‘‘சென்னை வெயிலுக்குப் பயந்து, இரண்டு நாள் இன்பச் சுற்றுலாவாக கொடைக்கானலுக்கு வந்திருக்கிறேன். இங்கே நெட்வொர்க் விட்டுவிட்டுக் கிடைப்பதால், நீண்ட நேரம் பேச முடியாது. எனவே, உமது வாட்ஸ்அப்பில் மேட்டர் அனுப்பியிருக்கிறேன். எடுத்துக் கொள்ளவும்’’ என்ற குறிப்புடன் நமக்கு அனுப்பியிருந்தார். அவர் அனுப்பியிருந்த மேட்டர் இதோ...

முதலீட்டில் முந்தும் உள்நாட்டு நிறுவனங்கள்
‘‘நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களைக் காட்டிலும் (FPIs), உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (DIIs) பங்களிப்பு அதிகமாகவே இருந்துவருகிறது. எஃப்.பி.ஐ-களைவிட டி.ஐ.ஐ-களின் முதலீடு, அதாவது வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் முதலீடு 10 மடங்கு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு தொடங்கி மே மாதம் 11-ம் தேதி வரை இந்தியப் பங்குச் சந்தைகளில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் செய்த முதலீடு ரூ.37,515.77 கோடி.
ஆனால், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் களின் முதலீடு ரூ.4,430.44 கோடியாக மட்டுமே இருக்கிறது. இந்தியாவிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறக் காரணம், சர்வதேசச் சந்தைகள் பலவற்றில் வட்டி விகிதம் அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு என்கிறார்கள் அனலிஸ்டுகள்.
மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் குறைவான வரி வருவாயினால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை போன்றவற்றினால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இது அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடையே ஏற்படுத்திய பதற்றமும், அவர்களின் முதலீட்டு வெளியேற்றத்துக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது. தவிர, இந்திய சந்தைகளில் வர்த்தகமாகும் பங்குகளின் மதிப்பீடும் அதிகமாக இருப்பதாகவும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.’’
11% விலை உயர்ந்த சன் டிவி
‘‘முடிந்த நான்காம் காலாண்டில் சன் டிவி குழுமத்தின் நிகர லாபம் 23% உயர்ந்து ரூ.289.79 கோடியாக அதிகரித்ததே இதற்குக் காரணம். நிதிநிலை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து கடந்த திங்களன்று மும்பை பங்குச் சந்தையில் இந்தப் பங்கின் விலை, அன்றைய நாளின் உச்சமாக ரூ.977.80 அளவுக்கு உயர்ந்து, வர்த்தக முடிவில் 11 சதவிகித ஆதாயத்துடன் ரூ.963.25-ஆக இருந்தது. ஏறக்குறைய ஐந்து லட்சம் பங்குகள் ஓப்பன் இன்ட்ரஸ்ட்டில் சேர்க்கப்பட்டதால், இந்தப் பங்கின் விலை மேலும் உயர்வதற்கான சிக்னல்கள் உருவாகின. இதனை அடுத்து கடந்த வாரம் முழுக்க சன் டிவி பங்கின் விலை ஏற்றத்திலேயே காணப்பட்டது.’’
ரிஸ்க்-ரிவார்டு சாதகமாக இல்லை
‘‘இந்தியப் பங்குச் சந்தைகள், கர்நாடகா மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்குப்பிறகு ஏற்பட்டுள்ள பரபரப்பினாலும், அமெரிக்கா நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டோம் என வடகொரியா திடீரென அறிவித்ததாலும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. இந்த நிலையில், இந்தியச் சந்தைகளில் ரிஸ்க் - ரிவார்டு சாதகமாக இல்லை என்று முன்னணி பங்குச் சந்தை தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ கூறியுள்ளது. வரும் நாள்களில் மத்திய, மாநில அரசுகளின் கவனம் கிராமப்புறம் சார்ந்திருக்கும் என்பதால், மேக்ரோ சூழ்நிலைகள் தொடர்ந்து அழுத்தத்திலேயே இருக்கும் என்பதாலும், வருவாய் பாதிக்கப்படும் என்பதாலும் ரிஸ்க் - ரிவார்டு சாதகமாக இருக்காது என அது கூறியுள்ளது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேபோல, கோட்டக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனமும், பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வட்டி விகிதம் உயர்வு போன்றவற்றால் 2018-19-ம் நிதியாண்டில் இந்தியா பலவீனமான மேக்ரோ சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கவும், ரூபாய் மதிப்பு மேலும் சரியவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதேபோல, நொமுரா நிறுவனம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் 2019-ம் ஆண்டு தேர்தல் நெருங்குவதால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத் தன்மை போன்றவற்றால் ரிஸ்க்குகள் அதிகரித்துள்ள தாகவும், இதனால் மேக்ரோ சூழ்நிலைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கூறியுள்ளது.
பன்னாட்டு நிதிச் சேவை நிறுவனமான யுபிஎஸ், 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், சந்தை ஏற்றத்தின் போக்குக்கு வரும் என்றும், எதிர்க்கட்சிகள் அமைக்கும் தேர்தல் கூட்டணி முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்த நிறுவனங்கள் எல்லாம் சொல்வதைப் பார்த்தால், அடுத்த ஓராண்டு காலத்துக்கு மிகக் கவனமாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்.’’
முக்கிய நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகள்
‘‘இந்தியாவில் மிக அதிகமான நுகர்வோர் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர், அனலிஸ்ட்களின் மதிப்பீடுகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு, கடந்த ஜனவரி-மார்ச் மாதக் காலாண்டில், முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டியதைவிட 26% அதிகமாக அதாவது, வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.1,409 கோடியை ஈட்டியது. இது எதிர்பார்த்ததைவிட 11% அதிகமாகும்.
நீரவ் மோடியின் மோசடி சர்ச்சையில் சிக்கியதால், மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் பஞ்சாப் நேஷனல் பேங்க், ரூ.13,420 கோடியை நிகர இழப்பாகச் சந்தித்து உள்ளது. இந்திய வங்கிகளின் வரலாற்றில் இதுவரை எந்தவொரு வங்கியும் இந்த அளவுக்கு இழப்பைச் சந்தித்ததில்லை. ஒரு வங்கியானது காலாண்டில் சந்திக்கும் மிக அதிகமான இழப்பு இதுதான் என்கிறார்கள்.
மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் சவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம், முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய 75.54 கோடி ரூபாயைக் காட்டிலும், 51% உயர்வுடன் ரூ.114.10 கோடியாக அதிகரித்துள்ளது. வாராக் கடனைப் பொறுத்தவரை, முந்தைய நிதியாண்டின் இதே கால கட்டத்தில 2.45 சதவிகிதமாக இருந்தது. இந்தக் காலாண்டில் 3.59 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனிடையே பங்கு ஒன்றுக்கு 0.40 ரூபாயை டிவிடெண்டாக அறிவித்துள்ளது இந்த வங்கி. இதனை அடுத்து காலாண்டு முடிவு வெளியான அன்று பங்கின் விலை சுமார் 5% அதிகரித்து வர்த்தகமானது.’’
எம்.எஸ்.சி.ஐ இந்தியா இண்டெக்ஸ் புதிய நிறுவனங்கள்
‘‘எம்.எஸ்.சி.ஐ இந்தியா இண்டெக்ஸில் அவென்யூ சூப்பர் மார்க்கெட்ஸ், பயோகான், ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகிய நான்கு நிறுவனங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஐ.டி.எஃப்.சி பேங்க், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் வக்ராங்கி ஆகிய நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளன. இது வருகிற ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.
இது குறித்த தகவல் வெளியானவுடன், அவென்யூ சூப்பர் மார்க்கெட்ஸ் பங்கின் விலை, பி.எஸ்.இ-யில் 6.5% உயர்ந்து ரூ.1,516.80 -ஆக அதிகரித்தது. அதேபோன்று, இன்டர்குளோப் பங்கின் விலை 5% அதிகரித்து ரூ.1,248.55-ஆகவும், பயோகான் நிறுவனத்தின் பங்கு 2.49% அதிகரித்து ரூ.650-ஆகவும் உயர்ந்து காணப்பட்டது. அதேசமயம், ஹெச்,டி,எஃப்,சி ஸ்டாண்டர்டு லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனியின் பங்கு விலை 8.14% சரிந்து ரூ.496.30-ஆகக் காணப்பட்டது.
அடுத்த வாரம் நேரில் சந்திப்போம்.’’
ஏ.எம்.சி-கள் வாங்கிய பங்குகள்!
கடந்த ஏப்ரலில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிய பங்குகள்:
ஹெச்.டி.எஃப்.சி: டி.ஐ ஃபைனான்ஷியல் ஹோல்டிங்ஸ், பி.பி.சி.எல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ரிலையன்ஸ்: எஸ்.பி.ஐ, டாடா மோட்டார்ஸ், பி.பி.சி.எல்
ஆதித்ய பிர்லா: இன்ஃபோசிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, யெஸ் பேங்க்
எஸ்பிஐ: இன்ஃபோசிஸ், லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ், மாருதி சுஸூகி