ல  லட்சம் இந்தியர்கள்,  இன்று வெளிநாடுகளில் பலதுறைகளில் வேலைசெய்கிறார்கள். இவர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர், வெளிநாடுகளில் பொருள் ஈட்டி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அல்லது ஓய்வுக்காலத்துக்குப் பிறகு தாயகம் திரும்புபவர்கள். இவர்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள். மற்றொரு வகையினர், படிக்க/வேலை பார்க்க வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அத்துடன் அந்த நாட்டிலேயே செட்டிலும் ஆகிவிடுகின்றனர். இவர்கள் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்பவர்கள். இவர்கள் அனைவரும் `வெளிநாடுவாழ் இந்தியர்கள்’ (NRIs – Non Resident Indians) என்று அழைக்கப்படுகின்றனர்.

என்.ஆர்.ஐ என்று நாம் சொல்லும்போது, வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன்கள் மற்றும் இந்தியாவில் முன்பு குடிமகன்களாக இருந்து, தற்போது வெளிநாட்டுக் குடிமகன்களாக இருப்பவர்களையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறோம். அதுபோல் ஒருவரின் பெற்றோர்/தாத்தா/பாட்டி இந்தியாவில் இருந்திருந்தால், அவர்களும் என்.ஆர்.ஐ என்றே அழைக்கப்படுகிறார்கள். இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், `பி.ஐ.ஓ’ (PIO – Person of Indian Origin) என்று அழைக்கலாம்.

பணம் பழகலாம்! - 18

என்.ஆர்.ஐ-க்கள், இந்தியாவில் பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம். அதுபோல் வெளிநாட்டு சிட்டிசன்களாக இருக்கும் என்.ஆர்.ஐ-க்கள் ஓ.சி.ஐ (OCI – Overseas Citizen of India) கார்டையும் பெற்றுக்கொள்ளலாம். என்.ஆர்.ஐ-க்கள் வெளிநாட்டில் வசிக்கும்போது ஆதார் அட்டையைப் பெற முடியாது. உள்நாட்டில் வாழ்பவர்கள் மட்டுமே அதைப் பெற முடியும். வெளிநாட்டவர் இந்தியாவில் வசிக்கும்போது, ஆதார் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு சற்று முன்போ அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றவுடனோ இவர்கள் என்.ஆர்.ஐ வங்கிக்கணக்குகளைத் திறந்துகொள்வது அவசியம். என்.ஆர்.ஐ-களுக்கான வங்கிக்கணக்கு இரண்டு வகை. ஒன்று, என்.ஆர்.ஓ (NRO – Non Resident Ordinary) சேமிப்புக்கணக்கு. இந்தக் கணக்குகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பலாம். அதேபோல் உள்நாட்டில் இருந்துவரும் வருமானத்தையும் டெபாசிட் செய்யலாம். உள்நாட்டில் உள்ள ஒருவரை ஜாயின்ட் அக்கவுன்ட் ஹோல்டராகவும் இணைத்துக் கொள்ளலாம். இந்தக் கணக்குகளுக்கு சாதாரண சேமிப்புக் கணக்குகளுக்குக் கிடைப்பதைப் போன்று வட்டி கிடைக்கும். இந்த வட்டி, வருமானவரிக்கு உட்பட்டது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் பழகலாம்! - 18


மற்றொன்று, என்.ஆர்.இ (NRE – Non Resident External) சேமிப்புக்கணக்கு. இந்தக் கணக்குக்கு வெளிநாட்டிலிருந்து மட்டும்தான் பணம் டெபாசிட் செய்ய முடியும். உள்நாட்டில் வரும் வாடகை போன்ற எந்த வருமானத்தையும் டெபாசிட் செய்ய முடியாது. ஆனால், பணத்தை எடுத்துச் செலவுசெய்யலாம்; காசோலை மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம். அதுபோல் உள்நாட்டு ரொக்கத்தை இந்தக் கணக்கில் டெபாசிட் செய்ய முடியாது. என்.ஆர்.இ கணக்கில் கிடைக்கும் வட்டிக்கு, வரி ஏதும் கட்ட வேண்டாம். முழுவதுமாக டேக்ஸ் ஃப்ரீ.

என்.ஆர்.ஓ மற்றும் என்.ஆர்.இ ஆகிய இரு கணக்குகளுமே ரூபாய்க் கணக்குகள்தான். வெளிநாட்டு கரன்சியிலும் என்.ஆர்.ஐ-க்கள் இந்தியாவில் கணக்கு வைத்துக்கொள்ளலாம். ஆனால், சேமிப்புக்கணக்காக அல்ல; டெபாசிட் கணக்குகளாக! இவை `எஃப்.சி.என்.ஆர் (FCNR – Foreign Currency Non Resident) கணக்குகள்’ என அழைக்கப்படுகின்றன. இந்தக் கணக்குகளை அமெரிக்கா/கனடா/ஆஸ்திரேலியா/சிங்கப்பூர் டாலர், ஜப்பான் யென், யூரோ போன்ற குறிப்பிட்ட கரன்சிகளில் வைத்துக்கொள்ளலாம்.

என்.ஆர்.இ கணக்குகளில் இருக்கும் பணத்தை, தேவைப்படும்போது தாங்கள் வசிக்கும் நாட்டுக்கு எந்தத் தடையுமின்றி எடுத்துச் செல்லலாம். ஆனால், என்.ஆர்.ஓ கணக்குகளில் இருக்கும் பணத்தை உரிய வழிமுறைகளைப் பின்பற்றித்தான் எடுத்துச் செல்ல முடியும். அதுபோல், என்.ஆர்.இ கணக்கில் இருக்கும் பணத்தை என்.ஆர்.ஓ கணக்குக்கு சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால், என்.ஆர்.ஓ கணக்கில் இருக்கும் பணத்தை என்.ஆர்.இ கணக்குக்கு மாற்ற முடியாது.

என்.ஆர்.ஓ மற்றும் என்.ஆர்.இ சேமிப்புக்கணக்குகள் போக, என்.ஆர்.ஓ மற்றும் என்.ஆர்.இ டெபாசிட் கணக்குகளையும் என்.ஆர்.ஐ-க்கள் திறந்துகொள்ளலாம். என்.ஆர்.இ டெபாசிட்டுகளிலிருந்து கிடைக்கும் வட்டிக்கு வரி   ஏதும் செலுத்த வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கணக்கு திறந்தாகிவிட்டது… அடுத்தது என்னென்ன முதலீட்டு வாய்ப்புகள் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இருக்கின்றன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

-வரவு வைப்போம்...