சமீபத்தில் செபி அறிவித்த புதிய வகைப்படுத்துதலின்படி, கலப்பின ஃபண்டுகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த ஆறு வகைகளில் அதிக ரிஸ்க் மற்றும் ரிவார்ட் உடையது அக்ரஸிவ் ஹைபிரிட் ஃபண்டுகளாகும்.

இந்த வகை ஃபண்டுகள், பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளில் 65% - 80% வைத்துக் கொள்ளலாம். எஞ்சியதைக் கடன் சார்ந்த முதலீடுகளில் வைத்துக்கொள்ள வேண்டும். பிரின்சிபல் பேலன்ஸ்டு ஃபண்ட் ஒரு அக்ரஸிவ் ஹைபிரிட் ஃபண்டாகும்.
இந்த வகைப்படுத்துதலுக்குமுன்பே கிட்டத்தட்ட இதே அடிப்படையில்தான் இந்த ஃபண்ட் செயல்பட்டு வந்தது. ஆகவே புதிய வகைப்படுத்துதலினால், இந்த ஃபண்டின் செயல்பாட்டில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஃபண்ட் தற்போது ரூ.1,000 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் பி.வி.கே மோகன் மற்றும் பெக்ஸி குரியகோஸ் ஆவார்கள்.
இந்த ஃபண்ட், தனது போர்ட்ஃபோலியோவில், தற்போது 65 சதவிகிதத்தைப் பங்குகளிலும், 35 சதவிகிதத்தைக் கடன் சார்ந்த முதலீடுகளிலும் வைத்துள்ளது. இதன் பங்கு சார்ந்த முதலீட்டில் எந்தப் பங்கும் மூன்று சதவிகிதத்துக்கு அதிகமாக இல்லை. இதன் டாப் ஹோல்டிங்ஸாக இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.டி.சி, என்.டி.பி.சி, எல் & டி போன்ற பங்குகள் உள்ளன.
இதன் கடன் சார்ந்த முதலீட்டில் டாப் ஹோல்டிங்ஸாக (8.10%) மத்திய அரசாங்க வெளியிட்டுள்ள பாண்டுகள் உள்ளன. எக்ஸ்போர்ட் இம்போர்ட் பேங்க் வெளியிட்ட பாண்டுகள் 1.78% அளவுக்கு வைத்துக் கொண்டுள்ளது.

இதன் போர்ட்ஃபோலியோவில் (பங்கு மற்றும் கடன் சார்ந்த முதலீடுகளில்) கான்சென்ட்ரேஷன் ரிஸ்க் கிடையாது. ஃபைனான்ஸ், எஃப்.எம்.சி.ஜி, டெக்னாலஜி போன்ற துறைகளில் இதன் முதலீடு அதிகமாக உள்ளது.
இந்த ஃபண்டை நாம் பரிந்துரைக்கு எடுத்துக் கொண்டதற்கு முக்கியக் காரணம் இதன் தொடர்ச்சியான சிறந்த செயல்பாடுதான். மற்றுமொரு காரணம் எனில், நன்றாகச் செயல்படும் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் குறைவான நிர்வகிக்கும் தொகையைக் கொண்டுள்ள ஃபண்ட் இதுதான்.

ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, பிர்லா, எஸ்.பி.ஐ, ரிலையன்ஸ் போன்ற பல ஃபண்ட் நிறுவனங்கள் நடத்தும் பேலன்ஸ்டு ஃபண்டுகளின் நிர்வகிக்கும் தொகை ஆயிரக்கணக்கான கோடிகளில் உள்ளது. அந்த ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, இதன் குறைவான ஏ.யூ.எம் (AUM) இந்த ஃபண்டிற்கு ஒரு பாசிட்டிவ் ஆகும்.
இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (14/01/2000) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் இன்றைய தேதியில் (03/05/2018) ரூ.7,68,300- ஆக உள்ளது. இது கூட்டு வட்டியில் ஆண்டிற்கு 11.78 சதவிகிதத்துக்குச் சமம். இந்த வருமானம் இதையொத்த பிற ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைவுதான்.
ஆனால், தற்போதைய ஃபண்ட் மேனேஜர் பி.வி.கே மோகன் இந்த ஃபண்டின் நிர்வாகப் பொறுப்பை மே 2010-ல் எடுத்துக் கொண்ட திலிருந்து, இந்த ஃபண்ட் சிறப்பாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுவும் இந்த ஃபண்டை நாம் பரிந்துரை செய்வதற்கு ஒரு காரணமாகும்.

இந்த ஃபண்ட் மேனேஜர் நிர்வகிக்கும் பிற ஃபண்டுகளான பிரின்சிபல் மல்டிகேப் குரோத் ஃபண்ட் மற்றும் பிரின்சிபல் டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்டுகளும் திறம்படச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வகை ஃபண்டுகளின் மற்றொரு சிறப்பைச் சொல்ல வேண்டுமானால், சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) ஆகும்.

சந்தை உச்சத்தில் இருக்கும் போது, ஃபண்ட் மேனேஜர் அதிகமாகக் கடன் பத்திரங்களுக்கு மாறிக்கொள்ளலாம். அதேபோல், சந்தை பாதாளத்தில் இருக்கும் போது, பங்கு சார்ந்த ஒதுக்கீட்டை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த ஒதுக்கீடு சாதாரண நபர்களால், அடிக்கடி செய்ய முடிவதில்லை.
யாருக்கு உகந்தது?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு முதன்முறையாக வருபவர்களுக்கு, இந்த ஃபண்ட் ஒரு சிறந்த நுழைவாயிலாக இருக்கும். மேலும், 100% பங்கு சார்ந்த ஃபண்டுகளைவிடச் சற்றுக் குறைவான ரிஸ்க் எடுக்க விரும்பும் நபர்கள், ஓய்வுக்காலத்துக்கு நெருக்கத்தில் உள்ளவர்கள், குழந்தைகளின் கல்விக்காகச் சேமிப்பவர்கள் என அனைவரும் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
சற்றுக் குறைவான ஏற்ற இறக்கத்தை நாடுபவர்கள், 50 வயதைத் தாண்டியவர்கள், மீடியம் டேர்மில் பணம் தேவைப்படுபவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
ரெகுலராக மாத வருமானம் உள்ளவர்கள் எஸ்.ஐ.பி முதலீட்டு முறையில் முதலீடு செய்யலாம்; அதேநேரத்தில் மொத்தமாகப் பணம் வைத்துள்ள வர்கள் சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்த முதலீடாகவும் முதலீடு செய்யலாம்.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தைப் பெற விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் போன்றவர்கள் இந்த ஃபண்டினைத் தவிர்ப்பது நல்லது.