Published:Updated:

விஜய் மல்லையாவின் 16 கோடி, 30 கோடி ரூபாய் சொகுசுப் படகுகள் இனி என்னவாகும்?!

விஜய் மல்லையா சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். அவரால், சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதை அவரால் யோசித்துப் பார்க்க முடியாது.

விஜய் மல்லையாவின் 16 கோடி, 30 கோடி ரூபாய் சொகுசுப் படகுகள் இனி என்னவாகும்?!
விஜய் மல்லையாவின் 16 கோடி, 30 கோடி ரூபாய் சொகுசுப் படகுகள் இனி என்னவாகும்?!

விஜய் மல்லையாவை யாரென்று விளக்கத் தேவையில்லை. அகில இந்தியாவும் பாப்புலர் ஆனவர். இவருக்கு வைர நகைகள் என்றால் கொள்ளை ஆசை. காதில் வைரக் கடுக்கன்கள் இரு கைகளிலும் பிரெஸ்லெட் அணிந்துதான் வலம் வருவார். உலகத்தில் ஆடம்பரப்  பொருள்கள் என்னவெல்லாம் உண்டோ, அத்தனையும் மல்லையாவிடம் கொட்டிக் கிடக்கும். மல்லையா கட்டும் Audemars piguet வாட்ச் ஒன்றின் விலை மட்டும் ரூ.70 லட்சம். விலை உயர்ந்த 9 கைக்கடிகாரங்கள் மல்லையாவிடம் உள்ளன. கடிகாரங்களின் மொத்த மதிப்பு ரூ. 2.6 கோடி.

வாட்ச்களில் மல்லையா மலைக்க வைக்கிறார் என்றால் Yacht என்று அழைக்கப்படும் சொகுசுப் படகின் விலையைக் கேட்டால் தலையே சுற்றி விடும். ஒவ்வோர் ஆண்டும் கிங் ஃபிஷர் நிறுவனம் வெளியிடும் காலண்டர்கள் உலகம் முழுக்கப் பிரபலம். வெளிநாட்டில் புகழ்பெற்ற மாடல் அழகிகளைக் கொண்டு இந்த காலண்டரை கிங் பிஷர் நிறுவனம் தயாரித்து வெளியிடும். வெளிநாடுகளில் மல்லையாவின் நேரடி மேற்பார்வையில் இந்த காலண்டருக்காக புகைப்பட ஷூட்டிங் நடைபெறும். அப்போது, தன் சொகுசுப் படகான கிங் ஸ்டாரில் அழகிகளுடன் மல்லையா கொடுக்கும் போஸ்களும் வெகு பிரபலம். கிங் ஸ்டார் கப்பலில் இல்லாத வசதிகளே கிடையாது.

கரகாட்டக்காரன் படத்தில் வரும் சொப்பனசுந்தரி காமெடி போல, பல கை மாறிய இந்த சொகுசுப்படகை கத்தார் அரச குடும்பத்தினரிடம் கடைசியாக கிங்ஃபிஷர் ஓனர் வாங்கினார். உலகின் 33-வது மிகப்பெரிய சொகுசுப் படகு இது. இது தவிர, ஷிப்போ, ஷிட்டா ஆகிய இரு குட்டிப் படகுகள் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.30 கோடி. தற்போது இரு படகுகள் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் உள்ளன. மற்றொன்று பிரான்ஸின் கேன்ஸ் நகரில் உள்ளது. 

கார்கள் என்று பார்த்துக் கொண்டால் ரூ.16 கோடி மதிப்புக்குப் பல விலையுயர்ந்த கார்களை மல்லையா வைத்துள்ளார். ஃபெராரி ரகத்தில் மூன்று உள்ளன. இதில், ஒரு ஃபெராரி காரின் மதிப்பு ரூ.4.3 கோடி. ரோல்ஸ்ராய்ஸ் பாந்தம், மினி கூப்பர், ரேஞ்ச் ரோவர், பென்ட்லி டர்போ ஆகிய கார்களும் உள்ளன. மல்லையா அணியும் வைர நகைகளின் மதிப்பு ரூ.3 கோடி. அவரிடமுள்ள blue sapphire, வைர மோதிரம், வைர பிரெஸ்லெட், பச்சை மரகதக்கல் மோதிரம் ஆகியவற்றின் மதிப்பு ரூ. 2.7 கோடி. இவரிடம் உள்ள இரு நீலக் கற்களின் விலை ரூ.9 கோடி. இவை எல்லாமே பிரிட்டனில் உள்ளன. 

பிரிட்டனிலிருந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும்போது, இந்த சொகுசு ஆபரணங்கள் எல்லோமே பறிக்கப்பட்டு வெறுங்கையுடனே அனுப்பப்படுவார். பயன்படுத்தும் பொருள்கள், அவற்றின் மதிப்பு விவரங்களை மும்பைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில், அவரின் வழக்கறிஞர் அமித் தேசாய் தாக்கல் செய்துள்ளார். மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை தலைமறைவுப் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்க அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கு முடிவுகட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று நடந்த விசாரணையில் மல்லையாவின் வழக்கறிஞர் அமித் தேசாய், `நாட்டை விட்டு மல்லையா ஓடவில்லை. ஜெனிவாவில் நடைபெற்ற உலக மோட்டார் சங்கக் கூட்டத்தில் பங்கேற்கவே அவர் ஜெனிவா சென்றார்' என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை வழக்கறிஞர் டி.என்.சிங், `அப்படியென்றால் 300 பெரிய பைகளுடன் ஏன் செல்ல வேண்டும்’ எனக் கேள்வி எழுப்பியதோடு `மல்லையாவை தலைமறைவுப் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்' என்று நீதிபதி ஆஷ்மியிடம் வாதிட்டார். 

விஜய் மல்லையா 'வாங்கிய கடனை அடைத்து விடுகிறேன்' என்று கூறுவதற்கு இதுதான் முக்கியக் காரணம். நாட்டில் பொருளாதாரக் குற்றவாளிகள் அதிகரித்து வருவதால், அண்மையில் மத்திய அரசு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றியது. அதன்படி, பொருளாதாரக் குற்றவாளி என்று ஒருவர் அறிவிக்கப்பட்டால், அவரின் சொத்துகளை தானாகவே அரசுக்குச் சொந்தமாகி விடும். அதனால்தான் தன்னை பொருளாதாரக் குற்றவாளியாக அறிவித்து விடக்கூடாது என்ற பயத்தில் இப்போது அலறுகிறார்.

கிங் பிஷர் பறக்க முடியாமல் சிறைக் கம்பிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கப் போவதை நினைத்தே கதறுகிறது!