Published:Updated:

மோசடிகளுக்கு இரையான பொதுத்துறை வங்கிகள்! - 2018-ல் ரூ.41,167 கோடி வரை இழப்பு!

மோசடிகளுக்கு இரையான பொதுத்துறை வங்கிகள்! - 2018-ல் ரூ.41,167 கோடி வரை இழப்பு!
மோசடிகளுக்கு இரையான பொதுத்துறை வங்கிகள்! - 2018-ல் ரூ.41,167 கோடி வரை இழப்பு!

2017 - 2018 நிதியாண்டில் வங்கி மோசடிகளால் ரூ.41,167 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு நடந்த வங்கி மோசடிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் 93% அளவுக்கு பொதுத்துறை வங்கிகளில் நடந்துள்ளன. தனியார் வங்கிகளில் வெறும் 6% அளவுக்கே நடந்துள்ளன. 

கடந்த 2016 -17 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 2017-18 நிதியாண்டில் வங்கி மோசடிகள் 72% அதிகரித்துள்ளன. 2016-17 நிதியாண்டில் மொத்தம் ரூ.23,933 கோடி அளவுக்கு மோசடிகள் நடந்துள்ளன. மோசடி அளவு அதிகரித்ததற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷியும் செய்த ரூ.13,000 கோடி வங்கிக்கடன் மோசடியும் முக்கிய காரணமாகும். அதேபோல, மொத்தம் கடந்த 2017-18 நிதியாண்டில் 5,917 மோசடிகளும், 2016-17 நிதியாண்டில் 5,076 மோசடிகளும் 2015-16 நிதியாண்டில் மொத்தம் 4,693 மோசடிகளும் நடந்துள்ளன.

கடந்த 2017-18 நிதியாண்டில் நடந்த வங்கி மோசடியானது, 2013-14 நிதியாண்டில் நடந்த ரூ.10,170 கோடி வங்கி மோசடியோடு ஒப்பிடுகையில் நான்கு மடங்காகும். கடந்த நான்கு ஆண்டுகளில் வங்கி மோசடிகள் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளதையே இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. 

ஆன்லைன் வங்கி மோசடிகள், 2017-18 நிதியாண்டில் மொத்தம் 2,059 சம்பவங்களில் 109.6 கோடி அளவுக்கு நடந்துள்ளது. 2016-17 நிதியாண்டில் மொத்தம் 1,372 சம்பவங்களில் ரூ.42.3 கோடி அளவுக்கும் நடந்துள்ளது.