Published:Updated:

ஷேர்லக்: அதிகரித்த அடமானப் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஷேர்லக்: அதிகரித்த அடமானப் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்!
ஷேர்லக்: அதிகரித்த அடமானப் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்!

ஓவியம்: அரஸ்

பிரீமியம் ஸ்டோரி

“உங்கள் அலுவலக கேன்டீனில் காத்திருக் கிறேன்...”  என ஷேர்லக்கிடமிருந்து எஸ்.எம்.எஸ் வர, மாடியில் உள்ள கேன்டீனுக்குத் தயாராக வைத்திருந்த கேள்விகளுடன் சென்றோம். இரண்டு ஆப்பிள் ஜூஸுக்கு ஆர்டர் செய்து விட்டு, கேள்விகளைக் கேட்கத் தயாரானோம்.    

ஷேர்லக்: அதிகரித்த அடமானப் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்!

பிசி ஜுவல்லர்ஸ் நிறுவனம், பங்குகளைத் திரும்ப வாங்குகிறதே?

“குடும்ப உறுப்பினர்களுக்குப் பங்குகளை அதன் நிறுவனர் பி.சி.குப்தா அன்பளிப்பாகக் கொடுத்த விவகாரத்தை அடுத்து பங்கின் விலை அதிக ஏற்ற இறக்கத்துக்கு உள்ளானது. ஒரு வாரத்தில்  26% இறக்கம், ஒரே நாளில் 48% ஏற்றம் என இந்தப் பங்கு ராட்டினமாகச் சுற்றியது. இந்தப் பங்கின் விலை மேலும் இறக்கம் காணாமல் இருக்க, அந்த நிறுவனத்தின் புரமோட்டர்களே பங்கைத் திரும்ப வாங்கிக்கொள்ள இருப்பதாகவும், பங்கு ஒன்றை ரூ.350-க்கு பைபேக் செய்யவிருப்பதாகவும் அறிவிக்கிறது. இது கடந்த வியாழனன்று சந்தை  முடிவு விலையான 209 ரூபாயைவிட 67% அதிகம். இந்தப் பங்கு பற்றிக் கடந்த வாரம் சொன்னதையே இந்த வாரமும் சொல்கிறேன். ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டுமே இந்தப் பங்கினை வாங்கலாம்.’’

ஃபெடரல் பேங்க் பங்கின் விலை ஒரே நாளில் 12% இறங்கியிருக்கிறதே?


“கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஃபெடரல் வங்கியின் நிகர லாபம் 44% குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், வாராக் கடன் அதிகரித்ததே. வாராக் கடனாக மதிப்பிடப்பட்டுள்ள தொகை சுமார் ரூ.872 கோடி. இதில் ரூ.492 கோடி, புதிய கடன் போர்ட்ஃபோலியோவில் சேர்க்கப்படும். இதனால் இந்த வங்கியின் மொத்தப் புதிய லோன் ரூ.792 கோடியாக இருக்கும். வாராக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கடுமையான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை அப்படியே பின்பற்றியதாலேயே கடன் புத்தகத்தில் வாராக் கடனின் அளவு அதிகரித்து, லாபம் குறைந்துள்ளது.  இதனால்தான் இந்தப் பங்கின் விலை குறைந்து, மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.”

கனரா வங்கியின் நஷ்டம் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக இருக்கிறதே!


‘‘உண்மைதான். கடந்த நான்காம் காலாண்டில் இந்த வங்கியின் லாபம் ரூ.4,859 கோடி யாக உள்ளது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு மிக அதிகமாக இருந்ததால், நஷ்டமும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இத்தனைக் கும் இந்த நிறுவனம் கட்டிய வரிப் பணம் ரூ.2,450 கோடி இந்தக் காலாண்டில் திரும்பக் கிடைத் திருப்பதைக் கணக்கு காட்டியிருக் கிறது. இந்தப் பணம் வராமல் போயிருந்தால், இந்த வங்கியின் நஷ்டம் இன்னும் அதிகமாகி யிருக்கும்.  

ஷேர்லக்: அதிகரித்த அடமானப் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்!

வாராக் கடனுக்காக இந்த ஆண்டில் இந்த வங்கி இப்போது ஒதுக்கீடு செய்திருக்கும் தொகைதான் அதிகம். கடந்த 2016-ல் பஞ்சாப் நேஷனல் பேங்க் வாராக் கடனுக்காக ரூ.5,367 கோடியை ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத் தக்கது. இந்தப் பங்கை வைத்திருப்பவர்கள் இனியும் தொடர்ந்து வைத்திருப்பது சரியா என்கிற பரிசீலனை செய்து, நல்ல முடிவெடுப்பதே சரி.’’

ஐசி.ஐ.சி.ஐ பேங்க் பங்குக்குச் சாதகமான கருத்துகளை நிதி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளனவே?

“2018, மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நிகர லாபம் 49.6% குறைந்துள்ளது. வாராக் கடன் அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம். இந்த நிலையில், அந்த வங்கியின் பங்குகள்மீது முன்னணிப் பங்குத் தரகு நிறுவனங்கள் சாதகமான கருத்துகளை வெளியிட்டுள்ளன. இதனை அடுத்து செவ்வாய்க்கிழமையன்று ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் பங்கு விலை ஒரே நாளில் 7.19% உயர்ந்தது.  இது கடந்த 2017 அக்டோபர் மாதத்துக்குப்பின்னர்  முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய லாபமாகப் பார்க்கப்படுகிறது.

அந்த வங்கியின் மதிப்பீடுகள் கவர்ச்சிகரமாக இருப்பதாகவும், வருமானம் காலாண்டுகளில் வழக்கமான வருவாயை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அவை தெரிவித்து உள்ளன. முன்னணிப் பங்குச் சந்தைத் தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ ரூ.430-யை இலக்கு விலையாகக்கொண்டு இந்த வங்கியின் பங்கை வாங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று, ஹெச்.எஸ்.பி, மக்ரே (Macquarie), டாயிஷ் பேங்க், கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ், மார்கன் ஸ்டேன்லி ஆகிய நிறுவனங்களும் சாதகமான கருத்துகளை வெளியிட்டுள்ளன. ஆனால், இந்த வங்கியின் வாராக் கடன் கடந்த டிசம்பரில் 7.82 சதவிகிதத்திலிருந்து 8.84 சதவிகித மாக அதிகரித்துள்ளதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது.’’ 

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதே?

“மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொகை கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் ரூ.1.37 லட்சம் கோடி அதிகரித்து இதுவரை இல்லாத அளவாக ரூ.23.25 லட்சம் கோடியைத் தொட்டது. கடந்த சில மாதங்களாக மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து முதலீடுகள் வெளியேறியது. பின்னர், ஃபண்டுகளுக்கு சுமார் ரூ.5,200 கோடி முதலீடு வந்தது. 2017-18-ம் நிதியாண்டில் ஈக்விட்டி, பேலன்ஸ்டு, ஆர்பிட்ரேஜ் மற்றும் இ.எல்.எல்.எஸ்  ஃபண்டுகளில் ரூ.2.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.”

டெலிவரி எடுக்கப்படும் பங்குகளின் அளவு குறைந்துள்ளதே?


“கடந்த ஏப்ரல் மாதத்தில் பி.எஸ்.இ மற்றும்  என்.எஸ்.இ சந்தைகளில் சராசரி டெலிவரி பங்குகளின் அளவு, 35.6%  குறைந்துள்ளது. இது கடந்த 2009 நவம்பர் மாதத்துக்குப் பின்னரான மிகக் குறைந்த டெலிவரி விகிதம் ஆகும். 2017 மார்ச்சுடன் ஒப்பிட்டால், 2018 ஏப்ரலில்  மூன்றில் ஒருபங்கு அளவிலான பங்குகளே டெலிவரி பங்குகளாக மாறியுள்ளன. குறிப்பாக, வங்கி, ரிஃபைனரி, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, ஃபார்மா மற்றும் சுரங்கத் துறைப் பங்குளின் சராசரி டெலிவரி அளவு 2017 மார்ச் அளவைக் காட்டிலும் கணிசமாகக் குறைந்துள்ளன.”

நிறுவனர்கள் அடமானம் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு அதிகரித்துள்ளதே?

“பி.எஸ்.இ சந்தையில் பட்டியலிடப் பட்ட நிறுவனப் பங்குகளில் நிறுவனர் கள் அடமானம் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு, 2018 ஏப்ரல் இறுதி நிலவரப்படி ரூ.2.57 லட்சம் கோடியாகும். இது மார்ச் மாத இறுதியில் ரூ.2.39 லட்சம் கோடியாக இருந்தது. பி.எஸ்.இ-ல் பட்டியலிடப் பட்ட 5,043 நிறுவனங்களில் 3,142 நிறுவனங்களின் நிறுவனர்கள் அவர்கள் வசமிருக்கும் பங்குகளை அடமானம் வைத்திருக் கிறார்கள்.”

இன்று சந்தை முடிவதற்குக் கடைசி சில மணி நேரத்தில் மிகப் பெரிய முன்னேற்றம் கண்டதே, என்ன காரணம்?

‘‘அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவான அளவே உயர்ந்திருப்பது அந்த நாட்டில் வட்டிவிகித உயர்வினைத் துரிதப்படுத்த வாய்ப்பில்லை என்பதனால் அமெரிக்க சந்தை முன்னேற்றம் கண்டன. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  - வடகொரியா அதிபர் கிம் ஜோங் ஊன் பேச்சுவார்த்தை கூடிய விரைவில் நடக்கவிருப்பதும் ஒரு பாசிட்டிவான முடிவுக்கு வழி வகுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆசிய சந்தைகளில் இன்று பெரும்பாலும் உற்சாகமான மனநிலை இருந்தது.’’

அடுத்த வாரம் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

“வருகிற செவ்வாய்க்கிழமை அன்று கர்நாடக  மாநிலத்தின் தேர்தல் முடிவு வெளியிடப்பட உள்ளது. காங்கிரஸுக் கும், பி.ஜே.பி.க்கும் இடையே கடும் போட்டி உள்ளதால், இந்தக் கட்சிதான் ஜெயிக்கும் என்று சொல்ல முடியாத நிலை உள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால், சந்தை பெரிய அளவில் ஏறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், சந்தை கொஞ்சம் சரியவே செய்யும். எனவே, உஷாராக இருப்பது நல்லது’’ என்றவர், ‘‘சரி, அடுத்த அப்பாயின்மென்ட்டுக்கு நேரம் ஆகிவிட்டது. பை பை’’ என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்!

200 நிறுவனங்கள் டீலிஸ்ட்!

மே 11-ம் தேதியிலிருந்து சுமார் 200 நிறுவனங்களைப் பட்டியலில் இருந்து நீக்கப்போவதாக (டீலிஸ்ட்) பி.எஸ்.இ அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த நிறுவனங்களின் பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் ஆறு மாத காலத்துக்கு நிறுத்திவைக்கப்படும்.

பண மோசடி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பெற்ற கறுப்புப் பணத்தை   வெள்ளையாக்க (சட்டபூர்வமான தாக்க) பங்குச் சந்தையைப் பயன்படுத்தும் ஷெல் கம்பெனிகளுக்கு எதிரான நடவடிக்கையை செபி தீவிரப் படுத்தியுள்ள நிலையில், பி.எஸ்.இ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இந்த நிறுவனங்கள், அவற்றின் முழுநேர இயக்குநர்கள், புரமோட்டர்கள் மற்றும் நிறுவனக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள், பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட தினத்திலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பங்குச் சந்தையில் நுழைய முடியாது.

ஃபர்ஸ்ட் லீஸிங் கம்பெனி ஆஃப் இந்தியா, பிராண்ட்ஹவுஸ் ரீடெய்ல்ஸ், துஜோட்வாலா பேப்பர் கெமிக்கல்ஸ், எல்டர் ஹெல்த்கேர், எல்டர் ஃபார்மசுட்டிகல்ஸ், கோல்டைன் டெக்னோஸெர்வ், ஹீலியாஸ் அண்டு மாதேசன் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, ஹிரன் ஆர்கோகெம்,         எம்.சி.எஸ் லிமிடெட், துலிப் டெலிகாம், டுட்டிஸ் டெக்னாலஜீஸ், வஜ்ரா பேரிங்ஸ், வருண் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வி.டி.எக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை.

நீண்ட காலமாக வர்த்தக நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாத  சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் பதிவை, மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது குறிப்பிடத்தக்கது! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு