“தமிழ்நாட்டில் எல்லாவிதமான சூழலிலும் கிடைக்கக்கூடிய பழ வகைகளுள் முக்கியமானது கொய்யா. பெரும்பாலான மக்கள் கொய்யாப் பழத்தை நேரடியாகச் சாப்பிட்டுவிடுகின்றனர். எனவேதான், கொய்யாப்பழத்தில் மதிப்புக் கூட்டல் செய்யப்படுவதில்லை. குறிப்பிட்ட சில நிறுவனங்கள்தான் கொய்யாச் சாற்றைத் தயாரித்து விற்பனை செய்துவருகின்றன. சந்தையில் அதிகம் போட்டியில்லாத, கொய்யாவை மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்’’ என்கிறார் பழனி அருகே உள்ள ஆயக்குடியைச் சேர்ந்த கதிர்வேல். கொய்யா மதிப்புக் கூட்டல் குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். இனி அவர் சொன்னதாவது...

என்ன சிறப்பு?
பொதுவாக, கொய்யாவில் மதிப்புக் கூட்டல் அதிகமாக நடைபெறுவதில்லை என்பதே நமக்கான பலம். இதை நல்ல ருசியுடன் தயாரித்துக் கொடுத்தால் மக்களிடம் கொய்யாப் பழச் சாற்றை சுலபமாகக் கொண்டுபோய் சேர்க்க முடியும். நம் தோட்டத்தில் இயற்கையான முறையில் விளையும் கொய்யாப் பழங்களை மதிப்புக் கூட்டல் செய்து கொய்யாப் பழச்சாறு தயாரிக்கலாம்.
ஏன் கொய்யா?
கொய்யாவானது காயாக இருக்கும்போது உதிர்வதைவிடப் பழமாக இருக்கும்போது உதிர்வதுதான் அதிகமாக இருக்கும். மேலும், நேரடியாகச் சந்தையில் விற்பனை செய்யும்போது, மீதமாகும் பழங்கள் அழுகி வீணாகும். அப்போது நஷ்டம் உண்டாகும். இதுபோன்ற நஷ்டத்தைத் தவிர்த்து லாபம் ஈட்டுவதற்கும் கொய்யாவை மதிப்புக் கூட்டல் செய்வது சிறந்தது.
பலன் தரும் பயிற்சி வகுப்புகள்
கொய்யாவை மதிப்புக் கூட்டல் குறித்த பயிற்சிகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ஐ.ஐ.சி.பி.டி, திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் கிடைக்கிறது.
எப்படி மதிப்புக் கூட்டுவது?
கொய்யாப் பழத்தை மதிப்புக் கூட்டல் செய்ய சில வழிமுறை களைப் பின்பற்ற வேண்டும். கொய்யாச் சாறு சந்தையில் மக்களால் அதிகமாக விரும்பி வாங்கப்படுகிறது. அதற்குக் காரணம், தரமும், சுவையும்தான். அதனால் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது. என் பொருளின் தரம்தான் என்னை இப்போது சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வது வரை உயர்த்தியிருக்கிறது. தரம் மட்டும் இல்லையென்றால், கொய்யாச் சாறு எங்கள் ஊரைத் தாண்டி யிருக்காது. எனவே, தரத்தை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னென்ன வடிவங்களில் மதிப்புக் கூட்டலாம்?
மற்ற பொருள்களைப்போல கொய்யாவிலும் ஜாம், ஜெல்லி, மிட்டாய், அல்வா, கொய்யாச் சாறு உள்ளிட்ட பத்துப் பொருள் களைத் தயாரித்து விற்பனை செய்யலாம். இப்போது கொய்யாச் சாற்றை மட்டும் உற்பத்தி செய்துவருகிறேன். கொய்யாச் சாற்றை அதிகமாக அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்துவருகிறேன். குடும்ப விழாக்களில் பாட்டிலில் அடைக்காமல் சாறாகவே பாத்திரத்தில் கொடுத்துவிடுகிறேன். 200 மி.லி பாட்டிலிலும் அவ்வப்போது தயாரித்து விற்பனை செய்துவருகிறேன்.
முதலீடு எவ்வளவு?
நவீனத் தொழில்நுட்பங்களுடன் கொய்யாச் சாறு தயார் செய்யும் பிளான்ட் அமைக்கக் கோடிக் கணக்கில் செலவாகும். தினமும் 1,000 லிட்டர் கொய்யாப் பழச் சாற்றை உற்பத்தி செய்யும் பிளான்ட் அமைக்கக் குறைந்தது ரூ.15 லட்சம் செலவாகும். கொய்யாப் பழச்சாறு எடுக்க நவீனத் தொழில்நுட்பங்களுடன் செயல்படும் இயந்திரங்களே சிறந்தது.
சந்தை வாய்ப்பு
கொய்யாச் சாற்றுக்கான சந்தை வாய்ப்பு அதிகமாகத்தான் உள்ளது. போட்டிகள் அதிகமில்லை என்பதால், பொருள்கள் அதிகமாக விற்பனையாகி லாபம் அதிகமாகக் கிடைக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்திற்குள்ளேயே அதிகமாக விற்பனையாகிறது,

இதுதவிர, சென்னை, மதுரை, நெல்லை எனப் பல ஊர்களுக்கும், சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறேன். நான் பயன்படுத்தும் கொய்யா என் தோட்டத்தில் இயற்கை விவசாயத் தில் விளைந்ததால், பழச்சாற்றை இயற்கையாகக் கொடுக்கிறேன். சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாக இதுவும் ஒரு காரணம்.
லாபம்
ஒரு அரை லிட்டர் பாட்டில் 35 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். வாரத்துக்கு 3,000 பாட்டில்கள் வரை விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ.1.5 லட்சம் வருமானமாகக் கிடைக்கும். இதில் மின்சாரம், ஆட்கள் கூலி, போக்குவரத்துச் செலவுகள் உள்பட ரூ.80,000 ஆகும். செலவுகள்போக வாரம் ரூ.25 ஆயிரம் லாபமாக நிற்கும்.
இது தோராயமான கணக்குத்தான். வெயில் காலத்தில் விற்பனை அதிகமாகவும், மழைக் காலத்தில் விற்பனை மந்தமாகவும் இருக்கும். அதேபோல, வருடத்தில் இரண்டு மாதங்கள் கொய்யாப் பழங்கள் கிடைக்காது. அதனால் லாபக் கணக்கில் ஏற்ற, இறக்கங்கள் வர வாய்ப்புகள் அதிகம்.
சிவப்புக் கொய்யாவுக்கு வரவேற்பு
“கொய்யாக் காய்களைத்தான் அதிகம் சாப்பிட விரும்புவார்கள். எனவே, பழங்கள் அதிகம் விற்பனையாவதில்லை. சிவப்புக் கொய்யா வேகமாகப் பழுத்துவிடும். அதனால் அதை வீணாக்காமல் அரைத்துப் பழச்சாறாக மாற்றி விடுவோம். பழச்சாறுக்கு அழுகிப் போன பழத்தைப் பயன்படுத்த மாட்டோம். சிவப்புக் கொய்யாவில் தயாராகும் சாறை மக்கள் அதிகம் விரும்புவார்கள். இதனால் விற்பனை அதிகரிக்கும்.
தயாரிக்கும் முறை
கொய்யாப் பழங்களை நன்றாகக் கழுவி, இயந்திரத்தில் அரைத்துப் பழக்கூழாக மாற்றுவோம். பத்து கிலோ பழக்கூழில் பத்து லிட்டர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறியதும், மேலாகத் தெளிந்துவரும் தண்ணீரை எடுத்துவிட்டு, அதை 75 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும். அதன்பின் சூட்டைக் குறைத்து பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கிறோம்.
ஒரு கிலோ பழம்... 2 லிட்டர் சாறு
ஒரு கிலோ பழத்தில் இரண்டு லிட்டர் பழச்சாறு கிடைக்கும். 500 மி.லி அளவு பாட்டிலில் அடைத்து 35 ரூபாய் என விற்பனை செய்கிறோம். 200 மி.லி பாட்டில் சாற்றை 20 ரூபாய்க்குத் தருகிறோம். இதை மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து குடிக்கலாம்” என்கிறார் கதிர்வேல்.
பழச்சாறுகளில் பலவகைகள் வெளிவந்தாலும், கொய்யாப் பழச்சாறு குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டுவரும் ஒன்று. பெரிய நிறுவனங்களே அதைச் செய்ய முன்வராத நிலையில், துணிந்து முடிவெடுத்து இதில் இறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.
(மதிப்புக்கூடும்)
- துரை. நாகராஜன்
படங்கள்: வீ.சிவக்குமார்