறார் அங்கு கடை நடத்தி வரும் சி.காந்தி.

காய்கனி மொத்த விற்பனை செய்யும் காமராஜிடம் பேசினோம், “கேரள மாநிலம் சாலை பஜார், பத்தணம்திட்டை வரை உள்ள பகுதிகளுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்புவரை கோட்டாறில் இருந்து தான் பொருள்கள் செல்லும். இப்போது கேரள மாநில எல்லை யான பாறசாலை வரை கோட்டாறி லிருந்து பொருள்கள் செல்கின்றன.

பல மாநிலங்களில் விளைகிற பொருள்களும் நேரடியாகக் கோட்டாறுக்கு வரும். கன்னியாகுமரி, திருநெல்வேலி சிறு வியாபாரிகள் கோட்டாறுக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்வார்கள். இப்போது சிறிய நகரங்களுக்கும் நேரடியாகப் பொருள்களை மொத்தச் சந்தை யிலிருந்து கொண்டுவந்துவிடுவ தால், கோட்டாறின் மொத்த விற்பனை குறைந்துவருகிறது. ஆனாலும், தமிழ்நாட்டிலே குறைந்த விலையில் பலசரக்கு பொருள்கள் கிடைக்கும் ஒரே இடம் கோட்டாறுதான்’’ என்றார் அவர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறு!

“நாஞ்சில்நாடு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெல் களஞ்சியமாக இருந்தது. அப்போது இங்கு அதிகமாக ரைஸ் மில்கள் இருந்தன. ரைஸ் மில்களில் இருந்து அரிசிகள் தரம் பிரிக்கப்பட்டு நேரடியாகக் கோட்டாறு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துவிடும். விளைநிலங்கள் வீட்டு மனைகள் ஆகிவிட்டதால், நெல் பயிரிடும் பரப்பளவு சுருங்கி விட்டன. அதனால் இங்கிருந்த பல ரைஸ் மில்கள் மூடப்பட்டன. குற்றாலம், பாவூர்சத்திரம் போன்ற பகுதிகளிலுள்ள மில்களிலிருந்து இப்போது சாப்பாட்டு அரிசி கோட்டாறுக்கு வருகிறது.

கோட்டாறுக்கு வந்து நான்கு கடை ஏறி இறங்கி விலையைக் கேட்டுப்  பொருள்களை வாங்கினால்தான் வியாபாரிகளுக்குத் திருப்தியாக இருக்கும். 1976-ம் ஆண்டுவாக்கில் மாட்டு வண்டிகளில் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் பொருள்களை அனுப்புவோம்.

இந்தியாவிலேயே வத்தல் மிளகு குறைந்த விலையில் கிடைக்கும் பிரபலமான இடம் கோட்டாறுதான். தூத்துக்குடியிலிருந்து மல்லி வருகிறது. மதுரையிலிருந்து நவதானியங்கள் வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து கப்பலில் வரும் பாமாயில் விருதுநகர் வந்து அங்கிருந்து கோட்டாறுக்கு வருகிறது. எத்தனை லாரிகளில் சரக்குகள் வந்தாலும் உடனுக்குடன் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பிவிடுகிறார்கள்” என்றார் கோட்டாறு மார்க்கெட்டின் முன்னோடி வியாபாரி எஸ்.சொக்கலிங்கம் பிள்ளை.

கோட்டாறு வீதியில் வீட்டு உபயோக மற்றும் வெண்கலப் பாத்திரங்கள் மட்டுமல்லாது கலாசாரத்துடன் இணைந்த பாரம்பர்ய பாத்திரங்களும் கிடைக்கின்றன. கோட்டாறின் பழைமை யான பாத்திரக் கடையான மாதவி மெட்டல்ஸ் உரிமையாளர் காளியப்பனிடம் பேசினோம்.

அங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறு!

“பொங்கல் பண்டிகையின்போது மகளுக்குக் கொடுப்பதற்காகப் பெற்றோர்கள் பாத்திரங்கள் வாங்க வருவார்கள். தைப் பொங்கலுக்காக மார்கழி மாதமே கோட்டாறில் சீசன் களைகட்டும். சித்திரை, பங்குனி மாதங்களில் திருமணச் சீர்வரிசை மற்றும் கோயில் திருவிழாக்களுக்கான பூஜைப் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். முன்பு திருமணச் சீர்வரிசையாக அதிகமாக வெண்கலப் பாத்திரங்கள்தான் தருவார்கள். கோட்டாறு கம்போளம் வீதியில் உருளிதான் ஃபேமஸ். கோயில்களில் பிரசாதம் தயாரிப்பதற்காக உருளி (ஒருவகையான பாத்திரம்) அதிகமாக வாங்கிச் செல்கிறார்கள்.

கோட்டாறில் இருந்து அடுக்கடுக்காக இருக்கும் ஆமை விளக்கு வாங்க திருநெல்வேலி மற்றும் கேரளத்திலிருந்தும் அதிகமானோர் வருகிறார்கள். திருமணம் என்றாலே தாய்மாமன் வீட்டிலிருந்து பெண்ணுக்கு 40 கிலோ, 50 கிலோ என ஆளுயர வெண்கல விளக்குகள் தருவதைக் கெளரவமாகக் கருதுகிறார்கள். முன்பு கூட்டுக் குடும்பமாக இருந்ததால், பெரிய வெண்கல விளக்குகளை அனைவரும் இணைந்து பராமரித்தார்கள். இப்போது திருமணமான உடனே தனிக்குடித்தனம் சென்றுவிடுவதால் பராமரிப்பது சிரமம் எனப் பெரிய விளக்குகளை வாங்குவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. தவிர, வெண்கலப் பாத்திரம் கனமானது என்பதால், பயன்படுத்தச் சிரமமாக இருக்கும் என எவர்சில்வர் பாத்திரங்களையே அதிகம் விரும்பு கின்றனர். காலம் மாறிவிட்டதால், வெண்கல விற்பனையும் சற்றுக் குறைந்திருக்கிறது” என்றார் அவர்.

கம்போளம் தெருவில் கமகமக்கும் பூஜைப் பொருள் விற்பனையகங்கள் மிகவும் பிரபலம். அதிலும் அடிமட்ட விலையிலிருந்து அதிக விலைவரை அகர்பத்திகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கம்போளம் ஆர்.பி.என் பத்திக்கடை உரிமையாளர் ராஜசேகர், “பெங்களூரூ, மும்பை, அகமதாபாத் நகரங்களிலிருந்து அகர்பத்திகள் வருகின்றன. முன்பு கோயில்களுக்கு மட்டும் பூஜைப் பொருள்கள் வாங்கினர். ஆனால், இப்போது வீடுகளிலும் அதிகமான பூஜைப் பொருள்களை மக்கள் பயன்படுத்துவ தால் விற்பனை ஜோராக நடக்கிறது’’ என்றார்.

நாகர்கோவிலுக்குச் செல்கிறவர்கள் கோட்டாறு மார்க்கெட்டில் ஒருமுறை ஷாப்பிங் செய்யலாமே!

 - ஆர்.சிந்து

படங்கள்: ரா.ராம்குமார்

நாகர்கோவில் ரிச்சி தெரு!

சென்னை ரிச்சி தெருவில் மொபைல் போன் உள்ளிட்ட அனைத்து எலெக்ட்ரானிக் பொருள்களுக்குமான கடைகள் வரிசையாக இருக்கும். அதுபோன்று நாகர்கோவில் அலெக்ஸாண்டர் பிரஸ் ரோட்டிலும், எலெக்ட்ரானிக் பொருள்களுக்கான கடைகள் வரிசைகட்டி உள்ளன. எலெக்ட்ரானிக் பொருள்கள் வாங்குவதற்குக் குமரி மக்களின் பெஸ்ட் சாய்ஸாக அலெக்ஸாண்டர் பிரஸ் ரோடு விளங்குகிறது.