
சுரேஷ் பார்த்தசாரதி,
myassetsconsolidation.com, SEBI Registered Investment advisor
பங்கு மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படலாம் என்கிற செய்தி 2018-ம் ஆண்டு தொடங்கும்முன்பே பரவலாக எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. மேலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களை செபி புதிதாக வகைப்படுத்தியதால், இந்தியப் பங்குச் சந்தை சற்றுத் தடுமாற ஆரம்பித்தது.
அத்துடன் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி, வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்தது, வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிதிச் சிக்கல், அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் எனப் பல பிரச்னைகள் வந்தன. இதனால் பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கத்தை உருவாக்கியது. என்றாலும், பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டாளர்களுக்குப் பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை.
2017-ம் ஆண்டில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் குறிப்பாக, ஸ்மால்கேப் ஃபண்டுகள் அதிக வருமானம் கொடுத்தது. இதற்குக் காரணம், ஸ்மால்கேப் பங்குகளில் பல 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக வருமானம் தந்ததுதான்.
இதை அடிப்படையாக வைத்து, 2018-ல் முதலீடு செய்தவர்கள்தான் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். ஸ்மால் கேப் ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பு 33% இறங்கி இருக்கிறது. இது இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது. அதேபோல, மிட் கேப் ஃபண்டுகளை எடுத்துக்கொண்டாலும் 18-25% வரை இறங்கி இருக்கிறது.
2018-ல் லார்ஜ்கேப் ஃபண்டுகள் சுமாராக வருமானம் தந்திருக்கிறது. அதாவது, அதன் வருமானம் வங்கி வட்டி அளவிற்குக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. லார்ஜ் கேப் பிரிவில் ஒன்பது ஃபண்டுகள்தான் பாசிட்டிவ் வருமானம் கொடுத்துள்ளன.
ஹைபிரீட் ஃபண்டுகளில் 65%் பங்குச் சந்தையிலும், 35% கடன் சார்ந்த ஆவணங் களிலும் முதலீடு செய்தாலும் 2018-ம் ஆண்டில் பங்குச் சந்தை இழப்பு மற்றும் கடன் சந்தை ஆவணங்கள் சுமாரான வருமானம் தந்திருக்கின்றன. இதனால் இந்தப் பிரிவில் எட்டு ஃபண்டுகள்தான் பாசிட்டிவ் வருமானம் தந்துள்ளன. இதுவும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
லிக்விட் ஃபண்ட், அல்ட்ரா சார்ட் டேர்ம் ஃபண்டுகள் போன்ற கடன் ஃபண்டுகள் கிட்டத்தட்ட வங்கி வட்டி அளவிற்குத்தான் வருமானம் கொடுத்திருக்கின்றன. டைனமிக் பாண்ட், கிரெடிட் ரிஸ்க், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் போன்றவையும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் உருவாக்கி இருக்கிறது. ஆகமொத்தத்தில், 2018-ம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இல்லை.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்மால்கேப் ஃபண்டுகள்
பல ஸ்மால்கேப் பங்குகள் 2017-ம் ஆண்டில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே வருமானம் தந்திருக்கிறது. சில பங்குகள் 300% - 800% வரைகூட வருமானம் கொடுத்திருக்கிறது. குறிப்பாக, கிராஃபைட் இந்தியா, பன்சாலி இன்ஜினீயரிங், பாம்பே டையிங், அவந்தி ஃபீட்ஸ், வி2 ரீடெயில் ஆகிய நிறுவனப் பங்குகளைக் குறிப்பிடலாம்.
ஹெச்.இ.ஜி மற்றும் இந்தியாபுல்ஸ் வெஞ்சர்ஸ் நிறுவனப் பங்குகள் 1000% வரை உயர்ந்திருக்கிறது. இவ்வாறு பங்குகள் விலை உயர்ந்த நிலையில், 2018-ம் ஆண்டில் பல்வேறு காரணங்களால் அந்தப் பங்குகள் மற்றும் இதரப் பங்குகளால் முன்போல் வருமானம் கொடுக்க முடியவில்லை. 2017-ல் கிடைத்த வருமானத்தைப் பார்த்து, 2018-ல் முதலீடு செய்ததால், இன்றைக்குப் பலரும் ஏமாற்றத்தைச் சந்திருக்கிறார்கள்.
முதலீட்டாளர்கள் இந்தத் தவறான முடிவை எடுத்ததற்கு பல நிபுணர்களின் ஆலோசனையும்் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

மிட்கேப் ஃபண்டுகள்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை செபி வகைப்படுத்தலை அடுத்து பல மிட்கேப் பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ விலிருந்து அதிகமாக விற்கப்பட்டன. இதனால் அது சார்ந்த ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பு வீழ்ச்சி கண்டது.
அத்துடன் பங்குச் சந்தையின் இறக்கத்தால் மேலும் பங்குகள் விலை சரிவை எதிர்கொண்டன. மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அடிப்படை யில் டாப் 100 முதல் 250 நிறுவனங்கள் மிட்கேப் பங்குகள் பிரிவில் வந்தது.
பல ஃபண்டுகளிலிருந்து மிட்கேப் பங்குகள் விற்கப்பட்டதால், அதன் விலை குறைத்தது.

சில ஃபண்டுகளில் அதிக அளவில் மீடியா, பொதுத்துறை வங்கிகள், மெட்டல், பார்மா சூட்டிக்கல்ஸ், ஆட்டோ நிறுவனப் பங்குகள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. இந்தப் பங்குகள் 2018-ல் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால், இவை முதலீடு செய்யப்பட்டிருந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
மிட்கேப் ஃபண்டுகள் அதிக அளவில் இறங்கி யிருந்தால்கூட, அவை பெஞ்ச்மார்க்கைவிட சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன.
லார்ஜ்கேப், மல்டிகேப் ஃபண்டுகள்
லார்ஜ்கேப் ஃபண்ட் பிரிவில் இ.டி.எஃப்-கள் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் 2018-ல் நல்ல வருமானம் தந்துள்ளன. ஆக்டிவ் லார்ஜ்கேப் ஃபண்ட் இவைவிட 8% வருமானம் கொடுத்துள்ளன. ரிலையன்ஸ் இ.டி.எஃப் என்.ஏ.வி ஃபண்ட் 2018-ல் 12.6% வருமானம் கொடுத்துள்ளது அதேவேளையில், ஆக்டிவ் லார்ஜ்கேப் கனரா ராபிகோ புளூஷிப் ஃபண்ட் 4.8% உள்ளது.
இதனால் லார்ஜ்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்கள் சற்று ஏமாற்றத்தைச் சந்திருக்கிறார் கள். பொதுவாக, லார்ஜ்கேப் ஃபண்டுகள் பாதுகாப்பான முதலீடு என்றாலும் பங்குச் சந்தை இறக்கம் காணும்போது, வருமானம் குறைவதைத் தடுப்பது கஷ்டம்.
தற்போதைய நிலையில், லார்ஜ்கேப் ஃபண்டுகள் கவர்ச்சிகரமாக இருப்பதால், பலரும் அதனைநோக்கி பலரும் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது செய்யும் முதலீடு லாபம் தருமா, இல்லையா என்பதை அடுத்த ஆண்டு இதே சமயத்தில் நம்மால் தெளிவாகக் கணக்கிட்டுச் சொல்லிவிட முடியும் என்பதில் சந்தேகமில்லை.

மல்டிகேப் ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவில் லார்ஜ் மற்றும் மிட்கேப் நிறுவனப் பங்குகள் இடம்பெற்றிருப்பதால், அதன் வருமானமும் 2018-ம் ஆண்டில் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

ஹைபிரீட் ஃபண்ட்
பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்போது முதலீட்டாளர்களுக்கு ஹைபிரீட் ஃபண்டுகள் ஒரு பெரிய வரப்பிரசாதம். ஈக்விட்டி சார்ந்த ஹைபிரீட் ஃபண்டுகள் 35% கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதால், ஈக்விட்டி ஃபண்டைவிட ஹைபிரீட் ஃபண்ட் ரிஸ்க் குறைவாக இருக்கும்.
ஆனால், 2018 -ம் ஆண்டில் ஏழு ஃபண்டுகள் தான் அதிகபட்சம் 4% வருமானம் தந்திருக்கிறது. இந்த வருமானம், லார்ஜ்கேப் ஃபண்டுகள், இ.டி.எஃப் ஃபண்டுகளைவிட மிகக்குறைவு. இதற்குக் காரணம், பங்குச் சந்தை சரியாக வருமானம் கொடுக்காத நிலையில், வட்டி விகிதம் உயரும் நிலை இருக்கும் நிலையில் கடன் ஃபண்ட் வருமானம் குறைந்துவிட்டது.

2019-ம் ஆண்டு எப்படி இருக்கும்?
கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தால், அது இந்தியப் பங்குச் சந்தைக்குச் சாதகமாக இருக்கும். அதேவேளையில், கூடியவிரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், மத்திய அரசு ஜனரஞ்சகமான சலுகைகளை அறிவிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இது சந்தைக்கு சிறிதும் உகந்ததல்ல.
கடந்த ஓராண்டு காலம் மார்க்கெட் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால், 2019 தேர்தலில் ஏதேனும் ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் மார்க்கெட் ஏற்றம் மிக அதிகமாக இருக்கும்.
2019-ல் மாடரேட்-ஆக ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களுக்கு மல்டிகேப் ஃபண்டுகள் சாதகமாக இருக்கும். அக்ரெஸிவ் முதலீட்டாளர் களுக்கு மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகள் சாதகமாக இருக்கும்.
அதேசமயம், முதலீட்டைத் தேர்தலுக்கு ஒரு மாதம் வரை பிரித்து முதலீடு செய்வது நன்றாக இருக்கும். கடன் கடன் சார்ந்த பத்திரத்தில் முதலீடு செய்யும் குறுகிய கால ஃபண்டுகள் நன்றாக இருக்கும்.
(ஃபண்ட் நிலவரம்: 22 டிசம்பர் 2018 -ன் படி)