ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

சரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 5 - பார்த்து சேருங்கள் பார்ட்னர்ஷிப்!

சரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 5 - பார்த்து சேருங்கள் பார்ட்னர்ஷிப்!
பிரீமியம் ஸ்டோரி
News
சரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 5 - பார்த்து சேருங்கள் பார்ட்னர்ஷிப்!

தொடர் / லாஜிஸ்டிக்ஸ்ரவிச்சந்திரன்

திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவர், (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது நண்பருடன் பார்ட்னர்ஷிப் வைத்து சென்னை மதுரவாயலில் ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்குப் பூஜை போட்டார். சரவணனிடம் இருந்தது வெறும் இரண்டு லாரிகள். வழக்கம்போல் ஆதரவு பாதி; எதிர்ப்பு மீதி என்று சரிபாதியாக விமர்சனங்களைச் சந்தித்து வந்தார். ‘‘லாஜிஸ்டிக்ஸ்ல லாரிதான் மேட்டரே! எனக்குச் சில நேக்குபோக்குகள் தெரியும்’’ - இரண்டு தரப்பினருக்கும் இப்படித்தான் ஒரே பதிலைச் சொன்னார் சரவணன்.

ஆரம்பத்தில் சரியான லாபம் இல்லை. பார்சல் பிரிவுகளை மட்டும்தான் சரவணன் டார்கெட் வைத்தார். மற்ற லோடுகளில் இல்லாத ஒரு சிக்கல் பார்சல் டிவிஷனில் உண்டு. லோடு இல்லாத நேரங்களில் காலியாகக்கூட லாரி ஓட்ட வேண்டியிருக்கும். ஒரு தடவை லோடு அடிப்பதற்கு 20,000 ரூபாய் வருமானம் வந்தால்... பராமரிப்பு, டீசல், டிரைவர் சம்பளம் என்று அதில் 2,000 ரூபாய்கூட மிஞ்சவில்லை. ‘பரவாயில்லை; எடுத்தவுடன் லாபம் பார்க்க நினைக்கக் கூடாது’ என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டார்.

சரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 5 - பார்த்து சேருங்கள் பார்ட்னர்ஷிப்!

நடுவில் சில புதிய யுக்திகளைக் கையாண்டார். அதாவது, லாரி ஓனர்களையும், டிரைவர்களையும் நட்பாக வைத்துக் கொண்டதுதான் அது. பாதிக்குப் பாதி சம்பளம் என்கிற ரீதியில் லாரி ஓனர்களுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டது. சில லாரி ஓனர்கள் கழற்றிவிட, 5 லாரிகளை லீஸுக்கு எடுத்து ஓட்ட ஆரம்பித்தார். அதாவது, மொத்தமாக ஒரு தொகையைச் செலுத்தி லாரியை லீஸுக்கு எடுப்பது. நடுவில் வேலை இல்லை என்றாலும், சிக்கல்தான்.

நடுவில் பிரான்சைஸ் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து பிசினஸ் செய்யலாம் என்று முயற்சித்தார். அதாவது, பிராண்ட் சரவணனுடையது; வேலை பிரான்சைஸ் நிறுவனங்களுடையது. வேலைக்கேற்ப இதில் கமிஷன் வழங்கப்படும். அதிலும் சில சறுக்கல்கள். ஆடிட்டிங்கில் பிரச்னை; கோ-ஆர்டினேட்டர் பிரச்னை; டிரான்ஸ்போர்ட் மேனேஜர் பிரச்னை; ஷெட்யூல் கிளர்க் என்று எல்லோரிடமும் மனஸ்தாபங்கள். இப்போது ‘இந்த லாஜிஸ்டிக்கே வேணாம்டா’ என்று இழுத்து மூடிவிட்டார் சரவணன்.

இங்கே சரவணன் செய்த பிழைகள் என்னவாக இருக்கும்? இது பற்றி ரவிச்சந்திரன் என்ன சொல்கிறார்?

‘‘தொழில் தொடங்கும்போது, கோர் ஸ்ட்ரெங்த் என்றொன்று உண்டு. அந்த கோர் வலிமையை முதலில் தொழில் தொடங்குபவர்கள் உணர வேண்டும். அதாவது, நான் ஏற்கெனவே சொன்னதுபோல், லாஜிஸ்டிக்ஸில் ஏகப்பட்ட டிவிஷன்கள் உண்டு. சரவணன் பார்சல் டிவிஷன் மட்டும்தான் எடுத்திருக்கிறார். இங்கே வாடிக்கையாளர்களுக்கு எந்த விதத்தில் வேல்யூசேஷனுடன் செயல்பட்டார் என்பதில் தொடங்கி, இவர் ஆடிட்டிங் முறையாகச் செய்தாரா... பார்ட்னர்ஷிப்பில் ஏதாவது மனஸ்தாபம் வந்ததா... டிரைவர்களிடம் சரியான புரிதல் வைத்திருந்தாரா என்பதுவரை ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. எப்போதுமே ஒரு தொழிலில் வெற்றி பெறுவதற்கு நேர்மை மட்டும் முக்கியமில்லை; வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதுதான் முக்கியமான ஆதாரம். வாகனத் தொழில் என்பது யானை போன்றது. அதற்குத் தீனி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பராமரிப்பு என்பது இங்கே மிக முக்கியம். கிடைக்கும் வருமானத்தில் வாகனத்தைப் பராமரிக்க நிறைய செலவுகள் செய்ய நேரிடும். இதை அவர் மனதார ஏற்றிருக்க வேண்டும். எடுத்தவுடனே கல்லாவை நிரப்ப வேண்டும் என்று நினைத்திருக்கலாம். சர்வீஸில் தாமதம் செய்திருக்கலாம். எடுத்தவுடன் லாபத்தை எதிர்பார்த்திருக்கலாம்.

பார்சல் டிவிஷனை மட்டுமே இவர் நம்பி லாரிகளை லீஸ் எடுத்தபோது, சில நேரங்களில் லாரியைக் காலியாக ஓட்ட வேண்டியிருக்கும். அப்போதே இவர் மனம் தளர்ந்திருப்பார். அந்த நேரத்தில் இவர் பார்சலை மட்டுமே நம்பாமல், ஃப்ரான்சைஸ் நிறுவனங்களின் மீதும் சரியான நட்பு வைத்து, முறையான கமிஷன் கொடுத்துச் செயல்பட்டிருக்க வேண்டும். அப்படியே இவர் ஃப்ரான்சைஸ் எடுத்தாலும், அந்த நிறுவனங்களை நன்றாக ஸ்டடி செய்துவிட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும். லாரிகளை லீஸ் எடுப்பது வரை சரவணனிடம் நல்ல தெளிவு இருந்திருக்கிறது. நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, அவர் பார்ட்னர்ஷிப் நண்பர்களாலோ, டிரைவர்களாலோ ஏமாற்றப்பட்டிருக்கலாம். அவரிடம் நேரடியாகப் பேசினால், எங்கே தவறு நடந்திருக்கிறது என்கிற ஐடியா கிடைக்கலாம். மற்றபடி அவர் இதைத் தொடர்ச்சியாகச் செய்திருந்தால், வெற்றிகரமான லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை இப்போதும் சரவணன் பிஸியாக நடத்திக் கொண்டிருக்க வாய்ப்புண்டு!’’ என்றார் ரவிந்திரன்.

இது பற்றி நாம் சரவணனிடம் தொடர்பு கொண்டு பேசி, ரவிச்சந்திரனிடம் நேருக்கு நேர் பேச வைக்கலாம் என்று முடிவெடுத்தபோது, கூச்சத்தால் முதலில் பேச மறுத்தார். பின்பு நம்மிடம் தனியாகப் பேசினார். இங்கே ரவிச்சந்திரன் சொன்னதில் பல விஷயங்கள் உண்மையாக இருந்தன.

சரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 5 - பார்த்து சேருங்கள் பார்ட்னர்ஷிப்!

‘‘நான் முதலில் கோட்டைவிட்டது பார்ட்னர்ஷிப்பில்தான். என்னிடம் இரண்டு லாரிகள்; இன்னொரு நண்பரிடம் ஒரு லாரி. மொத்தம் மூன்று லாரிகளுடன் ஆரம்பித்தோம். ‘வேர்ஹவுஸ் மேனேஜர்’ என்பதுபோல், ‘நானே நம் ஆபீஸுக்கு மேனேஜராக இருந்து கொள்கிறேன். கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். டிரைவர்களைச் சமாளிப்பது, லோடுக்கு சார்ஜ் ஃபிக்ஸ் செய்வது, லாரிகளை லீஸ் எடுப்பது - இவையெல்லாம் என்னுடைய பொறுப்புகள்.

ஒரு விஷயம் எப்போதுமே டிமாண்டாக இருக்கும் என்றால், அது ட்ரக் டிரைவர்கள்தான். ஆம்! டிரைவர்கள்தான் எப்போது லாரி தொழிலில் இருக்கும் சிக்கலான விஷயம். டிரைவர்கள் எல்ல நேரத்திலும் கிடைக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் ரவிச்சந்திரன் சார் சொல்வதுபோல், நானே சில நேரங்களில் லாரியை எடுத்துக் கிளம்பியிருக்கிறேன். ஆனால், நான் எடுத்தவுடனே லாபத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. சில நேரங்களில் காலியாக லோடிங் அடிக்கும்போது, என் சொந்தக் காசெல்லாம் போட வேண்டியிருக்கும். அதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

நண்பர் சொன்னாரென்று சில ஃபிரான்சைஸ் நிறுவனங்களிடமும் என் பிராண்டை ஒப்படைத்தேன். அதில் 60% எங்களுக்கு; 40% அந்த பிரான்சைஸ் நிறுவனங்களுக்கு. கஸ்டமர் டெலிவரியெல்லாம் சரியாகத்தான் நடந்தது. ஏனென்றால், டிரைவர்கள் - கஸ்டமர்கள் என்று ஒவ்வொருவரிடமும் எப்போதுமே தொடர்பில் இருந்துகொண்டே இருப்பேன். மார்க்கெட்டும் டல்லடிக்கவில்லை. ஆனாலும் என் கல்லா நிரம்பவில்லை. அதற்கப்புறம்தான் தெரிந்தது - ஆடிட்டிங் சரியாக இல்லை. பார்சல் டிவிஷனைப் பொறுத்தவரை ஒரு லோடு அடிக்கும்போது... லாரிக்கான டீசல், டிரைவருக்கான சாப்பாடு, தங்குமிடம், லோடு சார்ஜ் எல்லா
வற்றுக்கு முறையான பில் வேண்டும் என்பது எனக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது. எதேச்சையாக ஆடிட்டரைச் சந்தித்து என் நஷ்டத்தைச் சொன்னபோது, ‘பில் சரியா இருந்தால் எல்லாமே நன்றாக நடக்கும்’ என்று என்னிடம் பில்லில் நடந்த சில குளறுபடிகளைச் சொல்லிவிட்டார். அப்போதுதான் எனக்கு உரைத்தது. நான் கஷ்டப்பட்டுச் செய்த தொழில் எதற்குமே முறையான பில் இல்லாமல் ஆடிட்டிங்கில் சொதப்பியதுதான் இத்தனைக்கும் காரணம். இங்கே முழுக்க முழுக்க நான் செய்த தவறு - பார்ட்னர்ஷிப்’’ என்று நொந்தபடி சொன்னார் சரவணன்.

எனவே, லாஜிஸ்டிக்ஸில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சிக்கல் - பார்ட்னர்ஷிப். பார்ட்னர்ஸையும் பார்த்துத்தான் சேர்க்க வேண்டும்.

தொகுப்பு: தமிழ், ரஞ்சித்

படம்: பா.காளிமுத்து


- சரக்கு பெயரும்

ஃபிரான்சைஸ் என்றால், ஒரு பிராண்டில் நடக்கும் விஷயத்தை இன்னொரு நிறுவனத்திடம் வேறொரு இடத்தில் ஒப்படைப்பது. ஒரு நிறுவனத்துக்கு நீங்கள் ரெப்ரஸன்டேட்டிவ் என்று அர்த்தம். சுருக்கமாகச் சொன்னால், டீலர்ஷிப். பாண்டிச்சேரியில் டாடா மோட்டார்ஸ் இருக்கிறது என்றால், அந்த பாண்டிச்சேரி டீலர், டாடாவுக்கு ஓனர் இல்லை. உணவுத்துறை, ரீட்டெய்ல், அழகு சாதனம், குழந்தைகளுக்கான பொருட்கள், ஆட்டோமேட்டிவ், கூரியர், ஃபிட்னெஸ் என்று எல்லாத் துறைகளுக்கும் இந்தியாவில் ஏராளமான ஃபிரான்சைஸ் நிறுவனங்கள் உள்ளன.