அரசு ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், மருத்துவர்கள், சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்களும் தங்கள் பணத் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்று பார்த்தால், 90% பேர் தங்கள் மாத வருமானத்தின் மூலமே என்பது விளங்கும்.
வாங்கும் சம்பளம், பார்க்கும் வேலை, வயது, அனுபவம் எனப் பலவிதங்களில் அனைவரும் வேறுபட்டாலும், கையில் வாங்கும் பணத்தை என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியில், எல்லோரும் ஒன்றுபடுகிறார்கள். வருமானத்தை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை அளவிட, குறைந்தபட்சம் ஐந்து நிலைகள் உள்ளன. இந்த ஐந்து நிலைகளில் ஏதேனும் ஒன்றில், மாத வருமானம் பெறும் 90 சதவிகிதத்தினரையும் அடக்கிவிடலாம். அவை என்னவென்று பார்ப்போம்.

முதல் நிலை
மாத வருமானம் - மாதச் செலவுகள் = 0 (மீதம் ஒன்றும் இல்லாத நிலை)
‘‘கையில வாங்கினேன், பையில போடல... காசு போன இடம் தெரியல...’’ என்கிற பாட்டைப் போல, இவர்களுக்குச் சம்பளம் வாங்கியது தெரியும், எப்படிச் செலவு செய்தீர்கள் என்று கேட்டால், கணக்கு சொல்லத் தெரியாது. வரவும், செலவும் சரியாக இருந்ததென்று மட்டும் சொல்வார்கள். அவசரச் செலவுக்கென்று கொஞ்சமும் பணம் கையில் இருக்காது.
இரண்டாம் நிலை
மாத வருமானம் - மாதச் செலவுகள் = கடன்கள் மற்றும் வட்டிகள். (கிரெடிட் கார்டு, பைக், கார் லோன், மொபைல் இ.எம்.ஐ, நகைக் கடன், தனிநபர் கடன்).
தனக்கு எது தேவை, எது அதிகம் பயன்படும் என்று யோசிக்காமல், ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கி, பின்பு கடன் எனும் சுழலில் சிக்கிக் கொள்பவர்கள் இவர்களே. நண்பருக்குப் புது பைக்கைத் தேர்வு செய்யச்சென்று, போன வருடம் வாங்கிய, இன்றும் நன்றாக உள்ள, இவருடைய பைக்கை, எக்ஸ்சேஞ்ச் செய்து, மீதித் தொகைக்கு லோன் போட்டு, புது பைக்கில் வந்து நிற்பார்கள். பெரிய மால்களுக்குச் சென்றுவிட்டு, கண்ணில்பட்டதையெல்லாம் வாங்கி, கிரெடிட் கார்டைத் தேய்த்துவிட்டு வருவார்கள். முக்கியமான மாதச் செலவுகள் போக, மீதமாகும் பணத்தை, இதுபோன்ற வீண் கடன்களை அடைக்கப் பயன்படுத்துவார்கள்.
மூன்றாம் நிலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாத வருமானம் - மாதச் செலவுகள் = சேமிப்புகள் (உண்டியல், சிறுசேமிப்பு, வங்கி சேமிப்புக் கணக்கு )
குடும்பத்தில், தன் பொறுப்பை உணர்ந்தவர்கள் இவர்கள். அதனால், மாதச் செலவுபோக மீதமுள்ள பணத்தைச் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்கள். ஆனால், இவர்களின் சேமிப்பானது, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையாக இல்லாமல், அவர்களின் செலவுக்கேற்ப, சமயங்களில் கூடும் அல்லது குறையும். இவர் களிடம் முறையான, நிலையான தொகை சேமிப்பாக இருக்காது.
நான்காம் நிலை
மாத வருமானம் – சேமிப்புகள் * = மாதச் செலவுகள். (இங்கு சேமிப்புகள் என்றால் அஞ்சலகச் சேமிப்பு, ஃபிக்ஸட் டெபாசிட், தொடர் வைப்பு முதலீடுகள் முதலானவை)
தன் வருமானத்தின் முதல் செலவே சேமிப்பாக இருக்கட்டும் என்கிற கொள்கையுடையவர்கள். மாதம் தவறாது, குறிப்பிட்ட தொகையைக் கட்டாயமாகச் சேமிப்பதின் மூலம், வீண் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கிறார்கள். செலவுகள் கை மீறாமல் பார்த்துகொள்கிறார்கள். தற்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின், செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு எஸ்.ஐ.பி திட்டங்களில் தங்கள் பார்வையைத் திருப்பி யிருக்கிறார்கள்.
ஐந்தாம் நிலை
மாத வருமானம் – முதலீடுகள் = செலவுகள். நல்விதைகள் ஒவ்வொன்றிலும், கனி பல தரும் விருட்சங்கள் உண்டு என்பதை அறிந்தவர்கள். ஒவ்வொரு மாதமும் தன் வருமானத்திலிருந்து, சிறு தொகையை ஒதுக்கி, தரமான நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து, அவற்றைக் கண்காணித்து நாளடைவில், அவை தரும் கனிகளான போனஸ் பங்குகள், டிவிடெண்ட், பங்குப் பிரிப்பு, கூட்டு வளர்ச்சி தரும் பலன்கள் ஆகியவற்றின் மூலமாகவே, தன் குடும்பச் செலவுகளை மேற்கொள்ளவும், தான் செய்திருந்த முதலீட்டின் மூலம் இரண்டாவது வருமானத்தை உருவாக்கி கொள்ளவும் தவறாதவர்கள். உதாரணமாக, அமெரிக்காவின் வாரன் பஃபெட் முதல் நம்மூர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வரை பலரையும் சொல்லலாம்.
நாமும் இந்த ஐந்து நிலைகளில், எந்த நிலையில் இருக்கிறோம், நாம் எந்த நிலைக்கு மாற வேண்டும் என நம்மை நாமே சுய மதிப்பீடு செய்து, முதலீடு பற்றிய நம் எண்ணங்களை மாற்றிக்கொள்ள நிதியாண்டின் தொடக்கமே சரியான நேரம். உங்கள் நிதிப் பயணத்தை இன்றே தொடங்குங்கள்!