
டாக்டர் சி.கே.நாராயண், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964
இண்டெக்ஸ்
முடிந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கமான போக்கு மாறி மாறிக் காணப்பட்டாலும், வார இறுதியில் சந்தை மீண்டும் ஏற்றத்துக்குத் திரும்பியது. வெள்ளிக்கிழமையன்று பெரிய நிறுவனப் பங்கு களின் விலை ஏற்றம் காரணமாக, நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இந்த வார வர்த்தகம் முடிவடைந்தது.

கடந்த வாரத்தில் நாம் குறிப்பிட்டபடி, பேங்க் நிஃப்டிக்குச் சாதகமான போக்கு காணப்பட்ட துடன், நிஃப்டியும் முந்தைய வாரத்தில் இருந்தது போல, தொடர்ந்து நெகிழ்வுத்தன்மையுடன் காணப்பட்டது. பொதுத்துறை வங்கிகள் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டிய நிலைமை உள்ளது என்றாலும், நிஃப்டியைப் போன்றே பேங்க் நிப்ஃடியும் இரண்டு முறை முன்னேற்றம் அடைந்தது. முன்னேற்றம் காண்பித்த சில பொதுத்துறை வங்கிகளின் பங்கு மதிப்பு உயர்வு, யானைப் பசிக்கு சோளப்பொரி கதையாக இருந்தாலும், அது பேங்க் இண்டெக்ஸில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
மாறாக, முக்கியமான ரீட்ரேஸ்மென்ட் பகுதியை நோக்கித் தற்போது வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, நிஃப்டி அத்தகைய ரீட்ரேஸ்மென்ட் இலக்கு பகுதியை ஏற்கெனவே கடந்துவிட்டது (61.8% நிலை). மேலும், பேங்க் நிஃப்டியும் அதேபோன்று கடக்கும் என்பதைச் சொல்லும் ஒரு நல்ல அறிகுறியாகவும் அது இருக் கிறது. பேங்க் நிஃப்டியில் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் பொசிஷன்கள் தொடர்ந்து அதிகரிப்பதுடன், கடந்த 2017 ஏப்ரலில் பார்த்த உச்சமான நிலையை நோக்கித் தற்போது சென்றுகொண்டிருக்கிறது.

கர்நாடகா தேர்தல் முடிவுகள் செவ்வாய் கிழமை வெளிவரவிருப்பதால், இந்த வாரம் சந்தையில் அரசியல் செய்திகளின் ஆதிக்கம் இருக்கும். சந்தையில் இதுவரை பதற்றமான நிலை காணப் படவில்லை என்றாலும், பாரதிய ஜனதாவின் வெற்றியைப் பொறுத்தே பங்குகளின் விலை ஏற்ற, இறக்கம் இருக்கும். எனவே, தேர்தல் முடிவுகள் ஒருவேளை வேறுவிதமாக அமைந்தால், சந்தை வியப்பைத் தரும் வகையில் மாறவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த வாரம் பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றமான போக்கைக் காண்பித்தபோதிலும், பங்கு முதலீட்டாளர்கள் பெரிய ஆதாயம் எதையும் பெற முடியாமல் போனது. எனவே, சந்தையில் ஏதாவது அசைவை உருவாக்கவேண்டுமெனில் பெரிய மாற்றம் தேவையாக இருக்கிறது.

இப்போதைக்கு நிகழ்வுகளின் (தேர்தல் முடிவு) ரிஸ்க் இருப்பதால், இந்த வாரம் தேர்தல் முடிவுகள் வரும் வரை சற்று ஒதுங்கியிருந்து, அதன்பின் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதே நல்லது.
நிகழ்வுகள் வரும் போகும். ஆனால், சந்தை எப்போதுமே செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

லாசா சூப்பர் ஜெனெரிக்ஸ் (LASA)
தற்போதைய விலை: ரூ.83.50
வாங்கலாம்
இந்த நிறுவனம், கால்நடைகளுக்கான மருந்துகளைத் தயாரிப்பதை முதன்மை யாகக் கொண்டுள்ளது. சமீப காலம் வரை இந்த நிறுவனம், ஓம்கார் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருந்தது. கடந்த ஆண்டின் இறுதியில்தான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப் பட்டதிலிருந்து இந்தப் பங்கு பெரிய அளவில் சரிவைக் கண்டது. கடந்த வாரம், விலை முதல் முறையாகச் சற்று ஏறத் தொடங்கியுள்ளது. இதன் விலை ரூ.69 வரை கீழிறங்கும் வரை வாங்கலாம். விலை மேலேறி வருவதற்கு வாய்ப்பிருப்பதால், ரிஸ்க் எடுத்தால் வெகுமதி கிடைக்கக்கூடும். இலக்கு விலை ரூ.110.

பிரதாப் ஸ்நாக்ஸ் (DIAMONDYD)
தற்போதைய விலை: ரூ.1,378.50
வாங்கலாம்
இது, சமீபத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனம். கடந்த ஆண்டில் நல்ல வருமானத்தைத் தந்துள்ளது. இந்தப் பங்கானது அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால், முதலீட்டாளர்கள் சுலபமாக வாங்கி, எளிதாக லாபம் பார்க்க முடிகிறது. தற்போது சிறிய அளவில் மீண்டு வந்துள்ள பங்கு விலை, மீண்டும் பிரேக் அவுட்டாகி தொடர்ந்து அதன் முந்தைய ஏற்றத்தை எட்டக் கூடுமெனத் தெரிகிறது. எனவே, தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ரூ.1,360 ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.1,420.
ஐடிசி லிமிடெட் (ITC)
தற்போதைய விலை: ரூ.283.65
வாங்கலாம்
நல்ல ஏற்றம் காணும் பங்குகளைப் பங்குச் சந்தையில் அடிக்கடி காண்பது சாத்தியமாகாது. தற்போது ஐ.டி.சி நமக்கொரு வாய்ப்பைத் தந்துள்ளது. 2017- ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இதன் பங்கு விலையில் தற்போது நல்லதொரு பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. பிரேக் அவுட்டைத் தேடிச் செல்கிறது.
நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீட்டுக்கு இந்தப் பங்கை வாங்க நல்லதொரு தருணமாகும். இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கவும். ரூ.270 ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.325-350.
தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்
டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.