There are no secrets to success. It is the result of preparation, hard work, and learning from failure.

- Colin Powell

அடையாளத்தை உருவாக்கு

ங்களுக்கு மனதளவில் நிறைய காயங்கள் இருக்கலாம். அந்தக் காயங்களை மறந்தாலும், அவை கற்றுக்கொடுத்த பாடங்களை  மறக்கக்கூடாது. அப்படியான பல காயங்களால்தான் குமரன், `ஒரு தொழில் தொடங்கி, நாமும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும்; பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்’ என்ற வேட்கைத்தீயைச் சிறு வயதிலிருந்தே அணையாமல் வைத்திருந்தார். சரியான தருணம் வந்ததும், அதைச் செயல்வடிவமாக்கினார்.

தஞ்சாவூர்தான் குமரனின் சொந்த ஊர். அப்பா மத்திய அரசுப் பணியில் இருந்தாலும், பகல் இரவு பாராத அவரது குடிப்பழக்கத்தால் வீட்டில் வறுமை. குமரன் 9-ம் வகுப்பு படிக்கும்போது அப்பா இறந்துவிடுகிறார். பென்ஷன் பணத்தில் அண்ணன், தம்பி இருவரும் படிக்கிறார்கள். ஆனாலும் வீட்டுச்சூழலால் 10-ம் வகுப்பில் அவரால் தேர்ச்சி பெற இயலவில்லை.

படிக்கும்போது இரண்டு செட் ஆடைகள்தான். செருப்பு இருக்காது. நண்பர்களிடமிருந்து கேலியும் கிண்டலும் எதிர்கொள்வார்.

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், உறவினர்களிடமும் குமரனுக்கு நல்லபெயர் இல்லை. மறுதேர்வு எழுதித் தேர்ச்சிபெறுகிறார்.

வின்னிங் இன்னிங்ஸ்

பணமின்மையும் கல்வியின்மையும் சமூகத்தில் தனக்கான மதிப்பைக் குறைப்பதை உணர்கிறார் குமரன். 11-ம் வகுப்பில் சேரும்போதே பகுதி நேரமாக மருந்துக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்கிறார். மாதம் 100 ரூபாய் சம்பளம். இரண்டு வருடம் படித்துக்கொண்டே வேலை. ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுகிறார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் புள்ளியியலில்  பட்டப்படிப்பு.

பள்ளியில் நடந்ததைப் போன்ற அனுபவங்கள்தான் இங்கேயும். ஆங்கிலவழிப் பாடத்தில் பயின்று வந்த மாணவர்களுக்கிடையே குமரன் தடுமாறுகிறார். இரண்டு ஆண்டுகளில் பல பாடங்களில் தோல்வி. நண்பர்கள், பேராசிரியர்களின் கேலி.  மீண்டும் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி, மூன்றாவது வருடத்திலிருந்து நல்ல மதிப்பெண் பெறுகிறார்.

கல்லூரிப் படிப்பு முடித்ததும், வீட்டின் வறுமைச்சூழல் அடுத்த நாளே ஏதாவது ஒரு வேலைக்குச் செல்ல குமரனைத் தள்ளியது. ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ரிசப்ஷனிஸ்டாக வேலைக்குப் போகிறார். 12 மணி நேரம் நின்றபடியே வேலை, 400 ரூபாய் சம்பளம்.

இதைச் சொல்லும்போது ``அப்ப எனக்கு `இந்த ஹோட்டல்ல ஒருநாள் வந்து தங்குற அளவுக்கு நாம பணக்காரன் ஆகணும்’கிறதுதான் கனவா இருந்தது” என்று சிரிக்கிறார் குமரன். 20 வயது வரை திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை யைத் தாண்டாத குமரன், இன்றைய தேதியில் 20 நாடுகளுக்குமேல் பயணித்திருக்கிறார்.

ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, நண்பர்கள் ஒரு தொழில் திட்டத்தோடு குமரனை அணுகுகிறார்கள். இரண்டு நண்பர்கள் ஆளுக்கு 1,000 ரூபாய் என 2,000 ரூபாய் முதலீடு செய்கிறார்கள். இவர் ‘வொர்க்கிங் பார்ட்னர்.’ சிவகாசியிலிருந்து 2,000 ரூபாய்க்கு டைரி, காலண்டர், கீ செயின், பேனா என சாம்பிள்கள் எடுத்து வந்து மேன்ஷன் ஒன்றில் வைத்துக்கொள்கிறார். அங்கேயே தங்கி தினமும் 40 கிலோ எடையுள்ள அந்த சாம்பிள்களோடு எல்லாக் கடைகளுக்கும் ஏறி இறங்கி ஆர்டர் எடுப்பதுதான் வேலை. இவருக்கு சம்பளம் என ஒன்றும் இல்லை. மேன்ஷன் வாடகையும், அங்கே இருக்கும் மெஸ்ஸில் உண்ணும் உணவுக்கான காசும்தான் சம்பளம்.

நான்கு மாதத்தில் இவரது மார்க்கெட்டிங் திறமை மேம்படுகிறது. சம்பளம் இல்லாவிட்டாலும், விற்பனைப் பிரதிநிதியாகத் தனக்குக் கிடைக்கும் அனுபவத்துக்காகத் தொடர நினைக்கும் குமரனை, இங்கேயும் அவமானம் துரத்துகிறது. மெஸ்ஸில் இவருக்கு அசைவ உணவு போடவேண்டாம் என்று பணம் கொடுக்கும் நண்பர் சொல்லிவிடவே, அங்கிருந்தும்  வந்துவிடுகிறார். 

காஸ்மெட்டிக் நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியில் சேர்கிறார். சம்பளம் மாதம் 2,000 ரூபாய். காலை 8 மணியிலிருந்து இரவு 12 மணி வரை வேலை. ஒரு வேனை எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாகப் பொருள்களை விற்கிறார். அவர்கள் மூலமே, இன்னொரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு அழைப்பு வருகிறது.  சென்னைக்கு வந்து  முதல் கட்ட நேர்முகத் தேர்வு முடிந்து, அடுத்த தேர்வுக்கு பரோடா செல்கிறார். 15 நாள் பயிற்சியில் தேர்வானால் மட்டுமே வேலை.  போகக் காசு இருந்தது, திரும்பி வர இல்லை.

வழிகள் இல்லாதபோதுதான், புதிய வழியை நாமாக உருவாக்குவோம். தொடக்க இரண்டு நாளில் பயிற்சியில் 30 சதவிகிதத்துக்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தவர், படிப்படியாக 75 சதவிகிதத்துக்குமேல் மதிப்பெண் பெற்று, தேர்வாகி, தஞ்சாவூர் வருகிறார். இருசக்கர வாகனம் இருந்தால்தான் நியமன உறுதி ஆணை கிடைக்கும் என்பதால், கடனில் ஒரு வாகனம் வாங்குகிறார். `மெடிக்கல் ரெப்’பாகப் பணியில் சேர்ந்தவர் படிப்படியாக அந்த நிறுவனத்தில் முன்னேறுகிறார். ஐந்து இலக்க சம்பளம், திருமணம், குழந்தைகள் என, வாழ்க்கை இப்போதுதான் சீராகிறது. தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செயலாக்கும் தருணம் இதுதான் என நினைத்து இறங்கி விடுகிறார்.

ஒரு நிறுவனத்தில் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, அதேபோன்ற தொழில் திட்டத்தை நீங்களும் ஆரம்பிக்கும்போது முக்கியமான ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுவரை உங்களுக்கு வாடிக்கை யாளராக இருந்தவர்கள், ‘உங்களுக்கு’ வாடிக்கையாளர்கள் அல்லர். உங்கள் நிறுவனத்துக்குத்தான் வாடிக்கை யாளர்கள். நீங்கள் அந்த நிறுவனத்தின் பிரதிநிதி. அவ்வளவுதான்.

2002-ம் ஆண்டு, கையில் இருந்த இரண்டு லட்ச ரூபாயையும் முதலீடாக்கி `ரேஸ் ஃபார்மசூட்டிகல்ஸ்’ எனத் தனியாகத் தொழில் தொடங்கி, தனி ஆளாக மருத்துவர்களைச் சந்தித்தபோதுதான் மேலே சொன்னதை உணர்கிறார் குமரன். முதல் இரண்டு வாரங்கள் தூங்கவே இல்லை. அம்மாவில் ஆரம்பித்து உறவினர்கள், நண்பர்கள் என எல்லோருமே `இது தப்பான முடிவு’ எனச் சொன்னார்கள். தனது பலம் என்ன என யோசிக்கிறார். பேச்சின் மூலம் விற்பனைக்கு வாடிக்கையாளர்களைச் சம்மதிக்கவைப்பதுதான் என்று உணர்கிறார்.

இரண்டு வாரம் கழித்து, இவரின் வாடிக்கை யாளர்களிடம் அவர்கள் சொன்னதையே திருப்பிச் சொல்கிறார். ``உங்களுக்கு என்னைவிட, நான் பணிபுரிந்த நிறுவனம்தான் நம்பிக்கைக்குரிய அடையாளம். ஆனால், எனக்கு நீங்கள், உங்கள் முகம்தான் அடையாளம். இப்போது என் அடையாளமான நிறுவனத்தின் பெயர் `ரேஸ் ஃபார்மசூட்டிகல்ஸ்.’ அதை நினைவில் வைத்துக்கொண்டால் நன்றி” என்று சொல்லி விசிட்டிங் கார்டை வைத்துவிட்டு வந்துவிடுகிறார். ஒரு வாரம் கழித்து வாடிக்கையாளர்கள் இவரை அழைத்து ஆர்டர் கொடுக்கிறார்கள்.

ஒரே ஆள், இரண்டு தயாரிப்புப் பொருள்கள் (Product) என ஆரம்பித்த ‘ரேஸ் ஃபார்மசூட்டிகல்ஸ்’ இன்றைக்கு 93 மருந்துகளைத் தயாரிக்கிறது. 150 சதுர அடி அறையில் ஆரம்பித்த பயணம், இன்று இமாச்சலப்பிரதேசத்தில் 15,000 சதுர அடியில் தொழிற்சாலையும், சென்னையில் கார்ப்பரேட் அலுவலகமுமாக விரிந்திருக்கிறது. தென்னிந்தியா முழுவதும் இவருடைய பொருள்கள் விற்பனையாகின்றன. ஆரம்பத்தில் தஞ்சாவூரில் தொடங்கி, ஒவ்வோர் ஊராக இவராகவே சென்று விற்பனை உத்திகளை விரிவுபடுத்தி அமைத்த அடித்தளம் பலமானது என்பதுதான் காரணம்.

இதில் இருக்கும்போதே, ஆடைத் தயாரிப்பு, மொபைல் விநியோகம், சினிமா என வெவ்வேறு தொழில்கள் ஆரம்பித்து, தோல்வியோடு திரும்பியிருக்கிறார். ``நாம் எதில் சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கிறோமோ, அதையொட்டிய தொழில்களையே தேர்வுசெய்வதுதான் புத்திசாலித்தனம்” என்கிறார் குமரன். வெற்றி-தோல்விகளிடமிருந்து கற்றுக்கொண்டவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளும் பேச்சாளராகவும் இருக்கிறார். எந்தத் தொழில் என்றாலும், அவற்றுக்கான யோசனைகள் வழங்குகிறார். 

``ஏற்கெனவே செய்ததைப் பிரதி எடுத்துச் செய்பவர்கள் வியாபாரியாக மட்டும்தான் இருக்க முடியும். பொருளிலோ அல்லது அந்தப் பொருளை விற்பதற்கான யோசனையிலோ புதுமையைக் கொண்டுவந்து ஒரு தொழிலைத் தொடங்குபவர்கள்தாம் தொழில்முனைவோராக இருக்க முடியும்” என்கிறார் குமரன். இந்த எண்ணத்தைச் செயலில் காட்டும் குமரனின் முனைப்புதான், `ரேஸி’ல் அவரை முந்தவைத்துக்கொண்டே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வின்னிங் இன்னிங்ஸ்

குமரனின் பிசினஸ் மொழிகள்

* எண்ணம், அதைத் திட்டமிடல், திட்டத்தைச் செயல்படுத்துதல். இவை மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் இருக்குமானால், உங்கள் பாதை சரியாகத்தான் இருக்கும்.

* உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் வருமானால், அதற்கு எந்த வகையிலும் எதிர்வினையாற்றாதீர்கள். அவை அப்படியே மறைந்துவிடும். எப்போதும் நேர்மறை எண்ணங்களோடு இருப்பவர்களால்தான் அதிகம் சாதிக்க முடிந்திருக்கிறது என்பதை உணருங்கள்.

* எந்தத் திட்டத்தையும் 360 டிகிரியில் சிந்தியுங்கள். அப்படிச் செய்தால், திட்டமிட்டதைச் செயல்படுத்தும்போது எந்த இடர் வந்தாலும் உங்களிடம் அதற்கான தீர்வு இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism