தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நீங்களும் செய்யலாம்: ஜூலா தயாரிக்கலாம் ஜோரா சம்பாதிக்கலாம் - காளீஸ்வரி

நீங்களும் செய்யலாம்: ஜூலா தயாரிக்கலாம் ஜோரா சம்பாதிக்கலாம் - காளீஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் செய்யலாம்: ஜூலா தயாரிக்கலாம் ஜோரா சம்பாதிக்கலாம் - காளீஸ்வரி

நீங்களும் செய்யலாம்: ஜூலா தயாரிக்கலாம் ஜோரா சம்பாதிக்கலாம் - காளீஸ்வரி

வால் கிளாக், டேபிள் லேம்ப், போட்டோ ஃப்ரேம்... இவற்றைவிட்டால் அன்பளிப்புகளே இல்லையா எனக் கதறிய அனுபவங்கள் பலருக்கும் இருக்கும். பட்ஜெட்டுக்குள் வர வேண்டும்; புதுமையான, அதேநேரம் உபயோகமான அன்பளிப்பாக இருக்க வேண்டும். முதல் வரியில் குறிப்பிட்ட எந்தப் பொருளாகவும் இருக்கக் கூடாது. இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்களோடு அன்பளிப்புகள் தேடுவோருக்கு ‘ஜூலா’க்களைப் பரிந்துரைக்கிறார் சென்னை, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் காளீஸ்வரி. அடிக்கடி அன்பளிப்புகள் வாங்குவோருக்கு மட்டுமன்றி, அன்பளிப்புப் பொருள்களை விற்பதை பிசினஸாகச் செய்ய நினைப்போருக்கும் காளீஸ்வரியின் கைடன்ஸ் பலனளிக்கும்!  

நீங்களும் செய்யலாம்: ஜூலா தயாரிக்கலாம் ஜோரா சம்பாதிக்கலாம் - காளீஸ்வரி

‘`பி.ஏ படிச்சிட்டு ஏழு வருஷங்கள் ஒரு ஸ்கூல்ல ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட்ஸ் டீச்சரா வேலை பார்த்தேன். அப்புறம் மினிஸ்ட்ரி ஆஃப் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் சார்பா காரைக்குடி, அழகப்பா பாலிடெக்னிக்கில் ஐந்து வருஷங்கள் வேலை பார்த்தேன். நிறைய கைவினைக் கலைகள் தெரியும். சிலதைப் பொழுதுபோக்காகவும் சிலதை பிசினஸாகவும் செய்யக் கற்றுக்கொடுக்கிறேன். அப்படி பிசினஸா பண்றதுக்கு அதிக வாய்ப்புள்ள ஒன்றுதான் மேக்ரமி ஒயர் பொருள்கள். அதில் ஹேண்ட் பேக்ஸ், பர்ஸ், பூஜைக்கூடை, தோரணம், வால் ஹேங்கிங்ஸ், கண்ணாடி ஹோல்டர் மாதிரியான வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருள்கள்னு நிறைய பண்ணலாம். அந்த வரிசைல சமீப காலமா பிரபலமாகிட்டு வருவது ஜூலா என்று சொல்லப்படும் பொம்மை ஊஞ்சல்கள். முன்பெல்லாம் எல்லா வீடுகளிலும் ஊஞ்சல்கள் இருக்கும். ஆனா, இன்னிக்கு தீப்பெட்டி சைஸ் வீடுகளில் வசிக்கிறதால ஊஞ்சல் கனவெல்லாம் காணமுடியறதில்லை.  நாம உட்கார்ந்து ஆட முடியலைனாலும், பொம்மைகளை உட்காரவைக்கிற ஜூலாவை எல்லா வீடுகளிலும் மாட்டிவெச்சு அழகு பார்க்கலாம்’’ என்கிற காளீஸ்வரி, ஜூலா தயாரிப்புக்கான வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

மேக்ரமி ஒயர் எனச் சொல்லப்படுகிற ஒருவித நைலான் ஒயர், குறைந்தது ஒரு மி.மீ அளவிலிருந்து அதிகபட்சமாக 10 மி.மீ வரை கிடைக்கும். ஜூலா செய்ய 5 மி.மீ அளவு தேவைப்படும். 200 கிராம் அளவு ஒயர்  60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ரிங், மரக்குச்சிகள், ஜூலாவின் அடியில் அலங்கரிக்கப் பயன்படுத்தும் மணிகள், பெல் போன்றவற்றுக்கான செலவு தனி. ஒரு ஜூலா செய்ய 400 கிராம் ஒயர் தேவை. ஜூலாவுக் கான மற்ற பொருள்களுக்கும் சேர்த்து மொத்த முதலீடாக 250 ரூபாய் தேவைப்படும்.

எத்தனை மாடல்கள்?

ஜூலாவில் ரிங் வைத்து, மரக்குச்சிகள் வைத்து என இரண்டு மாடல்களில் செய்யலாம். மற்றபடி பின்னலில் நிறைய வேறுபாடுகள் காட்ட முடியும். 30 வகையான முடிச்சுகள் இருக்கின்றன. அவற்றில் ஆறு வகைகள் அதிகம் பயன்படும். இந்தப் பின்னலுக்கு எந்தவிதமான கைவினைக்கலை அனுபவமும் தேவையில்லை.

மேக்ரமி ஒயரைவைத்து கீ செயின், சின்ன ஹேண்ட் பேக் என நிறைய செய்யலாம். அத்தனைக்கும் இந்தப் பின்னல்கள்தாம் அடிப்படை.

விற்பனை வாய்ப்பு? லாபம்?

வித்தியாசமான அன்பளிப்புகள் கொடுக்க நினைக்கிறவர்களுக்கு ஜூலா பெஸ்ட் சாய்ஸ். புதுமனை புகுவிழா, பிறந்தநாள் பார்ட்டி, திருமணங்கள் என எந்தக் கொண்டாட்டத்துக்கும் கொடுக்க உகந்த அன்பளிப்பு இது. பொம்மைகளுக்கான ஊஞ்சல் இது. பொம்மைகள் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வீட்டில் வெறுமனே கபோர்டில் பொம்மையை வைப்பதற்குப் பதில், இந்த ஊஞ்சலில் வைத்துத் தொங்கவிட்டால் இன்னும் அழகாக இருக்கும். வெவ்வேறு அளவுகளில் செய்யலாம். அன்பளிப்பு கொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்றபடி பொம்மைகளை மாற்றிக்கொள்ளலாம்.

ஹேண்ட் பேக்ஸுக்குக் கல்லூரி மாணவிகளிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. அழுக்கானால் கழுவி உபயோகிக்கலாம். மாதக்கணக்கில் உழைக்கும். கீ செயின்களை ரிட்டர்ன் கிஃப்டாகக் கொடுக்கலாம். தோரணம், வால் ஹேங்கிங்ஸ் போன்றவற்றை ஃபேன்ஸி ஸ்டோர்களில் விற்பனைக்கு வைக்கலாம். கண்காட்சிகளில் விற்பனைக்கு வைத்தால் நிறைய லாபம் பார்க்கலாம்.

250 ரூபாய் செலவழித்துச் செய்கிற ஜூலாவை 750 ரூபாய் வரை விற்கலாம். சைஸ் பெரிதாக ஆக  லாபமும் அதிகமாகும்.

பயிற்சி?

இரண்டு நாள் பயிற்சியில் ஜூலா செய்யக் கற்றுக்கொள்ளலாம். பின்னல் கைவந்து, வேகமாகச் செய்ய முடிகிறதென்றால் ஒரே நாளில்கூட முடித்துவிடலாம்.

ஒரு மாடல் கற்றுக்கொள்ள தேவையான பொருள்களுடன் சேர்த்துப் பயிற்சிக் கட்டணம் 500 ரூபாய்.

சாஹா - படம்: சொ.பாலசுப்ரமணியன்